இது நவராத்திரிக்காலம். தமிழகத்தின் நவராத்திரிக் கோலங்கள், தமிழீழத்தின் நவராத்திரிக் கோலங்கள், எனப் பல பதிவுகள் வந்துள்ள இத் தருணத்தில், தென் தமிழீழத்தின் நவராத்திரிக் கோலங்களையும், பதிவு செய்வதும், படிப்பதும், நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதால், இப்பதிவில் தென் தமிழீழத்தின் நவராத்திரி, கும்பத்துமாலை பண்பாட்டுக்கோலமாகப் பதிவு செய்கின்றேன்.

தமிழகத்து நவராத்திரி காலங்கள், கொலுஅலங்காரக்களிலும், கலைநிகழ்வுகளோடும், களைகட்ட, தமிழீழத்தின் வடபுலத்தே, ஆலய வழிபாடுகளுடனும், வீடுகளிலும், கல்விநிலையங்களிலும், நடைபெறும் வாணிபூசைக் கொண்டாட்டங்களுடனும், நிறைவு கொள்ள, தென்தமிழீழத்தின் நவராத்திரிக் கொண்டாட்டங்களோ வேறுவிதமாக அமைந்திருக்கும்.

கும்பத்துமால்கள். ஊரின் மத்தியில் அல்லது எல்லைகளில் அமைந்திருக்கக் கூடிய ஆலயங்களின் வெளிப்பிரகாரத்தில், ஊர்கூடிக் கும்பத்துமால் கட்டும். மால் என்ற சொற்பதத்துக்கு கொட்டகை அல்லது பந்தல் எனப்பொருள் கொள்ளலாம். அந்தவகையில் பார்ப்போமேயானால், கும்பம் + மால் = கும்பத்துமால், கும்பம் வைக்கும் கொட்டகை எனப் பொருள்படும். கோவில்களில் கும்பம் வைப்பதோ கொலுவைப்பதோ தென்தமிழீழத்தில் பெரியளவில் இல்லை என்றே சொல்லலாம். பாடசாலைகளில் சரஸ்வதிபூசை கொண்டாடுவதோடு நவராத்திரிக் கொண்ணடாட்டம் முடிந்துவிடும். கானாபிரபாவின் நவராத்திரிபற்றிய பதிவு அதை நன்றாகவே பதிவு செய்துள்ளது.

நவராத்திரி என்றால் கும்பத்துமால்களில் ஊரே திரண்டு திருவிழாவாகக் கொண்டாடுவது தென் தமிழீழத்தின் தனித்துவச் சிறப்பு. பிற்காலத்தில் நகரப்புறங்களில் மாற்றங்கள் பல வந்து விட்ட போதும், கிராமங்கள் பலவும், கும்பத்துமால்களுடனேயே நவராத்திரியைக் கொண்டாடின. நவராத்திரிக்கு ஒரு வாரத்துக்கு முன், ஊர்கூடிக் கூட்டம் போட்டு, கும்பத்துமால் வைப்பதையும், தலமைப்பூசாரியையும் ( இவர் மந்திர தந்திரங்களில் தன் திறமையை ஏற்கனவே வேறுபல நவராதத்திரிக் கும்பத்துமால்களில் நிரூபித்தவராக இருப்பார்) தீர்மானிப்பதுடன் ஆரம்பமாகும். தொடர்ந்து வேகமாக கும்பத்துமால் கட்டப்படும். சுமார் நூறு மீற்றர் நீளமான கொட்டகைகள் காட்டுத்தடிகளால் கட்டப்பட்டு, தென்னங்கிடுகுகளால், வேயப்பட்டு, வெள்ளைத் துணிகளால் அலங்கரிக்கப்படும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வேப்பிலைக்கொத்துக்களும், அலங்காரத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும். ஊரின் முக்கியபுள்ளிகள் இரவலாகக் கொடுத்த பெற்றோல் மாக்ஸ் லைற்றுக்கள் வெளிச்சம் தரும்.

நவராத்திரி ஆரம்ப நாளன்று கும்பத்துமால்களின் ஒரு அந்தத்தை கர்பக்கிரகம் போல அமைத்திருப்பார்கள். அதனுள்ளே கும்பங்கள் வைக்கப்படும். பெரியகுடங்களின் உள்ளே செப்புத் தகடுகளில் எழுதிய யந்திரங்களை வைத்து, நெல்லால் நிரப்பி, வேப்பிலை வைத்து, மேலே தேங்காய் வைத்து, கும்பங்கள் வைக்கப்படும். தலமைப்பூசாரி கும்பங்களை ஸ்தாபிப்பார். அன்றைய தினமே நேர்த்திக்காக கும்பமெடுப்பவர்களுக்கான காப்புக்கட்டுதலும் நடைபெறும். இப்படிக் கும்பமெடுப்பவர்கள். அந்த நவராத்திரி காலங்களில் விரதம் இருப்பார்கள். கும்பத்துமால்களில் நடைபெறும் பூசைகாலங்களில் இவர்கள் கலை (உரு) ஆடுவார்கள். அல்லது ஆடவைக்கப்படுவார்கள்.அப்படி ஆடுகின்ற அவர்களை ‘ பூமரம் ‘ என அழைப்பார்கள்.

கும்பத்துமால்களில் எனைக்கவர்ந்த விடயம், அங்கே நடைபெறும் கிராமியக்கலைநிகழ்வுகள். பறையும், உடுக்கும், பிரதான வாத்தியங்கள். மாரியம்மன் தாலாட்டுப்பாடல்கள் முக்கிய இசை நிகழ்ச்சி. கரகாட்டம் பிரதான ஆடல் நிகழ்ச்சி. இப்படியான நிகழ்ச்சிகளுடன் நவராத்தி நாட்களின் இரவுகள் ஆரம்பமாகும். சுமார் பத்துமணியளவில், பூசைக்குரிய கொருட்கள், உபயகாரர் வீட்டிலிருந்து, ஊர்வலமாக பறைமேளம் அதிர அலங்காரமாக எடுத்து வரப்படும். இதை ‘மடைப்பெட்டி ‘ எடுத்து வருதல் என்பார்கள். இந்த மடைப்பெட்டியின் வருகையோடு, ஊர்முழுவதும், கும்பத்துமாலுக்கு வந்துவிடும். மடைப்பெட்டியில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் படையல் செய்யப்பட்டதும், பூசை ஆரம்பமாகும்.

உச்சஸ்தாயில் பறை ஒலிக்கப்பூசை ஆரம்பமாகும். நேர்த்திக்குக் கும்பமெடுப்பவர்கள் குளித்து முழுகி, துப்பரவாக வந்து முன்னணியில் நிற்பார்கள். பறை அதிர அதிர அவர்கள் உருக்கொண்டு ஆடுவார்கள். அவர்களைவிட வேறுசிலரும் ஆடுவார்கள். ஆடத்தொங்கிய அவர்களை மஞ்சள் நீரால் நனைப்பார்கள். அவர்கள் ஆடிஆடி உச்சம் நிலைபெறும்போது, கும்பங்கள் வைக்கப்பட்டிருக்குமிடத்துக்குச் சென்று பூசாரியிடம், தாங்கள் என்ன தெய்வத்தின் கலையில் வந்திருக்கின்றோம் என்பதைச் கொல்லி, அந்தத் தெய்வங்களுக்குரிய அணிகலன்களை அல்லது ஆயுதங்களை விரும்பிக் கேட்பார்கள். பூசாரியார் அவர்கள் கேட்பதைக்கொடுத்தால் மகிழ்ச்சி முக்த்தில் தெரியப் பெற்றுக் கொள்வார்கள்.

தம்பலகாமத்துக் கும்பத்துமால்களில் காளிராசா அண்ணன் கலையாட வந்தாலே தனிக்களை பிறந்துவிடும். சனங்களின் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் பல இருக்கும். ஏனெனில் காளிராசா அண்ணையில் பலவித தெய்வக்கலைகள் உருவெடுத்து ஆடும் என்பார்கள். மாரியம்மன், வீரபத்திரர், அனுமான்...எனப்பல தெய்வங்களின் உருக்களில் ஆடுவார் எனச் சொல்வார்கள். மாறி மாறி பல உருக்களில், அவர் ஆடும்போது செய்யும் செயல்களை வைத்து அந்த நேரத்தில் என்ன கலையில் ஆடுகின்றார் எனச்சொல்வார்கள். அனுமான் கலையென்றால், குரங்குபோல் ஒருவிதநடையும், வாழைப்பழம் சாப்பிடுதல் போன்ற சேட்டைகளும் நடைபெறும். வீரபத்திரர் கலையில் ஆடினால், சாட்டைக்கயிறு வேண்டுவார். அவர் மாரியம்மனாகப் பாவனைப்பண்ணி ஆடுவதை மக்கள் வெகுவாக ரசிப்பார்கள். உண்மையில் அந்த ஆட்டம் பார்க்க அழகாகத்தான் இருக்கும்.

சிலம்பு மாதிரியான கைவளையல்களை கைகளில் அணிந்துகொண்டு, வேப்பிலையை ருசித்துக்கொண்டு, கோலாட்டக் கம்புகளை கைகளில் வைத்துக்கொண்டு, மாரியம்மன் தாலலாட்டுக்கு ஆடுவார் ஒரு ஆட்டம். மிக அருமையாக இருக்கும். இந்த இடத்தில் மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில் கெட்டிக்காறரான காத்தமுத்து அண்ணையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். காத்தமுத்து அண்ணனுக்கு நல்ல குரல். அத்துடன் நன்றாக உடுக்கு அடிப்பார். அவர்பாட, அவருடன் இணைந்து உடுக்கும் பாடும். அவ்வளவு இனிமையாக இருக்கும். காளிராசா அண்ணர் மாரியம்மன் கலையில் ஆடத் தொடங்கினால், காத்தமுத்து அண்ணர் கூட்டத்துக்குள் எங்கிருந்தாலும், காளிராசா இழுத்து வந்து முன்னுக்கு கொண்டு வந்து விட்டு பாடச்சொல்வார். அவார்பாட, காளிராசா அண்ணர் ஆடும் ஆட்டம் ரொம்ப அழகாக இருக்கும்.

இந்தக் கலைஆடல் நடந்து கொண்டிருக்கும் போது, மாந்திரீகம் படித்தவர்கள் கலைஆடுபவர்களின் ஆடல்களை மறைந்து நின்று தங்கள் மாந்திரீகசக்தியால் கட்டுபடுத்துவார்கள். அப்படிக்கட்டுப்படுத்தும்போது, கலைஆடுபவர்கள் ஆட்டம் நிறுத்தி மயங்குவார்கள். உடனே அந்த கும்பத்துமாலின், தலமைப்பூசாரி வந்து மாற்று மந்திர சக்தியால் அந்த மந்திரக்கட்டை அவிழ்ப்பார். அப்படி அவிழ்க்கப்பட்டதும், கலை ஆடுபவர் மீளவும் ஆடுவார்.. இப்படியான மந்திரப் போட்டிகளுடன் தொடரும், கலை ஆட்டங்கள் நள்ளிரவு தாண்டியும் நீளும்..

தொடர்ந்து ஒன்பது நாட்களும், கும்பத்து மால்களில் நடைபெறும் இந்த விழாக்கள், பத்தாம் நாள் இரவில், கும்பங்கள் கரகங்களுடன், ஊர்வலமாக ஊரைச்சுற்றி வந்து, பதினொராம் நாள் காலையில், ஆற்றில் கும்பங்கள் சொரிவதுடன் நிறைவுபெறும். தென்தமிழீழத்தின் வித்தியாசமான நவராத்திரி விழாக்கள், அம்மண்ணின் கிராமியக் கோலங்களாக நடைபெற்று வந்தன. இந்தக்கோலங்கள் எல்லாம் சிதைந்த மண்ணின், இன்றைய கோலங்கள் அவலங்களாகவே உள்ளன. காளிராசா அண்ணையும், காத்தமுத்து அண்ணையும், அவர்களின் கலைவடிவங்களுடனேயே இன்றும் என் கண்ணில் தெரிகின்றபோதும், இவர்களின் இருத்த்ல் என்பது.................. ?


 

நன்றி, வணக்கம்.