இவ்வார வானொலி நிகழ்ச்சி

நண்பர்களே !

இணையத்தில் இன்பத்தமிழ் எனும் பெயரில், ஐரோப்பியத்தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய இவ்வார நிகழ்ச்சியினைக் கேட்க இங்கே

வாருங்கள்.
நன்றி!

Photobucket - Video and Image Hosting




சென்ற வாரத்தில் ஒரு நாள் , தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் பாலைப்பழம்பற்றிக்குறிப்பிட்டார். சங்ககாலத்தையப் பாடல்கள் முதற்கொண்டு, சாமிநாத ஐயர்வரை, தொடர்புபடுத்தி அழகாகச் சொன்னார். அப்படி அவர் சொல்லிய அந்தச் சொல்லழகு ரசிக்கத்தக்கதாக இருந்தபோதும், பாலைப்பழம் குறித்து அவர் சொன்ன தகவல்தான் சற்றுக் குழப்பமாவுள்ளது.
பாலைநிலத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து பெறப்படும் பழமிது. அதனால்தான் அதற்குப் பாலைப்பழம் எனும் பெயர் வந்ததாகச் சொன்னார். ஆனால், இந்தப்பழத்தினை திருகோணமலையில் கோடைகாலத்தில், வீதிஓரப் பழக்கடைகளிலும், சந்தைகளிலும் வாங்கக் கூடியதாகவிருக்கும். பார்வைக்கு, வேப்பங்காயைவிடச் சற்றுப் பெரிதாக, இளமஞ்சள் நிறத்திலிருக்கும். இனிப்பென்றால், அப்படியொரு இனிப்பு. உள்ளே பால்போன்ற திரவம் இருக்கும். அதனாலே அதனைப் பாலைப்ழம் என்று அழைப்பதாகச் சொல்வார்கள். பாலைப்பழத்தை சற்று அதிகமாகச் சாப்பிட்டால், உதடுகள் ஒட்டத் தொடங்கிவிடும். பாலைப்பழத்தை வைத்திருக்கும் பெட்டிகள், கூடைகள் கூட ஒட்டிக்கொண்டிருக்கும். பழம் மட்டுமே சுவையாக இருக்கும்.
திருகோணமலைக் காடுகளிலிருந்து இப்பாலைப்பழம் சேகரிக்கப்பட்டுச் சந்தைக்கு வரும். இந்தப்பாலைப்பழத்தைத் தரும் மரத்திலேயிருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டவன் நான். அதனால்தான் பாலைப்பழம் பாலைவனத்து மரமொன்றிலிருந்து பெறப்படுவது எனச் சொல்லும்போது, என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருந்தது. ஏனெனில் அந்த மரம் அடர்ந்த காட்டுப்பிரதேசத்து மரம். மிக உயரமாகவும், வைரம்பாய்ந்ததாகவும், வளரக் கூடியது. அப்படிப்பார்த்தால் அது முல்லைநிலத்துக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அப்படியென்றால், பாலைப்பழம் என்று வேறு பழங்களேதும் உண்டா.? பாலை நிலத்தில் பேரீந்து தவிர வேறு சுவையான பழங்கள் கிடைக்கின்றனவா? தெரியவில்லை. நண்பர்கள் தெரிந்திருந்தால் சற்றுச் சொல்லுங்கள் கேட்போம்.

சரி, சரி. பாலைமரம்பற்றிக் கதைக்கத் தொடங்கியதில் வேறு சில மரங்கள் பற்றிய நினைவுகளும் வந்தன. அவைபற்றியும் சற்றுப் பார்ப்போம். ஏறக்குறைய பாலைப்பழம் கிடைக்கும் காலங்களில் கிடைக்கும் மற்றுமொரு பழம், வீரப்பழம். இது சற்று உருண்டை வடிவிலிருக்கும். சிகப்பு நிறம். சாடையான புளிப்புத்தன்மையும் இருக்கும். சாப்பிட்டால் பற்களில் காவி படியும். ஆனால் இந்த இரு பழங்களையும் தரும் மரங்களான பாலைமரமும், வீரை மரமும். நல்ல வைரமான மரங்கள். பாலைமரக்குத்தி வீடுகளுக்கு கப்பாகவும்( தூணாகவும்), வளையாகவும், பாவிக்கப்படும். வீரை மரம் வைரமான மரமாயிருப்பினும், அதன் உள்ளமைப்பு, நார்த்தன்மையானதால், அநேகமாக உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கு கம்பிக்கட்டையாகவும், விறகுக்குமே பாவிப்பார்கள். வீரைமரம் பெயருக்கேற்ற மாதிரித்தான் இருக்கும். காய்ந்த வீரைமரங்களில் ஆணி அடிப்தே சிரமம்மென்றால், அந்த மரத்தின் வைரத்தை ஊகித்துக் கொள்ளுங்களேன். இந்த மரங்களின் சுவையான பழங்களுக்குப் பிரியமானவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. யானையும், கரடியும், மிகவும் ருசித்துச் சாப்பிடும்.

எங்கள் நண்பர் வட்டம் இப்பழங்களைச் ச்ந்தையிலோ தெருவிலோ வாங்குவதில்லை. நேரடியாகக் காட்டுக்குள்ளிருந்து எடுத்து வருவோம். ஒரு தடவை காட்டுக்குள் போனால், எங்கள் வீடுகளுக்கும், சுற்று வட்ட வீடுகளுக்கும் தேவையானளவு கொண்டு வருவோம். காட்டுக்குள்ளே போய் எந்த மரத்தின் பழம் அதிக சுவை என்பதை அறியவும் ஒரு உத்தி இருக்கிறது. எந்த மரத்துக்குக் கீழே யானையின் விட்டைக் கழிவோ அல்லது கரடிகள் சுவைத்துத் துப்பிய எச்சங்களை வைத்தும், அந்த மரத்தின் பழங்கள் அதிக சுவையாக இருக்மெனத் தீர்மானித்துக் கொள்வோம்.

இருவர் மரத்திலேறி, ஒருவர் கொப்புக்களை வெட்டிவிட, மற்றவர் யானை அல்லது கரடி ஏதும் வருகிறதா எனப் பார்த்துக் கொள்வார். கீழேநிற்பவர்கள் விழுந்த கொப்புக்களில் உள்ள பழங்களைச் சேகரிப்பார்கள். பாலைப்பழமும், வீரைப்பழமும், தந்த சுவையென்பது மறக்கமுடியாதது. அந்த மரங்களையும், அவற்றுடன் இணைந்த நினைவுகளையும்தான்...

பொங்கலும் போர்த்தேங்காயும்.


ஈழத்தில் எங்கள் பொங்கலின் முதற்பகுதியை வாசித்துவிட்டுத் தொடருங்கள்.

தென் தமிழீழக் கிராமத்துப் பொங்கல்.

பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னரே வீட்டின் முன், ஆற்றுநீர் அடித்துக் கரைசேர்த்த வெள்ளைக்குருமணல் வண்டில்களில் ஏற்றி வந்து பறிக்கப்படும். வடபகுதியில் முற்றங்களை சாணகத்தால் மெழுகி, கோலம்போட்டு பொங்குமிடத்தை தயார் செய்வார்கள். ஆனால் தென் தமிழீழத்தில் இந்தக் குருமணலினைக் கொண்டு சிறிய மேடையொன்று அமைத்து, அதிலே கோலம் போட்டு, சுற்றிவரத் தோரணம் கட்டி அழகு செய்வார்கள். பொங்கல் பானைகள் பெரும்பாலும் மண்பாணைகளாகவே இருக்கும். மண்பானையில் பொங்கல் செய்வதென்பது, சுவையை மிகுதியாக்கும். ஆயினும் அதிலே பொங்குவது சற்று நுட்பமான காரியம்தான். பொங்கல், படையல் எல்லாம் ஏறக்குறைய வடபகுதிபோலவே இருக்கும்.

காலையில் படையலும் வழிபாடுமாக இருக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் மதியப்பொழுதுகளில் வேறுவகை மனமகிழ்வுக் கொண்டாட்டங்களாக மாறிவிடும். சின்ன வயதில் அம்மா மதியத்துக்குப் பிறகு வெளியில் போகவிடமாட்டா. போட்டிகளும், விளையாட்டுக்களும், நடைபெறுமிடங்களில், போதையும் இருக்கும். அதனால் சண்டைகள் வந்துவிடும் என்கின்ற பயம்தான். ஆனால் எனக்கு அந்த வேளைகளில் நடைபெறும் போட்டிகளைப் பார்க்க மிகுந்த ஆசை. அதிலும் போர்த் தேங்காய் அடித்தல் என்றொரு விளையாட்டு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களோ தெரியாது. மிகுந்த சுவாரசியமான விளையாட்டு அது.

சற்றேறக்குறைய கிறினைட் எனும் கைக்குண்டளவில்,( பாருங்கள் கைக்குண்டு எங்கள் தலைமுறைக்கு எவ்வளவு பரிச்சமாகப் போய்விட்டது) இருக்கும் சிறிய வகைத் தேங்காய் அது. யாழ்ப்பாணப் பக்கம் நாள்தேங்காய் மரமென சில மரத்தினைத் தெரிவு செய்து, அதன் தேங்காய்களை கோவில் தேவைகளுக்கும், மங்கள வைபவங்களும் பாவிப்பார்கள். அதுபோல் போர்த் தேங்காய் மரங்களும் தெரிவு செய்து பாவிக்கப்படும். இந்தத் தேங்காய்களின் மேலோடாகிய சிரட்டை(கொட்டாங்குச்சி) மிகவும் தடிப்பானது.

போர்த்தேங்காய் விளையாட்டில் ஒரே சமயத்தில், இருவர் ஈடுபடுவார்கள். தமிழகத்துக் கிராமங்களில் நடைபெறும் சேவற்சண்டைகளுக்கு இணையான சுவாரசியத்துடன் இவ்விளையாட்டு நடைபெறும். முதலில் ஒருவர் தன்தேங்காயை நிலத்தில் குத்தி நிறுத்துவார். மற்றவர் அதன் மேல் தன் தேங்காயைக்கொண்டு அடிப்பார். வைத்த தேங்காய் உடையாவிட்டால், முறைமாறி அடித்ததேங்காய் அடிவாங்கத்தயாராகும். சிலவேளைகளில் சிரடடைகள் வெடித்துச் சிதறுவதனால், போட்டியாளர்களின் முகம் கைகள் மட்டுமல்ல, பார்வையாளர்களது உறுப்புக்களும் ஊறுபடுவதுண்டு. போட்டியில் பணப்பந்தயம் முதல் தண்ணிப்பந்தயம் வரை இருக்கும். பல தேங்காய்களை சிதறடித்த தேங்காயை வைத்திருக்கும் நபர் அன்றைய பொழுதில் கதாநாயகன்தான். ஏனென்றால் அவர் எங்கெங்கு போட்டிக்குச் செல்கின்றாரோ, அங்கெல்லாம் அவர் பின்னே ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கச் செல்லும். அவரும் ராசநடை நடந்து செல்வார்.

மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கலாக நடைபெறுவதும் இங்குதான் சிறப்பாக இருக்கும். தைப்பொங்கலின் மறுநாள் காலைமுதலே பட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எருதுகளின் கொம்புகள் அழகாகச்சீவப்பட்டு வர்ணம் தீட்டப்படும். பசுக்கள் குளிக்கவார்க்கப்பட்டு, கழுத்தைச் சுற்றி மாலை அலங்காரங்கள் செய்யப்படும். . எருமையினப்பசுக்கள் நீராட்டபடுவதோடு சரி. பெரும்பாலும் நெற்றியில் ஒரு சந்தனப்பொட்டுடன் சமாதானம் கண்டுவிடும். ஏன் எனும் கேள்ளவி என்னுள் எழும்போதெல்லாம், என்னைப்போல் கறுப்பு என்பதாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதாலோதான் அவை பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை போலும் எனச் சமாதானம் கண்டுகொள்வேன். வடபகுதி போலல்லாது, காலையிலேயே பட்டிப்பொங்கல் நடைபெறும்.

பொங்கல் முடித்துப் படைத்த பின் பட்டிகள் திறக்கப்படும் அந்த்ததருணங்களுக்கான ஆயத்தங்கள் சில தினங்களுக்கு முன்னமே சிறுவர்களாகவிருந்த எங்கள் மத்தியில் ஆரம்பமாகிவிடும். நீளமான தடிகளில் கொழுவி ( வேனாம் வில்லங்கம்) கொழுக்கி போன்றதொரு கம்பியை வைத்துக் கட்டி, ஒரு தற்காலிக ஆயுதம் தயார் செய்து மறைத்து வைத்திருப்போம். பட்டிகள் திறந்து பசுக்களும் காளைகளும் திறக்கப்பட்டதும், சிறுவர்குழாம்கள் கவனிப்பது, அக்கால் நடைகளின் கழுத்துக்களைத்தான். அவற்றின் கழுத்தில் கோர்த்துக்கட்டப்பட்டிருக்கும் வடை மாலைகளும், அந்த மாலைகளில் சேர்த்துக்கட்டப்பட்ட பணநோட்டுக்கள் சிலதும் தான் எங்கள் எதிர்பார்ப்பின் இலக்கு. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கால்நடையைக் கலைத்தவாறே விரையும். அவற்றின் கழுத்திலே உள்ள மாலைகளைக் குறிவைத்து எங்கள் தற்காலிக ஆயுதம் நீளும். மாலைகள் அறுக்கபட்ட காளைகளையோ, பசுக்களையோ, பின்னர் யாரும் கலைக்க மாட்டார்கள். ஆனால் சில கால்நடைகள் இலகுவில் அகப்படமாட்டாது. தமிழகத்து ஜல்லிக்கட்டுக்குச் சமமான விறுவிறுப்போடு இந்த விரட்டும் நடக்கும்.

பெரும்பாலும் இந்த விளையாட்டில் இளைஞர்களும், சிறுவர்களுமே ஈடுபடுவார்கள். அறுத்தெடுக்கப்பட்ட மாலைகளில் உள்ள வடைகள் உடனடி உணவாகும். கிடைத்த பணம் அன்றிரவுச்சினிமாவுக்கு கட்டணமாகும். நீங்கள் எருமைப்பாலில் பொங்கிய பொங்கல் சாப்பிட்டிருக்கிறீர்களா? அமிர்தம் அமிர்தம் என்று என்னவோ சொல்கிறார்களே, அது அதுதான். ஆனா அந்த அமிர்தத்தை இப்போது நீங்கள் சாப்பிட முடியாது. ஏனென்றால் இன்று அந்த மண்ணில்தான் போரின் ஆழமான வடுக்கள், அவலங்களை ஏற்படுத்தி, எங்கள் சகோதரர்கள் எல்லாவற்றையும் இழந்த ஏதிலிகளாக, மரங்களின் கீழும், முகாம்களிலுமாக, உண்பதற்குச் சீரான உணவின்றிச் சிதைந்து போயுள்ளார்கள். போர்தேங்காய் விளையாடி உறவுகள், போரினால் சிதறுகாயாக அடிக்கப்படுகிறார்கள். ஆனாலும்..

எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகளில் இன்பப் பொங்கல் நிறைவாய் பொங்கும் எனும் நம்பிக்கையோடு...

எனது முன் பனிக் காலங்கள்.

திருவெம்பாவை பூசையும்
திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
சுகமான ஒரு முன்பனிக்காலம்
எழுபதுகளில் எனக்கிருந்தது.

பின்வந்த எண்பதுகளில்
காவலும் கடமையுமாய்
கடலிலும் கரையிலும்
என் முன்பனிக்காலம் கழிந்தது.

தொன்னூறுகளின் தொடக்கத்திலோ
நெஞ்சு கனக்கும் நினைவுகளோடு
வெண்பனியுறையும் துருவக்
கரையின் தெருக்களில் நான்..

நன்றி - ' திசை'


 

நன்றி, வணக்கம்.