ஈழத்து இசைச் சகோதரர்கள்.


எழுபதுகளில் ஒருநாள் மாலை, திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் பிரமாண்டமான, மண்டபத்தில் அந்த இசைநிகழ்ச்சி நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. நாம் படிக்கும் கல்லூரியில் நடைபெறும் இசைநிகழ்ச்சி என்பதற்கும் மேலாக, எங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு பிடித்தமான கலைஞர்கள் கலந்து கொள்வதனால், நாங்களும் ஆர்வமாகவே சென்றிருந்தோம். நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு என்றிருந்தது. நாங்கள் 5.30 மணிக்குச் சென்றபோது, மண்டபம் நிரம்பியிருந்தது. எங்களுக்கோ, மண்டபம், பலகணி, எல்லாமாக, சுமார் எழுநூறுபேர் ஒரே தடவையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சி பார்க்கக் கூடிய அந்த மண்டபம் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பி விட்டதா என்று ஆச்சரியம். நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பியிருந்ததே ஆச்சரியமன்றி, அந்தக் கலைஞர்களுக்காக கூட்டம் சேர்வது ஒன்றும் ஆச்சிரியமல்ல. தங்களின் சுய முயற்சியாலும், திறமையாலும், ஈழத்து மெல்லிசைவரலாற்றில், முதலாவது இசைதட்டை வெளியிட்டு, ஈழத்து மெல்லிசை மன்னர்கள் எனும் சிறப்பினைப் பெற்றுக்கொண்ட சகோதரர்கள் அவர்கள்.


இந்நிகழ்ச்சிக்கு முன்னரே அவர்கள் இலங்கைத்தீவின் பல பாகங்களிலும், பல மேடைநிகழ்ச்சிகளைச் செய்திருந்தனர். அப்படியான இசைக்கச்சேரிகளின் போது, அவர்கள் காட்டிய பல நுட்பங்களும், வித்தியாசங்களுமே, எம்.பி பரமேஸ், எம்.பி கோணேஸ், எனும் அந்தச் சகோதரர்களின் இசை மேல் பலரும் விருப்பமுற வைத்தது. மற்றைய இசைக்குழுக்களிடம் இல்லாத மேலதிக திறமை, இவர்கள் சொந்தமாகவே பாடல் இயற்றி, இசையமைத்துப் பாடினார்கள். அதுவே ஈழத்து மெல்லிசை வரலாற்றில், என்றும் அவர்களை விட்டு விலகிச் செல்ல முடியாவாறு அமைந்து விட்டது. சகோதர்களில் மூத்தவரான பரமேஸ் பாடலை இயற்றிப் பாடவும் செய்வார். இளையவர் அதற்கான இசைக்கோப்பினைச் செய்வார். இவர்களோடினைந்த மற்றொருவர், மகேஸ். அப்படி அவர்களின் படைப்பிலுருவான " உனக்குத் தெரியுமா..? பாடல்தான் இலங்கையில் , இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது தமிழ் பாட்டு.

பாடலும், இசையும் கூட, அப்போது வெளிவந்த தமிழகப் பாடல்களிலிருந்து வித்தியாசமாகத்தான் இருந்தது. இலேசான மேலைத்தேய இசைச்சாயலோடு, ஈழத்தின் தன்மையும் சேர்ந்திருக்கும். இந்த நுட்பங்களைவிடவும், இளவயதில் அவர்களது இசை நிகழ்ச்சிகளில் வேறு சில விடயங்கள் அதிகம் பிடித்திருந்தன. மற்றெந்த தமிழ் இசைக்குழுவும், றம்பெட் வாத்தியத்தை பாவிக்காத வேளையில் இவர்களது இசை நிகழ்ச்சிகளில், அது இசைக்கப்படும். இசைக்குழுவின் கலைஞர்களனைவரும் சீருடையில் வருவார்கள். நிறையத் தாளவாத்தியங்கள் இருக்கும். கோணேஸ் மேடையில், இசைக்கோப்பினை ஒருவித அழகியலுடன் கட்டமைப்பார். பரமேஸின் பாடல் வரிகளும், குரலும் அற்புதமாவிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒலித்தரம் இருக்கும்.

அன்று நாங்கள் பார்க்கச் சென்றிருந்த நிகழ்ச்சி, முதற்தடவையாக ஒரு ஆர்கெஸ்ட்ரா ஒழுங்கமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்து. தெரிவு செய்யப்பட்ட பதினான்கு பாடல்களை மட்டுமே பாடுவதாகவும், சொல்லப்பட்டிருந்தது, எங்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அறிவித்தது போன்று குறித்த நேரத்தில் அரங்கின் திரைவிலக ஒரே ஆரவாரம். அனைத்துக்கலைஞர்களும் வெள்ளைநிற கோட்சூட் ஆடை அலங்காரத்துடன், முழு ஆர்கெஸ்டாரவும் நின்றது. இசை ஆரம்பமாகியது. நான்கு றம்பேட் வாத்தியக்கலைஞர்கள், எலெக்ட்றிக் கிட்டார், றம்செற், கீபோட் என , இருபத்திமூன்று கலைஞர்களுடன் மேடையில் தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படப்பாடல்கள், அவர்களது சொந்த இசையமைப்பில் வந்த பாடல்கள் என மாறிமாறி வந்தது.


அந்தக்காலப்பகுதியில் வந்த பிரபலமான தமிழ்திரைப்படப்பாடல்களில் ஒன்று "என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்.." பாடலுக்கு முன்னர் கிட்டார் இசை அருமையாக வரும், அதன்பின் மற்ற வாத்தியங்களும் பாடலும் வரும். அந்தப்பாடல் குறித்த அறிவிப்பு வந்து, கிட்டார் இசையும் தொடங்கிற்று. கிட்டார் இசை முடிய முன்னரே மற்றைய வாத்திய இசை வந்து விட்டது. உடனே இசைக்கட்டமைப்புச் செய்த கோணேஸ் இசையை நிறுத்தி, திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்தார். இரண்டாவது தடவை எல்லாம் சிறப்பாகச் சேர்ந்து கொண்டன. அந்தப்பாடல் முடிந்ததும், கைதட்டல்கள் இரட்டிப்பாக இருந்தன. தாங்கள் தெரிவு செய்த பாடல்களை மட்டுமே இசைக்கும் பொழுது, அதை முழுவதும் நிறைவாக ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என கோணேஸ் சொன்னபோது, ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் வெளியே வரும்போது , அடுத்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வெளியே காத்திருந்தார்கள், இரண்டாவது காட்சிக்காக. ஆம் அன்று இரண்டாவது தடவையாகவும் , அந்நிகழ்ச்சி நடந்தது. நான் நினைக்கின்றேன், திருமலையில், ஒரு ஆர்க்கெஸ்ட்ரா, ஒரேநாளில் ஓரே மேடையில், இரு தடவைகள் நிகழ்ச்சி செய்தது, அதுவொன்றாகத்தான் இருக்கும்.

இவ்வளவு சிறப்புக்கள் பெற்றிருந்த அக்கலைஞர்களின் ஆரம்ப காலம் ஒன்றும் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. சிரமங்களைத் தோளில் சுமந்தவாறே, வெற்றிச்சிகரத்தின் உச்சிக்குச் சென்றார்கள். எங்கும் உள்ளது போல், இந்த இசை சகோதர்களினிடையேயும் பிரிவு வந்தது. சகோதரர்கள் பிரிந்துகொண்டபின், அவர்களது நிகழ்ச்சிகள் சிறப்பாகப் பேசப்படவில்லை. அதனாலேயே ஈழத்தின் மெல்லிசைப் போக்கில் ஒரு தேக்கம் ஏற்பட்டது என்னும் சொல்லலாம். இன்னும் என்னென்னவோ சாதித்திருக்க வேண்டிய சகோதரர்களின் இணைந்த இசைப்பயனம், இடையில் நின்று போனதென்னவோ சோகம்தான்...

ஆனால் இணைந்திருந்த காலங்களில் படைத்ததென்னவோ என்றும் இளமையாக இருக்கக் கூடிய இசைக்கோலங்கள்தான்.
இன்றும் இளமையாக இருக்கும் அந்தப்பாடல்களில் சில உங்களுக்காக.....





பாடல்களும், படமும்:-நன்றி! www.tamil.fm இணையத்தளம்

7 Comments:

  1. கானா பிரபா said...
    உனக்கு தெரியுமா பாடல் என்னுடைய எல்லாக் காலத்திலும் முதல் ரசனையில் இருப்பது. நல்ல பதிவு. படத்துக்கு நன்றி சொல்லியிருந்தீர்கள், படத்தைக் காணவில்லை.
    முற்கூட்டியே இசைக்களஞ்சியப்படுத்தி மேடையில் ஏற்றும் இந்தக்காலத்தோடு ஒப்பிடும் போது அந்த நாட்கள் பெருமிதமான தனித்துவம் படைத்த காலங்கள்.

    நீங்கள் தந்த பாடல்களோடு சில மேலதிக பாடல்களோடு 5 ஆண்டுக்கு முன் குமுதம் இணைத்தில் யாழ்மணம் பகுதியில் வந்தது, அப்படியே சுட்டுவிட்டேன்.
    வெற்றி said...
    மலை,
    நல்ல நினைவுமீட்டல் பதிவு. நீங்கள் குறிப்பிட்ட சகோதரர்களில் ஒருவர் இங்கே கனடாவில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். சரியாகத் தெரியாது.
    மலைநாடான் said...
    பிரபா!

    //முற்கூட்டியே இசைக்களஞ்சியப்படுத்தி மேடையில் ஏற்றும் இந்தக்காலத்தோடு ஒப்பிடும் போது அந்த நாட்கள் பெருமிதமான தனித்துவம் படைத்த காலங்கள்.//

    சரியாகச் சொன்னீர்கள். பதிவு நீண்டு சென்றதனால், இவர்களோடு இணைந்த வேறு சில கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடாது , பின்னூட்டங்களில் பகிர்ந்து கொள்ளலாமென்றிருந்தேன்.

    இவர்களது சமகாலக்கலைஞர்களுள்?, இவர்களோடு இணைந்து பணியாற்றியவர்களில் கலாவதி சின்னச்சாமி மிக முக்கியமானவர். இலங்கையில் பிரபலமான சிங்களப்பாடகிகளுக்குச் சமமாக சிங்களத்திலும், தமிழிலும் பாடியவர்களில் கலாவதி சின்னச்சாமியும், வி. முத்தழகும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களிருவரும், மலையகத்தைச் சேர்ந்தவர்களென்றும் நினைக்கின்றேன்.

    தங்கள் கருத்துக்கும், கில்லி தளத்தில் இணைத்தமைக்கும் நன்றிகள்.
    கானா பிரபா said...
    முத்தழகுவை கடந்த வருடம் பேட்டிகண்டிருந்தேன், அதைப் பின்னர் பகிருகின்றேன். கூட வே அவரது 12 ஈழத்து சினிமாப்பாடல்களையும் பத்திரப்படுத்தியிருக்கின்றேன்.
    மலைநாடான் said...
    வெற்றி!
    நீங்கள் கேள்விப்ப்டது சரியே.
    அவர்களில் மூத்தவர் ஜேர்மனியிலிருந்தவர். இறந்துவிட்டார். இளையவர் கனடாவில் இருக்கின்றார்.

    வருகைக்க்கு நன்றி
    Anonymous said...
    எனக்கு தெரியும் இதில் ஒருவரை.. எப்படி என்றால் .. இருவரும் 80 களில் மேற்கு பெர்லினில் ஒரே அகதி முகாமில் இருந்தோம்.

    நல்லதொரு ஈழத்து மெல்லிசை வரலாற்றில் முதன் முறையாக புரட்சி செய்தவர்களை பற்றி இளைய தலை முறைக்கு அறிமுக படுத்த கூடிய பதிவு
    மலைநாடான் said...
    சின்னக்குட்டி!

    நீங்கள் அவர்களில் ஒருவரை ஜேர்மனியில் சந்தித்திருக்கலாம்.

    பகிர்வுக்கு நன்றி.

Post a Comment




 

நன்றி, வணக்கம்.