நடந்த நூலகம் நொடிந்த கதை.





திருகோணமலையின் பசுமைக்கிராமமொன்றில் வாழ்ந்த காலமது. என் கல்லூரிக் காலம் . வாசிப்பு, இசை, ஊர்சுற்றல், நண்பர்கள் என உல்லாசமாக இருந்த காலமும் கூட. வாசிப்பு முதல் விருப்பமாக அப்போதுமிருந்தது. ஆனால் வாசிப்புக்கான புத்தகங்களைப் பெறுவது என்பதுதான் கடினம். அதிலும் நல்ல புத்தகங்களை என்னது என்று உரிமை கொண்டாடும் அகமகிழ்வு அளவிடமுடியாதது. ஆனால் அதற்குத் தடையாயிருந்தது பொருளாதாரம். அதை வெற்றிகொள்ளச் சிந்தித்தபோது வந்துதித்த எண்ணத்தில் உருவானதுதான் என் நடமாடும் நூலகம்.



வாசிப்பில் யாசிப்புள்ள இருபது பேர்களைச் சேர்த்துக் கொண்டேன். ஒவ்வொருவரிடமிருந்து மாதாந்தம் ஒரு குறிப்பிட்டதொகையைப் பெற்றுக்கொள்வது. திருகோணமலை நகரிலுள்ள இரு முக்கிய புத்தகசாலைகளாகிய, சிதம்பரப்பிள்ளை புத்தகநிலையம், வாணிபுத்தகநிலையம், இரண்டிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாங்கிக்கொள்வேன். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருபதுபேரில், சராசரியான வாசகர்கள், தீவிரவாசகர்கள்,எனக் கலந்திருந்ததால், வாங்கும் புத்தகங்கள் கலந்தேயிருக்கும்.

வாங்கிய புத்தகங்களுக்கு உறையிட்டு, அடையாளம் வைப்பதற்காக நூல் ஒட்டி, (வாசிக்கும் புத்தகங்களின் பக்கங்களை மடித்து அடையாளமிடுவது எனக்குப் பிடிப்பதில்லை) இலக்கமிட்டு, பெரிய பிளாஸ்டிக் கூடையொன்றில் அடுக்கி, வார இறுதிகளில், ஐந்து மைல் சுற்று வட்டத்துக்குள்ளிருந்த என் வாசக நண்பர்களின் வாசல் தேடிச் சைக்கிளில் செல்வேன். வாரத்திற்கு ஒருத்தருக்கு இரண்டு புத்தகங்கள் என, சுற்று ஒழுங்கில் பரிமாறிக்கொள்வோம். வருடமுடிவில் அவரவர் பிரியப்பட்ட புத்தகங்களைச் சம அளவில் பகிர்ந்து கொள்வோம். இப்படிப் பகிரப்படும் போது பல நண்பர்கள் தங்கள் பங்குகளை என்னிடம் தந்ததாலும், எனது விருப்பத்தின் காரணமாகவும், இரண்டான்டுகளுக்குள்ளாக சுமார் முந்நூறு புத்தகங்கள் என் நூலகத்தில் சேர்ந்திருந்தன. இந்த நகர்வில் நான் நுகர்ந்து கொண்ட சுகமான மற்றுமொரு அனுபவம், ஒவ்வொரு உறுப்பினர்களுடனும் வாசிப்பின்னான, வாசக அனுபவப் பகிர்வு. இது பலநேரங்களில் நல்ல பல கருத்தாடல்களையும் தந்தன.



வீரகேசரிபிரசுர வெளியீடாக வந்த அனைத்துப்புத்தகங்கள், அகிலன், சாண்டில்யன், தீபம் பாரத்தசாரதி, சிவசங்கரி, ஆகியோரின் படைப்புக்கள், எனத் தொடங்கி பின்னாட்களில் கார்க்கியின் தாய், வால்காவிலிருந்து கங்கை வரை எனத் தொடர்ந்தது. இந்தியக் கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட இரு தொகுப்புக்கள், இந்தியக்கலை கலாச்சாரம் பற்றிய பல்வேறுவிடயங்களையும் சொல்லும் பதிப்பு. அப்போதே அதன் விலை முந்நூறு ரூபாய்களுக்கு மேலிருந்தது. நூலகத்தின் இரண்டாமாண்டு நிறைவு நினைவாக அத்தொகுதி வாங்கப்பட்டது. இதுதவிர இடசாரிச்சிந்தனையாளர்களால் வெளியிடப்பட்ட சில காலாண்டுச்சஞ்சிகைகள், சிரித்திரன் சுந்தரின் படைப்புக்கள், டொமினிக் ஜீவாவின் மல்லிகைத் தொகுப்புக்கள், வெளியீடுகள், என நிறைந்திருந்தது என் நூலகம்.



திருகோணமலையைவிட்டு நான் பிரிந்தபோதும், என்வீட்டிலிருந்த ஒரு அலுமாரியில் அவை அடுக்கிவைக்கப்பட்டேயிருந்தது. பின்னொரு நாளில் என் குடும்பத்தாரும் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, அந்த விபரீதம் நடந்தது. அப்போது திருகோணமலைப்பிரதேசத்தில் மீளவும் ஒரு இனக்கலவரம் நிகழ்ந்தது. தமிழ்மக்கள் பலரும், தங்கள் வீடுகளைவிட்டு வேறிடங்களில் தஞ்சம் பெற்றிருந்த தருணமொன்றில், எங்கள் வீடு சூறையாடப்பட்டது.


பெட்டி இணைக்கப்பட்ட உழவு இயந்திரமொன்றுடன் வந்த கயவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடத் தொடங்கினார்கள். என் நண்பனின் தந்தையிடம் சொல்லி, நான் ரசித்து, பூமுதிரைப் பலகையில் செய்து வைத்திருந்த என் நூலக அலுமாரியும் அவர்கள் கண்களில் பட, அதற்குள் இருந்த புத்தகங்களை, எடுத்தெறிந்து மகிழ்ந்தார்கள். வாசிப்பு வாசனையற்ற ஒரு கயவன், வண்ணக்காகிதங்களில் உறையிட்டிருந்த அந்தநூல்களை, வானத்தில் எறிந்து கீழேவிழுவதைப் பார்த்து மகிழ்ந்தானாம்.



வயோதிபம் காரணமாக இடம்பெயராதிருந்த பக்கத்து வீட்டு முதியவர், திரும்பிச் சென்ற என்குடும்பத்தாரிடம் சொன்ன தகவல்கள் இது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த மண்ணில் தான் தேடிய தேட்டங்களின் அழிவை நினைத்து என் அப்பா அழுதார். இரண்டு வருடங்களாக இரசித்துச் சேர்ந்த, என் நேசத்துக்குரிய புத்தகங்களை இழந்து,
நான் அழுதேன். நடமாடும் நூலகம் என நான் நகைப்பும், பெருமையுமாய், சொல்லி மகிழ்ந்த என் உழைப்பு, என் தேடல், இல்லாதாக்கபட்டது.


இத்தனைக்கும் எங்கள் வீடு சூறையாடப்பட்டது, சிங்களக்காடையர்களால் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. கிழக்கில் தமிழ்மக்களின் துயர்கள் பலவற்றிலும் பங்குகொண்டிருக்கும், அவர்களும் தமிழ்பேசுபவர்கள்தான். இதற்குப் பின்னரும் என் நூற்சேகரிப்புக்கள் இரண்டு தடவைகள், இந்த யுத்தத்தின் காரணமாகவே அழிந்து போயிருக்கின்றன. அதுபற்றி இன்னுமொரு தடவை சொல்கிறேன்.

9 Comments:

  1. மலைநாடான் said...
    தெரிவிப்புக்காக
    கானா பிரபா said...
    வணக்கம் மலைநாடான்

    உங்கள் பின்னூட்டம் தான் பதிவை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது. நூலகம் மீதான நேசிப்பையும், உருக்குலைந்த நிகழ்வையும் உருக்கமாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மனிதர்கள் மட்டுமல்ல எண்ண எழுத்துக்கள் கூட அங்கே நிலைக்கமுடியாத பூமி.
    யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    மலை நாடர்!
    மலையகத்தில் வேலை பார்த்தபோது
    புத்தகம் சேர்க்கும் பழக்கம் வந்தது.
    83 கலம்பகத்துடன் எல்லாம் போய் விட்டது.
    உங்கள் ஆர்வத்தைப் படித்த போது
    அதை நினைத்துச் சிரித்தேன்.
    ம்ம்.
    மலைநாடான் said...
    பிரபா!

    உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
    வசந்தன்(Vasanthan) said...
    அனுபவப் பகிர்வு நன்றாயிருக்கிறது.

    நானும் புத்தகங்கள் சேகரிக்க முற்பட்டிருக்கிறேன். நிரந்தரமான இடமின்மை, அலைச்சல் என்பவற்றில் அவை கைவிட்டுப் போய்விடும். பிறகு இன்னொரு தொகுதி சேரும், கைவிட்டுப் போகும்.
    'எக்சோடஸ்' புதினத்தின் தமிழாக்கமான 'தாயகம் நோக்கிய பயணம்' என்ற கனத்த புத்தகத்தையும் மலரவனின் 'போருலா' வையும் மட்டும் இறுதிவரை தவறவிடாமல் காப்பாற்றியிருந்தேன். (தற்போதும் ஏதோவொரு வழியில் 'போருலா' என்னோடு இருக்கிறது)
    மலைநாடான் said...
    யோகன்!

    கடந்துபோனவை கனக்கவே.
    மலைநாடான் said...
    வசந்தன்!

    பகிர்வுக்கு நன்றி.

    நீங்கள் குறிப்பிடுவது போராளிக் கலைஞர் மலரவன் தானே?. போருலா வாசித்த ஞாபகம் இருக்கிறது.
    பாரதி தம்பி said...
    இரவல் கொடுத்த புத்தகம் திரும்ப வரவில்லை என்றாலே கடுப்பாகும். அத்தனை புத்தகங்களும் சூறையாடப்பட்டது நிச்சயமாக மனம் கணக்க செய்யும் கொடுமைதான்.
    மலைநாடான் said...
    \\இரவல் கொடுத்த புத்தகம் திரும்ப வரவில்லை என்றாலே கடுப்பாகும்\\

    இப்போ என் மீதும் கடுப்பாகுமே.:))

Post a Comment




 

நன்றி, வணக்கம்.