குருவி குருவியல்ல





குருவி உண்மையில் அசத்தலான பேர்வழிதான். கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதென்பது போல், மூர்த்தி சிறிதென்றாலம் கீர்த்தி பெரிதென்பது போல், குருவியின் கீர்த்தியும் பெரிதுதான். வலைப்பதிவெழுத வந்த காலங்களிலே இந்தக் குருவி பற்றி எழுதவேண்டுமென எண்ணியிருந்ததுதான். சாதாரண வாழ்வு வாழ்ந்த மிகச்சராசரியான மனிதன். ஒரு காலத்தில் தன் பெயர் இணையத்தில் இவ்வாறு பதிவு செய்யப்படுமென்றோ அல்லது பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொள்ளக் கூடிய சூழலிலோ இருக்கக் கூடியவரில்லை. இன்னமும் இருக்கின்றாரோ என்பதும் தெரியவில்லை. தான் சொல்லும் கதைகளின் சாட்சியமாகவே வாழ்ந்த அந்தச் சராசரி மனிதனைப் பற்றிய பதிவிது. ஒருசில புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ளும் வாசிப்பினை இது தரலாம்.


காடு பற்றி அறிய, காடுகளில் சுற்றித்திரிந்து வர ஆவல் கொண்டிருந்த காலத்தில், என்னைக் கந்தளாய் காடுகளுக்குள் தன்னுடன் கூட்டிச்சென்றவர்தான் குருவி. குருவி அவரது பட்டப்பெயர் அல்லது சிறப்புப் பெயர். காரணப்பெயரும் கூட. அடர்ந்து வளர்ந்து, இருள் கவ்விய காடுகளுக்குள் அநாயசமாக விரைந்து செல்லும் நடைவேகத்தாலும், குட்டைத் தோன்றத்தாலும், வந்ததுதான் குருவி எனும் பட்டப்பெயர். நிஜத்தில் சின்னராசா. குருவிச்சின்னராசா என்றால் தம்பலகாமப் பகுதியில் ரொம்பவும் பரிச்சயப் பட்டிருந்தவர். அந்த பரந்த அறிமுகத்துக்குக் காரணம், அவரிடமிருந்த சில அதிதமான திறமைகள் அல்லது செயல்கள்.


அந்தக்காலத்து இரட்டைக்குழல் துப்பாக்கியை நிமிர்த்திப்பிடித்தால் அதன் உயரத்தில் சற்றே கூடிய அந்த மனிதன் ஒரு வேட்டைப்பிரியன். ஆனால் வேட்டையாடுவதற்கென அவர்களுக்குள்ளிருந்த மரபுகள் அல்லது சட்டங்கள் மீறாத வேட்டைக்காரன். இதைவிடவும் சின்னராசாவுக்கு மேலும் சில தகமைகள். அதில் எனக்குப் பிடித்தது அவரது கம்பு விளையாட்டு. அவரைவிட நீளமான கம்பை அநாயசமாகச் சுற்றி விளையாடுவார். அதன் பால் ஈர்ப்புக்கொண்டு நானும் எனது மாமா ஒருவரும், அவரிடம் கம்பு விளையாட்டுப் பயிற்சி பெற விரும்பினோம்.


ஒரு அமாவாசை இரவில் கோணேசர் கோவில் மேற்குவீதியில் வகுப்பு ஆரம்பமாகியது. கம்பு விளையாட்டுக்கு உகந்த கம்பாக துவரைத்தடியினைப் பாவிப்பார்கள். நார்த்தன்மை கொண்ட நல்ல வைரமான, நேரான துவரந்தடிகளை வெட்டிப் பாடனம் செய்து பாவிப்பார்கள். கடினமான மேற்தோலை உடைய எருமைகளை அடித்து மேய்க்கவும், இந்தத் துவரந்தடிகளையே பாவிப்பார்கள். அதனைத் துவரங்கேட்டி எனச் சொல்வார்கள். பாடனம் செய்து, அவர் கொண்டு வந்திருந்த கம்புகளை வைத்து, குருவணக்கஞ் செய்வது எப்படி என்று முதல்வகுப்பில் காட்டித்தரப்பட்டது. அமாவாசை முதல் பூரணை வரை முதலாம் பாடம் எனவும் வரையறுத்துச் சொல்லியிருந்தார். ஆனால் எமது துரதிஷ்டமும் பலரது அதிர்ஷ்டமும் சேர்ந்துகொள்ள அப்பாவுக்கு முதல்நாளிலே செய்தி கசிந்துவிட, துவரங்கேட்டியால் என்னை மேய்த்து, சின்னராசாவைக் கடிந்துவிட, என் கம்பு விளையாட்டுப் பயிற்சி, வணக்கவகுப்புடனே வணக்கம் போடப்பட்டுவிட்டது.


சின்னராசா, கிழக்குக்கேயுரிய மந்திரவிளையாட்டுக்களிலும் கெட்டிக்காறார். ஆனாலும் அவர் எல்லாரிடத்திலும் வெளிப்படையாக அதைச் சொல்லிவிடும் வெள்ளந்திக்காறர். அதனால் அவரது மந்திர வேலைகள் பலிக்காது எனச் சொல்வார்கள். மந்திர விளையாட்டு என நான் சொன்னதுக்குக் காரணம், அதை ஒரு பழிவாங்கு செயலாக அவர்கள் பாவித்ததில்லை. கும்பத்து மால்களில் ஒரு வித்தை விளையாட்டாகப் பாவித்ததனாலே. அதைத் தவறாகச் செய்பவர்களையும் சின்னராசா கடிந்து கொள்வார்.


இந்த மந்திர வேலைகளில் சிலவற்றை அவர் தன் காடுசார் வாழ்வில் பாதுகாப்புக்குப் பாவித்துக் கொள்வார். சிலவற்றைக் கண்டிருக்கின்றேன். சில கதைகளை அவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். வேட்டையாடலுக்கென அவர்கள் தீர்மானித்துள்ள சில மிருகங்கள் பறவைகளைத் தவிர, ஏனையவற்றை வேட்டையாடுவதில்லை எனும் ஒரு கொள்கை அவர்களிடம் எழுதப்படாத சட்டமாகவிருந்தது. அப்படி அவர்கள் வேட்டையாட எத்தனிக்காத மிருகங்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள அந்த மந்திர அறிவைப் பாவித்துக் கொண்டார்கள். இதை கட்டு மந்திரம் எனச் சொல்லிக்கொள்வார்கள். இது மிருகங்களின் வகைக்குத் தக்கவாறு சொல்வார்களென நினைக்கின்றேன். இதைச்சொல்லி உச்சரிப்பதின் மூலம், அமமிருகங்களின் வாய்களைக் குறிப்பிட சில நிமிடங்களுக்கு திறக்கவிடாது செய்ய முடியும், அல்லது அவை செல்லும் பாதையினைத் திருப்பிவிட முடியும் என வெகுவாக நம்பினார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு நேரக்கட்டளவும் அவர்களிடமிருந்தது. நேரக்கட்டும், நம்பிக்கையும், தவறினால் மிருகங்கள் கடுமையாகத் தாக்கிவிடும் என்று சொல்வார்கள்.


அப்படி நடந்த ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக தன் வலது கை ஆட்காட்டிவிரலை காட்டுவார் சின்னராசா. ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சின்னராசாவும், அவரது நண்பரும் சென்றிருக்கின்றார்கள். வழியில் இரு கரடிகள் எதிர்பட்டிருக்கின்றன. ஒன்று ஆண் மற்றது பெண். சின்னராசாவுக்குப் பின்னால் நண்பர். சற்றுப் பயந்தவர். கரடிகள் நேராகச் சந்தித்து விட்டன. நண்பரிடம் தன் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, சின்னராசா கரடிகளை, நேருக்கு நேராக உற்றுப் பார்த்த வண்ணம் மந்திரக்கட்டுச் சொல்லத் தொடங்கினார்...

மிகுதியை நாளை சொல்கின்றேனே :)

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாமே




பாடசாலைக் காலத்தில், ஏப்ரல் முதலாம் நாள் ஒரு பகிடிவதை நாளாக எமக்கிருந்தது. முதல் நாளே யார் யார் எனத்திட்டமிட்டதன்படி, காலையில், பகிடிவதை தொடங்கும். வெள்ளைச்சீருடையில், பேனா மையைத் தெளிப்பதுதான் அது. குறித்த நபருக்கு தெளித்தபின் அதைப்பார்த்து கேலிசெய்து சிரிப்பதுதான் 'ஏப்ரல் பூல்' விளையாட்டாக இருந்தது. பெரிதாக ஒன்றுமில்லையென அப்போது தெரிந்தாலும், அறுவடை முடிந்த வயல்களில், கொட்டிக்கிடக்கும் நெற்கதிர் பொறுக்கி, நெல்லாக்கி விற்று வரும் பணத்தில் பள்ளிச்சீருடை ஒன்றை வாங்கியணிந்துவரும் ஏழை மாணவனுக்கு இது எவ்வளவு வலியைத் தந்திருக்கும் என இப்போது புரிகிறது.

ஒரு காலத்தில், ஏப்ரல் மாதத்தை வருடத்தொடக்கமாகக் கொண்டிருந்த, ஐரோப்பிய சமூகத்தில், ஜனவரியை வருடத்தொடக்கமாகக் கொள்ளும் புதிய நாட்காட்டிமுறை அறிமுகமாகியபோது, புதிய முறைக்கு மாறாதிருந்த பழமை வாதிகள் ஏப்ரல் முதல்நாளை வருடத்தொடக்கமாகக் கொண்டாட, அதைப் புதிய மாற்றம் கண்டவர்கள், முட்டாள்கள் தினம் என எள்ளி நகையாடியதன் நீட்சி, காலனியாதிக்கத்தால் எங்களிடமும் தொற்றிக்கொண்டது. தொடங்கியவர்கள் அதை விட்டுவிலகிச் செல்ல, நாம் தொடர்கிறோம்...


ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் என என்னளவில் நினைவு கொள்ள 1987 ஏப்ரல் முதலாந்திகதிக்குச் செல்ல வேண்டும். அந்தக்காலப்பகுதி, எங்கள் நிலத்தில் அமைதி நிலவியதாகச் சொல்லப்பட்டகாலம். அமைதிகாக்க வந்தவர்கள் எங்கள் தெருக்களில் காலையும் மாலையும் நடைபயின்றதால், அகிலத்தில் அவ்விதம் கற்பிதம் செய்யப்பட்டிருக்கலாம்.


எங்கள் வீட்டினருகே ஒருசிறு மளிகைக்கடை. கடையோடு சேர்ந்தே அதை நடத்துபவர்களின் வீடு. அவர்களுடைய பிள்ளைகளில் ஒரு பெண், சற்று மனவளர்ச்சி குன்றியவள். ஆனாலும் அந்தக்குடும்பத்தில், அயல்களில், அனைவராலும் நேசிக்கபட்ட சிறுபெண். வீட்டோடு சேர்ந்தே கடையுமிருந்ததால், அப்பெண்ணையும் சிலவேளைகளில் கடைகளில் காணலாம். அன்றும் அவள் நின்றிருந்தாள்.




வீதியில் வந்த வீ(ண/ர)ர்களில் ஒருவனுக்கு பீடி குடிக்கும் எண்ணம் வரவே, வீதியருகேயிருந்த கடைக்குச் சென்றான். கடையின் முகப்பில் தாயோடு அப் பெண்ணும் . பீடிகேட்டவனுக்கு, தாய் பீடியெடுத்துக் கொடுத்தாள். பற்றவைக்க தீப்பெட்டி கேட்டான். கடையில் தீப்பெட்டி முடிந்துவிட்டதைச் சொல்லி வீட்டினுள்ளிருந்து எடுத்துவர உள்ளே சென்ற தாயையும், வீதியிலும், கடைமுகப்பிலும், நின்ற கர்ம வீரர்களையும் மாறி மாறிப் பார்த்து விகல்பமின்றி சிரித்தபடியே இருந்தாள் சிறுபெண்.




பீடி வாங்கியபின் கிடைத்த மீதிச் சில்லறையை வைப்பதற்காகவோ என்னவோ, கையிலிருந்த துப்பாக்கியைக் கடை மேசையில் வைத்தான் அவன். சிறுகுழந்தையாய் சிரித்தபடி, " இது சுடுமா..? " எனக்கேட்டாள். என்ன நினைத்தானோ?. துப்பாக்கியைக் கையிலெடுத்துச் சுட்டுக்காட்டினான். துப்பாக்கிச் சத்தம் கேட்டு உள்ளே சென்ற தாய் ஓடிவந்தாள். உணவருந்திக்கொண்டிருந்த தந்தை ஓடிவந்தார். அண்டைவீட்டுக்காறர் ஓடிவந்தனர். ஆனால்... சுடுமா எனக்கேட்ட பேதை மட்டும் பேசவில்லை. வீழந்து கிடந்த அவளின் தலையினடியிலிருந்து செங்குருதி வெளிவரத் தொடங்கிற்று.




வீதியிலிறங்கிய வீனர்கள் வரிசை, நடக்கத் தொடங்க, புகைந்த துப்பாக்கியினைத் துடைத்த பின் திரும்பி அவனும் நடந்தான். என்ன நடந்ததென்று வினவிய சகபாடிக்குச் சிரித்தபடி சொன்னான்..




" ஏப்ரல் பூல்.."




இங்கும் வாசிக்க உண்டு


 

நன்றி, வணக்கம்.