திருத்தம்பலேஸ்வரம் பகுதி 2

'' இசையும், கலையும், இணைந்து வாழ்ந்த அந்தப்பசுமைப்பூமியை, இசையோடு காண உங்கள் ஒலிச்செயலியை இயங்கவைத்தபின், தம்பலகாமத்திற்குள் அடியெடுத்து வையுங்கள் ''





தம்பலகாமம்.

திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி. ஒருகாலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம். தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும் தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள் எந்நேரமும் நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள் போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள்.



தம்பலகாமத்தை ஒரு தடவை சுற்றி வந்தால் அத்திட்டுக் குடியிருப்புக்களின் பெயர்களில் தமிழ் மணக்கும். மக்களின் வாழ்வில் தமிழ் சுவைக்கும். திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி விரிகின்ற நெடுஞ்சாலையில் பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத் தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.

சாலை பிரியும் அச்சந்தி தம்பலகாமம் சந்தி அல்லது பதின்மூன்றாம் கட்டை என அழைக்கப்படும். அங்கிருந்து உள் நுழைந்தால் வரும், முதலாவது குடியிருப்பின் பெயர் புதுக்குடியிருப்பு. அதையும் தாண்டி உள்ளே செல்ல சாலை மீண்டும் இரண்டாகப்பிரியும். இடதுபுறமாகச் செல்லும் சாலை ஊருக்குள் சென்றுவர, மற்றையது கோவில்குடியிருப்பு நோக்கிச் செல்லும்.

இடதுபுறமாக ஊருக்குள் செல்லும் சாலை வழியே செல்வோமானால், பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, முன்மாதிரித்திடல், சிப்பித்திடல், வர்ணமேடு, முள்ளியடி, வரைக்கும் சென்று கிண்ணியா நோக்கி அவ்வீதி செல்லும். கோவில்குடியிருப்பு வரை சென்ற வீதி அங்கிருந்து நீண்டு, குஞ்சடப்பன்திடல், நாயன்மார்திடல், நடுப்பிரப்பன்திடல், ஆகிய வற்றினுர்டு சென்று முள்ளியடியில் மற்றைய வீதியுடன் இணைந்து கிண்ணியா செல்லும். இந்தக் குடியிருப்பினிலெல்லாம் , தென்னை மரத்தோப்புகளும், தீங்கனிச்சோலைகளும், இதந்தரு மனைகளும், இன்பமும் நிறைந்திருக்கும்.


கோயில்க்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது என் எண்ணப்பாடு. அதன் வரலாற்றுக்குச் செல்லமுன் தம்பலகாமம் என்ற பெயர் வருவதகான காரணத்தைச் சற்று நோக்குவோம்.

இந்நிலப்பரப்பை ஒருகாலத்தில் ஆட்சி செய்த மன்னனின் பெயர் தம்பன் என்றும் அவன் பெயர்சார்ந்தே இந்நிலப்பரப்பு தம்பலகாமம் எனப்பெயர் பெற்றதென இங்குவாழ்ந்த பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இம் மன்னன் சோழர்காலத்தே வாழ்ந்த பூர்வீக ஈழத்தமிழனாக இருந்திருக்க வேண்டும். சோழமன்னர்களின் ஆட்சி விரிவாக்கத்தின்போது, அவர்களுடன் இசைந்து வாழ்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி அவன் சோழ மன்னர்களுடன் நல்லுறவு பேணி வளர்த்தமையால், சோழமன்னர்கள் தங்கள் ஆட்சி விரிவாக்கத்தின்போது ஆற்றிய நற்பணிகளினூடாக, இப்பகுதியில் இருந்த சிவனாலயத்தைப் புனருத்தாரணம் செய்து, குடமுழுக்குச் செய்திருக்கின்றார்கள். அத்தோடு, தங்கள் வழியில், அந்நிலமன்னனாகவிருந்த தம்பன்பெயரால் அவ்வாலயத்திற்கு தம்பலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் எனப் பெயரிட்டிருக்க வேண்டும். (சோழர் காலத்தே கட்டப்பெற்ற ஆலயங்களுக்கு அதைக்கட்டிய மன்னர்களின் பெயர்சார்ந்து பெயரமைக்கப்பட்டிருப்பதற்கு, சோழேஸ்வரம், ராஜராஜேஸ்வரம், ஆகிய பெயர்களை உதாரணமாகக் காணலாம்.)

தம்பன் எனும் தலைவன் நிச்சயம் ஒரு ஈழத்துத்தமிழன் என, நான் கருதுவதற்கு முக்கிய காரணம், அத்தகைய ஒரு பெயர் சோழர்பரம்பரைக்குள் காணப்படவில்லை. அதேசமயம் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில், இத்தகைய பெயர்களும், மன்னர்களும் கூட வாழ்ந்திருக்கின்றார்கள். பனங்காமம் என்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்த அரசன், பனங்காமவன்னியன் என அழைக்கப்பட்டிருக்கிருக்கின்றான்.

தம்பனின் ஆட்சிக்குட்பட்டிருந்த வயல்நிலப்பகுதியை, தம்பலகமம் என்பது சரியா? அல்லது தம்பலகாமம் என்பது சரியா? என ஒரு கேள்வி பின்னாட்களில் எழுந்தபோது, மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள், பனங்காமம், கொடிகாமம், வீமன்காமம், எனும் பெயர்களை மேற்கோள்காட்டி, தம்பலகாமம் என அழைப்பதே சரியென நிறுவினார்.

அதைவிடவும், தம்பலகமம் என பெயர்விளித்துவருங்கால், அது பின்னாட்களில் சிங்கள குடியேற்றவாசிகளால் தம்பலகமுவ அல்லது தம்பலகம எனப் பெயர் மாற்றம் செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

தம்பலகாமத்திற்கான வரைபடம் கிடைக்காத காரணத்தால், என் மனம் நிறைந்த அந்த மண்ணை நானே வரைந்து இங்கே தந்துள்ளேன். அதிலே தம்பலகாமம் சந்தியிலும், கோவிகுடியிருப்பிலும் சிகப்பு வட்ட அடையாளமிட்டபகுதிகளில் மிகப்பெரிய இராணுவ முகாம்கள் இருப்பதாக அறிகின்றேன். இம்மண்ணிற்கு அண்மையில் சென்று வந்த என் நண்பனிடம் எனக்கும் ஆசையுண்டு எனச் சொன்னபோது சொன்னான், வேண்டாம் தற்போது வேண்டாம். ஏனெனில் உன் மனதில் பதிந்துள்ள அந்தப் பசுமை மண்ணை நீ இப்போது பார்க்க முடியாது. ஆதலால் அந்நிலம் மீட்சிபெறும்வரை, அதன் பசுமை நினைவுகளாவது உன்னிடம் அழியாதிருக்கட்டும் என்றான்...


- இன்னும் சொல்வேன்


நன்றிகள்:
''' புயலடித்த தேசம் '' இறுவட்டுக்கலைஞர்களுக்கும்
சுவி்ஸ் கலைபண்பாட்டுக்கழகத்தினர்க்கும்











16 Comments:

  1. வெற்றி said...
    மலைநாடான்,
    வணக்கம். பதிவிற்கு நன்றி. நாளைக்கு ஒரு பரீட்சை இருப்பதால், உங்கள் பதிவை நாளை படித்த பின்னர் கருத்துச் சொல்கிறேன். மிக்க நன்றி.
    மலைநாடான் said...
    வெற்றி!

    முதலில் பரீட்சைய கவனியுங்கள். பின்னர் பதிவுக்கு வாங்க. நன்றி!
    Anonymous said...
    மலை நாடர்!
    அருமை; இந்த தம்பன் எனும் அரசன் ஈழத்தவராகத்தான் இருக்க வேண்டும்; ஈழத்தில் தம்பு;தம்பர் எனும் பெயர்கள் சுமார் 60; 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கிருந்தது. அத்துடன் இந்த குடியிருப்பு எனும் முடியும் பெயர்கள், முல்லைத்தீவில் முறையே கோவிற்குடியிருப்பு,கரைச்சிக்குடியிருப்பு,மணற்குடியிருப்பு என உண்டு. அத்துடன் இந்த திட்டுக்கள் மிக அழகான தழிழ்ப் பெயர்கள்.2004ல் ஒரு தடவை சென்றேன் தம்பலகாமம் மிக ரம்மியமான இடம்.செழுமையான மண்.
    யோகன் பாரிஸ்
    மலைநாடான் said...
    /ஈழத்தில் தம்பு;தம்பர் எனும் பெயர்கள் சுமார் 60; 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கிருந்தது/

    யோகன்!

    இந்த விடயத்தை நான் குறிப்பிட மறந்துவிட்டேன் பார்த்தீர்களா? திருகோணமலைப்பகுதிகளிலும் வயதானவர்கள் மத்தியில் இந்தப் பெயர் இருந்ததை அவதானித்துள்ளேன்.
    நினைவுபடுத்தியமைக்கு நன்றி!
    சின்னக்குட்டி said...
    அந்த காலத்து எனது கூட்டாளிகளின்ரை பெயர்கள் சவாரித்தம்பர், தம்பர் என்று இருந்திருக்கிறது...பகிடி மூலமாவது உப்பிடியான பெயர்கள் நம்மிடையே இருந்திருக்கிறதென கூற முயற்சிக்கிறன்
    Anonymous said...
    நல்ல தொடர். ஊர்வரைபடம் மிகவும் தொடுகிறது. பட்டித்திடலிலே (பட்டிமேடு?) வயலுக்கு அடிக்கடி வந்துபோன ஞாபகம்
    -/.
    குமரன் (Kumaran) said...
    மலைநாடான். திருத்தம்பலேஸ்வரத்தைப் பற்றிய இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துவருகிறேன். அறியாத பல விதயங்களை அறியத் தருகிறீர்கள். மிக்க நன்றி.
    மலைநாடான் said...
    சின்னக்குட்டி!

    தம்பு, தம்பர் பெயர்கள் நிச்சயம் ஈழத்தில் புழக்கத்தில் இருந்தவையே. தமிழகத்தில் இப்பெயர்கள் இருந்ததா என்பது பற்றி தமிழக நண்பர்கள்தான் சொல்லவேணும்.

    பெயரிலி!

    பட்டித்திடல் என்ற பெயரிலும் தென் தமிழீழத்தில் வேறு ஒரு இடம் உண்டு. நீங்கள் தம்பலகாமத்தில் வந்தது பட்டிமேடுதான். தம்பலகாமம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்துதானிருக்கிறது.

    குமரன்!

    ஈழம் குறித்த விடயங்களை அறிந்து கொள்ளும் உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி. எங்களுக்கு தமிழக நடைமுறைகள் குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு, முடிந்தால் பதில் தாருங்கள்.

    கருத்துச் சொன்ன அனைவர்க்கும்
    நன்றி!
    கானா பிரபா said...
    நான் முந்திச்சொன்னது மாதிரி, தென் தமிழ் ஈழம்பற்றிய குறைந்தளவு வரலாற்றுக் கட்டுரைகள் இருந்துவந்த குறையை நீங்கள் நிரப்புகின்றீர்கள். படங்களும் போடுங்கோவன் அண்ணை:-)
    பொன்ஸ்~~Poorna said...
    மலைநாடன்,
    வரை படத்தில் பெயர்களைப் படிக்கும்போதே தமிழ் மணக்கிறது.. இப்படி எல்லாம் வரைபடங்கள் உருவாக்கி வைத்தால் தான் எதிர்காலத்தினருக்கு என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது...

    பாடல் மிக நன்றாக இருந்தது.
    ஆனால், அலுவலகத்தில் இந்தப் பக்கத்தைத் திறந்துவிட்டு, அக்கம் பக்கத்தினரைப் பார்த்து அசட்டுச் சிரிப்புடன் உடனே மூடி விட்டேன்.. அதன் பின் இப்போது தான் நேரம் கிடைத்தது பார்க்க.. :))
    வெற்றி said...
    மலைநாடான்,
    இப்போது தான் இப் பதிவைப் படித்து முடித்தேன். அருமை. பதிவைப் படித்து முடித்ததும் இனம் புரியாத சோகம் மனதைக் கவ்விக் கொண்டது. காரணம், எப்படி அழகாக , செல்வச் செழிப்புடன் இருந்த இப் பகுதித் தமிழ்மண் இன்று சோபை இழந்து, அங்கு வாழும் எம் உறவுகளும் நிம்மதியிழந்து... ம்ம்ம்ம், என்று தான் எம் இன்னல்களுக்கு முடிவோ! "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?"...

    புதுக்குடியிருப்பு என யாழ்ப்பாணத்திலும் ஓர் ஊர் இருப்பதாக நினைக்கிறேன்.

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
    மலைநாடான் said...
    கானா.பிரபா!
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பொன்ஸ்!

    //அலுவலகத்தில் இந்தப் பக்கத்தைத் திறந்துவிட்டு, அக்கம் பக்கத்தினரைப் பார்த்து அசட்டுச் சிரிப்புடன் உடனே மூடி விட்டேன் //

    தங்களைத்தர்மசங்கடமான நிலைக்குட்படுத்தியமைக்கு மன்னிகவும். தற்போது மறுசீரமைத்துவிட்டேன். மற்றுமொருவருக்கு அந்நிலை வரக்கூடாதல்லவா. தங்கள் கருத்துக்கு நன்றி.


    வெற்றி!

    //புதுக்குடியிருப்பு என யாழ்ப்பாணத்திலும் ஓர் ஊர் இருப்பதாக நினைக்கிறேன்//

    இல்லையே. புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு மாவட்டத்திலல்லவா இருக்கிறது.

    /இனம்புரியாச் சோகம்/

    ம்...காலம் வரும். காத்திருப்போம்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வெற்றி said...
    மலைநாடான்,

    //
    இல்லையே. புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு மாவட்டத்திலல்லவா இருக்கிறது.
    //

    உண்மை. உண்மை. நான் கடந்த வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது கிளிநொச்சியில் தங்கியிருந்தேன். அங்கிருந்து இந்த புதுக்குடியிருப்பு எனும் இடத்திற்கும் சென்றேன். இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. நான் புத்தூர் எனும் இடத்தை புதுக்குடியிருப்புடன் குழப்பிவிட்டேன். நான் ஈழத்தில் வசித்த காலம் வெகு குறைவு என்பதால் தான் இக் குழப்பம். மன்னித்துக் கொள்ளவும்.
    செல்வநாயகி said...
    நல்ல தொடர். தொடருங்கள்.
    உங்கள் வலைப்பக்க வடிவமைப்பும் அருமை. ஏதேதோ சொல்கிறது அந்த மரமும், பின்னாலிருக்கும் பிறைநிலாவும்.
    மலைநாடான் said...
    /ஏதேதோ சொல்கிறது அந்த மரமும், பின்னாலிருக்கும் பிறைநிலாவும்./

    உண்மை செல்வநாயகி!

    இழந்த என் மருத நிலத்தில், நிலவொளியில் மருதமரங்களின் அடியில்நான் கற்றுக்கொண்ட கதைகள் எண்ணற்றவை. அவற்றில் ஒருசிலவற்றையாவது பதிந்து கொள்ள உருவகப்படுத்தியதே இத்தளம். அந்த எண்ணத்துடன் இணையத்தில் தேடியபோது கிடைத்த படம்தான் அது.
    உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி!
    Anonymous said...
    உங்கள் ஆக்கங்கங்களையும் அதற்கு பலரும் அளித்த கருத்துக்களையும் படித்தேன். ஆரோக்கியமான பல சிந்தனைகளுக்கு உங்கள் முயற்சி வழிவகுத்துள்ளது. நான் எனது வேலைகள் காரணமாக அனுப்புவதாக கூறிய வரலாற்றுத் தகவல்களை இன்று இணைக்கவில்லை விரைவில் அனுப்பி வைக்கிறேன்.

    அன்புடன்
    ப.கரன்

Post a Comment




 

நன்றி, வணக்கம்.