பிறப்புக்களை வெற்றியாக்கியவள்....


பிறப்புக்களை வெற்றியாக்கியவள்...... மேரி அக்கா!

ஒரு காலத்தில் தம்பலகாமத்தில் மிகப்பிரபலமான பெயர். இப்பொழுது குடும்பத்தர்களாக இருக்கும் அக்கிராமத்து மக்கள் பலரின், பிறப்பினை வெற்றியாக, மகிழ்ச்சிமிக்கதாக, ஆக்கிவைத்த அன்னையவள். ஆம்! மேரி அக்கா ஒரு மருத்துவத்தாதி. சின்ன வகுப்பில் விளக்கேந்திய மாது என்ற சிறப்போடு, புளோறிங் நைட்டிங்கேல் அம்மையாரின் கதை படித்தபோது, புளோறிங் நைட்டிங்கேலாக என் மனதில் பதிந்த முகம் மேரி அக்காவினுடையதுதான்.

சைவசமயிகள் வாழ்ந்த அந்தக்கிராமப்பகுதியில், மதங்களைக்கடந்த நேசிப்போடு, மக்கள் சேவையில் நின்ற மேரி அக்காவின் பணி அளப்பரியது. மிகப்பெரிய வைத்திய வசதிகள் அற்ற, சாதாரண கிராமிய வைத்தியசாலையாக இருந்த, தம்பலகாமம் அரசினர் வைத்தியசாலையில், மருத்துவத்தாதியாகக் கடமையாற்றிய மேரி அக்கா, பணிநேரம் என்பதையும் தாண்டிப் பணியாற்றிய பண்பாளர்.

பிரசவம் என்பது, பெண்களுக்கு மறுபிறப்பு. இத்தகைய மறுபிறப்புக்களை, மேரியக்கா உடனிருந்தால் பயமின்றி பிரசவிக்கலாம் எனத் தாய்மார்கள் சொல்லும் அளவுக்கு பெயர்பெற்ற மருத்துவத்தாதி மேரிஅக்கா. இந்தச்சிறப்புக்குச் சொந்தக்காரியானதால், மேரிஅக்காவின் சேவை நேரம் என்பது வரையறைக்குட்படாதிருந்தது. ஆனாலும் அவர் முகஞ்சுளித்தோ, மனஞ்சலித்தோ நான் கண்டதில்லை.

மேரி அக்காவும், என் தாயும், நல்ல நண்பிகள். சைவஆச்சாரத்தில் திளைத்த என்தாயும், கிறிஸ்தவ மரபை மீறாத மேரிஅக்காவும், கொண்டிருந்த நட்பு, அதிசயமாகப் பார்க்கப்படவில்லை. ஏனெனில் இருவர் தன்மைகளும் அவ்வளவு பிரசித்தம். கத்தோலிக்க மரபில் நின்ற மேரி அக்கா தைபொங்கல் பொங்குவா. சைவமரபில் நின்ற என்தாய், பாலன்பிறப்புக்குப் பலகாரம் சுடுவா. என்தாயுடன் மட்டுமல்ல, எல்லோரிடத்திலும் அத்தகைய மாறா மனப்பக்குவத்துடன் பழகியவர்தான் மேரி அக்கா.


மேரிஅக்காவிற்கு ஐந்து ஆண்பிள்ளைகள். எங்கள் வீட்டில் நானும் தங்கையும்தான். பெண்குழந்தையில்லாத மேரிஅக்காவிற்கு என்தங்கைமீது கொள்ளைப்பிரியம். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தன்பிள்ளைகளுக்கு புத்தாடை வேண்டும் மேரியக்காவின் தெரிவில் முதலிடத்தில் இருப்பது என் தங்கைக்கான ஆடைதான். என் தாயாரின் மறைவில் துவண்டது என் குடும்பம் மட்டுமல்ல. மேரி அ;க்காவும், அவரது குடுபத்தினரும் அதிர்ந்து போனார்கள்.

மேரிஅக்காவுக்கு இடமாற்றம் கிடைத்து, தங்கள் சொந்த ஊரான மூதூருக்குச் செல்லும் வரையில், தாயிழந்த எனக்கும், என் தங்கைக்கும், தாயின் பரிவைத் தந்த மேரிஅக்கா, என்னை எப்போதும் தம்பி என்றே விழிப்பார்கள். பல ஆண்டுகள் கழித்து, புலத்தில் சந்தித்தபோதும், மேரிஅக்கா அப்படியே அழைத்தார்கள். கண்களில் அதே தாயின் கருணையோடு............


-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0.............0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

தொலைபேசி அழைத்தது.
மறுமுனையில், சொந்த ஊர் எதுவெனக் கேட்டால், முத்தூர் என் மூதூர் எனப்பாட்டில் பதில் சொல்லும் என் நண்பன்.
கலகலப்பான என் நண்பன் கலங்கியிருப்பது குரலில் தெரிந்தது. அவன் பேசப்பேச, நான் உடைந்துபோனேன்.
சென்ற மூன்றாந்திகதி, மூதூரில் நடந்த போரில், ஸ்ரீலங்கா அரசின் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதலால், தங்கள் வாழ்நிலைகளைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் மேரிஅக்காவும், அவருடைய பிள்ளைகளுடைய குடும்பமும் இருந்தது. நடந்து களைத்துப்போயிருந்த மேரிஅக்காவையும், வேறு சிலரையும், சில கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளையும், ஒரு கனரகவாகனத்தில் ஏற்றிவிட்டு, பிள்ளைகள் நடக்கத்தொடங்கியுள்ளனர். மெல்ல மெல்லத் தூரத்தே மறைகின்ற தன் வீட்டை, மனதில் ஏக்கத்துடனும் கண்களில் கண்ணீருடனும் பார்த்துக்கொண்டே கர்த்தரை ஜெபித்துக்கொண்டிருந்த மேரி அக்காவின் நெற்றியில், ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாத இராணுவம் ஏவிய எறிகணையின் சிதறல் ஒன்று குத்திக்கோலமிட, குருதிவழிந்தோடுகிறது. 'கர்த்தரிடம என்னை ஒப்புக்கொடுங்கள்' எனச்சொல்லிய வண்ணம் அருகேயிருந்த திருச்சபைச்சகோதரியின் மடியில் சரிகின்றார். மூதூர் மண்ணும், மண்ணின் மைந்தரும், தூரத்தே தெரிந்த அவரது வீடும் மங்கித் தெரிந்து மறைந்துவிடுகிறது. பிறப்புக்கள் பலவற்றை வெற்றியாக்கிய பெண்ணொருத்தி மரணத்திடம் மண்டியிட்டாள்.

தொடர்ந்த எறிகணைத்தாக்குதலின் கோரத்தில், அந்தக் கணத்தில் எதுவும் செய்யத் தோன்றாமல் கதறிக்கொண்டிருந்த பிள்ளைகளில் ஒருவரின் மனைவிக்கு மற்றுமொரு எறிகணைத்துண்டு தாக்க அவரும் சரிகின்றார். நிலமையின் விபரீதத்தைப்புரிந்துகொண்டு மனைவி பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கிப்பிள்ளைகள் ஒடுகின்றார்கள். மூதூரைப்பிரிய விரும்பாத மேரிஅக்காவின் உயிர்பிரிந்த உடல் மூதூர் மண்ணில். காயம்பட்ட பெண்ணை போராளிகள் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பிள்ளைகளையும் மற்றவர்களையும், மரங்களின் கீழ் பாதுகாப்பாக இருத்திவிட்டு, இரவுப்பொழுதில் மீண்டும் வந்த பிள்ளைகள், தாயின் உடலை எடுத்துச் சென்று, பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு அடக்கம் செய்ய முனைகின்றார்கள். யாரோ ஒருவர் திருவாசகம் பாடுகின்றார். மதங்களைக் கடந்து மக்களை நேசித்த மகராசியின் பூதவுடல், முக்தி தரும் திருவாசப்பாடலுடன் மூதூர் மண்ணுக்குள் .........................சங்கமமாகிற்று.

அழுகின்றேன். என் இன்னுமொரு தாயின் மறைவுக்காய்...



10 Comments:

  1. வெற்றி said...
    மலைநாடான்,
    மிகவும் உருக்கமான பதிவு. ஹிட்லரையும் மிஞ்சிவிட்டது சிங்கள அரச பயங்கரவாதம்.இன்று ஈழத்தில் எத்தனை மேரி அக்காள்கள் இப்படிச் சிங்கள பயங்கரவாத்திற்கு இரையானார்கள் என்பது நினைத்தும் பார்க்கமுடியாத உண்மை. சிங்களப் பயங்கரவாதத்தால் பாதிப்படைந்த மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரையும் அண்மையில் சிங்களப் படைகள் கடத்திச் சென்றுள்ளனர். அவருக்கும் என்ன நடந்தது என இதுவரை தெரியவில்லை. உலகத்திற்கு கொல்லாமையைப் போதித்த புத்த பிரானின் பெயரால் நடந்தேறும் இப் படுகொலைகளுக்கு சிங்கள அரசு விலை கொடுத்தே ஆக வேண்டும். உலகில் உள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் தலைவர் பிரபாகரனின் கைகளைப் பலப்படுத்துவதாலேயே இக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும். "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் , சிந்தை இரங்காரடீ" என பாரதி சொன்னது போல் இனியும் இம்மினம் இருக்காது புலிகளின் படைபலத்தை பலப்படுத்த நாம் முன் வரவேண்டும்.
    Chandravathanaa said...
    கண் கலங்க வைத்து விட்டது உங்கள் பதிவு.

    மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
    இந்த உலக துன்பங்களில் இருந்து அந்த மகராசிக்கு விடுதலை.

    மதங்களைக் கடந்து மக்களை நேசித்த மகராசி மேரிஅக்கா
    மலைநாடான் said...
    வெற்றி!

    தமிழீழமக்களின் துயரம் தொடர்கதையாகத்தான் உள்ளது. அதிலும் தென் தமிழீழத்தின் சோகம் சொல்லி மாளாது....

    தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!
    கானா பிரபா said...
    வணக்கம் மலைநாடான்

    நெஞ்சைக் கனக்கவைத்த பதிவு. இப்படி எத்தனை எத்தனை மேரி அக்காக்கள்.....
    யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    மலை நாடர்!
    எத்தனை தெய்வங்களின்(அப்போ பிறந்த குழந்தைகள் தெய்வங்களே!)முதல் குரலைக் கேட்ட இந்த; உன்னத தாயின் மரணம்;மிக மனவேதனையைத் தந்தது.இன்னும் எத்தனைநாள் இவர்கள் அவலம் தொடரப் போகிறதோ!!
    மனம் கனக்கிறது.
    யோகன் பாரிஸ்
    மலைநாடான் said...
    சந்திரவதனா, மாசிலா!

    உங்கள் அன்புக்கும் ஆறுதலுக்கும், நன்றிகள்.
    மலைநாடான் said...
    பிரபா, யோகன்!

    உண்மைதான் எமக்குத் தெரிந்து ஒரு மேரிஅக்கா. தெரியாமல் இன்னும் எத்தனை மேரி அக்காக்கள் இந்த அவலத்துக்குள்.....ம்.. என்ன செய்வது.
    செல்வநாயகி said...
    வருத்தமாக இருக்கிறது மலைநாடான். எத்தனை ஆண்டுகள் ஒரு இனத்துக்கு விடியலே இல்லாமல் இருண்டு கிடக்கிறது :((
    சின்னக்குட்டி said...
    மனதை உருகவைத்த பதிவு
    துளசி கோபால் said...
    மேரி அக்காவின் ஆத்மாவுக்கு சாந்தி கிட்டட்டும்.

    மிகவும் வருத்தமான பதிவு.

Post a Comment




 

நன்றி, வணக்கம்.