குருவி குருவியல்ல 2

குருவி குருவியல்ல முற்பகுதியில், அப்படி நடந்த ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக தன் வலது கை ஆட்காட்டிவிரலை காட்டுவார் சின்னராசா. ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சின்னராசாவும், அவரது நண்பரும் சென்றிருக்கின்றார்கள். வழியில் இரு கரடிகள் எதிர்பட்டிருக்கின்றன. ஒன்று ஆண் மற்றது பெண். சின்னராசாவுக்குப் பின்னால் நண்பர். சற்றுப் பயந்தவர். கரடிகள் நேராகச் சந்தித்து விட்டன. நண்பரிடம் தன் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, சின்னராசா கரடிகளை, நேருக்கு நேராக உற்றுப் பார்த்த வண்ணம் மந்திரக்கட்டுச் சொல்லத் தொடங்கினார்...

இவ்விதமாக மந்திரக்கட்டுச் சொல்லும் போது கவனம் முழுக்கவும் எதிரே நிற்கும் மிருகத்தின் கண்களை உற்றுப் பார்ப்பதிலேயே இருக்க வேண்டுமாம். அதனால், பின்னால் நின்ற நண்பர் மெல்ல நகர்ந்து , மரத்திலேற ஓடியதை இவர் கவனிக்கவில்லை. ஆனால் எதிரே நிற்கும் எதிராளிகளின் அசைவிவ் கவனம் வைத்திருக்கும் மிருகங்களைப் போலவே அவர் முன் நின்ற கரடியும் நண்பரின் அசைவைக்கண்டதும் இவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. சின்னராசா கலங்கவில்லை. மந்திரக்கட்டைச் சொல்லிக் கொண்டே, பாய்ந்து வந்த கரடியை நோக்கி முன்னகர்ந்து, கையால் தள்ளி இருக்கிறார். மந்திரக்கட்டுச் சொல்லி முடிந்ததும், எதிர்படும் மிருகத்தை நோக்கி, தூவெனத் துப்ப வேண்டுமாம். அப்போது அந்த மிருகம் வாய் மூடிவிடுமாம். பின்னர் தங்களைச் சுதாகரித்ததின் பின்னர் மந்திரக்கட்டின் மாற்றுப் பகுதியைச் சொன்னால் மிருகம் பழைய நிலைக்கு வந்துவிடுமாம். இதன்படி மந்திரக்கட்டு முடிந்து அவர் தூவெனத்துப்பிய போது, கரடியின் வாய் இறுகிக்கொண்டதாம். ஆனால் எதிர்பாரா விதமாக கரடியைத் தள்ளிய அவரது வலதுகை ஆட்காட்டிவிரல், கரடியின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டதாம். வாய்இறுகிக்கொண்டதாலும், இவர் தள்ளியதாலும் நிலைகுலைந்த கரடி சரிந்துவிழ, பின்னால் நின்ற கரடி, கோபத்துடன் இவர்மீது பாய எத்தனிதிருக்கிறது. நிலமை விபரீதமாய் போனதையுணர்ந்து, துப்பாக்கியை எடுத்துக் தாக்கவரும் கரடியை நோக்கிக் குறிவைத்து, பொறிவில்லை அழுத்தினால் அழுத்துபடுகிதில்லை. அப்போதுதான் தன் ஆட்காட்டிவிரலின் முக்கால் பகுதியைக் காணவில்லை என்பதும், அறுபட்ட விரலில் இருந்து இரத்தம் சொட்டுவதும் தெரிந்திருக்கிறது. நண்பரைத் திரும்பிப் பார்த்தால் காணவில்லை. கணமும் தாமதிக்காமல் நடுவிரலால் வில்லை அழுத்தி, வெடிவைத்ததும் தாக்க வந்த கரடி திரும்பியோட மற்றைய கரடியும் திரும்பி ஓடத்தோடங்கியதாம். பின்னர் அறுந்துபோன கைவிரலுக்குப் பச்சிலை வைத்துக் கட்டிக்கொண்டாராம். அன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டிற்கு மிக அவசியமான ஆட்காட்டிவிரல் அல்லாமல் நடுவிரலாலே சுடப் பழகிக்கொண்டாராம். சின்னராசாவின் காட்டுவாழ்க்கை அனுபவக் கதைகள் கேட்பதற்கு மிகச் சுவாரிசயமானவை.

மற்றொருமுறை காட்டுக்குச் சென்றபோது, காட்டில் மிருகங்களுக்காக, மறைத்துக் கட்டப்பட்டிருந்த பொறிவெடியில் சிக்கியதனால், அவரது தொடைப்பகுதியில் பொறி வெடியின், துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துவிட, காயத்துடனும், சிந்திய குருதியுடனும் காட்டிலிருந்து மீண்டு, வைத்தியசாலை சென்று, காயத்திற்கு வைத்தியம் பார்த்தாராம். அப்படி வைத்தியம் செய்தபோதும், தன் தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட இரு துப்பாகிச் சன்னங்கள், அசைவதை, இச்சம்பவத்தின் சாட்சியாகக் காட்டுவார்.

இப்படியான காட்டுவாழ்க்கை, வேட்டை அனுபவங்கள், பலவற்றைத் தன்னகத்தேயும், தானே சாட்சியாகவும் இருந்த சின்னராசா, வெடிமருந்துகளைக் கையாள்வதிலும், பழைய வெற்றுத் துப்பாக்கி ரவைக் கூடுகளைப் புதிய ரவைகளாக மாற்றவும் தெரிந்துவைத்திருந்தார்.

அந்தக்கால வாழ்வியலில், அவரொரு கதைநாயகன்தான் . அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பலவிடயங்கள் சில, சந்தர்பங்களில் எமக்கும் கைகொடுத்திருக்கிறது. மிகச் சாதாரண மனிதனாகிலும், குருவிச் சின்னராசா திறமை, தன்னம்பிக்கை, துணிவு என்பதன் சொந்தக்காரர் என்பேன்.


 

நன்றி, வணக்கம்.