கல்யாணமும் முள்முருக்கும்.
12 comments Published by மலைநாடான் on Thursday, March 08, 2007 at 11:13 AM
நாங்கள் பெண்பார்க்கப்போவதில்லை எனச் சயந்தன் தொடங்க, வசந்தன் தொடர, சில ஊர்வழக்குகளும், தமிழகம், ஈழம் சார்ந்த ஒப்பீட்டுப்பார்வைகளும் வந்திருந்தன. பழம்பெரும் பதிவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்திருக்கேக்க, நானும் நாலுவரி சொல்லாட்டி மரியாதையில்லை என்டு எழுதத் தொடஙகினா அது நீண்டு போயிட்டு. பேசாம வசந்தன்ர பாணியில பதிவாப்போட்டிட வேண்டியதுதான் என்டு போட்டாச்சு. சயந்தனுக்குப் பின்னூட்டமும் போட்டாச்சு.
யாழ்ப்பாணத்துப் பெண்பார்க்கும் படலம் பற்றி விரிவாக்கதைச்சிருக்கினம். வசந்தனும் அதை நேரிலபார்த்து, அனுபவிச்சு எழுதியிருக்கிறார் ஆனாபடியால அதைவிடுவம். உந்த முருங்கை மரம் நல்லா உலைச்சிருக்குப் போல கிடக்கு ஆனாபடியால அதில இருந்து தொடங்குவம். ஆனால் ஏன் பின்நவீனத்துவமா யோசிச்சு, கல்யாணம் செய்த மாப்பிள்ளைய அரட்டி வைக்கிறதுக்காக நடுகிறதென்டு கண்டுபிடிக்கேல்ல.:) கலியாணத்துக்குப் பிறகு விளையாட்டுக்காட்டினா, மவனே முள்முருக்கில கட்டிவைச்சுத்தான் பூசை என்டிறத, சிலேடையாகச் சொல்லிச்சினமோ தெரியேல்ல..:)
கானா.பிரபா சொன்ன தேவேந்திரனுக்கு இட்ட சாபக்கதைதான் சாத்திரரீதியானகதை. ஆனால் அது கல்யாணவீட்டில் அரசாணி மரமாக வைக்கப்படும் முருங்கைக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அம்மி மிதித்து, அருந்ததிபார்த்து, அரசாணிசுற்றி என நீளும் சடங்கு அது.
அதற்குப் பாவிப்பது முள்முருக்கு அல்ல. கல்யாண முருங்கை. முள்முருக்குப் போன்றதுதான். ஆனால் முள்ளுக் குறைவு. இலைகளில் மஞ்சள் வண்ணத்தில், நரம்புகளும் நடுப்பகுதியும் காணப்படும். மாப்பிளையும் பெண்ணும் இணைந்திருப்பதற்கான அடையாளமாக அது சொல்லப்படும். ஆனால் அது கிடைப்பது அரிதாக இருந்ததால் அதற்குப் பதிலாக முள்முருக்கு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.
வீட்டில் கல்யாணத்துக்கு முன்னர் நடப்படும் முள்முருக்கையை இந்தச் சாத்திரக்தைக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது. இது ஒரு சமுக வழக்கென்றுதான் செர்லல வேணும். இதைக் கன்னிக்கால் பேர்டுதல், பந்தல்கால் நடல் எனச் சொல்வது வழக்கம். தமிழகத்துக் கிராமத்திருவிழாவில் கொடிமரம் நடுவதாக உயரிய மரமொன்றை நடுகிறார்களே. ஏறக்குறைய அதே போன்றதுதான் இவ்வழக்கம். பந்தல் கால் போட்டுவிட்டால், கல்யயணவீட்டு வேலைகள் களைகட்டத் தொடங்கிவிடும் கோபதாபங்களுக்குள்ளாகியிருந் உறவுகள் கூட, ஒன்றுபடத் தொடங்கிவிடும். அதற்கு முருங்கை மரத்தை தெரிவு செய்தது
வேண்டுமாயின் , இந்திரன் கதையின் நீட்சியாகவோ அல்லது பழக்கமாகவோ இருக்கலாம். ஆனால் சூழலின் தன்மையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், யாழ்ப்பாணப்பிரதேசத்தில் மிக எளிதில் வளரும் மரங்களில் இது ஒன்றாக உள்ளது. மேலும், அதன் பாகத்தில் முட்கள் நிறைந்திருப்பதனால், வீட்டுவளர்ப்புப்பிராணிகளான ஆடு மாடு என்பவற்றில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அதனால் பிள்ளையின் கல்யாண நினைவு முன்னிறுத்தி நடுவதற்காக இந்த மரத்தைத் தெரிவு செய்திருக்கலாம். வசந்தன் கேட்டது போன்று, அப்படி நடப்படும் மரத்தின் வளர்ச்சியை வைத்துச் சகுனம் பார்க்கும் பழக்கமும் சில இடங்களில் இருந்தது. ஆதலால் அதற்கும் இது ஏற்புடையதாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஆறு பெண்பிள்ளைகள். அவர்களுடைய வீட்டு முன்றலில், ஆறு முள்முருக்கு மரமும் வரிசைக்கு, நன்றாகச் செழித்து வளர்ந்து நிற்கும். ஆட்டுக்குக் கூட அதில் குழை ஒடிக்க மாட்டார்கள். ஆனால் பெண்கள்வீட்டில்தான் இவ்வளவு கவனம் எடுப்பதாக நினைக்கின்றேன். மாப்பிள்ளைவீடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் தருவதாக இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் இரு வீடுகளிலும் நடப்படும். எனக்கென்னவோ இந்தப்பழக்கம், இந்தியப்பரப்பிலிருந்து வந்ததுபோல்தான் படுகிறது.
கால்மாறிப்போவது பற்றியும் யாரோ கேட்டிருந்தார்கள். பெண்வீட்டில் கல்யாணவீடு நடைபெற்று முடிந்ததும், மாப்பிள்ளைவீட்டுக்கு மணமக்கள் சென்று திரும்புதலைத்தான் கால் மாறிச் செல்வது என்று குறிப்பிடுவார்கள். ஈழத்தின் வடபுலக் கல்யாணவீடுகளில்தான் இந்த அமர்க்களம் எல்லாம். வன்னியிலோ, கிழக்கிலோ, இந்த வழக்குகளெல்லாம் இருக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
கிழக்கில் வாழ்ந்த யாழ்ப்பாண்தார் வீட்டுக் கல்யாணங்கள் அப்படி நடந்திருக்கலாம், மற்றும்படி எல்லாம் சுயமரியாதைத்திருமணங்கள் போன்றதே. இதைப் பேச்சுவழக்கில் சோறு குடுத்தல் என்று சொல்வார்கள். மாப்பிள்ளை, பெண்ணுக்குப் புது உடுபுடவைகள், தாலிகட்டல் எல்லாம் இருக்கும். சிலவேளை கோவில்களில் பூசைநேரங்களிலும், பலவேளைகளில் வீடுகளிலும், குறிப்பாக மாலைகளிலும் நடைபெறும். தாலிகட்டி முடிந்து, மாப்பிள்ளைக்கு பெண் உணவு பரிமாறி, சேர்ந்து உண்பதில் நிறைவுறும். இக்கொண்டாட்டங்களில் முக்கிய இடம்பெறும் இரு விடயம், வெடிகொழுத்தலும், குடிவகை பாவிப்பதும். இவையில்லாத கல்யாணங்கள் களைகட்டாது. பின்னாட்களில் ஒலிபெருக்கியும் இணைந்து கொண்டது. இவ்வளவுதான் தற்போதைக்கு எழுத முடிந்தது. யாரும் வினாத் தொடுத்தால் விடையில் மற்றவற்றைத் தர முனைகின்றேன்.
தோழியரே உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். வாழ்த்துக்கள்!
Labels: சமூகம்.