அபியும் நானும் மாதுமையும்
5 comments Published by மலைநாடான் on Wednesday, February 11, 2009 at 2:21 PM
நீண்ட நாட்களாகத் திரைப்படங்கள் எதுவும் பார்க்கவில்லை. பார்க்கும் சூழல் இல்லெயென்பதிலும் பார்க்க மனநிலை வாய்த்திருக்கவில்லை என்தே உண்மை. குடும்பமாய் அமர்ந்திருந்து படம் பார்த்துக் கன நாளாயிற்று எனப் பிள்ளைகள் விரும்பியழைக்க, சென்றவாரத்தில் நண்பரொருவர் விதந்தெழுயிருந்த " அபியும் நானும் " திரைப்படத்தைப் பரிந்துரைத்தேன். ஏற்கனவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றால் கவரப்பட்ட பிள்ளைகளும் விரும்பிச் சம்மதிக்க, ஒன்றாய் அமர்ந்தோம்.
தொலைக்காட்சித் திரையில் 'அபியும் நானும் '
அப்பா மகளுக்கான உறவை அற்புதமாய் சொல்லியிருக்கின்றார்கள். இரத்தம் தெறிக்கும் இன்றைய சினிமாக்களின் மத்தியில், பச்சைப் பசேலெனும் பின்னணியில், ஒரு பாசப்பிணைப்புக் கதையை பக்குவமாகச் சொல்லியிருக்கின்றார்கள். ரசிக்கவும், இன்னும் ஒரு படி மேலாகச் சுகிக்கவும் முடிகிறது.
திரைப்படம் பார்த்து எப்போதும் அழமாட்டாத நான் இப்போது அழுகின்றேன்.
ஏனென்றால் காரணம் திரைப்படத்தின் காட்சிகளும், கதையும் மீட்டித்தந்த நினைவுகளின் நீட்சியிலே அழுகின்றேன்.
எங்கள் நிலத்தின் நிறமும், ஒரு காலத்தில் பச்சைதான். எங்களிடமும் பாசஉறவுகளும், அவை பேசுங் கதைகளும் பலவிருந்தன.
ஆனால் இன்று எங்கள் நிலம், எங்கள் இரத்தங்களினாலேயே சிவப்பாகிப் போனது. எங்கள் குரலும், மொழியும் ஒப்பாரியொன்றைத் தவிர வேறு செப்பாது போய்விட்டது.
எங்கள் வாழ்வின் பசுமையையும் , இனிமையையும் பறித்தெடுத்தவர்களிடம் உறவுகொள்ளச் சொல்கின்றீர்கள். பாதகமில்லை பழகலாம் வாருங்களென்றால், நீட்டிய கைகளின் பின்னால் நெடுவாள் கொண்டுவருகின்றார்களே; கண்டுகொள்ளீரோ அல்லது கண்டுங் காணாதிருப்பதே உங்களி்ன் மானுடப் பேச்சின் மகிமை என்பீரோ? கொடிகளிலும், கோஷங்களிலும், உங்கள் கொள்கைகள் மறைந்து போனதுவோ, மறந்து போனதுவோ?
எத்தனை கதைகள் சொல்ல? எத்தனை சோகம் சொல்ல? எத்தனை முறை சொல்லியாயிற்று.
மாதுமை!
கோணமாமலையில் கோயில் கொண்டவனின் தேவி பெயர். என் தங்கை தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த பெண்ணுக்கு இட்ட பெயரும் அதுவே. தங்கை குழந்தையாய் இருந்த போது பிரிந்த நான், ஒரு குழந்தைக்கு அவள் ஏங்கிய வயதிலேயே மீளவும் சந்திக்க முடிந்தது. ஆச்சரியமாய் இருந்தது காலத்தின் வேகம். என் கைபிடித்து நடை பழகித் திரிந்த பெண், கல்யாணமாகிக் கணவனோடு வந்திருந்தாள். மணவாழ்வின் மகிழ்வில் திளைத்திருந்தாலும், மகவொன்றில்லாத மனக் குறையில் துவண்டிருந்தாள்.
பின் வந்த சில காலத்தில் பெண்மகவுக்குத் தாயானாள். பெருமிதமுற்றாள். எழுதிய கடிதத்தில் இவ்வுலகின் மகிழ்ச்சியையெல்லாம் எண்ணத்தில் குவித்து, எழுத்து மலர்களாய் சொரிந்திருந்தாள். இறைமீது கொண்ட பற்றுதலால் மாதுமை எனப் பெயர் சூட்டியிருந்தாள். இன்றவள் வன்னி வனத்திடையில்....
இறுதியாய் பேசிய போது 'வன்னி மண் மட்டுமே எமக்குப் பாதுகாப்பானது ' என இறுமாந்து சொன்னாள்...
இன்று..
தினமும் செய்திகள் சுமந்து வரும் மடல்களைத் திறக்கையில் மனம் பதைபதைக்கிறது. படபடத்துத் திறந்ததும், தெரிகின்ற எழுத்துக்களின் மீது தேடுகையில், தெரிந்து விடக் கூடாது அவர்கள் பெயர் என, வெட்கம் விட்டுப் பிரார்த்திக்கின்றேன்.
நித்திரை வரா முன்னிரவுகள் கழிந்துபோக, பின்னிரவுக் கனவுகளில், குண்டு வெடிப்புச் சத்தங்களின் பின்னணியில், மாதுமை அழுத படியே மாமாவென்றழைத்து நித்திரை கலைத்துச் செல்கின்றாள்.....
Posted by மலைநாடான் Links to this post
Labels: அனுபவம், அமைதி, அரசியல், என்னரும் மருதம்
குருவி குருவியல்ல முற்பகுதியில், அப்படி நடந்த ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக தன் வலது கை ஆட்காட்டிவிரலை காட்டுவார் சின்னராசா. ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சின்னராசாவும், அவரது நண்பரும் சென்றிருக்கின்றார்கள். வழியில் இரு கரடிகள் எதிர்பட்டிருக்கின்றன. ஒன்று ஆண் மற்றது பெண். சின்னராசாவுக்குப் பின்னால் நண்பர். சற்றுப் பயந்தவர். கரடிகள் நேராகச் சந்தித்து விட்டன. நண்பரிடம் தன் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, சின்னராசா கரடிகளை, நேருக்கு நேராக உற்றுப் பார்த்த வண்ணம் மந்திரக்கட்டுச் சொல்லத் தொடங்கினார்...
இவ்விதமாக மந்திரக்கட்டுச் சொல்லும் போது கவனம் முழுக்கவும் எதிரே நிற்கும் மிருகத்தின் கண்களை உற்றுப் பார்ப்பதிலேயே இருக்க வேண்டுமாம். அதனால், பின்னால் நின்ற நண்பர் மெல்ல நகர்ந்து , மரத்திலேற ஓடியதை இவர் கவனிக்கவில்லை. ஆனால் எதிரே நிற்கும் எதிராளிகளின் அசைவிவ் கவனம் வைத்திருக்கும் மிருகங்களைப் போலவே அவர் முன் நின்ற கரடியும் நண்பரின் அசைவைக்கண்டதும் இவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. சின்னராசா கலங்கவில்லை. மந்திரக்கட்டைச் சொல்லிக் கொண்டே, பாய்ந்து வந்த கரடியை நோக்கி முன்னகர்ந்து, கையால் தள்ளி இருக்கிறார். மந்திரக்கட்டுச் சொல்லி முடிந்ததும், எதிர்படும் மிருகத்தை நோக்கி, தூவெனத் துப்ப வேண்டுமாம். அப்போது அந்த மிருகம் வாய் மூடிவிடுமாம். பின்னர் தங்களைச் சுதாகரித்ததின் பின்னர் மந்திரக்கட்டின் மாற்றுப் பகுதியைச் சொன்னால் மிருகம் பழைய நிலைக்கு வந்துவிடுமாம். இதன்படி மந்திரக்கட்டு முடிந்து அவர் தூவெனத்துப்பிய போது, கரடியின் வாய் இறுகிக்கொண்டதாம். ஆனால் எதிர்பாரா விதமாக கரடியைத் தள்ளிய அவரது வலதுகை ஆட்காட்டிவிரல், கரடியின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டதாம். வாய்இறுகிக்கொண்டதாலும், இவர் தள்ளியதாலும் நிலைகுலைந்த கரடி சரிந்துவிழ, பின்னால் நின்ற கரடி, கோபத்துடன் இவர்மீது பாய எத்தனிதிருக்கிறது. நிலமை விபரீதமாய் போனதையுணர்ந்து, துப்பாக்கியை எடுத்துக் தாக்கவரும் கரடியை நோக்கிக் குறிவைத்து, பொறிவில்லை அழுத்தினால் அழுத்துபடுகிதில்லை. அப்போதுதான் தன் ஆட்காட்டிவிரலின் முக்கால் பகுதியைக் காணவில்லை என்பதும், அறுபட்ட விரலில் இருந்து இரத்தம் சொட்டுவதும் தெரிந்திருக்கிறது. நண்பரைத் திரும்பிப் பார்த்தால் காணவில்லை. கணமும் தாமதிக்காமல் நடுவிரலால் வில்லை அழுத்தி, வெடிவைத்ததும் தாக்க வந்த கரடி திரும்பியோட மற்றைய கரடியும் திரும்பி ஓடத்தோடங்கியதாம். பின்னர் அறுந்துபோன கைவிரலுக்குப் பச்சிலை வைத்துக் கட்டிக்கொண்டாராம். அன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டிற்கு மிக அவசியமான ஆட்காட்டிவிரல் அல்லாமல் நடுவிரலாலே சுடப் பழகிக்கொண்டாராம். சின்னராசாவின் காட்டுவாழ்க்கை அனுபவக் கதைகள் கேட்பதற்கு மிகச் சுவாரிசயமானவை.
மற்றொருமுறை காட்டுக்குச் சென்றபோது, காட்டில் மிருகங்களுக்காக, மறைத்துக் கட்டப்பட்டிருந்த பொறிவெடியில் சிக்கியதனால், அவரது தொடைப்பகுதியில் பொறி வெடியின், துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துவிட, காயத்துடனும், சிந்திய குருதியுடனும் காட்டிலிருந்து மீண்டு, வைத்தியசாலை சென்று, காயத்திற்கு வைத்தியம் பார்த்தாராம். அப்படி வைத்தியம் செய்தபோதும், தன் தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட இரு துப்பாகிச் சன்னங்கள், அசைவதை, இச்சம்பவத்தின் சாட்சியாகக் காட்டுவார்.
இப்படியான காட்டுவாழ்க்கை, வேட்டை அனுபவங்கள், பலவற்றைத் தன்னகத்தேயும், தானே சாட்சியாகவும் இருந்த சின்னராசா, வெடிமருந்துகளைக் கையாள்வதிலும், பழைய வெற்றுத் துப்பாக்கி ரவைக் கூடுகளைப் புதிய ரவைகளாக மாற்றவும் தெரிந்துவைத்திருந்தார்.
அந்தக்கால வாழ்வியலில், அவரொரு கதைநாயகன்தான் . அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பலவிடயங்கள் சில, சந்தர்பங்களில் எமக்கும் கைகொடுத்திருக்கிறது. மிகச் சாதாரண மனிதனாகிலும், குருவிச் சின்னராசா திறமை, தன்னம்பிக்கை, துணிவு என்பதன் சொந்தக்காரர் என்பேன்.
Posted by மலைநாடான் Links to this post
Labels: அனுபவம், என்னரும் மருதம், சமூகம்.
Posted by மலைநாடான் Links to this post
Labels: அனுபவம், என்னரும் மருதம், சமூகம்.
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாமே
3 comments Published by மலைநாடான் on Tuesday, April 01, 2008 at 8:04 AMஇங்கும் வாசிக்க உண்டு
Posted by மலைநாடான் Links to this post
பிரான்ஸ் அரசியலில், ஈழத்தமிழர்கள்.
3 comments Published by மலைநாடான் on Tuesday, March 18, 2008 at 10:40 PMஇதில் 7 பேர் ஈழத் தமிழர்களாவர். மூவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஈழத் தமிழர்கள் பிரான்ஸின் தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ளமை அங்குள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சுமார் 125 ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். இதில் 50 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்களாவர். பிரான்ஸின் உள்ளுராட்சி தேர்தலில் 14 ஈழத்தமிழர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழர்கள் அனைவரும் இடதுசாரி கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தி போட்டியிட்டவர்களாவர். இதே வேளை இந்த தெரிவுகளின் மூலம் பிரான்ஸின் தமிழர்கள் வலதுசாரி கட்சியான தற்போது அரசாங்கத்தின் மீது தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றவர்களுக்கும், வெற்றிபெறச் செய்தவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
கடந்த வருடத்தில் நோர்வேயில் இடம்பெற்ற உள்ளுர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் ஐவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் நோர்வேயில் உள்ள 70 வீத ஈழத் தமிழ் பெண்கள் தமது வாக்குகளை செலுத்தியதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன..
சுவிற்சர்லாந்து தேசிய அரசுத் தேர்தலில் போட்டியிட்ட ஈழத்துப் பெண் குறித்த செய்திகளை இங்கு படிக்கலாம்.
Posted by மலைநாடான் Links to this post



