தென்றலும் புயலும்.


தென்றலும் புயலும். ஈழத்துத் திரைப்படவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவொரு திரைப்படம். திருகோணமலைக்கலைஞர்கள் பலரின் கூட்டுழைப்பில் உருவான ஒரு திரைப்படம். இது குறித்து நீண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கான முக்கிய காரணம், இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர் சித்தி அமரசிங்கம்.
தென்றலும் புயலும் திரைப்படத்தின் தயாரிப்பாளர், டாக்டர் வேதநாயகம் அவர்கள். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவரோடு பங்குகொண்டவர், யாழ். அராலியைச் சேர்ந்த வங்கி முகாமையாளராகிய சிவபாதவிருதையர். இவர்கள் இருவருமே படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். கதையின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
இவர்களுக்கான நாயகிகளாக, சந்திரகலாவும், ஹெலனும் நடித்தார்கள். சித்தி அமரசிங்கம் நகைச்சுவைப் பாத்திரமாகத் தொடங்கி, கதையின் நிறைவுப்பகுதியில், குணசித்திரப் பாத்திரமாக வரக்கூடிய முக்கிய பாத்திரமொன்றில் நடித்தார். இசை. திருமலை பத்மநாதன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் திருகோணமலையின் ரம்மியமான பகுதிகளில் நடந்தன. குறிப்பாக மூதூர், நிலாவெளி, உப்பாறு, ஆகிய பகுதிகளில், பாடல் காட்சிகளும், வெளிப்புறக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஈழத்துத்திரைப்படங்களில் மிகநல்ல ஒளிப்பதிவில் வந்த படங்களில் இதுவும் ஒன்று. கறுப்பு வெள்ளைப்படமாக இருந்த போதும், வெளிப்புறக்காட்சிகள் மிக அழகாகப் பதிவு செய்யபட்டிருந்தது. இசையும் மிக இதமான இசையாகவிருந்தது. பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்,
காலை ஒலிபரப்புக்களில் அடிக்கடி ஒலித்த " சந்திரவதனத்தில் இந்த நீலப்பூ.." என்ற பாடல் இந்தத்திரைப்படத்தில் வந்த பாடலென்றே நினைக்கின்றேன்.

மூதூர், உப்பாறு, பகுதியில் எடுக்கப்பட்ட இப்பாடல்காட்சியில், அந்தப்பகுதியின் இயற்கை அழகு நன்றாகவே பதிவு செய்யப்பட்டிருந்தது. திரைக்கதையைப் பொறுத்தவரையில் பெரிய மாற்றங்கள் இல்லை. தென்னிந்தியச்சினிமாவின் நகலெடுப்புத்தான். ஆனால் இதில் பங்குகொண்ட கலைஞர்கள் பலர் உயிரோட்டமான நடிப்பினால் மெருகூட்டினார்கள். அப்படியான கலைஞர்களில் சித்தி அமரசிங்கம் குறிப்பிடத்தக்கவர்.
தோற்றத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஸின் தோற்றத்தை ஒத்திருந்தவர், பேச்சிலும் ஏறக்குறைய அதே நகைச்சுவையுணர்வு கொண்டவர் என்பதை, நேரில் சந்திந்தபோது தெரிந்து கொண்டேன். தென்றலும் புயலும் திரைப்படத்தை, திருமலை ஜோதித்தியேட்டரில் நண்பர்களோடு பார்த்தபோது, இடைவேளை நேரத்தில் சித்தி அமரசிங்கம் முதலில் அறிமுகமானார். பார்வையாளர்களோடு அமர்ந்திருந்து, மக்கள் ரசனையை அவதானித்துக் கொண்டிருந்த அவர் வெளியே வந்திருந்தார். அட்டகாசமான கலகலப்பான மனிதரெண்டும் சொல்ல முடியாது, அதே நேரம் படு அமைதியான மனிதருமல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அறிமுகமாகிய எங்களோடு, எங்கள் கருத்துக்களோடு நெருக்கமாக நின்றார். நேசமாகக் கேட்டார். திரும்பவும் படம் பார்த்தோம். படத்தின் நிறைவுக்காட்சியில் அமரசிங்கம் ஏற்றிருந்த பாத்திரத்தின் தியாகமொன்றால், உணர்வு பூர்வமாக பார்வையாளர்களின் மனங்களில் நிறைந்திருந்தார். அன்றைய சந்திப்பின் காரணமாய் எங்களிலும் நிறைந்திருந்தார்.
அதற்குப்பின் பல தடவைகள் அவரோடும் பழகும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் நெருங்கிப்பழகியுள்ளார். தென்றலும் புயலும் திரைப்படம் பெற்ற வரவேற்புத் தந்த உற்சாகத்தில் அமரசிங்கம் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தார். "அமரன் ஸ்கீறீன்" என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் இறங்கினார். இதற்காக அவர் யோசித்தவிதம் சற்று வித்தியாசமானது.
திரைப்படத்திற்கான திட்டமிட்ட பொருளாதாரத் தேவை ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்கள். இதை பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்களை அவர் நாடவில்லை. மாறாக மக்களை, ரசிகர்களை நாடினார். ஒரு பங்கு ஒரு ரூபாய் என ஒரு இலட்சம் பங்குகள் விற்கத்திட்டமிட்டார். அவரிடம் கேட்டேன், ஏன்? ஒரு ரூபாய் பங்குகள் என்று. அதற்கு அவர் சொன்ன பதில்தான் இன்றளவும் என்னுள் அவர் நினைவுகளை நிறுத்தி வைத்திருக்கிறது. "தம்பி! நூறு ரூபாய் பங்கோ ஆயிரம்ரூபாய் பங்கோ வைத்தால் கெதியாத் தொகையைச் சேர்த்திடலாம்தான். ஆனால் நான் நினைப்பது அதுவல்ல. எல்லா மக்கள் தரப்பினரும், எல்லாரசிகர்களும், அந்தப்படத்தின் முதலீட்டாளர்களாக இருக்கவேண்டும். அதற்கு ஒரு ரூபாய் பங்குதான் சரியாக இருக்கும்..." என்றார்.
அவரது எண்ணமும் செயலும் எனக்கு ஏற்புடையதாகவும் மகிழவாகவும் இருந்தது. நானும் என் நண்பர்களும் கூட சில பங்குகளை வேண்ட முடிந்தது. அதன்பின் அவரைக்கண்ட போதுகளிலெல்லாம், அவர் முயற்சியோடு முன் முனைவது கண்டிருக்கின்றேன். ஆனால் காலத்தின் சுழற்சியில் அவர்முயற்சி கை கூடாது போய்விட்டது. எங்கள் நிலத்தில் எழுந்த இனப்பிரச்சினைதான் எல்லாவற்றையும் அழித்து விட்டதே. அதற்குள் அமரசிங்கம் அவர்களின் ஆசையும் அடங்கிவிட்டது. ஆனாலும் அமரசிங்கம் அவர்களின் செயற்திறன் வேறுபல வடிவங்களில் அவரது இறுதிக்காலம் வரை நிறைவு பெற்றதாக, திருமலையைப்பிரிந்திருந்தபோதும் அறியமுடிந்தது. ஆம், முடிந்தவரை முயலும் அமரசிங்கம் போன்றவர்களால், சும்மா இருக்க முடியாது.
படம் உதவி: ரமணீதரன்


 

நன்றி, வணக்கம்.