மட்டக்களப்புத் தயிர், சுவிஸ் லசி.




முன்பொருமுறை மதியோடு பேசும் போது, பேச்சிடையே இந்த மட்டக்களப்புத் தயிர் பற்றிப் பேசியபோது இதைப்பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டிருந்தார். சென்ற சில வாரங்களுக்கு முன், முத்துலெட்சுமியின் அமிர்த்தசரஸ் பற்றிய பதிவில் தயிர் பற்றி வாசித்த போது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.


யாழ்ப்பாணத்தில் தயிர் எனச் சாப்பாட்டில் சேர்ப்பது சற்றுக் குறைவென்றே நினைக்கின்றேன். ஆனாலும் மோர் அங்கு தாராளமாகப் பாவிக்கப்படும். இதில் சில நன்மைகளும் உண்டு. தயிரைக்கடைந்து மோராக்கும் போது வெண்ணெய் பெறப்பட்டு, நெய்யாக்கப்படுவதால், கொழுப்புச்சத்துக்குறைவான மோர்உடல்நலத்துக்கு உகந்தவாறு கிடைக்கிறது. மோராக்கப்படுவதால், நிறையப்பேருக்கு கொடுக்க முடிகிறது. யாழிலுள்ள வெக்கையான காலநிலைக்கு மோரின் தண்ணீர்த்தன்மை உகந்தது. இதற்குள் ஒரு பொருளாதாரச்சிக்கனமும் மறைந்திருக்கிறது. இப்படியான நன்மைகளைக் கொள்ள முடியும்.


வெயில்காலத்தில் யாழ். நகரத்துக்கு மிதிவண்டியில் சென்று வரும் போதெல்லாம், எந்த வழியாகப் பயனித்தாலும், நாச்சிமார் கோவிலடிவரைக்கும் கே.கே.எஸ் வீதிவழியாகத்தான் பயணம் செய்வேன். காரணம், நாச்சிமார் கோவிலுக்கு முன்னாலிருக்கும் மோர்க்கடை. ஒரு பெட்டிக்கடைதான். ஆனாலும் அந்த மோர் பக்குவம் அருமையாக இருக்கும். ஆனால் அதில் போய் மோர்குடிப்பதற்குள் நான் படும்பாடு பெரும்பாடாகிப் போய்விடும். எந்த நேரமும், நிறைந்த சனப் புழக்கம் உள்ள கே. கே. எஸ். வீதியில், வாகனத்தில் போய்வருவோரில், யாராவது நம்மை அடையாளங் கண்டு, வீட்டில் சொல்லிவிட, விழப்போகும் திட்டுக்களின் நினைப்பு, மோரின் சுவையை அனுபவிக்க விடாது. மோர் குடிக்கக்கூடாதென்பதல்ல வீட்டின் கண்டிப்புக்குக் காரணம். அதற்குள் ஒளிந்திருப்பது யாழ்ப்பாணத்துச் சாதீயம்.


கிழக்கில் தயிர், தயிராகவே உணவில் சேர்க்கப்படும். அதற்கு முக்கிய காரணம், கிழக்கின் கால்நடைவளம். குறிப்பாக மட்டக்களப்புத் தயிர், முழு இலங்கைக்கும் பிரசித்தம் என்றும் சொல்லலாம். மண்சட்டியில் சுண்டக்காச்சிய எருமைப்பாலுறைந்து, பாலின் நீர்த்தன்மையை மண்சட்டி இழுத்துவிட, கெட்டித்தயிராக வரும் . அந்தச் சட்டிகளைத் தனியாகஅல்லது, சோடிகளாக தென்னோலை உறிகளில் இணைத்துக்கட்டி, விற்பனைக்காக வெளிமாநிலங்களுக்கு அனுப்புவார்கள்.


மட்டக்களப்பில் சாப்பாட்டுடன் தயிரைச் சேர்த்துக்கொள்ளாது, சாப்பிட்டு முடிந்ததும், கண்ணாடிக்குவளைகளில் தயிரை இட்டு, அதற்கு மேல் சீனி அல்லது கித்துள்பாணி விட்டுத் தருவார்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு இன்சுவை. சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடுவதனால் கூட அதனுடன் சற்றுச் சீனிசேர்த்துக் கொள்வதையும் கண்டிருக்கிறேன். என்கென்னவோ விருந்தோம்பலில் மட்டக்களப்புத் தமிழர்களை விஞ்ச முடியாதென்றே எண்ணத் தோன்றுகிறது. அவ்வளவு நேசமாக விருந்து படைப்பார்கள். விழிக்கும் மொழியில் புதியவர்களைக் கூட "மகன்" "மகள்" சுட்டி அழைப்பதிலிருந்து, அனைத்து விசாரிப்புக்களிலும் அந்த நேசத்தைக் காணலாம்.


இந்திய உணவகங்களிலும், இங்குள்ள ஹரேகிருஸ்ணா ஆலய விருந்துகளிலும் நான் விரும்பிப் பெற்றுக்கொள்வது லசி. மாம்பழமும், தயிரும் சேர்ந்த அந்த லசிகளிலும், வித்தியாசமான இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையும் இருக்கும். இவ்வகை லசிக்கள் தற்போது பல்வேறு சுவைகளில் இங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கிறது. இஞ்சி, கறுவா, கராம்பு என்பன சேர்ந்த லசி மிகஅருமை. இதைவிட சுவிஸின் புகழ்மிகு பாற்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Emmi தயாரிக்கும் யோக்கட் வகைகளில் ஒன்றில் மட்டக்களப்புத் தயிரின் சுவையை ஒரளவு பெறமுடிகிறது.


மட்டக்களப்புப் பகுதிகளில் இஸ்லாமிய நண்பர்கள் சிலர் விருந்துகளின் முடிவில் பழப்பாகினை உணவுத்தட்டுகளில் இட்டு வழங்குவதைக் கண்டிருக்கின்றேன். இந்தியாவில் சிலரது விருந்துகளில் சிறிது தேன் வழங்குவதாகக் கேள்விப்பட்டதுண்டு. இவை விருந்துண்ணல் இனிப்பாக நிறைவுறுவதன் அடையாளம் எனச் சொல்லப்படுவதும் உண்டு. எதுவாயினும், உட்கொண்ட உணவு சேமிபாடடையும் வழிமுறைகள்தான் இவையென நான் சொல்ல, சாப்பிட்டதன் பின், " கோக்ககோலா" கூடி சீக்கிரம் செமிக்கும் என்கிறான் என் நண்பன்.







 

நன்றி, வணக்கம்.