என்னத்தைச் சொல்ல... வசதிக்கேற்றவாறு வரலாறு எழுதப்படும் தேசம் எங்கள் தேசமாயிற்று. இதை இணையத்திலும் உறுதிப்படுத்துவது போல தேசம் இணையத்தளத்தில், எம். ஆர். ஸ்ராலினின் செவ்வியிலும் சில செய்திகள் வந்துள்ளது. படித்த போது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது.




ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது.

அப்படியானால் அதற்கு முன் தமிழர்கள் மீது தாக்குதலே நடக்கவில்லையா?

பன்குளம் எனும் தமிழ்கிராமத்தின் மீது, கந்தளாய் தமிழ்மக்கள் மீது, முள்ளிப் பொத்தானை குடியேற்றத்திட்டத்தில், என ஆங்காங்கே, உதிரியாகத் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள் என்னவாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களில், தமிழருக்காக ஒதுக்கப்படும் நிலங்களில், தமிழர்கள் நிரந்தரக் குடிகளாக வாழமுடியாமல் செய்ய, அதற்கான அச்சநிலையைத் தோற்றுவிக்க, பேரினவாதம் இப்படியான தாக்குதல்களை அப்பகுதிகளில் செய்ததை, வசதியாக மறைத்துவிடுகிறீர்களே?. உதாரணத்துக்கு ஒன்று..

பாலம்போட்டாறு குடியேற்றத்திட்டத்தில் குடியேறிய ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை அச்சப்படுத்தி வெளியேற்ற வைப்பதற்காக, பேரினவாதிகளின் கைக்ககூலிகள் பலிகொண்ட தமிழ் இளைஞனின் பெயர் சுந்தரம் திருநாவுக்கரசு. கூட்டுறவுத்திணைக்களத்தின் களஞ்சியப்பொறுப்பாளனாக இருந்தவனை, அவனது பணிநேரத்திலே பலியெடுத்த பாவிகள், நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ்மக்களுடன் ஒன்றாக வாழ்ந்த ஒரு சிங்களக்குடும்பத்தைச் சார்ந்தவர்களே என்ற உண்மையைக் கூட அன்றை தமிழ்இளைஞர்கள் ஒரளவு அறிந்திருந்தார்களே.

இப்படியான குடியேற்றத்திட்டங்களில், கொடுப்பது போல கொடுத்து, பறிக்கும் வகையில் பறித்துக் கொள்ளும் இத்தகைய சூழ்ச்சிகளுக்கு பலியாகிய தமிழரக்ள் குந்தியிருக்க நிலமற்ற ஏழைப்பாட்டாளிகள் என்பது கூட நீங்கள் மறந்துபோனதா?

இப்படி எத்தனை வேதனைக்கதைகள் உண்மையாக நடந்திருக்கும் போது, அதைத் தெரிந்து கொண்டு மறைக்கிறீர்களா? அல்லது தேவைக்காக மறுக்கிறீர்களா?



இன்னும் விரிவாகப் பார்க்க

திருகோணமலை ஒரு பார்வை

எனும் தலைப்பில் நான் முன்னர் எழுதியவை.


 

நன்றி, வணக்கம்.