அபியும் நானும் மாதுமையும்


நீண்ட நாட்களாகத் திரைப்படங்கள் எதுவும் பார்க்கவில்லை. பார்க்கும் சூழல் இல்லெயென்பதிலும் பார்க்க மனநிலை வாய்த்திருக்கவில்லை என்தே உண்மை. குடும்பமாய் அமர்ந்திருந்து படம் பார்த்துக் கன நாளாயிற்று எனப் பிள்ளைகள் விரும்பியழைக்க, சென்றவாரத்தில் நண்பரொருவர் விதந்தெழுயிருந்த " அபியும் நானும் " திரைப்படத்தைப் பரிந்துரைத்தேன். ஏற்கனவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றால் கவரப்பட்ட பிள்ளைகளும் விரும்பிச் சம்மதிக்க, ஒன்றாய் அமர்ந்தோம்.
தொலைக்காட்சித் திரையில் 'அபியும் நானும் '
அப்பா மகளுக்கான உறவை அற்புதமாய் சொல்லியிருக்கின்றார்கள். இரத்தம் தெறிக்கும் இன்றைய சினிமாக்களின் மத்தியில், பச்சைப் பசேலெனும் பின்னணியில், ஒரு பாசப்பிணைப்புக் கதையை பக்குவமாகச் சொல்லியிருக்கின்றார்கள். ரசிக்கவும், இன்னும் ஒரு படி மேலாகச் சுகிக்கவும் முடிகிறது.
திரைப்படம் பார்த்து எப்போதும் அழமாட்டாத நான் இப்போது அழுகின்றேன்.
ஏனென்றால் காரணம் திரைப்படத்தின் காட்சிகளும், கதையும் மீட்டித்தந்த நினைவுகளின் நீட்சியிலே அழுகின்றேன்.
எங்கள் நிலத்தின் நிறமும், ஒரு காலத்தில் பச்சைதான். எங்களிடமும் பாசஉறவுகளும், அவை பேசுங் கதைகளும் பலவிருந்தன.
ஆனால் இன்று எங்கள் நிலம், எங்கள் இரத்தங்களினாலேயே சிவப்பாகிப் போனது. எங்கள் குரலும், மொழியும் ஒப்பாரியொன்றைத் தவிர வேறு செப்பாது போய்விட்டது.

எங்கள் வாழ்வின் பசுமையையும் , இனிமையையும் பறித்தெடுத்தவர்களிடம் உறவுகொள்ளச் சொல்கின்றீர்கள். பாதகமில்லை பழகலாம் வாருங்களென்றால், நீட்டிய கைகளின் பின்னால் நெடுவாள் கொண்டுவருகின்றார்களே; கண்டுகொள்ளீரோ அல்லது கண்டுங் காணாதிருப்பதே உங்களி்ன் மானுடப் பேச்சின் மகிமை என்பீரோ? கொடிகளிலும், கோஷங்களிலும், உங்கள் கொள்கைகள் மறைந்து போனதுவோ, மறந்து போனதுவோ?
எத்தனை கதைகள் சொல்ல? எத்தனை சோகம் சொல்ல? எத்தனை முறை சொல்லியாயிற்று.

மாதுமை!

கோணமாமலையில் கோயில் கொண்டவனின் தேவி பெயர். என் தங்கை தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த பெண்ணுக்கு இட்ட பெயரும் அதுவே. தங்கை குழந்தையாய் இருந்த போது பிரிந்த நான், ஒரு குழந்தைக்கு அவள் ஏங்கிய வயதிலேயே மீளவும் சந்திக்க முடிந்தது. ஆச்சரியமாய் இருந்தது காலத்தின் வேகம். என் கைபிடித்து நடை பழகித் திரிந்த பெண், கல்யாணமாகிக் கணவனோடு வந்திருந்தாள். மணவாழ்வின் மகிழ்வில் திளைத்திருந்தாலும், மகவொன்றில்லாத மனக் குறையில் துவண்டிருந்தாள்.

பின் வந்த சில காலத்தில் பெண்மகவுக்குத் தாயானாள். பெருமிதமுற்றாள். எழுதிய கடிதத்தில் இவ்வுலகின் மகிழ்ச்சியையெல்லாம் எண்ணத்தில் குவித்து, எழுத்து மலர்களாய் சொரிந்திருந்தாள். இறைமீது கொண்ட பற்றுதலால் மாதுமை எனப் பெயர் சூட்டியிருந்தாள். இன்றவள் வன்னி வனத்திடையில்....
இறுதியாய் பேசிய போது 'வன்னி மண் மட்டுமே எமக்குப் பாதுகாப்பானது ' என இறுமாந்து சொன்னாள்...

இன்று..

தினமும் செய்திகள் சுமந்து வரும் மடல்களைத் திறக்கையில் மனம் பதைபதைக்கிறது. படபடத்துத் திறந்ததும், தெரிகின்ற எழுத்துக்களின் மீது தேடுகையில், தெரிந்து விடக் கூடாது அவர்கள் பெயர் என, வெட்கம் விட்டுப் பிரார்த்திக்கின்றேன்.
நித்திரை வரா முன்னிரவுகள் கழிந்துபோக, பின்னிரவுக் கனவுகளில், குண்டு வெடிப்புச் சத்தங்களின் பின்னணியில், மாதுமை அழுத படியே மாமாவென்றழைத்து நித்திரை கலைத்துச் செல்கின்றாள்.....

5 Comments:

  1. யாத்ரீகன் said...
    :-( yenna solvadhendrey theriyavillai
    Anonymous said...
    :(
    வாசு said...
    நண்பரே!

    தாங்கள் படும் வேதனை கண்டு என் கண்களில் நீர் திரளுகிறது. ஈழத்தில் துன்புறும்
    எம் உடன்பிறப்புக்கள் அனைவரும் நலம்பெறவே நாங்கள் (தமிழகத்தில்) அனைவரும் அனுதினமும் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.

    இதை தவிர என்னால் வேறு ஆறுதல் எதுவும் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்.
    Dr.N.Kannan said...
    எப்படி ஆறுதல் சொல்ல? தலை சாய தோள் ஒன்று உண்டு என்று மட்டும் சொல்லமுடிகிறது.
    மலைநாடான் said...
    ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி நண்பர்களே!

Post a Comment




 

நன்றி, வணக்கம்.