திருத்தம்பலேஸ்வரம் பகுதி 3
Published by மலைநாடான் on Wednesday, August 16, 2006 at 2:20 PMசென்ற பகுதியில் தம்பலேஸ்வரம் எனும் பெயர் வரக்காரணம், தம்பன் எனும் மன்னன் அல்லது தலைவன் ஆட்சி செய்த பகுதியென்றும், அதனால் அவன் பெயர் சார்ந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ந்திருந்தோம். இப்பகுதியில் இப்பெயரினை மொழிவழக்கு ரீதியில் ஆராயவிளைகின்றேன். இந்த வகையில் ஆய்வு செய்ய உதவிய என் ஆய்வாள நண்பருக்கு நன்றிகள்.
தம்பலம் என்ற சொல்லுக்குப் பொருள்தேடி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின், “தமிழ்மொழி” அகராதியை புரட்டிப்பார்த்தபோது, ஆச்சரியப்படத்தக்க உண்மைகள் புலப்பட்டன. அவ்வகராதியிலிருந்து எமக்குப் பொருத்தமாக அமைந்த சில சொற்களை இப்பகுதியில் எடுத்து நோக்குவோம்.
தம்பலகாமத்தின் செந்நெல்வயல்களும், ஆதி கோணைஸ்வரர் கோவில் கோபுரமும்.
தம்பலடித்தல்:
இச்சொல்லுக்கு அகராதி சொல்லும் விளக்கம், பயிரிடுதல், உழவு செய்தல் என்பதாகும்.
இவ்விளக்கம் நுர்றுசதவீதம், தம்பலகாமத்துடன் ஒத்துப்போகும். ஏனெனில், வயலும் வயல்சார்ந்த மருதநில மண் என நாம் முன்னரே பார்த்திருந்தோம். இந்த செந்நெல் கழனிகளில் நடைபெற்ற தொழிலினடிப்படையில் இப்பெயர் வந்திருக்கக் கூடும்.
தம்பலாடல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், சேறடித்தல் அல்லது சேறாடால்.
இந்த விளக்கமும் இப்பிரதேசத்தின் தன்மையேர்டு பெருமளவு ஒத்துப்போகும். ஏனெனில் இப்பிரதேசத்தின் உழவு என்பது சேறடித்துப் பயிரிடும் முறைமையே. இதைச் சேறாடல் எனச் சொல்வது அதிகபொருத்தம் என்றும் சொல்வேன். உழவுக்கு இயந்திரங்கள் வந்த பின்னர் கூட, இப்பகுதி மக்கள் எருமைகளைக் கொண்டு, கழனிகளை கால்களால் மிதித்து, நீரும், களிமண்ணும், சேர்ந்த சேற்றுக்களியாக்கிய நிலங்களில் விதையிடுவது வழக்கமாகவிருந்தது. இந்தச் சேறுமிதிப்பினைக் கழனிகளின் கரையிருந்து பாரத்தால், வயலில் சேறுமிதிப்பவர்கள், ஆடல்புரிவதுபோன்றே தோற்றமளிக்கும்.
தம்பலி:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், மருதமரம் என்பதாகும்.
இப்பிரதேசத்தில் நிறைந்து காணப்படும் மரவகைகளில் அதிகமானது மருதமரங்களே. ( அந்த மருதமரங்களின் நிழல் சுட்டியே இவ்வலைப்பக்கத்திற்கு மருதநிழல் என்று பெயரிட்டேன்) வயல்நிலங்களின் கரைகளிலும், நீர்பாசனப்படுக்கைகளிலும், களத்துமேடுகளிலும் இந்த மருதமரங்களை நிறையவே காணலாம். மிகப்பெரிய விருட்சமாக வளரும் இம்மரங்களின் நிழல்கள் இதமானவை.
தம்பல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் சேறு என்பதாகும்.
ஏலவே சொன்னதுபோல் இப்பகுதி வயல்நிலங்களின் மண்வளம் கருங்களிச் சேற்றுத்தன்மைகொண்டதாகும்.
இப்படித் தமிழச்சொற்களின் தொடர்புகொண்டு ஆய்வு செய்யிடினும், இப்பிரதேசம் பூர்வீக தமிழ்ப்பிரதேசமாவே காணப்படுகிறது. இப்படியான சிறப்புக்கள் பொருந்திய நிலத்தில் அமைந்த சிவன் ஆலயத்தின் பெயரால், இது திருத்தம்பலேஸ்வரம் என இப்பூமி அழைக்கப்படிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
- இன்னும் சொல்வேன்
தெந்தமிழ் ஈழ நாட்டு ஆன்மிக வலத்தோடு தமிழ்ச்சொல் ஆராய்ச்சியும் இணைந்து உங்கள் படைப்பின் விசாலத்தைக் காட்டுகின்றது. தொடர்ந்தும் வாசிக்கக் காத்திருக்கின்றேன்.
நல்ல சொல்லாய்வு; எங்கேயோ கூட்டிச் செல்கிறது;பல புதுச் சொற்களை அறிந்தேன்.இக் காரணப் பெயருக்கு ;பல காரணிகள் இருக்கும் போல் உள்ளது. படம் மிக அழகு சேர்க்கிறது.
யோகன் பாரிஸ்
யோகன்!
இந்தச் சொல் ஆய்வு நானே எதிர்பாரத வகையில் அமைந்தது. அதன் ஒற்றுமை கண்டு எனக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
அற்புத நடை!நல்ல சொல்லாய்வு.
மிக்க நன்றி.