சங்கப்பலகை - திருமலை
Published by மலைநாடான் on Wednesday, November 15, 2006 at 10:26 PMஇதைப்பற்றிக் கனநாளா எழுதவேணும் என்டு நினைத்ததுதான். ஆனாலும் எப்படியோ கழிந்து போயிரும். கனநாட்களாக மருதநிழலில் எழுதவும் இல்லை. ( மருதநிழலுக்கு அடிக்கடி வாற அக்கா வேற கோபிக்கப்போறா) இணையத்தில் இதுவரையில் வேறயாரும் இதனைப்பதிவு செய்ததாகத் தேடிப்பார்த்ததில் காணவில்லை. ஆதலால் இன்று இதைப்பதிவு செய்கின்றேன்.
சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்களின் தரமறியச் சங்கப்பலகைமேல் வைத்து, பொற்றாமரைக்குளத்தில் விட, நூல் தரமாயின் சங்கப்பலகை நூலோடு மிதக்குமெனவும், அல்லாவிடின் நீரில் அமிழ்ந்துவிடும் என்றும் ஒரு கதை சிறுவயதில் கேட்ட ஞாபகம். அதுசரி, சங்கப்பலகைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு என எண்ணுகின்றீர்களா? இங்கே நான் குறிப்பிடுவது தமிழீழத்தின் திருமலை.
ஆமாம் திருகோணமலையில் 70களின் இறுதிகளில் இயங்கி வந்த ஒரு தமிழார்வக் குழுமத்தின் பெயர்தான், இங்கே நான் குறிப்பிடும் சங்கப்பலகை. தலைவரென்றும், செயலாளரென்றும், பதவிகள் தெரிவுசெய்து, மாதம் ஒருதரம் கூடி, தேநீரும், வடையும் சாப்பிட்டு, வெட்டிக்கதை பேசுவதோடு முடிந்து விடும் சங்கங்கள், மன்றங்கள், மத்தியில் தனித்துவத்தோடு செயற்பட்ட ஒரு அமைப்பு இந்தச் சங்கப்பலகை.
தலைவர் முதலாய பதவிகள் எதுவுமில்லாது, ஒருசில நண்பர்களின் உழைப்பில், பலரும் பயனடைந்தனர் இச் சங்கப்பலகையால்.
மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில்( பெளர்ணமி நாட்கள் சிறிலங்காவில் அரசவிடுமுறை தினங்கள்) மாலை ஆறுமணிக்கு, திருகோணமலை நகரி மத்தியை ஊடறுத்துச் செல்லும் மத்தியவீதியில். அமைந்திருக்கும் சென் சேவியர் பாடசாலை மண்டபத்தில் கணிசமான இளைஞர்கள் கூடுவார்கள்.
தெரிவுசெய்யபட்டிருக்கும் நிகழ்ச்சி வழங்குநரை. ஒரு நண்பர் அறிமுகஞ்செய்துவைப்பார். அத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும். நிகழ்ச்சி கட்டுரை வாசித்தலாக அல்லது ஆய்வுரையாக, அல்லது அறிவியல் சம்பந்மான விளக்கவுரையாக, என பல்கலை சார்ந்திருக்கும். ஆனால் அநேகமாக ஒரு நிகழ்ச்சிதான் நடைபெறும். நிகழ்ச்சி வழங்குபவர் குறைந்தது 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார். அதன்பின் அந்நிகழ்வு குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்நிகழ்வாக அமையும். நிகழ்ச்சி வழங்கியவர் பிரதானமாக எழுப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிப்பார். குறைந்தது ஒரு மணிநேரம் இது நடைபெறும். பின்னர் அனைவரும் கலைந்து செல்வர்.
இன்றைய கையடக்கப் பொருட்கள் வழங்கும், பல்வகைப்பயன்பாடுகள் போல், அன்றையபொழுதில் கையடக்கமாக நடந்த இப்பெளர்ணமி மாலை சங்கப்பலகை வழங்கிய பயன் மேலானாது. திருகோணமலையில், சமூகஅக்கறையும், தேடலும்மிக்க இளைஞர்கள் பலரை உருவாக்கியது. பரந்துபட்ட நல்ல வாசகர்களை உருவாக்கியது. இவற்றின் தொடர்ச்சியாக அரசியலார்வமிக்க இளைஞர்களையும், பின்னாளில் பல விடுதலைப்போராளிகளையும், உருவாக்கியது சங்கப்பலகை. இதில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்கள் சிலர் பின்னாட்களில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது, ஏரிக்கரை எனும் காலாண்டுச் சஞ்சிகை வெளியிட்டார்கள். நானறிந்தவரைக்கும், ஈழத்தின் இலக்கியப்பரப்பில் தரமான ஆக்கங்களுடனும், அழகான வடிவமைப்புடனும், வெளிவந்த சிற்றிதழ் இதுவாகும். ஆனால் என்ன சிற்றிதழ்களின் ஆயுட்காலக் குறைவுக்கு அதுவும் விதிவிலக்காகவில்லை.
அப்போது அதன் பெறுமானம் அவ்வளவு தெரியாவிடினும், இப்போது நினைக்கையில் பெறுமானம் புரிகிறது. இன்று இங்கு எழுதுவதில் ஏதேனும் நன்றாகத் தெரிந்தால் (தெரிந்தால்...?) திருமலையின் சங்கப்பலகைச் சந்திப்புக்களும் காரணமெனலாம். இதுபோன்ற நிகழ்வுகள் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருப்பதாயும் தெரியவில்லை...... இருந்தாலும் இராணுவம் இட்டுக்கட்டி இழுத்துச் சென்றுவிடுமே....
நன்றாக தெரிகிறது.... நல்லதொரு பல்முக ஆளுமையுடையவரை வளர்தது விட்ட சங்கபலகைக்கு.. எங்கள் நன்றிகள்...
பழையதுகளைக் கிளறுயள்.பழயவையின்ரை நினைவையுந்தான்
இந்தச் சங்கப்பலகையிலும் ஏரிக்கரையிலும்கூட ரமணிதரனின் பங்கு இருக்குமோ?
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!:))
பெயரிலி!
45த்தாண்டிற்றா இந்த பழசைக்கிளறிற குணம் வந்திடுமாம். ( அறளை) நீங்களும் அதுக்குக் கிட்டமுட்ட வந்திருப்பீர்கள்தானே? :))
வருகைக்கு நன்றி.
உங்கள் கேள்விக்கான பதிலை பெயரிலியின் பின்னூட்டத்தில் புரியக் கூடியதாகவிருக்கும்.
பிரபா!
ஓமோம். எனக்குத் தெரியாத மடத்துவாசலா, கோயிலடிப் பெடியளா? :))
உங்கள் காலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உடம்புக்கு இயலாது வந்ததாகவும், புலத்தில் உள்ள இளைஞர்கள் சிகிச்சைக்கு உதவிசெய்து குணம் பெற்றதாகவும் அறிந்தேன். நீங்கள் அறிந்தீர்களா?
பெயரிலி!
நிச்சயம் நீங்கள் சங்கப்பலகை ஏற்பாட்டாளர் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் அப்போது நீங்கள் சின்னவயதுகாறர்தான். ஏரிக்கரை வெளிவந்தது சற்றுத் தாமதமாக. அதனால் சிலசயம் அதில் உங்கள் பங்கிருந்தததோ என நினைத்தேன். புனி தவளனார் வித்தியாலய மண்டபத்தில் நடந்த சங்கப்பலகைச் சந்திப்புக்களில் நானும் ஒரு பார்வையாளனே. அதற்கு மேல் எனக்கும் தெரியாது. புனித சூசையப்பர்கல்லூரி மாணவர்கள் சிலரும், அதன் ஏற்பாட்டாளர்களாக இருந்தார்கள். வாத்தியாரம்மாக்களெல்லாம் ஒழுங்காப் படிப்பித்தார்கள்தான்.. எல்லாம் நம்மட வயசுக் கோளாறுதான்.:))
எனக்குத் தெரிந்தவற்றையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். மேலதிகமானவை தெரியின் அறியத்தரவும். நன்றி
பயர்ஸ், சீலன்....குடியரசு அன்று பொற்றாசியம் விளையாட்டில்... எரிந்தது....திருமலையில்... ஒரு பள்ளிகூடத்தில் 70களில்... ஞாபகமிருக்கா..சங்க பலகை காலத்துக்கு முன்பா...
சங்கபலகை காலத்தில்... மருத்துவ பீட மாணவன்.கிருபாவை தெரியுமா...
ஏரிக்கரை? தெரியவில்லை. 'தீர்த்தக்கரை' ஜோதிகுமாரின் சஞ்சிகை பற்றிச் சொல்கிறீர்களா? அப்படியிருந்தாலுங்கூட, வாசகன் என்பதற்கு அப்பால் அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. 'தீர்த்தக்கரை', 'மக்கள்பாதை மலர்கிறது' என்பன கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியிலே ஓரளவுக்கு ஒருமித்த கருத்துடையவர்களாலே வெளியிடப்பட்டன. தொண்டமான் சிந்தைக்கு அப்பால் மலையகச்செய்திகளுக்குத் தீர்த்தக்கரை ஒருவாசலைத் திறந்தது. (பதிவுகள் தளத்திலே கிரி ஜோதிகுமாருடனான செவ்வியைச் சில ஆண்டுகளின் முன்னே இட்டிருந்தார்.)
சங்கப்பலகையிலே சம்பந்தப்பட்ட புனித சூசையப்பர் கல்லூரியினரிலே ஒருவரை மறக்கமுடியாது. பல விதங்களிலே ஆதர்சமாக இருந்தார்; இன்னும் இருக்கிறார். செக்குமாட்டுத்தமிழ்ச்சிந்தையிலேயிருந்து விலகி வேறு சிந்தைப்போக்குகளும் இருக்கின்றதென உணர்ந்துகொள்ள அவரின் நடவடிக்கைகளும் சிந்தையும் முன்மாதிரியாகவிருந்தன. பிரேம் என்ற பாத்திரமாக புதியதோர் உலகத்திலே கண்ட அவரிடம் ஒரு மாலைவகுப்பு மாணவனாக சோதனைக்கான பாடத்தினை மற்றும் கற்றுக்கொள்ளவில்லை; அதற்கு மேலாகவும் உலகத்தினைப் பார்த்தலைக் கற்றிருக்கிறேன். இத்தனைக்கும் வகுப்பிலே ஒரு சொல் தன் சொந்த அரசியல் பேசமாட்டார். கடைசியாக,இருக்கின்றாரோ, எங்கிருக்கின்றாரோ தெரியவில்லை.
பயசுக்கும் சீலன்-சார்ள்ஸ் அன்ரனிக்கும் சம்பந்தமிருக்கவே முடியாது. வேறுதிசைகள்; சீலனின் கொடி எரிப்பு இந்துக்கல்லூரியிலே நிகழ்ந்தது.
ஓமோம். எனக்குத் தெரியாத மடத்துவாசலா, கோயிலடிப் பெடியளா? :))
உங்கள் காலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உடம்புக்கு இயலாது வந்ததாகவும், புலத்தில் உள்ள இளைஞர்கள் சிகிச்சைக்கு உதவிசெய்து குணம் பெற்றதாகவும் அறிந்தேன். நீங்கள் அறிந்தீர்களா?//
அவர் பெயர் சிறீமான், கொழும்பில் என்னுடைய வீட்டில் இருந்து தான் சிகிச்சை பெற்றவர், தற்போது இணுவில் கிராம சேவகர் அவர்,
விரிவான விளக்கத்துக்கு நன்றி.
ஆனால் எனது பின்னூட்டம் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து வந்ததன்று. அது வெளியிடப்படுமுன்பே நான் என் பின்னூட்டத்தை எழுதிவிட்டேன். குறிப்பிட்டவற்றில் உங்கள் பங்கு இருந்திருக்கலாமென்ற ஐயத்தில்தான்.
என்றாலும் விரிவான பல தகவல்களைச் சொல்ல என் பின்னூட்டம் காலாக அமைந்திருக்கிறது.
________________________
சின்னக்குட்டியர்,
ஒவ்வொரு சொல்லுக்குப்பிறகும் நாலைஞ்சு புள்ளியளைப் போட்டு எழுதிறதை வாசிக்கேக்க ஒரு நிறை வெறிகாரன் தள்ளாடிக்கொண்டு கதைக்கிற மாதிரிக்கிடக்கு.
மொளியிலை அடிச்சுத் திருத்த வீட்டில ஒருத்தருமில்லையோ?
பெயரிலியாக வருவதற்கு மன்னிக்கவும். சொந்தத்தில் வரமுடியவில்லை. புளக்கர் ,புளக்குது.
நீங்கள் குறிப்பிடும் விடயங்களும் பின்னூட்டங்களும் வாசித்தேன்.
இதற்கு மேல் நான் கூற எதுவுமே; சம்பத்தப் பட்ட விடயத்தில் தெரியவில்லை.யாழ் மாவட்டத்திற்கப்பாலும் நல்ல இலக்கியவட்டங்கள் இருந்தவை.அறிவேன்.
யோகன் பாரிஸ்
வசந்தன் சரியா கண்டு பிடிச்சிட்டியள்.. ஹிஹிஹி....... உண்மையும்.. அதுதான்... கண்ணதாசன் மாதிரி... ஒரு கோப்பையிலை என் குடியிருப்பு என்று சொல்லா விட்டிலும்,,
நேரம் எடுத்து பல விடயங்களையும் தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.
நீங்கள் குறிப்பிடும் அந்த அற்புதமான மனிதரை என்னாலும் ஊகிக்க முடிகிறது.:)
ஏரிக்கரை என்பது தவறுதான். தீர்த்தக்கரை என்பதே சரி. ஏரிகள் நிறைந்த நாட்டில இருக்கிறோமா..அதுதான் அப்படியாயிற்று :))
சின்னக்குட்டி!
உங்கள் பலகேள்விகளுக்கு பெயரிலி விளக்கம் தந்துள்ளார்.
சார்ள்ஸ், எனது கல்லுர்ரி மாணவன்தான், என்னிலும் இரண்டு அல்லது மூன்று வகுப்பு பின்னால் படித்தவர். படிக்கும் காலத்திலேயே துடிப்பானவன்தான்.
கொடி எரித்தது 1977ல் என்பதுதான் சரியென நினைக்கின்றேன்
வசந்தனின் கேள்விக்கான மனந்திறந்த உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நன்றி. ஆனாலும் இனி புள்ளியிட்டு எழுதுவதைத் தவிர்க்கலாம்தானே. கூடவே அப்படி எழுதும் நிலையினையுந்தான்.:))
வசந்தன்!
உஙகள் ஆர்வத்துக்கும், தேடலுக்கும் பாராட்டுக்கள்,
நன்றி.
சின்னக்குட்டி!
நான் புனிதசூசையப்பர்கல்லூரி மாணவன். அருட்தந்தை வின்சன் ஞானப்பிரகாசம் அடிகளார் அதிபராக இருந்தார்.
இப்போது இது போன்று எதுவும் செய்வதற்கு ஈழத்தில் அவகாசம் எதுவும் இல்லை. ஈழத்து இளைஞன் ஒன்றில் இயக்கத்துக்குப் போயிருப்பான் இல்லையேல் வெளிநாடு போயிருப்பான் இதுவும் இல்லையேல் வெளிநாடு போக காத்திருப்பான். இவை எவையும் நடக்கவில்லையெனில் செத்துபோயிருப்பன். இதிலிருந்து மிகச் சொற்பமாக தப்பிப் பிழைத்து சிலர் ஆங்காங்கே இருக்க கூடும்! ஆன்னல் அவர்களிடமும் தொடர்போ பகிர்தலோ இருப்பதில்லை.
எனது கடந்த தலமுறை அளவுக்காவது ஆரோக்கியமாக! என் தலமுறை உருவாகவில்லையே என்பது எனக்கும் நெடிய வருத்தம்தான்.
சரி தொடர்ந்து இது போன்ற தகவல்களைச் சொல்லுங்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான். இன்றைய தலமுறையின் நிலை மட்டுமல்ல, எங்கள் தலமுறையின் நிலை கூட நன்றாக அமைந்ததென்று சொல்ல முடியாது. நாளைய தலமுறையின் நிலையாவது நன்றாக அமையவேண்டும் என்பதே இப்போதுள்ள கவலை.