சல்லி அம்மனும் கடல் அம்மாவும்


திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி. இதன் கடற்கரையில் அழகான ஒரு அம்மன் கோவில். இந்தக்கோவிலால் அந்த இடத்திற்கு சல்லி எனப்பெயர்வந்ததா? அல்லது அந்த இடத்தில் அமைந்ததால் சல்லி அம்மன் என கோவில் பெயர்பெற்றதா என்ற வரலாற்றுக குறிப்புக்கள் எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாத வயதில் சல்லிஅம்மன்கோவில் எனக்கு அறிமுகமானது, இந்தத் தெரியாமைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம்.

வைகாசிமாதத்தில் வரும் பெளர்ணமியிலோ அல்லது அதை அண்டியோ சல்லி அம்மன் கோவில் பொங்கல் வரும். பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னரே சல்லிக்கிராம கடற்றொழிலாளர்கள், தங்கள் தொழிற்படகுகளை கரையேற்றி விடுவார்கள். அந்த பத்து நாட்களும் அவர்கள் கடலுக்குச் செல்வதில்லை. அம்மன் கோவில் பூசை வழிபாடுகளோடு ஒன்றித்து விடுவார்கள். கடைசி மூன்றுநாளும் விசேடமென்றாலும், பத்தாம் நாள் பொங்கல்தான் பிரசித்தம்.

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து சல்லிஅம்மன்கோயிலுக்கு மக்களை அள்ளிச் செல்லும். அன்று மதியத்திலிருந்தே தொடங்கிய இந்த அள்ளல் அழைப்பு, நள்ளிரவு தாண்டியும் தொடரும். சல்லிக்கிராமத்தின் நுழைவிலேயே பேரூந்துகள் மறிக்கப்பட்டுவிடும். அங்கிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் தற்காலிக மின்விளக்குகளும், ஒலிபெருக்கி இணைப்பும் செய்யப்பட்டிருக்கும். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை “ றீகல் சவுண்ட்ஸ் “ தனது நூற்றுக்குமதிகமான ஒலிபெருக்கிகுழல்களை, உயர்ந்த தென்னை மரங்களில் கட்டி, அந்தப்பிரதேசமெங்கும் ஒலியால் அதிரவைக்கும். அதன் குழல்களில் உள்ள இலக்கங்களை வைத்து இம்முறை எத்தினை குழல்கள் கட்டியுள்ளார்கள் என்பதை அறிவதில் எமக்கு ஒரு திருப்தி. கோவிலை நெருங்க நெருங்க திருவிழாக்கடைகள் பல இருக்கும். விளையாட்ப் பொருட்கள், அலங்காரப்பொருட்கள், ஆடைகள், கச்சான் கடலைக் கடைகள், குளிர்பாணக்கடைகள், என்பதுதான் வழமையான கடைகள். ஆனால் இங்கே வித்தியாமாக இன்னுமொரு கடையும் இருக்கும். அதுதான் புட்டுக்கடை. ஆம், தமிழகத்தில் பலாப்பழத்துக்கு, பண்டிருட்டி என்பது போல, திருகோணமலைப்பகுதியில் சாம்பல்தீவுப்பகுதி. மிகச்சுவையான பலாப்பழங்கள். இந்தப்பலாப்பழங்கள் காய்க்கும் காலமும் சல்லி அம்மன் கோவில் திருவிழாக்காலமும் ஏறக்குறைய ஒரே காலப்பகுதி என்பதால், சல்லி அம்மன் கோவில் திருவிழாக்கடைகளுள், பலாப்பழமும் புட்டும் சேர்த்து விற்பனைசெய்யும் கடைகளும் இருக்கும். ஓலைப்பெட்டிகளில்,இலேசான சூட்டில் உலிர்ந்த புட்டும் பலாப்பழமும், தருவார்கள். அந்த ஓலைப்பெட்டியிலிருந்தும், பலாப்பழத்திலிருந்தும், வரும் வாசனைகளின் கலவையில் புட்டுத் தனிச்சுவை தரும். சல்லிக்குப் போய் புட்டுச்சாப்பிடாமல் வந்தால், திருப்பதி போய் லட்டுச் சாப்பிடாமல் வந்தது போலாகிவிடும்.

கோயிலுக்குப் போனா கும்பிட வேணும், இதென்ன புட்டுச் சாப்பிட்டுக்கொண்டு.. என்டு ஆர் புறுபுறுக்கிறது. கொஞ்சம் பொறுங்கோவன்...அப்பிடியே பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்தால் கோயில் வரும். கோயிலொன்டும் பெரிய கோயிலல்ல. அது ஒரு ஆகமவழிபாட்டுக் கோயிலுமல்ல. அந்தப்பிரதேசத்தில் வாழும் கடற்தொழிலாளர்களின் நம்பிக்கைத் தெய்வம் சல்லி அம்மன். அதீதமான நம்பிக்கையும், வைராக்கியமான பக்தியும் கொண்ட கடற்தொழிலாளர்கள், தினசரி தொழிலுக்குப் புறப்படும் போது கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டுவிட்டுச் செல்வார்கள். மறுநாள் காலை தொழில் முடித்துக் கடலால் வந்ததும், தாங்கள் பிடித்த மீன்களில் ஒரு பகுதியை அம்மனுக்குக் காணிக்ககையாக கோவில் முன் உள்ள தொட்டியில் இட்டுவிடுவார்களாம். அப்படிச் சேரும் மீன்களை விற்ற வருமானத்திலேயே சல்லி அம்மனின் நித்திய வாழ்வு. ஆனால் பொங்கலும், பொங்கலுக்கு முந்தைய நாட்களும், அப்பிரதேச மக்களுக்கு மிக முக்கிய தினங்கள். பொங்கல் தினத்தன்று திருகோணமலைச்சுற்றுவட்டாரமே சல்லிக்குத் திரண்டு வரும்.

கோயிலுக்கு முன்னால் பத்துமீற்றர் தூரத்துக்குள், கடலன்னை மெதுவாக அலை அசைப்பாள். கரையில் சல்லிக்கிராமக் கடற்றொழிலளர்களின், படகுகளோடு, வேறுசில படகுகள் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அவை வல்வெட்டித்துறை,பருத்தித்துறை, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் இருந்து வந்த கடற்தொழிலாளர்களின் படகுகள். தொழில்தொடர்புகள், உறவுநிலைத் தொடர்புகள் வழி, அவர்களும் சல்லிஅம்மன் பொங்கலுக்கு வருவார்கள். இவர்களையெல்லாம் விட, பொங்கலன்று அவர்களின் நம்பிக்கைத் தெய்வம், கடலாக வருவாளாம். இதுபற்றி எனக்கு முதலில் ஆர்வமிருக்கவில்லை.

முதன்முறை சல்லி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது, அந்தகடற்கரை முழுக்க நண்பர்களோடு அலைந்துவிட்டு, இரண்டு மூன்று தடவை புட்டுச்சாப்பிட்டுவிட்டுக் களைத்துப்போய் கடற்கரை மணலில் இருந்தவர்கள் அப்படியே உறங்கிவிட்டோம். திடீரென நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடமெல்லாம், கடல்நீர் சிறு அலையாய் வந்து போனது. தூக்கத்திலிருந்தவர்கள், பேசிக்கொண்டிருந்தவர்கள், எல்லோரும் நனைந்துவிட்டார்கள். ஆனால் கோவில் பகுதியில், ஒருவித ஆர்பரிப்புத் தெரிந்தது. பறைகள் அதிர்ந்தன. அப்போதூன் சொன்னார்கள், பொங்கல்பானை பொங்கித்தள்ள கடலம்மன் வந்து வாங்கிச் சென்றாவென்று. இது அங்குள்ள ஒரு வழமையாம். இதைக் கேட்ட மாத்திரத்தில் எமக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் பகுத்தறிவு விடவில்லை. அடுத்த வருடம் அந்தத்தருணத்தை அக்கறையாக எதிர்கொண்டோம். அது நடந்தது. ஆச்சரியப்பட்டோம். அதற்கடுத்த வருடம் கோவிலுக்குக் கிட்டவாக நின்றெ பார்த்தோம். என்ன ஆச்சரியம், பொங்கல் பொங்கித்தள்ளும் அந்தத்தருணத்தில், அலையடித்து, பொங்கல் பானைவரை வந்து சென்றது.
இது எப்படி நடந்நது என இன்றுவரை எனக்குப் புரியவில்லை. சிலசமயங்களில் கடல் பொங்கிவருவது இயல்புதானென்றாலும், எப்படி அந்த பொங்கல் பானை பொங்கும் தருணத்தில் எழுந்து வந்தது. அந்தத் தொடர்பை ஏற்படுத்தியது யார்? அல்லது எது? தங்கள் அன்னையென நம்பும் கடற்தொழிலாளர்களின் நம்பிக்கையா? அல்லது வேறெதுவமா? அது எப்படிச் சரியாக அந்தத் தருணத்தில் மட்டும் அலையெழுந்து வருகிறது? கேட்பதற்கு ஆச்சரியமாகவிருப்பினும், நான் பார்த்த மூன்று தடவைகளிலும், இந்த நிகழ்வில் மாற்றமேதும் இருக்கவில்லை. அதன்பின்னர்தான் கடற்தொழிலாளர்களுக்கும் கடலுக்குமிடையிலான உறவை, நேசத்தை, பக்தியை சற்று உற்று நோக்கினேன். அது வித்தியாசமாகவே இருந்தது. மற்றவர்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடியாததாகவிருந்தது. பின் இந்தியாவிற்கு பயிற்சிக்காக சென்று வந்த போராளிகள், கடலோடிகளின் இறுக்கமான சில பழக்கவழக்கங்களைச் சொன்னபோது, அந்த உறவின் தாத்பரியம், கடல்மீதான அவர்களது நம்பிக்கைகள், மேலும், புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருந்து.

இதை சென்றவருடத்திலேயே சொல்ல நினைத்திருந்த போதும், நம்பிக்கையீனத்தைத் தந்துவிடுமோ எனும் காரணத்தால், எழுதாமல் இருந்துவிட்டேன். சென்றவாரத்தில் தமிழ்நதியின் பதிவொன்றில், வசந்தன் இட்ட பின்னூட்டத்தில் கடல்பற்றிக் குறிப்பிட்டிருந்தது, இது பற்றி எழுதத்தூண்டியது. ஆனாலும் எனக்கு இவையெல்லாம் கடந்து, சல்லி என்றால் இனிப்பாய் நினைப்பது, புட்டும் பலாப்பழமும், அதைவிரும்பிய வரைக்கும் தந்து மகிழ்ந்த பள்ளித்தோழிகளும், அவர்களது பாசமிகு பெற்றோர்களும்தான்.


12 Comments:

 1. வெற்றி said...
  மலை,
  அருமையான பதிவு. பதிவில் குறிப்பிட்ட பகுதிகளின் வரைபடத்தையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.

  /* பொங்கல் பொங்கித்தள்ளும் அந்தத்தருணத்தில், அலையடித்து, பொங்கல் பானைவரை வந்து சென்றது.*/

  ஒவ்வொரு வருடத் திருவிழாவிலும் இப்படி நடக்குமா? ம்ம்ம்... மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறதே! ஒரு வருடம் மட்டும்தான் அலை பானை வரை வந்திருந்தால் எதேச்சையாக நடந்த செயல் எனச் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு வருடமும் நடந்தால்... கட்டாயம் அதிசயம் தான்.
  சின்னக்குட்டி said...
  நல்ல கலாச்சார நினைவு பதிவு. ஆனால் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்கள் சொல்லி இருக்கிறியள் . அக்காலம் பறுவம்(பெளர்ணமி காலமோ) காலமோ. இப்படித்தான் வல்லிபுர கோயில் தீர்த்த மூ்ட்டமும் ஏதோ சொல்றவை. அந்த காலம் பறுவ நேரம்
  வி. ஜெ. சந்திரன் said...
  அதியமாகவும் இருக்கு. அதே நேரம் வற்று பெருக்கு இடம் பெறும் நேரம், போங்கும் நேரமும் ஒத்து வருமா எண்டு யோசிச்சா? எல்லா பொங்கலிலும் ஒத்து வருமா?
  கோயில் இவ்வளவு பிரபலமானது என தெரியாது.

  ஒரு முறை சாதாரணமான ஒரு நாளில் பள்ளி தோழர்களுடன் போய் இருக்கிறேன். 2 மணி நேரம் அங்கு தரித்திருப்போமா என்பது தெரியாது. அங்கு போன ஞாபகமாக நண்பர்கள் அனைவருமாக கோயிலின் வலப்பக்கம் இருக்கும் உயர்ந்த பாறையில் ஏறி நின்று படம் எடுத்தோம். ஆனா என் கைக்கு ஒரு படமும் கிடைக்கலை :((.

  அதாலயே சல்லி அம்மன் கோயில் எனும் பெயர் அடிக்கடி ஞாபகம் வரும்.
  மலைநாடான் said...
  வெற்றி!
  ஆச்சரியத்துக்கும், நம்பகத்தன்மைக்கு அற்றதுமான ஒரு விடயம்தான். அதே கேள்வியோடுதான் நானும் இதைப்பார்த்தேன். வருடந்தோறும் நடைபெறுகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் நான் பார்த்த மூன்று வருடங்களிலும், அது நடந்தது என்பது உண்மை.
  கானா பிரபா said...
  ஒரே நாட்டில் வாழ்ந்திருந்தாலும் உங்களுடைய அனுபவப் பகிர்வு புதுமையாக இருந்தது. சின்னக்குட்டியர் சொன்னது போல படங்கள் இன்னும் அதிகமாகப் பதிவைக் கனமாக்கும்.
  தமிழ்நதி said...
  மலைநாடான்,
  சல்லியில் சில ஆண்டுகள் வாழும் வாய்ப்புக் கிடைத்தது. நீங்கள் விபரித்த அற்புத அனுபவமும் கிட்டியது. அந்த இரவும் நிலவும் வயதும் கூட மறக்க முடியாத அனுபவங்கள்தான். கடலோரத்தில் வாழ்வதனாலோ என்னவோ அந்த மனிதர்களின் மனமும் கூட தூய்மையானதாக கபடங்கள் அற்றதாக இருந்ததைக் கண்ணுற்று எங்கள் வீட்டில் வியந்து பேசியிருக்கிறோம். நல்லதொரு பதிவைத் தந்து ஞாபகங்களைக் கிளர்த்தியிருக்கிறீர்கள் நன்றி.
  மலைநாடான் said...
  சின்னக்குட்டி!

  நீங்கள் குறிப்பிடும் அதே பகுத்தறிவு எண்ணத்துடன்தான் எங்கள் நண்பர்கள் குழாமும் அதைப்பார்த்தது. ஆனால் நாங்கள் பார்த்த போதுகளில் நடந்ததென்னவோ உண்மை. அன்று பெளர்ணமியே அல்லது அதற்கு அண்மித்த நாள்தான். ஆனால், பொங்கல் பொங்கும் அந்த நேரம் என்பது அதற்கு அப்பாற்பட்டதல்லவா?
  மலைநாடான் said...
  வி.ஜெ!, பிரபா!

  உங்களைப் போன்றே எனக்கும் இது ஆச்சரியமான விடயம்தான். ஆனால் நடந்ததென்னவோ உண்மை. சிறிது காலம் அந்தப்பகுதியில் வசித்தபோது, தமிழ்நதிக்கும் அந்த அனுபவம் கிடைத்ததாகச் சொல்லியுள்ளார். நமது அனுமானங்களுக்கு அப்பாற்பட்ட விடங்கள் பல உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமோ?
  பகீ said...
  நல்ல பதிவு நன்றி.

  எனக்கு "கடலம்மா......." எண்டதும் வேற ஞாபகம் வந்துது.
  Anonymous said...
  வரலாற்றுப் பதிவுகளின்படி சல்லிக்கும் ‍ அலஸ்த்தோட்டத்திற்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில்தான் பிரித்தானியர் முதலில் காலடி வைத்தார்கள். அங்கிருந்துதான் ஒல்லாந்தர் கோட்டையைத் தாக்கி திருகோணமலையைக் கைப்பற்றினார்கள்.
  குமரன் (Kumaran) said...
  மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் மலைநாடான். சல்லியம்மன் திருவிழாவை நேரில் கண்டது போல் உணர்ந்தேன்.

  நீங்கள் சொன்னது போல் நிறை மதி நாளிலும் பொங்கல் பொங்கும் நேரத்தில் சரியாகக் கடல் அலைகள் வந்துத் தொட்டுச் செல்வது என்பது அதிசயம் தான்.

  கடலோடிகளின் பழக்கங்களைப் பற்றியும் சொல்லுங்கள்.
  மலைநாடான் said...
  குமரன்!
  முதலில் தங்கள் பகிர்வுக்கு நன்றி.

  கடலோடிகளின் பழக்கவழக்கங்கள் பற்றி விரவாகவே ஒரு பதிவெழுதலாம் என்றிருக்கின்றேன். ஆனால் இங்கே கேட்டமைக்காக ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். ஈழத்து கடலோடிகள், தங்கள் படகுகளில், காலணிகளோடு ஏற விடமாட்டார்கள். இதை ஏறக்குறைய ஒரு மாற்றவொண்ணா முறைமையாகவே வைத்திருந்தார்கள்.

Post a Comment
 

நன்றி, வணக்கம்.