மாவிலாறும் என் மனவுணர்வும்..

அன்று:
மாரிமழையை நம்பிச் செய்யும் பெரும்போக வேளான்மை முடிந்தபின், வசந்தத்தின் தொடக்கத்தில், வயலில் சேறடித்து, விதை விதைத்து, விளைவை என்ணிக்குதுகலித்திருப்பார்கள் கந்தளாய், தம்பலகாமம், விவசாயிகள். சிறுபோகம் என்று சொல்லப்படுகின்ற இக்கோடை வேளாண்மைக்கு, அவ் விவசாயிகள் முற்றுமுழுதாக நம்பியிருப்பது, கந்தளாய் குளத்து நீரை. வசந்தத்தின் குளிர்ச்சியில் பசுமையாக விளைந்தெழும் நெற்பயிர்களின் முதிர்நிலையில் ஈரலிப்பை வேண்டிநிற்கும் அப்பயிர்களுக்கு, அபயமளிக்கக் கூடிய கந்தளாய் குளத்து நீர் மறுக்கப்பட்டது. அதனால் தம்பலகாமம், கந்தளாய், பகுதி மக்களுக்கு எழுபதுகளின் மத்தியில் கிடைத்தது ஏமாற்றமே. அவர்கள் வயல்கள் காய்ந்தன. வயிறுகள் எரிந்தன. வாழ்வு கசந்தது. இதற்கான காரணம் என்ன ?. மறுத்தது யார்?.

தம்பலகாமம், கந்தளாய், தமிழ்மக்களே கந்தளாய் குளத்து நீரின் பெரும்பாகப் பாவனையாளர்கள். அம்மக்களுக்கு உரித்துடைய நீர் மறுக்கப்பட்டதற்கான மறைமுகக் காரணம், அவர்கள் தமிழ்மக்கள் என்பதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதும், அதற்கு ஏதுவாக ஏற்படுத்தபடும் சிங்களக்குடியேற்றங்களை வளர்த்தெடுப்பதுமாகும். ஆனால் இந்த நீர்மறுப்புக்கு சிங்கள அரசு காட்டிய வெளிப்படைக்காரணம், கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் அபிவிருத்தி என்பதாகும். இத்தொழிற்சாலையின் கரும்பு வயல்களுக்கான நீர்ப்பாசனத்துக்காகவே, தமிழ்மக்களுக்கு உரித்தான கந்தளாய்குளத்து நீர், அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இந்த மறுதலிப்பின் மூலம், அம்மக்களின் உரிமம் சுரண்டப்பட்டது. இந்தச் சுரண்டலினால் சுகமிழந்த குடும்பங்களின் சோகம் சொல்லி மாழாது. இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக எழுந்த குரல் அலைகள், நட்டஈட்டுப்பணம் வழங்கல் எனும் பேரம்பேசலின் மூலமும், அரச காவற்படையின் துணைகொண்டும், அடக்கபட்டன. தென் தமிழீழத்தின் ஒரு பகுதி மக்கள் சமுகத்தின் பாரம்பரியம் மிக்கப் பெருவாழ்வு, அவர்கள் அறியாவண்ணமே அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு அவலத்தின் ஆரம்பம் அது.

இன்று:

மாவிலாறு. இலங்கை அரசியலில், இந்தவாரமுக்கியத்துவம், இந்தப் பெயருக்குக் கிடைத்திருக்கிறது. திருகோணமலையின் கொட்டியாரப்பற்றினுடாக ஓடி, திருகோணமலைக் குடாக்கடலில் கலக்கும் மகாவலி நதியின் நீரோட்டத்தை, வெருகலுக்குச் சமீபமாகச் சேமிக்கும் நீர்ப்பாசன அணைத்திட்டம் மாவிலாறு. இந்த நீர்த்தேக்கத்தின் பயனை உண்மையில் அனுபவிக்க வேண்டியவர்கள் கொட்டியாரப்பகுதித் தமிழ்மக்கள். ஆனால் அனுபவிப்பவர்களோ சிறிலங்கா அரசினால், தமிழ்மக்களை அழிப்பதற்கென்றே திட்டமிட்டுக்குடியேற்றப்பட்ட சிங்களக்குடியேற்றவாசிகள். மாவிலாறு அணைக்கட்டின் கதவுகளை, தமது அத்தியாவசிய தேவைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து, கொட்டியாரப்பற்று மக்கள் இறுகப் பூட்டிவைக்க, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மற்றொரு அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்க்குள் வரும், மாவிலாறு அணையின் கதவுகளைப் பலவந்தமாகத் திறக்க, படைநகர்த்திய சிறிலங்கா அரசை, அதன் இராணுவ யந்திரத்தை, எதிர்கொண்டிருக்கின்றனர் விடுதலைப்புலிகள். யுத்தகளத்தில் சிறிலங்காப்பேரினவாதம் சந்திந்திருக்கும், புதியதோர் எதிர்முனை. இரவோடிரவாக குடியேற்றங்களையும், புத்தர்சிலைகளையும் நிறுவி, தமிழ்ப்பிரதேசங்களை ஆக்கிரமித்த பேரினவாதிகளின் குரல்வளையை இறுகப்பிடித்தது போன்றுள்ளது மாவிலாறு விவகாரம்.

அரச பயங்கரவாதத்தின் அநியாயங்களால் பாதிக்கபட்ட தமிழ்மக்கள் குமுறிய போதெல்லாம், குதுகலித்து மகிழ்ந்திருந்த பேரினவாதம், பெருங்குரலெடுத்துக் குய்யோ முறையோவெனக் கூவத்தொடங்கியுள்ளது. இவ்விவகாரத்தின் போக்குகள் மாறலாம், இழப்புக்கள் ஏற்படலாம். ஆனாலும் எங்கள் நிலத்தை, எங்கள் தேசத்தை, இழக்கமாட்டோமெனப் போர்குரல் எழுப்பி நிற்கும், திருமலை மக்களையும், மக்கள் போராளிகளையும், மனம் நிறைந்து வாழ்த்தத் தோன்றுகிறது. ஏனெனில் அந்நிலத்திலிருந்து அகதியாய் ஆக்கப்பட்டவனின் மனசு அப்படித்தானிருக்கும்.


மாவிலாறு குறித்து வன்னியனின் விரிவான மற்றுமொரு பதிவுதிருகோணமலை பற்றிய எனது முன்னைய பதிவுகள்

5 Comments:

 1. வன்னியன் said...
  பதிவுக்கு நன்றி.
  படிப்பதிவுகள் வலைத்தளத்தில் எழுதப்படும் எவையும் என்னுடைய ஆக்கமல்ல. வேறிடங்களில் இருக்கும் ஆக்கங்களைப் படியெடுத்துப் போடுவதற்காக நான் ஏற்படுத்திய வலைப்பதிவே அது. எனவே அனைத்துமே வேறிடங்களில் படியெடுக்கப்பட்டவையே.

  குறிப்பிட்ட கட்டுரை தினக்குரலுக்குரியது.
  johan -paris said...
  மலைநாடர்!
  முக்கியமான நேரத்தில் இந்தப் பதிவு. புதிய தகவல்களைத் தந்தது. 50 ல் தொடங்கிய நிலப்பறிப்பு தொடர்வது; மிகவேதனை.
  யோகன் பாரிஸ்
  Kanags said...
  மலை நாடான், உண்மைகளைத் தெரியப்படுத்தினதுக்கு நன்றிகள்.
  சின்னக்குட்டி said...
  புராதன இடமான தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றத்தினால்... உந்த பகுதி சேருவில சிங்கள தொகுதியாக மாறி சிங்கள எம்பி வாறார் இப்ப..


  மலைநாடன்...மேலையுள்ள படம்...வெருகலுக்கும் வாகரைக்கும் இடப்பட்ட நீர் நிலை பகுதியா?
  மலைநாடான் said...
  வன்னியன், யோகன்,கனக்ஸ், சின்னக்குட்டி! உங்கள்
  வருகைக்கும்
  கருத்துக்கும் மிக்க நன்றி.

  வன்னியன்!

  படிப்பதிவுகள் பற்றி அறிவேன். ஆயினும் மாவிலாறு பற்றி விரிவாக அறியட்டும் என்பதற்காக அதை இணைப்புக்கொடுத்தேன். கட்டுரையின் இறுதியில் தினக்குரல் பற்றியும் இருந்தபடியால் முதலில் குறிப்பிடவில்லை.

  யோகன்!, கனக்ஸ்!

  உண்மையில் செய்தி கேள்விப்பட்டதும் எழுந்த உணர்வுகளே அவை.

  சின்னக்குட்டி!

  உங்கள் ஊகம் சரியானதே. அது வெருகலுக்கும், வாகரைக்கும் இடையே ஓடுகின்ற மகாவலிநதியும், அவ்விரண்டுதுறைகளையும் இணைக்கின்ற பாதைச்சேவையுமாகும். நீரோட்ட வேகம் கூடிய இந்தத்துறையில், பாதைச்சேவைக்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கயிற்றைப்பிடித்தவண்ணம் படகுவலித்துப் பழகியிருக்கின்றேன். படத்தில் அந்தக் கயிறுகூட வடிவாகத்தெரிகிறது. இப்படம் இணையத்தில் எடுத்ததுதான்.

Post a Comment
 

நன்றி, வணக்கம்.