கல்லூரி, நிஜங்கள், நினைவுகள்.

அன்மையில் பார்த்த படங்களில் "கல்லூரி" ரொம்பவும் பிடித்திருந்தது. பிடித்ததற்கான காரணங்களில் அதன் கதை, கதையில் வரும் காட்சிகள் பலவும், பலரது மாணவப் பருவங்களிலும் வந்து போயிருக்கக் கூடியன, எனக்கும் வந்திருந்தது என்பது முதன்மையாகும்.

திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் மதியபோசன இடைவேளையில், எங்கள் வகுப்பறையைக் கடந்து செல்லும் எல்லோர்க்கும், எங்கள் சாப்பாட்டு முறைமை வியப்பும் வேடிக்கையும் தருவது. எல்லோருடைய உணவுப் பொதிகளையும் விரித்து வைத்துக்கொண்டு, பொதுவாக கலந்து உண்பது எங்கள் நட்பு வட்டத்தின் பழக்கம். சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கம் உள்ள நான், அந்த ஒரு காரணத்தினால் அந்த வேளையில் விலகிவிட்டக் கூடாது எனும் அக்கறையில், மதியபோசனத்தைச் தாங்களும் சைவ உணவாக மாற்றிக்கொண்ட அற்புதமான நண்பர் வட்டம் என்னது.

கல்லூரி ஆண்களுக்கு மட்டுமேயானதால், கல்லூரி நண்பர் வட்டம் ஆண்களோடு மட்டுமே அமைந்துவிடும். கல்லூரிக்கப்பால் உள்ள நண்பர்வட்டம் மிகப்பெரிது. அது தோழிகளையும் கொண்டது. திருகோணமலை ஒரு பல் சமூகக்குழுமங்கள் இனைந்து வாழும் மாநிலம் ஆனதால், ஈழத்தின் ஏனைய பகுதிகளைவிட இங்கு வாழ்நிலை சற்று வித்தியாசமானது. அதிலும் குறிப்பாகத் திருமலை நகரப் பகுதியும், அதன் அன்மித்த கிராமங்களும், பழகியல்பு மிக யதார்த்தமும் நேசமும் நிறைந்தது.



சிவராத்திரி நகர்வலம், வெசாக் பண்டிகைக்காலம், சல்லியம்மன் பொங்கல், கோணேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா, போன்ற கொண்டாட்ட நாட்களில் நள்ளிரவு தாண்டி அதிகாலைவரை எங்கள் சுற்றல் தொடரும்.




திருகோணமலைக் கடற்கரை, இலங்கையின் அழகான கடற்கரைகள் பலவற்றிலொன்று. தெப்பத்திருவிழாக்கலாங்களில் விடியும்வரை அந்த கரையின் மணற்படுக்கைகளில் கிடந்து நாம் பேசி மகிழ்ந்த கதைகள்தாம் எத்தனை. ஏன் ஞாயிறு மாலைகளில்...?. கோணேஸ்வரர் கோவில் மாலைப்பூசைக்கு நின்றுவிட்டு, குன்றிருந்திறங்கி வரும் போது, புத்தரையும் பார்த்து, புத்தரின் புத்திரிகளையும் பார்த்த மகிழ்வோடு கடற்கரைக்கு நாம் வரவும், கதிரவன் தனக்கினி வேலையில்லையென கடலுள் விழவும் சரியாக இருக்கும். கரையிலிருந்து கடலைப்பார்த்து, கடலை கொறித்து, இடையிடையே கடலை எறிந்து, கதையும் எறிந்த மகிழ்ந்திருந்தோம். அலையின் இரைச்சலில் இசை சேர்த்துப் பாடிக்களித்திருந்தோம். துட்டிருந்தால், எட்டுமணிக்கு நெல்சன் தியேட்டரில் ஆங்கிலப்படம். அல்லாவிட்டால் பிரியமனமில்லாமல் பத்துமணிக்கு கடற்கரையில் பிரிவோம். எங்கள் கதைகளும், பாடல்களும், மகிழ்வுகளும் மட்டுமே நிறைந்து கிடந்த அந்தக் கடற்கரையில் நாங்கள் மட்டுமல்ல, எங்களுக்கு முன்னவர்களும் பின்னவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். ஏனெனில், எப்போதும் மனதுக்கு மகிழ்ச்சியை மட்டுமே வாரித்தந்தது அந்தக் கடற்கரை.


அந்த நம்பிக்கையில்தான், 2006 ஜனவரி மாதம் இரண்டாம் நாளில் எங்களைப்போலவே இருந்த இளையவர் சிலர் அந்தக் கடற்கரையில் களிப்புறச் சென்றனர். சிரிப்பும், மகிழ்வும், மட்டுமே கொண்டு சென்ற அந்த மாணக்கர்களைக் குண்டு கொண்டு வந்தார்கள் என்று சொல்லி, வேட்டையாடி விருந்து கொண்டாடிற்று பேரினவாதம். விடுமுறைக்குக் கூடிக் குதுகலித்திருந்த பள்ளித் தோழர்கள், பட்டாம்பூச்சிகளாய் வட்டமடித்து வந்தபோது, துப்பாக்கியால் சுட்டுத் துவம்சம் செய்தது அரச பயங்கரவாதம்.


ரஜிகர் மனோகர் 1985-02.01.2006


லோகிததாசன் றோகாந் 07.04.1985 - 02.01.2006


யோகராஜா ஹேமச்சந்திரன் 04.03.1985 - 02.01.2006


சஜேந்திரன் சண்முகநாதன் - 02.01.2006

சிவானந்த தங்கவடிவேல் -02.02.2006

லோகிதாசன் றோகாந், யோகராஜா ஹேமச்சந்திரன், ரஜிகர் மனோகரன், சஜேந்திரன் சண்முகநாதன், சிவானந்தா தங்கவடிவேல் என்னும் ஐந்து பட்டாம்பூச்சிகள் சிறகொடிந்து விழுந்து போயின. தங்கள் கண்முன்னே தோழர்களைப் பறிகொடுத்த ஏனையோர், காயம் பட்டவர்ளையும் மீட்டுக்கொண்டு கதறியழுது ஓடினர். கல்வித்தகமையிலும், விளையாட்டுத்துறைகளிலும், பொதுப்பணிகளிலும், ஓர்மமாய் ஒன்றித்திருந்தவர்களை ஒருகணத்தில் உயிர்பறித்தழித்தன, பேயாளும் தேசத்தின் பிணந்தின்னிக் கழுகுகள். பெற்றவயிறுகள் பற்றியெரிய, உற்ற உறவுகள் விம்மிநிற்க, பிணங்களை வைத்துப் பேரம் பேசின வெறிநாய்கள். மறுத்துநின்ற மற்றவர்கள் உயிர் பறிக்கப்படும் என அச்சமூட்டி அரசு ஆண்டது. எல்லாமிருந்தும், இறைமை மட்டும் இல்லாக்காரணத்தால் ஏதிலிகளாக எம்மவர் மரணமும், வாழ்வும்.

எங்கள் கிள்ளைக் கதைகளாலும், கிளர்ந்த சிரிப்பு மகிழ்வுகளாலும், விரிந்த எங்கள் கடற்கரை இன்று எமக்கில்லை. இனி என்றும் எமக்கு இல்லை என்பதும் இல்லை. ஆதலினால், இன்னமும் காதல்செய்வோம் எங்கள் கடற்கரையை.











8 Comments:

  1. சின்னக்குட்டி said...
    வணக்கம் மலைநாடன்..பதிவுக்கு நன்றி

    நல்லதொரு நினைவு மீட்டல்
    மலைநாடான் said...
    இம் மாணவர்களின் படுகொலை தொடர்பாக சக பதிவர் யாழ். அவர்களின் தளத்தில் எழுதப்பட்டுள்ள மேலதிக விபரங்கள்.:,

    வழமை போலவே பல எதிர்பார்ப்புக்களை சுமந்தவர்களாய் 2006 ஆம் ஆண்டை வரவேற்ற தமிழினம் மறுநாள் பொழுதுகளையும் கழித்திருந்த வேளை இரண்டாம் திகதி மாலை 7.45 மணிக்கு நடந்த அந்த கொடூரம் புத்தாண்டு எதிர்பார்ப்புகளை எல்லாம் புஸ்வாணமாக்கியிருந் தது.

    அன்று மாலை அந்த மாணவர்கள் குழு தமது திருகோணமலை நிலத்தில் அமைந்துள்ள கடற்கரையின் காந்தி சிலை அருகே ஒன்று கூடுகின்றனர் வழமை போலவே.

    கல்வி என்ற தெரிவிலே உயர்கல்வி வரைத் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்த அந்த மாணவ நண்பர்கள் தாம் நண்பர்களைச் சந்தித்துக் கதைக்கும் அவசியத்தை வீட்டில் பெற்றோரிடம் சொல்லிவிட்டு அவ்விடத்தில் கூடிக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

    திடீரென அங்கு வந்த சிங்களப்படை வாகனம் அவர்கள் அனைவரையும் சுற்றிவளைத்துப் பிடிக்கின்றது. அடித்து உதைத்து வாகனத்தில் ஏற்றுகிறார்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என அந்த மாணவர்களால் வினா எழுப்பி விடைகாண முடியாத நேரப்பொழுதில், கொண்டு செல்லப்பட்ட மாணவர்கள் வாகனத்திலிருந்து அடித்துத் தள்ளப்பட்டு ஒவ்வொருவராய் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அந்தக் கடற்கரையே துப்பாக்கி வேட்டோசையால் அதிர்கிறது ஐந்து மாணவர்களின் உயிர் துடி துடித்துப் பிரிகிறது இரு மாணவர்கள் குற்றுயிராய்க் கிடக்கிறார்கள்.

    ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த அந்தப் பகுதி மக்கள் சம்பவ இடம் நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அங்கு நின்ற படைகளால் மக்கள் திருப்பி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

    மறுநாள் சிறிலங்காவின் ஊடக செய்திகள் இவ்வாறாகச் செய்திகளை வெளிவிடுகின்றன இராணுவத்தினரைத் தாக்குவதற்காக கைக்குண்டுகளுடன் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் கையில் வைத்திருந்த கைக்குண்டு வெடித்ததனால் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    'இராணுவத்தைத் தாக்க வந்த புலிகள் மீது இராணுவத்தினர் தாக்கியதில் ஐந்து புலிகள் கொல்லப்பட்டனர்" என்றவாறான செய்திகள் தமிழ் மக்கள் மனங்களை ஆத்திரம் கொள்ளச் செய்தன.

    நீண்ட நேரத்தின் பின்னே காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி சிறிலங்காக் காவல்துறையினர் மருத்துவமனையில் கொண்டு போய்ப்போட்டனர்.

    இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என உறுதிப்படுத்தி ஒப்பமிட்டாலே சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்போம் எனச் சிறிலங்காக் காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் கொதிப்படைந்த அந்த மக்களின் ஆர்ப்பாட்டங்களின் பின் நீண்ட இழுபறிக்கு மத்தியிலேயே சடலங்களை ஒப்படைத்தனர்.

    மரண விசாரணையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தாலேயே மாணவர்கள் உயிர் இழந்திருப்பது உறுதியானது. இவ்வாறான நிலையில் தாக்க வந்தவர்களையே இராணுவத்தினர் தாக்க வேண்டி வந்தது என மழுப்பும் பாணியில் சிங்கள இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க அறிக்கை மேல் அறிக்கைவிட்டார்.

    இவ்விடயத்தில் இன்னுமொன்றையும் பார்க்கவேண்டும். இராணுவத்தைத் தாக்கும் பொதுமக்களை இராணுவத்தினர் சுடலாம் என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவத்திற்கு உத்தரவிட்டு சில நாட்களிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனூடாகவே அப்பாவி மாணவர்கள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்ட சம்பவத்தையும் பார்க்கவேண்டும்.

    இந்தப் படுகொலைக்கு யார் பொறுப்பு என உடனடியாகக் கூறிவிட முடியவில்லை எனப் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவும் வழமை போலவே அறிக்கை விட்டு விட்டு அடங்கி விடுகிறது.

    தமிழர் தேசம் கிளர்ந்தெழுந்தது. திருமலை நகரத்தில் கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்படாமலேயே தமது இயல்பு நிலை முடங்கியது தமிழீழம் எங்கணும் இப்படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்பாவித் தமிழர்களையே பயங்கரவாதிகளாக்கிய சிங்களத்தின் செயல்கண்டு இறந்தவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கதிகலங்கி அழுதார்கள்.

    1985 ஆம் ஆண்டு பிறந்த கோகிதராஜா றொகான், சண்முகராசா கஜேந்திரன், மனோ கரன் ரஜீகர், யோ.ஹேமச்சந்திரன், தங்கத்துரை சிவானந்தா அகிய ஐந்து மாணவர்களும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று உயர்தரத்திற்குத் தேறி அடுத்த கட்ட கல்வி நடவடிக்கைகளுக் காக தயாராகியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்கள் பெற்றோரிடம் கூறிவிட்டு கடற்கரைக்குச் சென்று சில மணி நேரத்தில் ஒரு மாணவன் தனது தந்தையிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு 'அப்பா எங்கள ஆமி சுற்றிவளைச்சு பிடிச்சு முட்டுக்கால்ல இருந்திவைத்திருக்கிறாங்கள்" என்று பதற்றத்துடன் கூறியிருக்கிறான் அதுவே இறுதியாக அந்த மாணவர்கள் குழுவிடம் இருந்து வந்த அபாய செய்தியாக இருந்தது.

    பெற்றோர்கள் பதறியடித்து அங்கு சென்று சேர்ந்த நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டிருந்தது. சிங்களவனின் பார்வையில் அப்பாவித் தமிழன் அர்ப்ப பிராணியாகவே கணிக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாக அன்றைய தினம் ஐந்து தமிழ் மாணவர்கள் இரையாக்கப்பட்டார்கள்.

    பதிவர் யாழ் அவர்களின் முழுமையான செய்தி அலசல் இங்கே
    து.மது said...
    வணக்கம் அண்ணா ,

    இது இன்னும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது. எனக்கு அந்த கடற்கரை வீதியால் போகும் போது அவரது அழுகுரல்கள் கேட்பதுபோல் ஒரு மனப்பிரமை ஏற்படுகிறது...எப்படிக்கொல்ல மனம் வந்ததோ?
    மலைநாடான் said...
    சின்னக்குட்டி!

    வணக்கம். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்கநன்றி.
    மலைநாடான் said...
    மதுலா!

    உங்கள் வேதனையின் ஆழம் புரிகிறது. என்ன சொல்ல...:(

    காலங்கடந்தாலும், கரைகள் எமதானாலும், அந்தக் கரைகளில் அவர்கள் அழுத குரல் கேட்டவண்ணமாய் இருக்கத்தான் போகிறது. என்ன செய்வது? இந்த வலிகளை ஆற்றக் கூடியது...
    Anonymous said...
    pathivukku nanri
    மலைநாடான் said...
    அனானி நன்பா!

    யாரென்று கண்டுகொண்டேன்.:)) வரவுக்கு நன்றி.
    Mathu said...
    Padikkum pothu romba kavalaiyaaka ullathu!

Post a Comment




 

நன்றி, வணக்கம்.