அனைவர்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்ந்தவர்கள் தலைப்பில் நான் ஏற்கனவே இரு பதிவுகள்.(.பகுதி 1 பகுதி 2 ) எழுதியுள்ளேன். என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத இனிய ஆசான்கள் மூவரை அவற்றில் அடையாளப் படுத்தியிருந்தேன்.இன்று இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்த மேலும் இரு உத்தமர்களை இங்கே அழைத்து வருகின்றேன்.

தம்பலகாமத்தில் படித்த அந்தப் பள்ளிப்பருவத்தில், எனக்குக் கற்றுத்தந்த ஆசான்களில் இந்த இருவரும் கூட மறக்கமுடியாத மான்புடையவர்களே. ஆசிரியர்கள் திரு.தம்பிராஜா, திரு.தம்பையா, ஆகிய இருவரும் ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்த உத்தமர்கள் மட்டுமல்ல, உன்னதமான மண்ணின் மைந்தர்களும்தான்.

இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கூட ஒன்று. இருவரும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், இருவரும் எப்போதும் தூயவெண்ணிற உடையிலே காணப்படுவார்கள். நல்ல தமிழுக்குச் சொந்தக்காறர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக செந்நெல் விளைவிக்கும் நல் விவசாயிகள்.

ஆசிரியர் திரு: தம்பிராஜா!

சிறுவயதில் சமுகவியல் சொல்லித் தந்தவர். ஏட்டில் இருந்த எழுத்துக்கள் மூலம் கற்றுத் தந்ததவரல்ல அவர். அதற்கும் மேலே சமுகத்தின் பல்வேறு கூறுகளையும் சொல்லித்தந்தவர். இலேசான நகைச்சுவையுடன் இனிமையாகப் பாடம் நடத்துவார். வதந்தி பரவும் வகைதனை, வகுப்பில் மாணவர்களைக் கொண்டு நடத்திக்காட்டிப் புகட்டியவர். பத்திரிகை வாசிப்பதிலும், பத்திரிகைகளின் பங்கு , மக்கள் சமுகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்துச் சொல்லித்தந்தவர். பாடசாலை நேரத்துக்கப்பால், சமுகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதிலும், பாடசாலைகாலம் முடித்து, உயர்கல்வி கற்கும் காலத்தில், செல்நெல் விளைவிக்கும் விவசாயியாக வயல்வரப்புக்களில் நடந்த காலத்தில், உற்ற தோழனாய் உடன் வந்தவர்.

பின்னாட்களில் எனக்கு, சமுகம் சார்ந்த பணிகளிலும், பத்திரிகைத் துறைசார்ந்த பணிகளிலும், ஆர்வமுறவும், ஈடுபடவும் இவரது கற்கைநெறி, உந்தித் தள்ளியது, உதவியாகவிருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தூய வெண்ணிற வேட்டியும் சட்டையுமணிந்து, கையில் செய்திப்பத்திரிகைகளுடனும், வகுப்புக்களை வலம் வரும் இவரை, மாலைவேளைகளில் மடித்துக்கட்டிய சாரத்துடனும், தோள்மேல் நீளக்கிடக்கும் மண்வெட்டியுடனும், மண்ணின் மைந்தனாக கிராமத்துத் தெருக்களில் காணலாம். வயல்களில் நெற்பயிர்களை நிறைவுடன் வளர்ப்பதற்கு வேண்டிய சூத்திரங்கள் பல சொல்லித் தந்தவர். ஏன், எதற்கு என எல்லாவற்றையும் யோசிக்கப்பழக்கியவர்.


ஆசிரியர். திரு: தம்பையா!

இவர் அந்தப்பாடசாலையில், பல்துறைப்பயிற்றாளன் என்று சொன்னால் மிகையாகாது. சித்திர ஆசிரியரான இவர், எனக்குக் கற்றுத்தந்த கலைகள் பல. ஓவியம், சிற்பம், ஒலிபரப்பு, அச்சுத்துறை என அனைத்துத் துறைகளிலும், எனக்கு அடியெடுத்துக் கொடுத்த அல்லது அடிகொடுத்துச் சொல்லி தந்த சோர்விலான். குறித்த வயசுக்குப் பின், மாணவர்களென்றெண்ணுவதற்கு மாறாக மனம் விரும்பும் நண்பனாகப் பாவித்துப் பயிற்றுவித்தவர்.

பாடசாலை முடிந்துவிட்ட மாலைநேரங்களிலும், பாடசாலை விடுமுறை நாட்களிலும் கூட, பள்ளிப் பணிகளில் மூழ்கிக்கிடந்தவர். அந்தப்பணிகளினூடே, அளவிலா விடயங்களை, அற்புதமாகச் சொல்லித் தந்தவர். ஓவியம் வரைகையில், தூரிகையை லாவகமாக வளைத்திழுப்பதிலாகட்டும், சும்மா கிடக்கும் சுள்ளித்தடியினைக் காட்டி, அதற்குள் ஒளிந்து கிடங்கும் உருவத்தினை உணரவைப்பதிலாகட்டும், ஒலிபரப்புத்துறையில் உச்சரிப்பு நேர்த்தியை ஒழுங்குபடுத்தியதிலாகட்டும், அச்சுக்கலையில் அழகியலை காண்பதிலாகட்டும், எல்லாவற்றையும், இரசனையோடு செய்தார். எங்களையும் செய்வித்தார்.

மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்லி மகிழலாம். பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியொன்று. மஞ்சள், பச்சை, நீலம், ஆகிய முவர்ணங்கள் மூன்று இல்லங்களுக்கும். இந்த இல்ல அலங்காரங்களை, சினிமாக்களில் வரும் செட்டுக்களுக்கு நிகராக நாங்கள் செய்வோம். அதிலே எங்கள் கலையாக்கத்தை பரீட்சித்துக் கொள்வோம்.

பச்சை வண்ண இல்லத்தின் அலங்காரத்துக்குப் பொறுப்பாக ஒருவன், மஞ்சள் வண்ண இல்லத்தின் அலங்காரத்துக்குப் பொறுப்பாக மற்றொருவன், என எனது நண்பர்களே இருக்க, நீல வண்ண இல்லத்துக்கான அலங்காரத்தில் நான். என்றும் பசுமையாகவே இருக்கும் மருதநிலத்தில் பச்சை அலங்காரமோ அல்லது பழுத்துப்போன மஞ்சள்அலங்காரமோ செய்ய அதிகம் சிரமப்படத்தேவையில்லை. இயற்றையான பொருட்களும், இன்னும் கொஞ்சம் கற்பனையும் சேர்த்தால், அலங்காரச் சிகரங்களாக அவ்வில்லங்களை அமைத்துவிடலாம். அதனாலேயே போட்டியில் அலங்காரத்துக்கான பரிசின் முதலிரு இடங்களையும் அவ்வண்ண இல்லங்கள் தட்டிச் சென்றுவிடும். அதனால் நீல நிற இல்லங்கள் இறுதியிடத்தை தமதுடமையாக்கி வைத்திருந்தனர். ஆனால் அவ்வருடம் நிச்சயம் அதை மாற்றுவேன் எனச் சொல்லியிருந்தேன்.

தம்பையா மாஸ்டருக்குச் சாடையான சந்தேகம். ஆனால் கேட்கவில்லை. ' கடல்புறா ' நாவல் வாசித்த பாதிப்பிலிருந்த நான், அவ்வருடம் நீல நிற இல்லத்திற்காகப் போட்ட அலங்காரம், பிரமாண்டமான ஒருகடற்புறாக்கப்பல் வடிவம். இறுதிநேரம்வரை அடுத்த இல்லங்களுக்காகப் பணியாற்றும் நண்பர்களுக்குக் கூடச் செர்லலாது இரகசியமாக வேறோர் இடத்தில் வைத்து அனைத்துப்பபகுதிகளையும், தனித்தனிப் பாகங்களாகச் செய்து, இறுதிநாளன்றுக்கு முன்னைய இரவில், முழுவதுமாக மைதானத்தில் பொருத்தி விட்டேன். காலையில் வந்தவர்களுக்கு மைதானத்தில் நீலவானத்தின் பின்னனியில், நீலக்கடலின் அலையடிப்பில் செல்லும், கடற்புறா எனும் கப்பலொன்று மைதானத்தில் நிற்கக் கண்டனர். தம்பையா மாஸ்டர் பார்த்த மாத்திரத்தில் கட்டியணைத்துக்கொண்டார். எல்லாம் சரி, இதற்குக் கப்பல் பணியாளர்கள் போல் வேடமிட்ட மாணவர்களை நிறுத்தினால் இன்னமும் நல்லா இருக்குமெனச் சொல்லி முடிக்க முன்னமே, நீலவண்ணத்தில் கப்பல் பணியாளர்கள் வந்ததைத் கண்டதும், இவ்வருடம் உனக்குத்தான் பரிசெனச் சொல்லி மகிழ்ந்தார். போட்டி வேளையில், இயற்கையாகக் காற்றும் சற்று வீசக் 'கடற்புறா' மிதப்பது போலச் சற்று அசைந்தும் காட்டிற்று. அதற்கப்பாலும் பரிசு எனதில்லத்துக்குக் கிடைக்காமல் போகுமா ?

ஒலிபரப்புத் துறையில் எனக்கிருந்த ஆர்வம் கண்டு, விளையாட்டுப்போட்டிகள், கலைவிழாக்கள், எதுவாயினும் அற்புதமாக அறிவிப்புச் செய்யும் தம்பையா மாஸ்டர், தனக்குப்பக்த்தில் எனக்கும் ஒரு சரியாசனம் போடச் செய்தார்.

இன்று எனக்கு இந்தக் கணினியில் தமிழைத்தட்டெழுவதை விரைவாகச்செய்ய முடிகிற முனைப்புக்கான வினையுக்கிகூட அவரேதான். அந்நாட்களில் பாடசாலைத் தமிழ்தட்டெழுத்து இயந்திரத்தில் தட்டப்பழக்கியவரும் அவரேதான்.

நினைவுக்கையெழுத்திடுங்கள் எனச்சொல்லி, நினைவுக்கையெழுத்திடும் குறிப்புப் புத்தகத்தை நீட்டினால், ' சும்மாயிரு ' எனும் யோகர் சுவாமி வாசகத்தை அழகாய் எழுதி, அடியில் ச.தம்பையா என அழகாய் கையெழுத்திட்டுத்தருவார். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிடலாம். சிகப்பு, நீலம், கறுப்பு, என மூன்று வண்ணங்களில் மட்டுமே பேனைக்கு விடும் மை இருந்த காலத்தில், தம்பையா மாஸ்டரின் பேனை மட்டும் அழகாக ஊதாநிற வண்ணத்தில் எழுதி, வித்தியாசம் காட்டி நிற்கும்.

சொல்லச் சொல்ல சுகமாயிருக்கும் நினைவுகள் இன்னும் எத்தனை எத்தனை? உண்மையில் இந்த உத்தமர்கள் கற்றுத்தந்த, கள்ளமற்ற சிந்தனைகள், காட்டிய பரிவுகள், ஊட்டிய அன்னமாய், உயிரில்கலந்து, இன்றளவும் என்னை உயர்த்திச் செல்கிறது என்றே சொல்வேன்.

ஐயமீர்! ஆண்டுகள் பல சென்றபோதும், பல ஆயிரம் மைல்கள் கடந்திட்ட போதும், உங்களை மறவா நேசிப்போடிருத்தலே, இன்னும் என்னை நீள நடத்திச் செல்கிறதென நம்புகின்றேன். நாளையொரு பொழுதில், நானும் நீங்களும் நேசித்திருந்த தெருக்களில், நெஞ்சினின்றும் நீங்கா நினைவுகளுடன் நடந்து மகிழ்வேன் எனும் நம்பிக்கையோடு, இன்னுமோர் தினத்தில், இல்லையில்லை மறைந்துகழியும் மற்றுமோர் ஆண்டிலிருந்து அடியெடுத்து நடக்கின்றேன்.


 

நன்றி, வணக்கம்.