மாவிலாறும் என் மனவுணர்வும்..

அன்று:
மாரிமழையை நம்பிச் செய்யும் பெரும்போக வேளான்மை முடிந்தபின், வசந்தத்தின் தொடக்கத்தில், வயலில் சேறடித்து, விதை விதைத்து, விளைவை என்ணிக்குதுகலித்திருப்பார்கள் கந்தளாய், தம்பலகாமம், விவசாயிகள். சிறுபோகம் என்று சொல்லப்படுகின்ற இக்கோடை வேளாண்மைக்கு, அவ் விவசாயிகள் முற்றுமுழுதாக நம்பியிருப்பது, கந்தளாய் குளத்து நீரை. வசந்தத்தின் குளிர்ச்சியில் பசுமையாக விளைந்தெழும் நெற்பயிர்களின் முதிர்நிலையில் ஈரலிப்பை வேண்டிநிற்கும் அப்பயிர்களுக்கு, அபயமளிக்கக் கூடிய கந்தளாய் குளத்து நீர் மறுக்கப்பட்டது. அதனால் தம்பலகாமம், கந்தளாய், பகுதி மக்களுக்கு எழுபதுகளின் மத்தியில் கிடைத்தது ஏமாற்றமே. அவர்கள் வயல்கள் காய்ந்தன. வயிறுகள் எரிந்தன. வாழ்வு கசந்தது. இதற்கான காரணம் என்ன ?. மறுத்தது யார்?.

தம்பலகாமம், கந்தளாய், தமிழ்மக்களே கந்தளாய் குளத்து நீரின் பெரும்பாகப் பாவனையாளர்கள். அம்மக்களுக்கு உரித்துடைய நீர் மறுக்கப்பட்டதற்கான மறைமுகக் காரணம், அவர்கள் தமிழ்மக்கள் என்பதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதும், அதற்கு ஏதுவாக ஏற்படுத்தபடும் சிங்களக்குடியேற்றங்களை வளர்த்தெடுப்பதுமாகும். ஆனால் இந்த நீர்மறுப்புக்கு சிங்கள அரசு காட்டிய வெளிப்படைக்காரணம், கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் அபிவிருத்தி என்பதாகும். இத்தொழிற்சாலையின் கரும்பு வயல்களுக்கான நீர்ப்பாசனத்துக்காகவே, தமிழ்மக்களுக்கு உரித்தான கந்தளாய்குளத்து நீர், அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இந்த மறுதலிப்பின் மூலம், அம்மக்களின் உரிமம் சுரண்டப்பட்டது. இந்தச் சுரண்டலினால் சுகமிழந்த குடும்பங்களின் சோகம் சொல்லி மாழாது. இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக எழுந்த குரல் அலைகள், நட்டஈட்டுப்பணம் வழங்கல் எனும் பேரம்பேசலின் மூலமும், அரச காவற்படையின் துணைகொண்டும், அடக்கபட்டன. தென் தமிழீழத்தின் ஒரு பகுதி மக்கள் சமுகத்தின் பாரம்பரியம் மிக்கப் பெருவாழ்வு, அவர்கள் அறியாவண்ணமே அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு அவலத்தின் ஆரம்பம் அது.

இன்று:

மாவிலாறு. இலங்கை அரசியலில், இந்தவாரமுக்கியத்துவம், இந்தப் பெயருக்குக் கிடைத்திருக்கிறது. திருகோணமலையின் கொட்டியாரப்பற்றினுடாக ஓடி, திருகோணமலைக் குடாக்கடலில் கலக்கும் மகாவலி நதியின் நீரோட்டத்தை, வெருகலுக்குச் சமீபமாகச் சேமிக்கும் நீர்ப்பாசன அணைத்திட்டம் மாவிலாறு. இந்த நீர்த்தேக்கத்தின் பயனை உண்மையில் அனுபவிக்க வேண்டியவர்கள் கொட்டியாரப்பகுதித் தமிழ்மக்கள். ஆனால் அனுபவிப்பவர்களோ சிறிலங்கா அரசினால், தமிழ்மக்களை அழிப்பதற்கென்றே திட்டமிட்டுக்குடியேற்றப்பட்ட சிங்களக்குடியேற்றவாசிகள். மாவிலாறு அணைக்கட்டின் கதவுகளை, தமது அத்தியாவசிய தேவைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து, கொட்டியாரப்பற்று மக்கள் இறுகப் பூட்டிவைக்க, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மற்றொரு அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்க்குள் வரும், மாவிலாறு அணையின் கதவுகளைப் பலவந்தமாகத் திறக்க, படைநகர்த்திய சிறிலங்கா அரசை, அதன் இராணுவ யந்திரத்தை, எதிர்கொண்டிருக்கின்றனர் விடுதலைப்புலிகள். யுத்தகளத்தில் சிறிலங்காப்பேரினவாதம் சந்திந்திருக்கும், புதியதோர் எதிர்முனை. இரவோடிரவாக குடியேற்றங்களையும், புத்தர்சிலைகளையும் நிறுவி, தமிழ்ப்பிரதேசங்களை ஆக்கிரமித்த பேரினவாதிகளின் குரல்வளையை இறுகப்பிடித்தது போன்றுள்ளது மாவிலாறு விவகாரம்.

அரச பயங்கரவாதத்தின் அநியாயங்களால் பாதிக்கபட்ட தமிழ்மக்கள் குமுறிய போதெல்லாம், குதுகலித்து மகிழ்ந்திருந்த பேரினவாதம், பெருங்குரலெடுத்துக் குய்யோ முறையோவெனக் கூவத்தொடங்கியுள்ளது. இவ்விவகாரத்தின் போக்குகள் மாறலாம், இழப்புக்கள் ஏற்படலாம். ஆனாலும் எங்கள் நிலத்தை, எங்கள் தேசத்தை, இழக்கமாட்டோமெனப் போர்குரல் எழுப்பி நிற்கும், திருமலை மக்களையும், மக்கள் போராளிகளையும், மனம் நிறைந்து வாழ்த்தத் தோன்றுகிறது. ஏனெனில் அந்நிலத்திலிருந்து அகதியாய் ஆக்கப்பட்டவனின் மனசு அப்படித்தானிருக்கும்.


மாவிலாறு குறித்து வன்னியனின் விரிவான மற்றுமொரு பதிவுதிருகோணமலை பற்றிய எனது முன்னைய பதிவுகள்

திருத்தம்பலேஸ்வரம்-பகுதி 1

திருத்தம்பலேஸ்வரம் எது ? என்ற கேள்வியோடும் ஈழத்து எழுத்தாளர் திரு சோமகாந்தன் ஈழத்துச் சிவாலயங்கள் பற்றிய எழுதிய பல குறிப்புகளோடும் நண்பர் வெற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருத்தம்பலேஸ்வரம் பற்றிய குறிப்புடனும், உண்மையில் அது எந்த இடத்தில் இருந்தது என்னும் கேள்வியோடும் அதை நிறைவு செய்திருந்தார். நியாயபூர்வமான ஒரு கேள்வி. ஈழத்தமிழர் என்றல்லாது, தமிழர்கள் அனைவருமே அக்கறையோடு நோக்க வேண்டிய ஒருவிடயம். வரலாற்றுச் சான்றுகளை வெறும் சமய அடையாளங்களாக மட்டுமே நோக்கிய ஒரு தவறால் நாம் இழந்த அருஞ்செல்வங்களில் திருத்தம்பலேஸ்வரமும் அடங்கும்.

நான் வலைபதிவுகள் எழுதத் தொடங்க முன்னரே தென் தமிழீழம் குறித்த சில தகவல்களை எவ்விதத்திலாவது பதிவு செய்து வைக்க வேண்டுமென எண்ணியிருந்தேன். எதிர்பாராது இந்த புதியதுறைக்குள் வந்தபோது, என் எண்ணத்தை இலகுவாகவும், விரிவாகவும் செய்யலாம் என்றும் எண்ணியதுண்டு. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாய் உருவாகிய இந்த வலைப்பூவில் திருத்தம்பலேஸ்வரம் ஆரம்பப் பதிவாக அமைவது, எனக்கு ஒருவித மன நிறைவையேதருகிறது. ஏனெனில் என் இளவயதில், தொலைந்து போன அந்த தொன்மையைத் தேடி அலைந்திருக்கின்றேன். என் தேசத்தின் காணாமற் போய்விட்ட தொன்மம் குறித்து நான் சொல்லவிழைபவை, நான் நேரடியாகச் சேகரித்த செவிவழிக்குறிப்புக்களும், விழிவழிப்பதிவுகளுமே. இதற்குமேல் அன்றைய பொழுதுகளில் ஆவணப்படுத்தக் கூடிய வசதிகள் எதுவுமிருக்கவில்லை. இந்தப் பதிவில் நான் கூறும் விடயங்கள் முடிந்த முடிவாக இல்லாவிடினும், நிச்சயம் ஒரு ஆரம்பத்தின் அடியெடுத்தலாக இருக்குமென்று நம்புகின்றேன். இனி திருத்தம்பலேஸ்வரம் குறித்த என் குறிப்புக்களுக்குச் செல்வோம்.


திருத்தம்பலேஸ்வரம் எங்கே இருந்தது என்ற கேள்விக்கு நான் கூறும் பதில் திருகோணமலைக்குத் தென்மேற்கில் கந்தளாய்க்குப் பக்கமாக இருந்திருக்க வேண்டும். இங்கே ஒரு மிகப்பெரிய சிவாலயமும் இருந்திருக்க வேண்டும். இந்தச் சிவாலயம் சோழ பரம்பரை மன்னர்களில் ஒருவரால் நிர்வப்பட்டிருக்கலாம், அல்லது புணருத்தாரனத் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம். இது குறித்த வானொலி உரையாடல் ஒன்றில், என் ஆய்வாள நண்பரொருவர் சோழமன்னர்களின் திருப்பணி குறித்த ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்ட போதும், தற்சமயம் அது குறித்த விபரங்களை உடன் சேர்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஆலயம் அந்நியப் படையெடுப்புக்களில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அதற்கு முன்னர் நடந்த இயற்கை அனர்த்தம் ஒன்றில் மறைந்து போயிருக்க வேண்டும். இவைகளை நிறுவுவதற்காக நான் சொல்ல விரும்பும் குறிப்புக்களுக்குச் செல்ல முன் நாங்கள் இன்னுமோர் இடத்திற்குச் செல்ல வேண்டும். அது தம்பலகாமம்.

திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி. ஒருகாலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம். தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும் தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள் எந்நேரமும்நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள் போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள். அப்படியான ஒருதிட்டுக்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது என் எண்ணப்பாடு.


- இன்னும் சொல்வேன்

என்னரும் மருதநிலம்.


பசுங்கடலாய் நீள் விரியும் நெல்வயல்கள்


வயல் நடுவே நீளரவாய் நெளிந்தோடும் நீரோடை

ஓடையிலே எருமையினம் சுயாதீனம்

அதை உடைத்திடும் மேய்போனின் குரல்கோலம்

மெல்ல வீசும் தென்றலிலே சலசலக்கும் மருதமரம்

சலசலப்பின் மத்தியிலும் மரமுறையும் புள்ளினங்கள்

கோடியின்பம் கொட்டி வைத்த என்னரும் மருதநிலம்

இன்றிழந்தேன் இன்றிழந்தேன் இன்று மட்டுமேயிழந்தேன்.

நண்பர்களே!

நான் நேசித்த மண்ணின் நெஞ்சு நிறைந்த நினைவுகளை இம் மருதநிழல் நின்று பேச வருகின்றேன். தென் தமிழீழத்தின் மண்வாசனை பேசும் களமாக அமையவுள்ளதால், தென் தமிழீழத்தின் மருதநிலங்களில், ஆற்றங்கரைகளில், நீண்டு நெடிதுயர்ந்து நிழல்தரும் மருதமரத்தையும், அந்த மண்ணின் வயலும் வயல்சார்ந்த பாங்கினையும் குறிப்பதாக இத்தளத்திற்கு மருதநிழல் எனப்பெயரிட்டுள்ளேன். அந்த மண்ணிலே வாழ்ந்த காலங்களில் மருதநிழல்களில் கீழிருந்து விரிந்த என் எண்ணங்களும், அனுபவங்களும், ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்டுள்ளபோதும், என் நிலம் மீட்சி பெறும். மீளவும் என் நிலத்தில் மருதநிழலின் குளிர்ச்சியில் மனம்மகிழ்வேன் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு. அந்நாள் வரையில் இந்நிழலில், உங்களோடு என் நிலம் குறித்த எண்ணங்களைப் பேசவுள்ளேன். வாருங்கள்!


 

நன்றி, வணக்கம்.