கல்லூரி, நிஜங்கள், நினைவுகள்.

அன்மையில் பார்த்த படங்களில் "கல்லூரி" ரொம்பவும் பிடித்திருந்தது. பிடித்ததற்கான காரணங்களில் அதன் கதை, கதையில் வரும் காட்சிகள் பலவும், பலரது மாணவப் பருவங்களிலும் வந்து போயிருக்கக் கூடியன, எனக்கும் வந்திருந்தது என்பது முதன்மையாகும்.

திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் மதியபோசன இடைவேளையில், எங்கள் வகுப்பறையைக் கடந்து செல்லும் எல்லோர்க்கும், எங்கள் சாப்பாட்டு முறைமை வியப்பும் வேடிக்கையும் தருவது. எல்லோருடைய உணவுப் பொதிகளையும் விரித்து வைத்துக்கொண்டு, பொதுவாக கலந்து உண்பது எங்கள் நட்பு வட்டத்தின் பழக்கம். சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கம் உள்ள நான், அந்த ஒரு காரணத்தினால் அந்த வேளையில் விலகிவிட்டக் கூடாது எனும் அக்கறையில், மதியபோசனத்தைச் தாங்களும் சைவ உணவாக மாற்றிக்கொண்ட அற்புதமான நண்பர் வட்டம் என்னது.

கல்லூரி ஆண்களுக்கு மட்டுமேயானதால், கல்லூரி நண்பர் வட்டம் ஆண்களோடு மட்டுமே அமைந்துவிடும். கல்லூரிக்கப்பால் உள்ள நண்பர்வட்டம் மிகப்பெரிது. அது தோழிகளையும் கொண்டது. திருகோணமலை ஒரு பல் சமூகக்குழுமங்கள் இனைந்து வாழும் மாநிலம் ஆனதால், ஈழத்தின் ஏனைய பகுதிகளைவிட இங்கு வாழ்நிலை சற்று வித்தியாசமானது. அதிலும் குறிப்பாகத் திருமலை நகரப் பகுதியும், அதன் அன்மித்த கிராமங்களும், பழகியல்பு மிக யதார்த்தமும் நேசமும் நிறைந்தது.சிவராத்திரி நகர்வலம், வெசாக் பண்டிகைக்காலம், சல்லியம்மன் பொங்கல், கோணேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா, போன்ற கொண்டாட்ட நாட்களில் நள்ளிரவு தாண்டி அதிகாலைவரை எங்கள் சுற்றல் தொடரும்.
திருகோணமலைக் கடற்கரை, இலங்கையின் அழகான கடற்கரைகள் பலவற்றிலொன்று. தெப்பத்திருவிழாக்கலாங்களில் விடியும்வரை அந்த கரையின் மணற்படுக்கைகளில் கிடந்து நாம் பேசி மகிழ்ந்த கதைகள்தாம் எத்தனை. ஏன் ஞாயிறு மாலைகளில்...?. கோணேஸ்வரர் கோவில் மாலைப்பூசைக்கு நின்றுவிட்டு, குன்றிருந்திறங்கி வரும் போது, புத்தரையும் பார்த்து, புத்தரின் புத்திரிகளையும் பார்த்த மகிழ்வோடு கடற்கரைக்கு நாம் வரவும், கதிரவன் தனக்கினி வேலையில்லையென கடலுள் விழவும் சரியாக இருக்கும். கரையிலிருந்து கடலைப்பார்த்து, கடலை கொறித்து, இடையிடையே கடலை எறிந்து, கதையும் எறிந்த மகிழ்ந்திருந்தோம். அலையின் இரைச்சலில் இசை சேர்த்துப் பாடிக்களித்திருந்தோம். துட்டிருந்தால், எட்டுமணிக்கு நெல்சன் தியேட்டரில் ஆங்கிலப்படம். அல்லாவிட்டால் பிரியமனமில்லாமல் பத்துமணிக்கு கடற்கரையில் பிரிவோம். எங்கள் கதைகளும், பாடல்களும், மகிழ்வுகளும் மட்டுமே நிறைந்து கிடந்த அந்தக் கடற்கரையில் நாங்கள் மட்டுமல்ல, எங்களுக்கு முன்னவர்களும் பின்னவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். ஏனெனில், எப்போதும் மனதுக்கு மகிழ்ச்சியை மட்டுமே வாரித்தந்தது அந்தக் கடற்கரை.


அந்த நம்பிக்கையில்தான், 2006 ஜனவரி மாதம் இரண்டாம் நாளில் எங்களைப்போலவே இருந்த இளையவர் சிலர் அந்தக் கடற்கரையில் களிப்புறச் சென்றனர். சிரிப்பும், மகிழ்வும், மட்டுமே கொண்டு சென்ற அந்த மாணக்கர்களைக் குண்டு கொண்டு வந்தார்கள் என்று சொல்லி, வேட்டையாடி விருந்து கொண்டாடிற்று பேரினவாதம். விடுமுறைக்குக் கூடிக் குதுகலித்திருந்த பள்ளித் தோழர்கள், பட்டாம்பூச்சிகளாய் வட்டமடித்து வந்தபோது, துப்பாக்கியால் சுட்டுத் துவம்சம் செய்தது அரச பயங்கரவாதம்.


ரஜிகர் மனோகர் 1985-02.01.2006


லோகிததாசன் றோகாந் 07.04.1985 - 02.01.2006


யோகராஜா ஹேமச்சந்திரன் 04.03.1985 - 02.01.2006


சஜேந்திரன் சண்முகநாதன் - 02.01.2006

சிவானந்த தங்கவடிவேல் -02.02.2006

லோகிதாசன் றோகாந், யோகராஜா ஹேமச்சந்திரன், ரஜிகர் மனோகரன், சஜேந்திரன் சண்முகநாதன், சிவானந்தா தங்கவடிவேல் என்னும் ஐந்து பட்டாம்பூச்சிகள் சிறகொடிந்து விழுந்து போயின. தங்கள் கண்முன்னே தோழர்களைப் பறிகொடுத்த ஏனையோர், காயம் பட்டவர்ளையும் மீட்டுக்கொண்டு கதறியழுது ஓடினர். கல்வித்தகமையிலும், விளையாட்டுத்துறைகளிலும், பொதுப்பணிகளிலும், ஓர்மமாய் ஒன்றித்திருந்தவர்களை ஒருகணத்தில் உயிர்பறித்தழித்தன, பேயாளும் தேசத்தின் பிணந்தின்னிக் கழுகுகள். பெற்றவயிறுகள் பற்றியெரிய, உற்ற உறவுகள் விம்மிநிற்க, பிணங்களை வைத்துப் பேரம் பேசின வெறிநாய்கள். மறுத்துநின்ற மற்றவர்கள் உயிர் பறிக்கப்படும் என அச்சமூட்டி அரசு ஆண்டது. எல்லாமிருந்தும், இறைமை மட்டும் இல்லாக்காரணத்தால் ஏதிலிகளாக எம்மவர் மரணமும், வாழ்வும்.

எங்கள் கிள்ளைக் கதைகளாலும், கிளர்ந்த சிரிப்பு மகிழ்வுகளாலும், விரிந்த எங்கள் கடற்கரை இன்று எமக்கில்லை. இனி என்றும் எமக்கு இல்லை என்பதும் இல்லை. ஆதலினால், இன்னமும் காதல்செய்வோம் எங்கள் கடற்கரையை.
 

நன்றி, வணக்கம்.