நடந்த நூலகம் நொடிந்த கதை.

திருகோணமலையின் பசுமைக்கிராமமொன்றில் வாழ்ந்த காலமது. என் கல்லூரிக் காலம் . வாசிப்பு, இசை, ஊர்சுற்றல், நண்பர்கள் என உல்லாசமாக இருந்த காலமும் கூட. வாசிப்பு முதல் விருப்பமாக அப்போதுமிருந்தது. ஆனால் வாசிப்புக்கான புத்தகங்களைப் பெறுவது என்பதுதான் கடினம். அதிலும் நல்ல புத்தகங்களை என்னது என்று உரிமை கொண்டாடும் அகமகிழ்வு அளவிடமுடியாதது. ஆனால் அதற்குத் தடையாயிருந்தது பொருளாதாரம். அதை வெற்றிகொள்ளச் சிந்தித்தபோது வந்துதித்த எண்ணத்தில் உருவானதுதான் என் நடமாடும் நூலகம்.வாசிப்பில் யாசிப்புள்ள இருபது பேர்களைச் சேர்த்துக் கொண்டேன். ஒவ்வொருவரிடமிருந்து மாதாந்தம் ஒரு குறிப்பிட்டதொகையைப் பெற்றுக்கொள்வது. திருகோணமலை நகரிலுள்ள இரு முக்கிய புத்தகசாலைகளாகிய, சிதம்பரப்பிள்ளை புத்தகநிலையம், வாணிபுத்தகநிலையம், இரண்டிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாங்கிக்கொள்வேன். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருபதுபேரில், சராசரியான வாசகர்கள், தீவிரவாசகர்கள்,எனக் கலந்திருந்ததால், வாங்கும் புத்தகங்கள் கலந்தேயிருக்கும்.

வாங்கிய புத்தகங்களுக்கு உறையிட்டு, அடையாளம் வைப்பதற்காக நூல் ஒட்டி, (வாசிக்கும் புத்தகங்களின் பக்கங்களை மடித்து அடையாளமிடுவது எனக்குப் பிடிப்பதில்லை) இலக்கமிட்டு, பெரிய பிளாஸ்டிக் கூடையொன்றில் அடுக்கி, வார இறுதிகளில், ஐந்து மைல் சுற்று வட்டத்துக்குள்ளிருந்த என் வாசக நண்பர்களின் வாசல் தேடிச் சைக்கிளில் செல்வேன். வாரத்திற்கு ஒருத்தருக்கு இரண்டு புத்தகங்கள் என, சுற்று ஒழுங்கில் பரிமாறிக்கொள்வோம். வருடமுடிவில் அவரவர் பிரியப்பட்ட புத்தகங்களைச் சம அளவில் பகிர்ந்து கொள்வோம். இப்படிப் பகிரப்படும் போது பல நண்பர்கள் தங்கள் பங்குகளை என்னிடம் தந்ததாலும், எனது விருப்பத்தின் காரணமாகவும், இரண்டான்டுகளுக்குள்ளாக சுமார் முந்நூறு புத்தகங்கள் என் நூலகத்தில் சேர்ந்திருந்தன. இந்த நகர்வில் நான் நுகர்ந்து கொண்ட சுகமான மற்றுமொரு அனுபவம், ஒவ்வொரு உறுப்பினர்களுடனும் வாசிப்பின்னான, வாசக அனுபவப் பகிர்வு. இது பலநேரங்களில் நல்ல பல கருத்தாடல்களையும் தந்தன.வீரகேசரிபிரசுர வெளியீடாக வந்த அனைத்துப்புத்தகங்கள், அகிலன், சாண்டில்யன், தீபம் பாரத்தசாரதி, சிவசங்கரி, ஆகியோரின் படைப்புக்கள், எனத் தொடங்கி பின்னாட்களில் கார்க்கியின் தாய், வால்காவிலிருந்து கங்கை வரை எனத் தொடர்ந்தது. இந்தியக் கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட இரு தொகுப்புக்கள், இந்தியக்கலை கலாச்சாரம் பற்றிய பல்வேறுவிடயங்களையும் சொல்லும் பதிப்பு. அப்போதே அதன் விலை முந்நூறு ரூபாய்களுக்கு மேலிருந்தது. நூலகத்தின் இரண்டாமாண்டு நிறைவு நினைவாக அத்தொகுதி வாங்கப்பட்டது. இதுதவிர இடசாரிச்சிந்தனையாளர்களால் வெளியிடப்பட்ட சில காலாண்டுச்சஞ்சிகைகள், சிரித்திரன் சுந்தரின் படைப்புக்கள், டொமினிக் ஜீவாவின் மல்லிகைத் தொகுப்புக்கள், வெளியீடுகள், என நிறைந்திருந்தது என் நூலகம்.திருகோணமலையைவிட்டு நான் பிரிந்தபோதும், என்வீட்டிலிருந்த ஒரு அலுமாரியில் அவை அடுக்கிவைக்கப்பட்டேயிருந்தது. பின்னொரு நாளில் என் குடும்பத்தாரும் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, அந்த விபரீதம் நடந்தது. அப்போது திருகோணமலைப்பிரதேசத்தில் மீளவும் ஒரு இனக்கலவரம் நிகழ்ந்தது. தமிழ்மக்கள் பலரும், தங்கள் வீடுகளைவிட்டு வேறிடங்களில் தஞ்சம் பெற்றிருந்த தருணமொன்றில், எங்கள் வீடு சூறையாடப்பட்டது.


பெட்டி இணைக்கப்பட்ட உழவு இயந்திரமொன்றுடன் வந்த கயவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடத் தொடங்கினார்கள். என் நண்பனின் தந்தையிடம் சொல்லி, நான் ரசித்து, பூமுதிரைப் பலகையில் செய்து வைத்திருந்த என் நூலக அலுமாரியும் அவர்கள் கண்களில் பட, அதற்குள் இருந்த புத்தகங்களை, எடுத்தெறிந்து மகிழ்ந்தார்கள். வாசிப்பு வாசனையற்ற ஒரு கயவன், வண்ணக்காகிதங்களில் உறையிட்டிருந்த அந்தநூல்களை, வானத்தில் எறிந்து கீழேவிழுவதைப் பார்த்து மகிழ்ந்தானாம்.வயோதிபம் காரணமாக இடம்பெயராதிருந்த பக்கத்து வீட்டு முதியவர், திரும்பிச் சென்ற என்குடும்பத்தாரிடம் சொன்ன தகவல்கள் இது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த மண்ணில் தான் தேடிய தேட்டங்களின் அழிவை நினைத்து என் அப்பா அழுதார். இரண்டு வருடங்களாக இரசித்துச் சேர்ந்த, என் நேசத்துக்குரிய புத்தகங்களை இழந்து,
நான் அழுதேன். நடமாடும் நூலகம் என நான் நகைப்பும், பெருமையுமாய், சொல்லி மகிழ்ந்த என் உழைப்பு, என் தேடல், இல்லாதாக்கபட்டது.


இத்தனைக்கும் எங்கள் வீடு சூறையாடப்பட்டது, சிங்களக்காடையர்களால் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. கிழக்கில் தமிழ்மக்களின் துயர்கள் பலவற்றிலும் பங்குகொண்டிருக்கும், அவர்களும் தமிழ்பேசுபவர்கள்தான். இதற்குப் பின்னரும் என் நூற்சேகரிப்புக்கள் இரண்டு தடவைகள், இந்த யுத்தத்தின் காரணமாகவே அழிந்து போயிருக்கின்றன. அதுபற்றி இன்னுமொரு தடவை சொல்கிறேன்.

ஈழத்து இசைச் சகோதரர்கள்.


எழுபதுகளில் ஒருநாள் மாலை, திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் பிரமாண்டமான, மண்டபத்தில் அந்த இசைநிகழ்ச்சி நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. நாம் படிக்கும் கல்லூரியில் நடைபெறும் இசைநிகழ்ச்சி என்பதற்கும் மேலாக, எங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு பிடித்தமான கலைஞர்கள் கலந்து கொள்வதனால், நாங்களும் ஆர்வமாகவே சென்றிருந்தோம். நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு என்றிருந்தது. நாங்கள் 5.30 மணிக்குச் சென்றபோது, மண்டபம் நிரம்பியிருந்தது. எங்களுக்கோ, மண்டபம், பலகணி, எல்லாமாக, சுமார் எழுநூறுபேர் ஒரே தடவையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சி பார்க்கக் கூடிய அந்த மண்டபம் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பி விட்டதா என்று ஆச்சரியம். நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பியிருந்ததே ஆச்சரியமன்றி, அந்தக் கலைஞர்களுக்காக கூட்டம் சேர்வது ஒன்றும் ஆச்சிரியமல்ல. தங்களின் சுய முயற்சியாலும், திறமையாலும், ஈழத்து மெல்லிசைவரலாற்றில், முதலாவது இசைதட்டை வெளியிட்டு, ஈழத்து மெல்லிசை மன்னர்கள் எனும் சிறப்பினைப் பெற்றுக்கொண்ட சகோதரர்கள் அவர்கள்.


இந்நிகழ்ச்சிக்கு முன்னரே அவர்கள் இலங்கைத்தீவின் பல பாகங்களிலும், பல மேடைநிகழ்ச்சிகளைச் செய்திருந்தனர். அப்படியான இசைக்கச்சேரிகளின் போது, அவர்கள் காட்டிய பல நுட்பங்களும், வித்தியாசங்களுமே, எம்.பி பரமேஸ், எம்.பி கோணேஸ், எனும் அந்தச் சகோதரர்களின் இசை மேல் பலரும் விருப்பமுற வைத்தது. மற்றைய இசைக்குழுக்களிடம் இல்லாத மேலதிக திறமை, இவர்கள் சொந்தமாகவே பாடல் இயற்றி, இசையமைத்துப் பாடினார்கள். அதுவே ஈழத்து மெல்லிசை வரலாற்றில், என்றும் அவர்களை விட்டு விலகிச் செல்ல முடியாவாறு அமைந்து விட்டது. சகோதர்களில் மூத்தவரான பரமேஸ் பாடலை இயற்றிப் பாடவும் செய்வார். இளையவர் அதற்கான இசைக்கோப்பினைச் செய்வார். இவர்களோடினைந்த மற்றொருவர், மகேஸ். அப்படி அவர்களின் படைப்பிலுருவான " உனக்குத் தெரியுமா..? பாடல்தான் இலங்கையில் , இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது தமிழ் பாட்டு.

பாடலும், இசையும் கூட, அப்போது வெளிவந்த தமிழகப் பாடல்களிலிருந்து வித்தியாசமாகத்தான் இருந்தது. இலேசான மேலைத்தேய இசைச்சாயலோடு, ஈழத்தின் தன்மையும் சேர்ந்திருக்கும். இந்த நுட்பங்களைவிடவும், இளவயதில் அவர்களது இசை நிகழ்ச்சிகளில் வேறு சில விடயங்கள் அதிகம் பிடித்திருந்தன. மற்றெந்த தமிழ் இசைக்குழுவும், றம்பெட் வாத்தியத்தை பாவிக்காத வேளையில் இவர்களது இசை நிகழ்ச்சிகளில், அது இசைக்கப்படும். இசைக்குழுவின் கலைஞர்களனைவரும் சீருடையில் வருவார்கள். நிறையத் தாளவாத்தியங்கள் இருக்கும். கோணேஸ் மேடையில், இசைக்கோப்பினை ஒருவித அழகியலுடன் கட்டமைப்பார். பரமேஸின் பாடல் வரிகளும், குரலும் அற்புதமாவிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒலித்தரம் இருக்கும்.

அன்று நாங்கள் பார்க்கச் சென்றிருந்த நிகழ்ச்சி, முதற்தடவையாக ஒரு ஆர்கெஸ்ட்ரா ஒழுங்கமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்து. தெரிவு செய்யப்பட்ட பதினான்கு பாடல்களை மட்டுமே பாடுவதாகவும், சொல்லப்பட்டிருந்தது, எங்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அறிவித்தது போன்று குறித்த நேரத்தில் அரங்கின் திரைவிலக ஒரே ஆரவாரம். அனைத்துக்கலைஞர்களும் வெள்ளைநிற கோட்சூட் ஆடை அலங்காரத்துடன், முழு ஆர்கெஸ்டாரவும் நின்றது. இசை ஆரம்பமாகியது. நான்கு றம்பேட் வாத்தியக்கலைஞர்கள், எலெக்ட்றிக் கிட்டார், றம்செற், கீபோட் என , இருபத்திமூன்று கலைஞர்களுடன் மேடையில் தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படப்பாடல்கள், அவர்களது சொந்த இசையமைப்பில் வந்த பாடல்கள் என மாறிமாறி வந்தது.


அந்தக்காலப்பகுதியில் வந்த பிரபலமான தமிழ்திரைப்படப்பாடல்களில் ஒன்று "என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்.." பாடலுக்கு முன்னர் கிட்டார் இசை அருமையாக வரும், அதன்பின் மற்ற வாத்தியங்களும் பாடலும் வரும். அந்தப்பாடல் குறித்த அறிவிப்பு வந்து, கிட்டார் இசையும் தொடங்கிற்று. கிட்டார் இசை முடிய முன்னரே மற்றைய வாத்திய இசை வந்து விட்டது. உடனே இசைக்கட்டமைப்புச் செய்த கோணேஸ் இசையை நிறுத்தி, திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்தார். இரண்டாவது தடவை எல்லாம் சிறப்பாகச் சேர்ந்து கொண்டன. அந்தப்பாடல் முடிந்ததும், கைதட்டல்கள் இரட்டிப்பாக இருந்தன. தாங்கள் தெரிவு செய்த பாடல்களை மட்டுமே இசைக்கும் பொழுது, அதை முழுவதும் நிறைவாக ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என கோணேஸ் சொன்னபோது, ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் வெளியே வரும்போது , அடுத்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வெளியே காத்திருந்தார்கள், இரண்டாவது காட்சிக்காக. ஆம் அன்று இரண்டாவது தடவையாகவும் , அந்நிகழ்ச்சி நடந்தது. நான் நினைக்கின்றேன், திருமலையில், ஒரு ஆர்க்கெஸ்ட்ரா, ஒரேநாளில் ஓரே மேடையில், இரு தடவைகள் நிகழ்ச்சி செய்தது, அதுவொன்றாகத்தான் இருக்கும்.

இவ்வளவு சிறப்புக்கள் பெற்றிருந்த அக்கலைஞர்களின் ஆரம்ப காலம் ஒன்றும் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. சிரமங்களைத் தோளில் சுமந்தவாறே, வெற்றிச்சிகரத்தின் உச்சிக்குச் சென்றார்கள். எங்கும் உள்ளது போல், இந்த இசை சகோதர்களினிடையேயும் பிரிவு வந்தது. சகோதரர்கள் பிரிந்துகொண்டபின், அவர்களது நிகழ்ச்சிகள் சிறப்பாகப் பேசப்படவில்லை. அதனாலேயே ஈழத்தின் மெல்லிசைப் போக்கில் ஒரு தேக்கம் ஏற்பட்டது என்னும் சொல்லலாம். இன்னும் என்னென்னவோ சாதித்திருக்க வேண்டிய சகோதரர்களின் இணைந்த இசைப்பயனம், இடையில் நின்று போனதென்னவோ சோகம்தான்...

ஆனால் இணைந்திருந்த காலங்களில் படைத்ததென்னவோ என்றும் இளமையாக இருக்கக் கூடிய இசைக்கோலங்கள்தான்.
இன்றும் இளமையாக இருக்கும் அந்தப்பாடல்களில் சில உங்களுக்காக.....

பாடல்களும், படமும்:-நன்றி! www.tamil.fm இணையத்தளம்


 

நன்றி, வணக்கம்.