ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்கள் 3
9 comments Published by மலைநாடான் on Friday, December 29, 2006 at 11:06 PM
அனைவர்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்ந்தவர்கள் தலைப்பில் நான் ஏற்கனவே இரு பதிவுகள்.(.பகுதி 1 பகுதி 2 ) எழுதியுள்ளேன். என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத இனிய ஆசான்கள் மூவரை அவற்றில் அடையாளப் படுத்தியிருந்தேன்.இன்று இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்த மேலும் இரு உத்தமர்களை இங்கே அழைத்து வருகின்றேன்.
தம்பலகாமத்தில் படித்த அந்தப் பள்ளிப்பருவத்தில், எனக்குக் கற்றுத்தந்த ஆசான்களில் இந்த இருவரும் கூட மறக்கமுடியாத மான்புடையவர்களே. ஆசிரியர்கள் திரு.தம்பிராஜா, திரு.தம்பையா, ஆகிய இருவரும் ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்த உத்தமர்கள் மட்டுமல்ல, உன்னதமான மண்ணின் மைந்தர்களும்தான்.
இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கூட ஒன்று. இருவரும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், இருவரும் எப்போதும் தூயவெண்ணிற உடையிலே காணப்படுவார்கள். நல்ல தமிழுக்குச் சொந்தக்காறர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக செந்நெல் விளைவிக்கும் நல் விவசாயிகள்.
ஆசிரியர் திரு: தம்பிராஜா!
சிறுவயதில் சமுகவியல் சொல்லித் தந்தவர். ஏட்டில் இருந்த எழுத்துக்கள் மூலம் கற்றுத் தந்ததவரல்ல அவர். அதற்கும் மேலே சமுகத்தின் பல்வேறு கூறுகளையும் சொல்லித்தந்தவர். இலேசான நகைச்சுவையுடன் இனிமையாகப் பாடம் நடத்துவார். வதந்தி பரவும் வகைதனை, வகுப்பில் மாணவர்களைக் கொண்டு நடத்திக்காட்டிப் புகட்டியவர். பத்திரிகை வாசிப்பதிலும், பத்திரிகைகளின் பங்கு , மக்கள் சமுகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்துச் சொல்லித்தந்தவர். பாடசாலை நேரத்துக்கப்பால், சமுகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதிலும், பாடசாலைகாலம் முடித்து, உயர்கல்வி கற்கும் காலத்தில், செல்நெல் விளைவிக்கும் விவசாயியாக வயல்வரப்புக்களில் நடந்த காலத்தில், உற்ற தோழனாய் உடன் வந்தவர்.
பின்னாட்களில் எனக்கு, சமுகம் சார்ந்த பணிகளிலும், பத்திரிகைத் துறைசார்ந்த பணிகளிலும், ஆர்வமுறவும், ஈடுபடவும் இவரது கற்கைநெறி, உந்தித் தள்ளியது, உதவியாகவிருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தூய வெண்ணிற வேட்டியும் சட்டையுமணிந்து, கையில் செய்திப்பத்திரிகைகளுடனும், வகுப்புக்களை வலம் வரும் இவரை, மாலைவேளைகளில் மடித்துக்கட்டிய சாரத்துடனும், தோள்மேல் நீளக்கிடக்கும் மண்வெட்டியுடனும், மண்ணின் மைந்தனாக கிராமத்துத் தெருக்களில் காணலாம். வயல்களில் நெற்பயிர்களை நிறைவுடன் வளர்ப்பதற்கு வேண்டிய சூத்திரங்கள் பல சொல்லித் தந்தவர். ஏன், எதற்கு என எல்லாவற்றையும் யோசிக்கப்பழக்கியவர்.
ஆசிரியர். திரு: தம்பையா!
இவர் அந்தப்பாடசாலையில், பல்துறைப்பயிற்றாளன் என்று சொன்னால் மிகையாகாது. சித்திர ஆசிரியரான இவர், எனக்குக் கற்றுத்தந்த கலைகள் பல. ஓவியம், சிற்பம், ஒலிபரப்பு, அச்சுத்துறை என அனைத்துத் துறைகளிலும், எனக்கு அடியெடுத்துக் கொடுத்த அல்லது அடிகொடுத்துச் சொல்லி தந்த சோர்விலான். குறித்த வயசுக்குப் பின், மாணவர்களென்றெண்ணுவதற்கு மாறாக மனம் விரும்பும் நண்பனாகப் பாவித்துப் பயிற்றுவித்தவர்.
பாடசாலை முடிந்துவிட்ட மாலைநேரங்களிலும், பாடசாலை விடுமுறை நாட்களிலும் கூட, பள்ளிப் பணிகளில் மூழ்கிக்கிடந்தவர். அந்தப்பணிகளினூடே, அளவிலா விடயங்களை, அற்புதமாகச் சொல்லித் தந்தவர். ஓவியம் வரைகையில், தூரிகையை லாவகமாக வளைத்திழுப்பதிலாகட்டும், சும்மா கிடக்கும் சுள்ளித்தடியினைக் காட்டி, அதற்குள் ஒளிந்து கிடங்கும் உருவத்தினை உணரவைப்பதிலாகட்டும், ஒலிபரப்புத்துறையில் உச்சரிப்பு நேர்த்தியை ஒழுங்குபடுத்தியதிலாகட்டும், அச்சுக்கலையில் அழகியலை காண்பதிலாகட்டும், எல்லாவற்றையும், இரசனையோடு செய்தார். எங்களையும் செய்வித்தார்.
மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்லி மகிழலாம். பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியொன்று. மஞ்சள், பச்சை, நீலம், ஆகிய முவர்ணங்கள் மூன்று இல்லங்களுக்கும். இந்த இல்ல அலங்காரங்களை, சினிமாக்களில் வரும் செட்டுக்களுக்கு நிகராக நாங்கள் செய்வோம். அதிலே எங்கள் கலையாக்கத்தை பரீட்சித்துக் கொள்வோம்.
பச்சை வண்ண இல்லத்தின் அலங்காரத்துக்குப் பொறுப்பாக ஒருவன், மஞ்சள் வண்ண இல்லத்தின் அலங்காரத்துக்குப் பொறுப்பாக மற்றொருவன், என எனது நண்பர்களே இருக்க, நீல வண்ண இல்லத்துக்கான அலங்காரத்தில் நான். என்றும் பசுமையாகவே இருக்கும் மருதநிலத்தில் பச்சை அலங்காரமோ அல்லது பழுத்துப்போன மஞ்சள்அலங்காரமோ செய்ய அதிகம் சிரமப்படத்தேவையில்லை. இயற்றையான பொருட்களும், இன்னும் கொஞ்சம் கற்பனையும் சேர்த்தால், அலங்காரச் சிகரங்களாக அவ்வில்லங்களை அமைத்துவிடலாம். அதனாலேயே போட்டியில் அலங்காரத்துக்கான பரிசின் முதலிரு இடங்களையும் அவ்வண்ண இல்லங்கள் தட்டிச் சென்றுவிடும். அதனால் நீல நிற இல்லங்கள் இறுதியிடத்தை தமதுடமையாக்கி வைத்திருந்தனர். ஆனால் அவ்வருடம் நிச்சயம் அதை மாற்றுவேன் எனச் சொல்லியிருந்தேன்.
தம்பையா மாஸ்டருக்குச் சாடையான சந்தேகம். ஆனால் கேட்கவில்லை. ' கடல்புறா ' நாவல் வாசித்த பாதிப்பிலிருந்த நான், அவ்வருடம் நீல நிற இல்லத்திற்காகப் போட்ட அலங்காரம், பிரமாண்டமான ஒருகடற்புறாக்கப்பல் வடிவம். இறுதிநேரம்வரை அடுத்த இல்லங்களுக்காகப் பணியாற்றும் நண்பர்களுக்குக் கூடச் செர்லலாது இரகசியமாக வேறோர் இடத்தில் வைத்து அனைத்துப்பபகுதிகளையும், தனித்தனிப் பாகங்களாகச் செய்து, இறுதிநாளன்றுக்கு முன்னைய இரவில், முழுவதுமாக மைதானத்தில் பொருத்தி விட்டேன். காலையில் வந்தவர்களுக்கு மைதானத்தில் நீலவானத்தின் பின்னனியில், நீலக்கடலின் அலையடிப்பில் செல்லும், கடற்புறா எனும் கப்பலொன்று மைதானத்தில் நிற்கக் கண்டனர். தம்பையா மாஸ்டர் பார்த்த மாத்திரத்தில் கட்டியணைத்துக்கொண்டார். எல்லாம் சரி, இதற்குக் கப்பல் பணியாளர்கள் போல் வேடமிட்ட மாணவர்களை நிறுத்தினால் இன்னமும் நல்லா இருக்குமெனச் சொல்லி முடிக்க முன்னமே, நீலவண்ணத்தில் கப்பல் பணியாளர்கள் வந்ததைத் கண்டதும், இவ்வருடம் உனக்குத்தான் பரிசெனச் சொல்லி மகிழ்ந்தார். போட்டி வேளையில், இயற்கையாகக் காற்றும் சற்று வீசக் 'கடற்புறா' மிதப்பது போலச் சற்று அசைந்தும் காட்டிற்று. அதற்கப்பாலும் பரிசு எனதில்லத்துக்குக் கிடைக்காமல் போகுமா ?
ஒலிபரப்புத் துறையில் எனக்கிருந்த ஆர்வம் கண்டு, விளையாட்டுப்போட்டிகள், கலைவிழாக்கள், எதுவாயினும் அற்புதமாக அறிவிப்புச் செய்யும் தம்பையா மாஸ்டர், தனக்குப்பக்த்தில் எனக்கும் ஒரு சரியாசனம் போடச் செய்தார்.
இன்று எனக்கு இந்தக் கணினியில் தமிழைத்தட்டெழுவதை விரைவாகச்செய்ய முடிகிற முனைப்புக்கான வினையுக்கிகூட அவரேதான். அந்நாட்களில் பாடசாலைத் தமிழ்தட்டெழுத்து இயந்திரத்தில் தட்டப்பழக்கியவரும் அவரேதான்.
நினைவுக்கையெழுத்திடுங்கள் எனச்சொல்லி, நினைவுக்கையெழுத்திடும் குறிப்புப் புத்தகத்தை நீட்டினால், ' சும்மாயிரு ' எனும் யோகர் சுவாமி வாசகத்தை அழகாய் எழுதி, அடியில் ச.தம்பையா என அழகாய் கையெழுத்திட்டுத்தருவார். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிடலாம். சிகப்பு, நீலம், கறுப்பு, என மூன்று வண்ணங்களில் மட்டுமே பேனைக்கு விடும் மை இருந்த காலத்தில், தம்பையா மாஸ்டரின் பேனை மட்டும் அழகாக ஊதாநிற வண்ணத்தில் எழுதி, வித்தியாசம் காட்டி நிற்கும்.
சொல்லச் சொல்ல சுகமாயிருக்கும் நினைவுகள் இன்னும் எத்தனை எத்தனை? உண்மையில் இந்த உத்தமர்கள் கற்றுத்தந்த, கள்ளமற்ற சிந்தனைகள், காட்டிய பரிவுகள், ஊட்டிய அன்னமாய், உயிரில்கலந்து, இன்றளவும் என்னை உயர்த்திச் செல்கிறது என்றே சொல்வேன்.
ஐயமீர்! ஆண்டுகள் பல சென்றபோதும், பல ஆயிரம் மைல்கள் கடந்திட்ட போதும், உங்களை மறவா நேசிப்போடிருத்தலே, இன்னும் என்னை நீள நடத்திச் செல்கிறதென நம்புகின்றேன். நாளையொரு பொழுதில், நானும் நீங்களும் நேசித்திருந்த தெருக்களில், நெஞ்சினின்றும் நீங்கா நினைவுகளுடன் நடந்து மகிழ்வேன் எனும் நம்பிக்கையோடு, இன்னுமோர் தினத்தில், இல்லையில்லை மறைந்துகழியும் மற்றுமோர் ஆண்டிலிருந்து அடியெடுத்து நடக்கின்றேன்.
இதைப்பற்றிக் கனநாளா எழுதவேணும் என்டு நினைத்ததுதான். ஆனாலும் எப்படியோ கழிந்து போயிரும். கனநாட்களாக மருதநிழலில் எழுதவும் இல்லை. ( மருதநிழலுக்கு அடிக்கடி வாற அக்கா வேற கோபிக்கப்போறா) இணையத்தில் இதுவரையில் வேறயாரும் இதனைப்பதிவு செய்ததாகத் தேடிப்பார்த்ததில் காணவில்லை. ஆதலால் இன்று இதைப்பதிவு செய்கின்றேன்.
சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்களின் தரமறியச் சங்கப்பலகைமேல் வைத்து, பொற்றாமரைக்குளத்தில் விட, நூல் தரமாயின் சங்கப்பலகை நூலோடு மிதக்குமெனவும், அல்லாவிடின் நீரில் அமிழ்ந்துவிடும் என்றும் ஒரு கதை சிறுவயதில் கேட்ட ஞாபகம். அதுசரி, சங்கப்பலகைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு என எண்ணுகின்றீர்களா? இங்கே நான் குறிப்பிடுவது தமிழீழத்தின் திருமலை.
ஆமாம் திருகோணமலையில் 70களின் இறுதிகளில் இயங்கி வந்த ஒரு தமிழார்வக் குழுமத்தின் பெயர்தான், இங்கே நான் குறிப்பிடும் சங்கப்பலகை. தலைவரென்றும், செயலாளரென்றும், பதவிகள் தெரிவுசெய்து, மாதம் ஒருதரம் கூடி, தேநீரும், வடையும் சாப்பிட்டு, வெட்டிக்கதை பேசுவதோடு முடிந்து விடும் சங்கங்கள், மன்றங்கள், மத்தியில் தனித்துவத்தோடு செயற்பட்ட ஒரு அமைப்பு இந்தச் சங்கப்பலகை.
தலைவர் முதலாய பதவிகள் எதுவுமில்லாது, ஒருசில நண்பர்களின் உழைப்பில், பலரும் பயனடைந்தனர் இச் சங்கப்பலகையால்.
மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில்( பெளர்ணமி நாட்கள் சிறிலங்காவில் அரசவிடுமுறை தினங்கள்) மாலை ஆறுமணிக்கு, திருகோணமலை நகரி மத்தியை ஊடறுத்துச் செல்லும் மத்தியவீதியில். அமைந்திருக்கும் சென் சேவியர் பாடசாலை மண்டபத்தில் கணிசமான இளைஞர்கள் கூடுவார்கள்.
தெரிவுசெய்யபட்டிருக்கும் நிகழ்ச்சி வழங்குநரை. ஒரு நண்பர் அறிமுகஞ்செய்துவைப்பார். அத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும். நிகழ்ச்சி கட்டுரை வாசித்தலாக அல்லது ஆய்வுரையாக, அல்லது அறிவியல் சம்பந்மான விளக்கவுரையாக, என பல்கலை சார்ந்திருக்கும். ஆனால் அநேகமாக ஒரு நிகழ்ச்சிதான் நடைபெறும். நிகழ்ச்சி வழங்குபவர் குறைந்தது 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார். அதன்பின் அந்நிகழ்வு குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்நிகழ்வாக அமையும். நிகழ்ச்சி வழங்கியவர் பிரதானமாக எழுப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிப்பார். குறைந்தது ஒரு மணிநேரம் இது நடைபெறும். பின்னர் அனைவரும் கலைந்து செல்வர்.
இன்றைய கையடக்கப் பொருட்கள் வழங்கும், பல்வகைப்பயன்பாடுகள் போல், அன்றையபொழுதில் கையடக்கமாக நடந்த இப்பெளர்ணமி மாலை சங்கப்பலகை வழங்கிய பயன் மேலானாது. திருகோணமலையில், சமூகஅக்கறையும், தேடலும்மிக்க இளைஞர்கள் பலரை உருவாக்கியது. பரந்துபட்ட நல்ல வாசகர்களை உருவாக்கியது. இவற்றின் தொடர்ச்சியாக அரசியலார்வமிக்க இளைஞர்களையும், பின்னாளில் பல விடுதலைப்போராளிகளையும், உருவாக்கியது சங்கப்பலகை. இதில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்கள் சிலர் பின்னாட்களில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது, ஏரிக்கரை எனும் காலாண்டுச் சஞ்சிகை வெளியிட்டார்கள். நானறிந்தவரைக்கும், ஈழத்தின் இலக்கியப்பரப்பில் தரமான ஆக்கங்களுடனும், அழகான வடிவமைப்புடனும், வெளிவந்த சிற்றிதழ் இதுவாகும். ஆனால் என்ன சிற்றிதழ்களின் ஆயுட்காலக் குறைவுக்கு அதுவும் விதிவிலக்காகவில்லை.
அப்போது அதன் பெறுமானம் அவ்வளவு தெரியாவிடினும், இப்போது நினைக்கையில் பெறுமானம் புரிகிறது. இன்று இங்கு எழுதுவதில் ஏதேனும் நன்றாகத் தெரிந்தால் (தெரிந்தால்...?) திருமலையின் சங்கப்பலகைச் சந்திப்புக்களும் காரணமெனலாம். இதுபோன்ற நிகழ்வுகள் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருப்பதாயும் தெரியவில்லை...... இருந்தாலும் இராணுவம் இட்டுக்கட்டி இழுத்துச் சென்றுவிடுமே....
கும்பத்து மால் ஒரு பண்பாட்டுக்கோலம். 6
16 comments Published by மலைநாடான் on Monday, October 02, 2006 at 2:49 PMஇது நவராத்திரிக்காலம். தமிழகத்தின் நவராத்திரிக் கோலங்கள், தமிழீழத்தின் நவராத்திரிக் கோலங்கள், எனப் பல பதிவுகள் வந்துள்ள இத் தருணத்தில், தென் தமிழீழத்தின் நவராத்திரிக் கோலங்களையும், பதிவு செய்வதும், படிப்பதும், நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதால், இப்பதிவில் தென் தமிழீழத்தின் நவராத்திரி, கும்பத்துமாலை பண்பாட்டுக்கோலமாகப் பதிவு செய்கின்றேன்.
தமிழகத்து நவராத்திரி காலங்கள், கொலுஅலங்காரக்களிலும், கலைநிகழ்வுகளோடும், களைகட்ட, தமிழீழத்தின் வடபுலத்தே, ஆலய வழிபாடுகளுடனும், வீடுகளிலும், கல்விநிலையங்களிலும், நடைபெறும் வாணிபூசைக் கொண்டாட்டங்களுடனும், நிறைவு கொள்ள, தென்தமிழீழத்தின் நவராத்திரிக் கொண்டாட்டங்களோ வேறுவிதமாக அமைந்திருக்கும்.
கும்பத்துமால்கள். ஊரின் மத்தியில் அல்லது எல்லைகளில் அமைந்திருக்கக் கூடிய ஆலயங்களின் வெளிப்பிரகாரத்தில், ஊர்கூடிக் கும்பத்துமால் கட்டும். மால் என்ற சொற்பதத்துக்கு கொட்டகை அல்லது பந்தல் எனப்பொருள் கொள்ளலாம். அந்தவகையில் பார்ப்போமேயானால், கும்பம் + மால் = கும்பத்துமால், கும்பம் வைக்கும் கொட்டகை எனப் பொருள்படும். கோவில்களில் கும்பம் வைப்பதோ கொலுவைப்பதோ தென்தமிழீழத்தில் பெரியளவில் இல்லை என்றே சொல்லலாம். பாடசாலைகளில் சரஸ்வதிபூசை கொண்டாடுவதோடு நவராத்திரிக் கொண்ணடாட்டம் முடிந்துவிடும். கானாபிரபாவின் நவராத்திரிபற்றிய பதிவு அதை நன்றாகவே பதிவு செய்துள்ளது.
நவராத்திரி என்றால் கும்பத்துமால்களில் ஊரே திரண்டு திருவிழாவாகக் கொண்டாடுவது தென் தமிழீழத்தின் தனித்துவச் சிறப்பு. பிற்காலத்தில் நகரப்புறங்களில் மாற்றங்கள் பல வந்து விட்ட போதும், கிராமங்கள் பலவும், கும்பத்துமால்களுடனேயே நவராத்திரியைக் கொண்டாடின. நவராத்திரிக்கு ஒரு வாரத்துக்கு முன், ஊர்கூடிக் கூட்டம் போட்டு, கும்பத்துமால் வைப்பதையும், தலமைப்பூசாரியையும் ( இவர் மந்திர தந்திரங்களில் தன் திறமையை ஏற்கனவே வேறுபல நவராதத்திரிக் கும்பத்துமால்களில் நிரூபித்தவராக இருப்பார்) தீர்மானிப்பதுடன் ஆரம்பமாகும். தொடர்ந்து வேகமாக கும்பத்துமால் கட்டப்படும். சுமார் நூறு மீற்றர் நீளமான கொட்டகைகள் காட்டுத்தடிகளால் கட்டப்பட்டு, தென்னங்கிடுகுகளால், வேயப்பட்டு, வெள்ளைத் துணிகளால் அலங்கரிக்கப்படும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வேப்பிலைக்கொத்துக்களும், அலங்காரத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும். ஊரின் முக்கியபுள்ளிகள் இரவலாகக் கொடுத்த பெற்றோல் மாக்ஸ் லைற்றுக்கள் வெளிச்சம் தரும்.
நவராத்திரி ஆரம்ப நாளன்று கும்பத்துமால்களின் ஒரு அந்தத்தை கர்பக்கிரகம் போல அமைத்திருப்பார்கள். அதனுள்ளே கும்பங்கள் வைக்கப்படும். பெரியகுடங்களின் உள்ளே செப்புத் தகடுகளில் எழுதிய யந்திரங்களை வைத்து, நெல்லால் நிரப்பி, வேப்பிலை வைத்து, மேலே தேங்காய் வைத்து, கும்பங்கள் வைக்கப்படும். தலமைப்பூசாரி கும்பங்களை ஸ்தாபிப்பார். அன்றைய தினமே நேர்த்திக்காக கும்பமெடுப்பவர்களுக்கான காப்புக்கட்டுதலும் நடைபெறும். இப்படிக் கும்பமெடுப்பவர்கள். அந்த நவராத்திரி காலங்களில் விரதம் இருப்பார்கள். கும்பத்துமால்களில் நடைபெறும் பூசைகாலங்களில் இவர்கள் கலை (உரு) ஆடுவார்கள். அல்லது ஆடவைக்கப்படுவார்கள்.அப்படி ஆடுகின்ற அவர்களை ‘ பூமரம் ‘ என அழைப்பார்கள்.
கும்பத்துமால்களில் எனைக்கவர்ந்த விடயம், அங்கே நடைபெறும் கிராமியக்கலைநிகழ்வுகள். பறையும், உடுக்கும், பிரதான வாத்தியங்கள். மாரியம்மன் தாலாட்டுப்பாடல்கள் முக்கிய இசை நிகழ்ச்சி. கரகாட்டம் பிரதான ஆடல் நிகழ்ச்சி. இப்படியான நிகழ்ச்சிகளுடன் நவராத்தி நாட்களின் இரவுகள் ஆரம்பமாகும். சுமார் பத்துமணியளவில், பூசைக்குரிய கொருட்கள், உபயகாரர் வீட்டிலிருந்து, ஊர்வலமாக பறைமேளம் அதிர அலங்காரமாக எடுத்து வரப்படும். இதை ‘மடைப்பெட்டி ‘ எடுத்து வருதல் என்பார்கள். இந்த மடைப்பெட்டியின் வருகையோடு, ஊர்முழுவதும், கும்பத்துமாலுக்கு வந்துவிடும். மடைப்பெட்டியில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் படையல் செய்யப்பட்டதும், பூசை ஆரம்பமாகும்.
உச்சஸ்தாயில் பறை ஒலிக்கப்பூசை ஆரம்பமாகும். நேர்த்திக்குக் கும்பமெடுப்பவர்கள் குளித்து முழுகி, துப்பரவாக வந்து முன்னணியில் நிற்பார்கள். பறை அதிர அதிர அவர்கள் உருக்கொண்டு ஆடுவார்கள். அவர்களைவிட வேறுசிலரும் ஆடுவார்கள். ஆடத்தொங்கிய அவர்களை மஞ்சள் நீரால் நனைப்பார்கள். அவர்கள் ஆடிஆடி உச்சம் நிலைபெறும்போது, கும்பங்கள் வைக்கப்பட்டிருக்குமிடத்துக்குச் சென்று பூசாரியிடம், தாங்கள் என்ன தெய்வத்தின் கலையில் வந்திருக்கின்றோம் என்பதைச் கொல்லி, அந்தத் தெய்வங்களுக்குரிய அணிகலன்களை அல்லது ஆயுதங்களை விரும்பிக் கேட்பார்கள். பூசாரியார் அவர்கள் கேட்பதைக்கொடுத்தால் மகிழ்ச்சி முக்த்தில் தெரியப் பெற்றுக் கொள்வார்கள்.
தம்பலகாமத்துக் கும்பத்துமால்களில் காளிராசா அண்ணன் கலையாட வந்தாலே தனிக்களை பிறந்துவிடும். சனங்களின் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் பல இருக்கும். ஏனெனில் காளிராசா அண்ணையில் பலவித தெய்வக்கலைகள் உருவெடுத்து ஆடும் என்பார்கள். மாரியம்மன், வீரபத்திரர், அனுமான்...எனப்பல தெய்வங்களின் உருக்களில் ஆடுவார் எனச் சொல்வார்கள். மாறி மாறி பல உருக்களில், அவர் ஆடும்போது செய்யும் செயல்களை வைத்து அந்த நேரத்தில் என்ன கலையில் ஆடுகின்றார் எனச்சொல்வார்கள். அனுமான் கலையென்றால், குரங்குபோல் ஒருவிதநடையும், வாழைப்பழம் சாப்பிடுதல் போன்ற சேட்டைகளும் நடைபெறும். வீரபத்திரர் கலையில் ஆடினால், சாட்டைக்கயிறு வேண்டுவார். அவர் மாரியம்மனாகப் பாவனைப்பண்ணி ஆடுவதை மக்கள் வெகுவாக ரசிப்பார்கள். உண்மையில் அந்த ஆட்டம் பார்க்க அழகாகத்தான் இருக்கும்.
சிலம்பு மாதிரியான கைவளையல்களை கைகளில் அணிந்துகொண்டு, வேப்பிலையை ருசித்துக்கொண்டு, கோலாட்டக் கம்புகளை கைகளில் வைத்துக்கொண்டு, மாரியம்மன் தாலலாட்டுக்கு ஆடுவார் ஒரு ஆட்டம். மிக அருமையாக இருக்கும். இந்த இடத்தில் மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில் கெட்டிக்காறரான காத்தமுத்து அண்ணையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். காத்தமுத்து அண்ணனுக்கு நல்ல குரல். அத்துடன் நன்றாக உடுக்கு அடிப்பார். அவர்பாட, அவருடன் இணைந்து உடுக்கும் பாடும். அவ்வளவு இனிமையாக இருக்கும். காளிராசா அண்ணர் மாரியம்மன் கலையில் ஆடத் தொடங்கினால், காத்தமுத்து அண்ணர் கூட்டத்துக்குள் எங்கிருந்தாலும், காளிராசா இழுத்து வந்து முன்னுக்கு கொண்டு வந்து விட்டு பாடச்சொல்வார். அவார்பாட, காளிராசா அண்ணர் ஆடும் ஆட்டம் ரொம்ப அழகாக இருக்கும்.
இந்தக் கலைஆடல் நடந்து கொண்டிருக்கும் போது, மாந்திரீகம் படித்தவர்கள் கலைஆடுபவர்களின் ஆடல்களை மறைந்து நின்று தங்கள் மாந்திரீகசக்தியால் கட்டுபடுத்துவார்கள். அப்படிக்கட்டுப்படுத்தும்போது, கலைஆடுபவர்கள் ஆட்டம் நிறுத்தி மயங்குவார்கள். உடனே அந்த கும்பத்துமாலின், தலமைப்பூசாரி வந்து மாற்று மந்திர சக்தியால் அந்த மந்திரக்கட்டை அவிழ்ப்பார். அப்படி அவிழ்க்கப்பட்டதும், கலை ஆடுபவர் மீளவும் ஆடுவார்.. இப்படியான மந்திரப் போட்டிகளுடன் தொடரும், கலை ஆட்டங்கள் நள்ளிரவு தாண்டியும் நீளும்..
தொடர்ந்து ஒன்பது நாட்களும், கும்பத்து மால்களில் நடைபெறும் இந்த விழாக்கள், பத்தாம் நாள் இரவில், கும்பங்கள் கரகங்களுடன், ஊர்வலமாக ஊரைச்சுற்றி வந்து, பதினொராம் நாள் காலையில், ஆற்றில் கும்பங்கள் சொரிவதுடன் நிறைவுபெறும். தென்தமிழீழத்தின் வித்தியாசமான நவராத்திரி விழாக்கள், அம்மண்ணின் கிராமியக் கோலங்களாக நடைபெற்று வந்தன. இந்தக்கோலங்கள் எல்லாம் சிதைந்த மண்ணின், இன்றைய கோலங்கள் அவலங்களாகவே உள்ளன. காளிராசா அண்ணையும், காத்தமுத்து அண்ணையும், அவர்களின் கலைவடிவங்களுடனேயே இன்றும் என் கண்ணில் தெரிகின்றபோதும், இவர்களின் இருத்த்ல் என்பது.................. ?
பிறப்புக்களை வெற்றியாக்கியவள்....
10 comments Published by மலைநாடான் on Sunday, September 03, 2006 at 5:23 PM
பிறப்புக்களை வெற்றியாக்கியவள்...... மேரி அக்கா!
ஒரு காலத்தில் தம்பலகாமத்தில் மிகப்பிரபலமான பெயர். இப்பொழுது குடும்பத்தர்களாக இருக்கும் அக்கிராமத்து மக்கள் பலரின், பிறப்பினை வெற்றியாக, மகிழ்ச்சிமிக்கதாக, ஆக்கிவைத்த அன்னையவள். ஆம்! மேரி அக்கா ஒரு மருத்துவத்தாதி. சின்ன வகுப்பில் விளக்கேந்திய மாது என்ற சிறப்போடு, புளோறிங் நைட்டிங்கேல் அம்மையாரின் கதை படித்தபோது, புளோறிங் நைட்டிங்கேலாக என் மனதில் பதிந்த முகம் மேரி அக்காவினுடையதுதான்.
சைவசமயிகள் வாழ்ந்த அந்தக்கிராமப்பகுதியில், மதங்களைக்கடந்த நேசிப்போடு, மக்கள் சேவையில் நின்ற மேரி அக்காவின் பணி அளப்பரியது. மிகப்பெரிய வைத்திய வசதிகள் அற்ற, சாதாரண கிராமிய வைத்தியசாலையாக இருந்த, தம்பலகாமம் அரசினர் வைத்தியசாலையில், மருத்துவத்தாதியாகக் கடமையாற்றிய மேரி அக்கா, பணிநேரம் என்பதையும் தாண்டிப் பணியாற்றிய பண்பாளர்.
பிரசவம் என்பது, பெண்களுக்கு மறுபிறப்பு. இத்தகைய மறுபிறப்புக்களை, மேரியக்கா உடனிருந்தால் பயமின்றி பிரசவிக்கலாம் எனத் தாய்மார்கள் சொல்லும் அளவுக்கு பெயர்பெற்ற மருத்துவத்தாதி மேரிஅக்கா. இந்தச்சிறப்புக்குச் சொந்தக்காரியானதால், மேரிஅக்காவின் சேவை நேரம் என்பது வரையறைக்குட்படாதிருந்தது. ஆனாலும் அவர் முகஞ்சுளித்தோ, மனஞ்சலித்தோ நான் கண்டதில்லை.
மேரி அக்காவும், என் தாயும், நல்ல நண்பிகள். சைவஆச்சாரத்தில் திளைத்த என்தாயும், கிறிஸ்தவ மரபை மீறாத மேரிஅக்காவும், கொண்டிருந்த நட்பு, அதிசயமாகப் பார்க்கப்படவில்லை. ஏனெனில் இருவர் தன்மைகளும் அவ்வளவு பிரசித்தம். கத்தோலிக்க மரபில் நின்ற மேரி அக்கா தைபொங்கல் பொங்குவா. சைவமரபில் நின்ற என்தாய், பாலன்பிறப்புக்குப் பலகாரம் சுடுவா. என்தாயுடன் மட்டுமல்ல, எல்லோரிடத்திலும் அத்தகைய மாறா மனப்பக்குவத்துடன் பழகியவர்தான் மேரி அக்கா.
மேரிஅக்காவிற்கு ஐந்து ஆண்பிள்ளைகள். எங்கள் வீட்டில் நானும் தங்கையும்தான். பெண்குழந்தையில்லாத மேரிஅக்காவிற்கு என்தங்கைமீது கொள்ளைப்பிரியம். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தன்பிள்ளைகளுக்கு புத்தாடை வேண்டும் மேரியக்காவின் தெரிவில் முதலிடத்தில் இருப்பது என் தங்கைக்கான ஆடைதான். என் தாயாரின் மறைவில் துவண்டது என் குடும்பம் மட்டுமல்ல. மேரி அ;க்காவும், அவரது குடுபத்தினரும் அதிர்ந்து போனார்கள்.
மேரிஅக்காவுக்கு இடமாற்றம் கிடைத்து, தங்கள் சொந்த ஊரான மூதூருக்குச் செல்லும் வரையில், தாயிழந்த எனக்கும், என் தங்கைக்கும், தாயின் பரிவைத் தந்த மேரிஅக்கா, என்னை எப்போதும் தம்பி என்றே விழிப்பார்கள். பல ஆண்டுகள் கழித்து, புலத்தில் சந்தித்தபோதும், மேரிஅக்கா அப்படியே அழைத்தார்கள். கண்களில் அதே தாயின் கருணையோடு............
-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0.............0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
தொலைபேசி அழைத்தது.
தொடர்ந்த எறிகணைத்தாக்குதலின் கோரத்தில், அந்தக் கணத்தில் எதுவும் செய்யத் தோன்றாமல் கதறிக்கொண்டிருந்த பிள்ளைகளில் ஒருவரின் மனைவிக்கு மற்றுமொரு எறிகணைத்துண்டு தாக்க அவரும் சரிகின்றார். நிலமையின் விபரீதத்தைப்புரிந்துகொண்டு மனைவி பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கிப்பிள்ளைகள் ஒடுகின்றார்கள். மூதூரைப்பிரிய விரும்பாத மேரிஅக்காவின் உயிர்பிரிந்த உடல் மூதூர் மண்ணில். காயம்பட்ட பெண்ணை போராளிகள் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பிள்ளைகளையும் மற்றவர்களையும், மரங்களின் கீழ் பாதுகாப்பாக இருத்திவிட்டு, இரவுப்பொழுதில் மீண்டும் வந்த பிள்ளைகள், தாயின் உடலை எடுத்துச் சென்று, பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு அடக்கம் செய்ய முனைகின்றார்கள். யாரோ ஒருவர் திருவாசகம் பாடுகின்றார். மதங்களைக் கடந்து மக்களை நேசித்த மகராசியின் பூதவுடல், முக்தி தரும் திருவாசப்பாடலுடன் மூதூர் மண்ணுக்குள் .........................சங்கமமாகிற்று.
அழுகின்றேன். என் இன்னுமொரு தாயின் மறைவுக்காய்...
திருத்தம்பலேஸ்வரம் பகுதி 3
6 comments Published by மலைநாடான் on Wednesday, August 16, 2006 at 2:20 PMசென்ற பகுதியில் தம்பலேஸ்வரம் எனும் பெயர் வரக்காரணம், தம்பன் எனும் மன்னன் அல்லது தலைவன் ஆட்சி செய்த பகுதியென்றும், அதனால் அவன் பெயர் சார்ந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ந்திருந்தோம். இப்பகுதியில் இப்பெயரினை மொழிவழக்கு ரீதியில் ஆராயவிளைகின்றேன். இந்த வகையில் ஆய்வு செய்ய உதவிய என் ஆய்வாள நண்பருக்கு நன்றிகள்.
தம்பலம் என்ற சொல்லுக்குப் பொருள்தேடி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின், “தமிழ்மொழி” அகராதியை புரட்டிப்பார்த்தபோது, ஆச்சரியப்படத்தக்க உண்மைகள் புலப்பட்டன. அவ்வகராதியிலிருந்து எமக்குப் பொருத்தமாக அமைந்த சில சொற்களை இப்பகுதியில் எடுத்து நோக்குவோம்.
தம்பலகாமத்தின் செந்நெல்வயல்களும், ஆதி கோணைஸ்வரர் கோவில் கோபுரமும்.
தம்பலடித்தல்:
இச்சொல்லுக்கு அகராதி சொல்லும் விளக்கம், பயிரிடுதல், உழவு செய்தல் என்பதாகும்.
இவ்விளக்கம் நுர்றுசதவீதம், தம்பலகாமத்துடன் ஒத்துப்போகும். ஏனெனில், வயலும் வயல்சார்ந்த மருதநில மண் என நாம் முன்னரே பார்த்திருந்தோம். இந்த செந்நெல் கழனிகளில் நடைபெற்ற தொழிலினடிப்படையில் இப்பெயர் வந்திருக்கக் கூடும்.
தம்பலாடல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், சேறடித்தல் அல்லது சேறாடால்.
இந்த விளக்கமும் இப்பிரதேசத்தின் தன்மையேர்டு பெருமளவு ஒத்துப்போகும். ஏனெனில் இப்பிரதேசத்தின் உழவு என்பது சேறடித்துப் பயிரிடும் முறைமையே. இதைச் சேறாடல் எனச் சொல்வது அதிகபொருத்தம் என்றும் சொல்வேன். உழவுக்கு இயந்திரங்கள் வந்த பின்னர் கூட, இப்பகுதி மக்கள் எருமைகளைக் கொண்டு, கழனிகளை கால்களால் மிதித்து, நீரும், களிமண்ணும், சேர்ந்த சேற்றுக்களியாக்கிய நிலங்களில் விதையிடுவது வழக்கமாகவிருந்தது. இந்தச் சேறுமிதிப்பினைக் கழனிகளின் கரையிருந்து பாரத்தால், வயலில் சேறுமிதிப்பவர்கள், ஆடல்புரிவதுபோன்றே தோற்றமளிக்கும்.
தம்பலி:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், மருதமரம் என்பதாகும்.
இப்பிரதேசத்தில் நிறைந்து காணப்படும் மரவகைகளில் அதிகமானது மருதமரங்களே. ( அந்த மருதமரங்களின் நிழல் சுட்டியே இவ்வலைப்பக்கத்திற்கு மருதநிழல் என்று பெயரிட்டேன்) வயல்நிலங்களின் கரைகளிலும், நீர்பாசனப்படுக்கைகளிலும், களத்துமேடுகளிலும் இந்த மருதமரங்களை நிறையவே காணலாம். மிகப்பெரிய விருட்சமாக வளரும் இம்மரங்களின் நிழல்கள் இதமானவை.
தம்பல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் சேறு என்பதாகும்.
ஏலவே சொன்னதுபோல் இப்பகுதி வயல்நிலங்களின் மண்வளம் கருங்களிச் சேற்றுத்தன்மைகொண்டதாகும்.
இப்படித் தமிழச்சொற்களின் தொடர்புகொண்டு ஆய்வு செய்யிடினும், இப்பிரதேசம் பூர்வீக தமிழ்ப்பிரதேசமாவே காணப்படுகிறது. இப்படியான சிறப்புக்கள் பொருந்திய நிலத்தில் அமைந்த சிவன் ஆலயத்தின் பெயரால், இது திருத்தம்பலேஸ்வரம் என இப்பூமி அழைக்கப்படிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
- இன்னும் சொல்வேன்
புலியெதிர்ப்பும், புனிதப்படுத்தலும்.
14 comments Published by மலைநாடான் on Tuesday, August 08, 2006 at 1:57 PMஇதை எழுதக் கூடாது என்றுதான் இதுவரையில் நினைத்திருந்தேன். ஏற்கனவே இடியப்பச் சிக்கலாகவே புரியப்பட்டிருக்கும், இலங்கை இனப்பிரச்சனை இன்னமும் குழப்பமாக அறியப்பட என் எழுத்துக்களும் அமைந்துவிடக் கூடாது என அமைதியாக இருந்தேன். ஆனாலும், போகிற போக்கில் புலியெதிர்ப்புக் கோஷத்தில், சில பொய்மைகள் புனிதப்படுத்துவதை ஏற்றறுக் கொள்ள முடியாமையால் இப்பதிவை எழுதுகின்றேன். தென்தமிழீழத்தின் உண்மைநிலையின் ஒரு சாட்சியமாகவே இதைப் பதிவு செய்கின்றேனொழிய, எந்தவொரு பிழைகளையும் நியாயப்படுத்துவதோ அல்லது எந்தவொரு மக்கள் சமூகத்தின் மீதும் வீண்பழி சுமத்துவதோ என் நோக்கம் அல்ல.
எண்ணிப்பார்க்கும்போது ஆச்சரியமாகவிருக்கிறது. நானறிந்தவரையில் இதுவரை எந்தவொரு ஊடகத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதே பெரிதாகப் பேசப்பட்டுள்ளது. தென்தமிழீழத்தில் தமிழ்மக்கள்மீது முஸ்லீம்கள் செய்த கொடுமைகள் எதுவும் பெரிதாகக் கதைக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. அதற்காக முஸ்லீம்கள் தமிழர்கள் மீது தாக்குதல்களைச் செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது.
ஈழவிடுதலைப்போராட்டம் முகிழத் தொடங்கிய 1977ம் ஆண்டுகாலப்பகுதியிலிருந்து, 1982ம் ஆண்டு காலப்பகுதி வரையில், தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக செய்திகளில் அறியப்பட்டிருக்கும் மூதூர் தொகுதியில் வாழ்ந்தவன் என்ற வரையில், என்னால் நேரடியாக அறிந்துணரப்பட்ட, முஸ்லீம்களின் தமிழ்விரோதச் செயற்பாடுகள் சிலவற்றை இங்கே அடையாளப்படுத்துகின்றேன்.
இலங்கையின் தேசிய இனங்களுக்கான பிர்ச்சனையில், தமிழர்களுக்கும் சிங்களவர் அரசியலளார்களுக்கும் பிரச்சனை தோன்ற வெகுகாலத்துக்கு முன்னமே, முஸ்லீம்களுக்கும் சிங்களஆட்சியாளர்களுக்குமான மோதல்கள் ஏற்பட்டு, அதுவே சிங்கள முஸ்லீம் கலவரம் வரைக்கும் சென்றதாகவும், பின்னர் தமிழ்அரசியல்தலமைகளின் தலையீட்டால், அவை தணிக்கப்பட்டதாகவும் வரலாறுரைக்கும். பின்னாளில் தமிழர்கள்மீதான் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பமானபோது, அதற்கு ஏதிரான போராட்டங்கள் படிப்படியாக குழுநிலைப்போராட்டங்களாக தென் தமிழீழத்தில் இளைஞர்களால் தொடங்கப்பட்டபோது, அவற்றை சிங்கள அதிகாரவர்க்கத்ததுக் காட்டிக் கொடுத்த கயமைத்தனத்தில் முஸ்லீம்களின் எதிர்வினை ஆரம்பமாகியது எனச் சொல்லலாம். இதற்கு சிங்கள அதிகார வர்க்கம் அவர்களுக்குக் கொடுத்ததெல்லாம், வேலைவாய்ப்புக்களும், பதவியுயர்வுகளுமாகும்.
மூதூர் இரட்டைப்பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி. இதிலே ஒரு உறுப்பினர் முஸ்லீமாக வருவார். அப்படி வருபவர்கள் சிங்களப்பேரினவாத கட்சிகளில் ஏதாவதொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். அப்படி மாறிமாறித் தெரிவாகிய முஸ்லீம் தலைவர்களின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தமிழ இளைஞர்களுக்குக் கொடுத்த இன்னல்கள் சொல்லிமாழாது. இதைப் பெயர்விபரங்களுடன் கூடச் சொல்ல முடியும். ஆனால் இங்கு அதைசெய்ய விரும்பவில்லை. ஒருதடவை சிங்கள அரச புலனாய்வுத்துறை தமிழ் இளைஞர்களின் பெயர் பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு, அவர்களைத் தேடியபோது, அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் திருகோணமலை அமைப்பாளராகவிருந்த சிங்களப்பிரமுகர், தனக்குத் தெரிந்த தமிழ்பிரமுகருக்கு இரகசியமாக அந்தப் பெயர்பட்டியலை வழங்கி, அத்தமிழ்இளைஞர்களைத் தப்பிக்கவைத்தார். ஆனால் அப்போதை பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த முஸ்லீம் தலைவரும், அவரது மைத்துணரான காவலதிகாரியும், தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுப்பதிலும், கைது செய்வதிலும் மும்மரமாகச் செயற்பட்டார்கள். சாதாரண காவல்துறை அதிகாரியாக இருந்த அந்த நபர், இத்தகைய காட்டிக்கொடுப்புக்களால் சீனன்குடா பொலிஸ்நிலைய அத்தியட்சகராகவும், அதன்பின் புலனாய்வுத்துறை அதிகாரியாகவும் பதவி பெற்றார் எனவும், பின்பு ஒருதாக்குதலில் கொல்லப்பட்டார் எனவும் பின்னர் அறிந்தேன். இது நடந்தது எழுபதுகளின் இறுதியில். இங்கே நான் பெயர் குறிப்பிடாவிட்டாலும் கூட, அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த யாராவது இதை வாசிப்பார்களாயின், அவர்களால் யாரைக் குறிப்பிடுகின்றேன் என்பதை இலகுவாகப் புரியமுடியும். ஏனெனில் அந்தளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் பிரபலம்.
83 இனக்கலவரங்களோடு இணைந்து தென்தமிழீழப்பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களின்போது, தமிழ்க்கிராமங்களான தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, கிராமங்கள் முதலான கிராமங்கள் சூறையாடப்பட்டது, சிங்களவர்களால் அல்ல. முஸ்லீம் ஊர்காவல் படையினரும், அவர்களோடு சேர்ந்த முஸ்லீம் காடையர்களும் என்பதும் அப்பகுதி மக்கள் அறிந்த உண்மை.
கிண்ணியா என்பது மூதூர்தொகுதியிலுள்ள ஒரு முஸ்லீம் கிராமம். அங்கே சிறுபாண்மையாக வாழ்ந்த தமிழ்மக்களில், சில இளைஞர்கள் கலவரம் ஒன்றின்போது, இராணுவத்தின் துணையோடு, முஸ்லீம் ஊர்காவல் படையால் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்குள் என் நண்பனொருவனும் இருந்தான். சிறு அளவிலான அந்த மக்கள் மத்தியில் அவனது திறமையும், ஆளுமையும், இப்பகுதி முஸ்லீம் சமுகத்திற்கு அச்சம் தர, தருணம் பார்த்து அவனும், மேலும் சிலரும், கொலை செய்யப்பட்டார்கள்.
தென்தமிழீழத்திலிருந்து விடுதலைப்போராட்டத்தில், (எல்லா இயக்கங்களுக்கும்) போராளிகளாகத் தமிழ்இளைஞர் இணைந்துகொள்ள, சிங்களப்பேரினவாதிகளின் வெறித்தனச் செயற்பாடுகள் மட்டும் காரணமல்ல... தென்தமிழீழ முஸ்லீம் தலைமைகளினதும், அவர்களது அடிவருடிக்கும்பல்களினதும், ஊர்காவல் படையென்ற பெயரில் , காடைத்தனம் புரிந்த முஸ்லீம் காடையர்களும் காரணமென்றால் அதுமிகையாகாது. புலியெதிர்ப்புவாதத்திற்காக பொய்மைகளைப் புனிதப்படுத்துவது நியாயமாகாது.
திருத்தம்பலேஸ்வரம் பகுதி 2
16 comments Published by மலைநாடான் on Wednesday, August 02, 2006 at 9:54 PM'' இசையும், கலையும், இணைந்து வாழ்ந்த அந்தப்பசுமைப்பூமியை, இசையோடு காண உங்கள் ஒலிச்செயலியை இயங்கவைத்தபின், தம்பலகாமத்திற்குள் அடியெடுத்து வையுங்கள் ''
தம்பலகாமம்.
திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி. ஒருகாலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம். தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும் தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள் எந்நேரமும் நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள் போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள்.
தம்பலகாமத்தை ஒரு தடவை சுற்றி வந்தால் அத்திட்டுக் குடியிருப்புக்களின் பெயர்களில் தமிழ் மணக்கும். மக்களின் வாழ்வில் தமிழ் சுவைக்கும். திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி விரிகின்ற நெடுஞ்சாலையில் பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத் தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.
சாலை பிரியும் அச்சந்தி தம்பலகாமம் சந்தி அல்லது பதின்மூன்றாம் கட்டை என அழைக்கப்படும். அங்கிருந்து உள் நுழைந்தால் வரும், முதலாவது குடியிருப்பின் பெயர் புதுக்குடியிருப்பு. அதையும் தாண்டி உள்ளே செல்ல சாலை மீண்டும் இரண்டாகப்பிரியும். இடதுபுறமாகச் செல்லும் சாலை ஊருக்குள் சென்றுவர, மற்றையது கோவில்குடியிருப்பு நோக்கிச் செல்லும்.
இடதுபுறமாக ஊருக்குள் செல்லும் சாலை வழியே செல்வோமானால், பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, முன்மாதிரித்திடல், சிப்பித்திடல், வர்ணமேடு, முள்ளியடி, வரைக்கும் சென்று கிண்ணியா நோக்கி அவ்வீதி செல்லும். கோவில்குடியிருப்பு வரை சென்ற வீதி அங்கிருந்து நீண்டு, குஞ்சடப்பன்திடல், நாயன்மார்திடல், நடுப்பிரப்பன்திடல், ஆகிய வற்றினுர்டு சென்று முள்ளியடியில் மற்றைய வீதியுடன் இணைந்து கிண்ணியா செல்லும். இந்தக் குடியிருப்பினிலெல்லாம் , தென்னை மரத்தோப்புகளும், தீங்கனிச்சோலைகளும், இதந்தரு மனைகளும், இன்பமும் நிறைந்திருக்கும்.
கோயில்க்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது என் எண்ணப்பாடு. அதன் வரலாற்றுக்குச் செல்லமுன் தம்பலகாமம் என்ற பெயர் வருவதகான காரணத்தைச் சற்று நோக்குவோம்.
இந்நிலப்பரப்பை ஒருகாலத்தில் ஆட்சி செய்த மன்னனின் பெயர் தம்பன் என்றும் அவன் பெயர்சார்ந்தே இந்நிலப்பரப்பு தம்பலகாமம் எனப்பெயர் பெற்றதென இங்குவாழ்ந்த பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இம் மன்னன் சோழர்காலத்தே வாழ்ந்த பூர்வீக ஈழத்தமிழனாக இருந்திருக்க வேண்டும். சோழமன்னர்களின் ஆட்சி விரிவாக்கத்தின்போது, அவர்களுடன் இசைந்து வாழ்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி அவன் சோழ மன்னர்களுடன் நல்லுறவு பேணி வளர்த்தமையால், சோழமன்னர்கள் தங்கள் ஆட்சி விரிவாக்கத்தின்போது ஆற்றிய நற்பணிகளினூடாக, இப்பகுதியில் இருந்த சிவனாலயத்தைப் புனருத்தாரணம் செய்து, குடமுழுக்குச் செய்திருக்கின்றார்கள். அத்தோடு, தங்கள் வழியில், அந்நிலமன்னனாகவிருந்த தம்பன்பெயரால் அவ்வாலயத்திற்கு தம்பலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் எனப் பெயரிட்டிருக்க வேண்டும். (சோழர் காலத்தே கட்டப்பெற்ற ஆலயங்களுக்கு அதைக்கட்டிய மன்னர்களின் பெயர்சார்ந்து பெயரமைக்கப்பட்டிருப்பதற்கு, சோழேஸ்வரம், ராஜராஜேஸ்வரம், ஆகிய பெயர்களை உதாரணமாகக் காணலாம்.)
தம்பன் எனும் தலைவன் நிச்சயம் ஒரு ஈழத்துத்தமிழன் என, நான் கருதுவதற்கு முக்கிய காரணம், அத்தகைய ஒரு பெயர் சோழர்பரம்பரைக்குள் காணப்படவில்லை. அதேசமயம் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில், இத்தகைய பெயர்களும், மன்னர்களும் கூட வாழ்ந்திருக்கின்றார்கள். பனங்காமம் என்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்த அரசன், பனங்காமவன்னியன் என அழைக்கப்பட்டிருக்கிருக்கின்றான்.
தம்பனின் ஆட்சிக்குட்பட்டிருந்த வயல்நிலப்பகுதியை, தம்பலகமம் என்பது சரியா? அல்லது தம்பலகாமம் என்பது சரியா? என ஒரு கேள்வி பின்னாட்களில் எழுந்தபோது, மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள், பனங்காமம், கொடிகாமம், வீமன்காமம், எனும் பெயர்களை மேற்கோள்காட்டி, தம்பலகாமம் என அழைப்பதே சரியென நிறுவினார்.
அதைவிடவும், தம்பலகமம் என பெயர்விளித்துவருங்கால், அது பின்னாட்களில் சிங்கள குடியேற்றவாசிகளால் தம்பலகமுவ அல்லது தம்பலகம எனப் பெயர் மாற்றம் செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
தம்பலகாமத்திற்கான வரைபடம் கிடைக்காத காரணத்தால், என் மனம் நிறைந்த அந்த மண்ணை நானே வரைந்து இங்கே தந்துள்ளேன். அதிலே தம்பலகாமம் சந்தியிலும், கோவிகுடியிருப்பிலும் சிகப்பு வட்ட அடையாளமிட்டபகுதிகளில் மிகப்பெரிய இராணுவ முகாம்கள் இருப்பதாக அறிகின்றேன். இம்மண்ணிற்கு அண்மையில் சென்று வந்த என் நண்பனிடம் எனக்கும் ஆசையுண்டு எனச் சொன்னபோது சொன்னான், வேண்டாம் தற்போது வேண்டாம். ஏனெனில் உன் மனதில் பதிந்துள்ள அந்தப் பசுமை மண்ணை நீ இப்போது பார்க்க முடியாது. ஆதலால் அந்நிலம் மீட்சிபெறும்வரை, அதன் பசுமை நினைவுகளாவது உன்னிடம் அழியாதிருக்கட்டும் என்றான்...
- இன்னும் சொல்வேன்
நன்றிகள்:
''' புயலடித்த தேசம் '' இறுவட்டுக்கலைஞர்களுக்கும்
சுவி்ஸ் கலைபண்பாட்டுக்கழகத்தினர்க்கும்
அன்று:
மாரிமழையை நம்பிச் செய்யும் பெரும்போக வேளான்மை முடிந்தபின், வசந்தத்தின் தொடக்கத்தில், வயலில் சேறடித்து, விதை விதைத்து, விளைவை என்ணிக்குதுகலித்திருப்பார்கள் கந்தளாய், தம்பலகாமம், விவசாயிகள். சிறுபோகம் என்று சொல்லப்படுகின்ற இக்கோடை வேளாண்மைக்கு, அவ் விவசாயிகள் முற்றுமுழுதாக நம்பியிருப்பது, கந்தளாய் குளத்து நீரை. வசந்தத்தின் குளிர்ச்சியில் பசுமையாக விளைந்தெழும் நெற்பயிர்களின் முதிர்நிலையில் ஈரலிப்பை வேண்டிநிற்கும் அப்பயிர்களுக்கு, அபயமளிக்கக் கூடிய கந்தளாய் குளத்து நீர் மறுக்கப்பட்டது. அதனால் தம்பலகாமம், கந்தளாய், பகுதி மக்களுக்கு எழுபதுகளின் மத்தியில் கிடைத்தது ஏமாற்றமே. அவர்கள் வயல்கள் காய்ந்தன. வயிறுகள் எரிந்தன. வாழ்வு கசந்தது. இதற்கான காரணம் என்ன ?. மறுத்தது யார்?.
தம்பலகாமம், கந்தளாய், தமிழ்மக்களே கந்தளாய் குளத்து நீரின் பெரும்பாகப் பாவனையாளர்கள். அம்மக்களுக்கு உரித்துடைய நீர் மறுக்கப்பட்டதற்கான மறைமுகக் காரணம், அவர்கள் தமிழ்மக்கள் என்பதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதும், அதற்கு ஏதுவாக ஏற்படுத்தபடும் சிங்களக்குடியேற்றங்களை வளர்த்தெடுப்பதுமாகும். ஆனால் இந்த நீர்மறுப்புக்கு சிங்கள அரசு காட்டிய வெளிப்படைக்காரணம், கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் அபிவிருத்தி என்பதாகும். இத்தொழிற்சாலையின் கரும்பு வயல்களுக்கான நீர்ப்பாசனத்துக்காகவே, தமிழ்மக்களுக்கு உரித்தான கந்தளாய்குளத்து நீர், அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இந்த மறுதலிப்பின் மூலம், அம்மக்களின் உரிமம் சுரண்டப்பட்டது. இந்தச் சுரண்டலினால் சுகமிழந்த குடும்பங்களின் சோகம் சொல்லி மாழாது. இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக எழுந்த குரல் அலைகள், நட்டஈட்டுப்பணம் வழங்கல் எனும் பேரம்பேசலின் மூலமும், அரச காவற்படையின் துணைகொண்டும், அடக்கபட்டன. தென் தமிழீழத்தின் ஒரு பகுதி மக்கள் சமுகத்தின் பாரம்பரியம் மிக்கப் பெருவாழ்வு, அவர்கள் அறியாவண்ணமே அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு அவலத்தின் ஆரம்பம் அது.
இன்று:
மாவிலாறு. இலங்கை அரசியலில், இந்தவாரமுக்கியத்துவம், இந்தப் பெயருக்குக் கிடைத்திருக்கிறது. திருகோணமலையின் கொட்டியாரப்பற்றினுடாக ஓடி, திருகோணமலைக் குடாக்கடலில் கலக்கும் மகாவலி நதியின் நீரோட்டத்தை, வெருகலுக்குச் சமீபமாகச் சேமிக்கும் நீர்ப்பாசன அணைத்திட்டம் மாவிலாறு. இந்த நீர்த்தேக்கத்தின் பயனை உண்மையில் அனுபவிக்க வேண்டியவர்கள் கொட்டியாரப்பகுதித் தமிழ்மக்கள். ஆனால் அனுபவிப்பவர்களோ சிறிலங்கா அரசினால், தமிழ்மக்களை அழிப்பதற்கென்றே திட்டமிட்டுக்குடியேற்றப்பட்ட சிங்களக்குடியேற்றவாசிகள். மாவிலாறு அணைக்கட்டின் கதவுகளை, தமது அத்தியாவசிய தேவைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து, கொட்டியாரப்பற்று மக்கள் இறுகப் பூட்டிவைக்க, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மற்றொரு அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்க்குள் வரும், மாவிலாறு அணையின் கதவுகளைப் பலவந்தமாகத் திறக்க, படைநகர்த்திய சிறிலங்கா அரசை, அதன் இராணுவ யந்திரத்தை, எதிர்கொண்டிருக்கின்றனர் விடுதலைப்புலிகள். யுத்தகளத்தில் சிறிலங்காப்பேரினவாதம் சந்திந்திருக்கும், புதியதோர் எதிர்முனை. இரவோடிரவாக குடியேற்றங்களையும், புத்தர்சிலைகளையும் நிறுவி, தமிழ்ப்பிரதேசங்களை ஆக்கிரமித்த பேரினவாதிகளின் குரல்வளையை இறுகப்பிடித்தது போன்றுள்ளது மாவிலாறு விவகாரம்.
அரச பயங்கரவாதத்தின் அநியாயங்களால் பாதிக்கபட்ட தமிழ்மக்கள் குமுறிய போதெல்லாம், குதுகலித்து மகிழ்ந்திருந்த பேரினவாதம், பெருங்குரலெடுத்துக் குய்யோ முறையோவெனக் கூவத்தொடங்கியுள்ளது. இவ்விவகாரத்தின் போக்குகள் மாறலாம், இழப்புக்கள் ஏற்படலாம். ஆனாலும் எங்கள் நிலத்தை, எங்கள் தேசத்தை, இழக்கமாட்டோமெனப் போர்குரல் எழுப்பி நிற்கும், திருமலை மக்களையும், மக்கள் போராளிகளையும், மனம் நிறைந்து வாழ்த்தத் தோன்றுகிறது. ஏனெனில் அந்நிலத்திலிருந்து அகதியாய் ஆக்கப்பட்டவனின் மனசு அப்படித்தானிருக்கும்.
மாவிலாறு குறித்து வன்னியனின் விரிவான மற்றுமொரு பதிவு
திருகோணமலை பற்றிய எனது முன்னைய பதிவுகள்
திருத்தம்பலேஸ்வரம் எது ? என்ற கேள்வியோடும் ஈழத்து எழுத்தாளர் திரு சோமகாந்தன் ஈழத்துச் சிவாலயங்கள் பற்றிய எழுதிய பல குறிப்புகளோடும் நண்பர் வெற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருத்தம்பலேஸ்வரம் பற்றிய குறிப்புடனும், உண்மையில் அது எந்த இடத்தில் இருந்தது என்னும் கேள்வியோடும் அதை நிறைவு செய்திருந்தார். நியாயபூர்வமான ஒரு கேள்வி. ஈழத்தமிழர் என்றல்லாது, தமிழர்கள் அனைவருமே அக்கறையோடு நோக்க வேண்டிய ஒருவிடயம். வரலாற்றுச் சான்றுகளை வெறும் சமய அடையாளங்களாக மட்டுமே நோக்கிய ஒரு தவறால் நாம் இழந்த அருஞ்செல்வங்களில் திருத்தம்பலேஸ்வரமும் அடங்கும்.
நான் வலைபதிவுகள் எழுதத் தொடங்க முன்னரே தென் தமிழீழம் குறித்த சில தகவல்களை எவ்விதத்திலாவது பதிவு செய்து வைக்க வேண்டுமென எண்ணியிருந்தேன். எதிர்பாராது இந்த புதியதுறைக்குள் வந்தபோது, என் எண்ணத்தை இலகுவாகவும், விரிவாகவும் செய்யலாம் என்றும் எண்ணியதுண்டு. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாய் உருவாகிய இந்த வலைப்பூவில் திருத்தம்பலேஸ்வரம் ஆரம்பப் பதிவாக அமைவது, எனக்கு ஒருவித மன நிறைவையேதருகிறது. ஏனெனில் என் இளவயதில், தொலைந்து போன அந்த தொன்மையைத் தேடி அலைந்திருக்கின்றேன். என் தேசத்தின் காணாமற் போய்விட்ட தொன்மம் குறித்து நான் சொல்லவிழைபவை, நான் நேரடியாகச் சேகரித்த செவிவழிக்குறிப்புக்களும், விழிவழிப்பதிவுகளுமே. இதற்குமேல் அன்றைய பொழுதுகளில் ஆவணப்படுத்தக் கூடிய வசதிகள் எதுவுமிருக்கவில்லை. இந்தப் பதிவில் நான் கூறும் விடயங்கள் முடிந்த முடிவாக இல்லாவிடினும், நிச்சயம் ஒரு ஆரம்பத்தின் அடியெடுத்தலாக இருக்குமென்று நம்புகின்றேன். இனி திருத்தம்பலேஸ்வரம் குறித்த என் குறிப்புக்களுக்குச் செல்வோம்.
திருத்தம்பலேஸ்வரம் எங்கே இருந்தது என்ற கேள்விக்கு நான் கூறும் பதில் திருகோணமலைக்குத் தென்மேற்கில் கந்தளாய்க்குப் பக்கமாக இருந்திருக்க வேண்டும். இங்கே ஒரு மிகப்பெரிய சிவாலயமும் இருந்திருக்க வேண்டும். இந்தச் சிவாலயம் சோழ பரம்பரை மன்னர்களில் ஒருவரால் நிர்வப்பட்டிருக்கலாம், அல்லது புணருத்தாரனத் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம். இது குறித்த வானொலி உரையாடல் ஒன்றில், என் ஆய்வாள நண்பரொருவர் சோழமன்னர்களின் திருப்பணி குறித்த ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்ட போதும், தற்சமயம் அது குறித்த விபரங்களை உடன் சேர்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஆலயம் அந்நியப் படையெடுப்புக்களில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அதற்கு முன்னர் நடந்த இயற்கை அனர்த்தம் ஒன்றில் மறைந்து போயிருக்க வேண்டும். இவைகளை நிறுவுவதற்காக நான் சொல்ல விரும்பும் குறிப்புக்களுக்குச் செல்ல முன் நாங்கள் இன்னுமோர் இடத்திற்குச் செல்ல வேண்டும். அது தம்பலகாமம்.
திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி. ஒருகாலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம். தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும் தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள் எந்நேரமும்நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள் போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள். அப்படியான ஒருதிட்டுக்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது என் எண்ணப்பாடு.
- இன்னும் சொல்வேன்
பசுங்கடலாய் நீள் விரியும் நெல்வயல்கள்
வயல் நடுவே நீளரவாய் நெளிந்தோடும் நீரோடை
ஓடையிலே எருமையினம் சுயாதீனம்
அதை உடைத்திடும் மேய்போனின் குரல்கோலம்
மெல்ல வீசும் தென்றலிலே சலசலக்கும் மருதமரம்
சலசலப்பின் மத்தியிலும் மரமுறையும் புள்ளினங்கள்
கோடியின்பம் கொட்டி வைத்த என்னரும் மருதநிலம்
இன்றிழந்தேன் இன்றிழந்தேன் இன்று மட்டுமேயிழந்தேன்.
நண்பர்களே!
நான் நேசித்த மண்ணின் நெஞ்சு நிறைந்த நினைவுகளை இம் மருதநிழல் நின்று பேச வருகின்றேன். தென் தமிழீழத்தின் மண்வாசனை பேசும் களமாக அமையவுள்ளதால், தென் தமிழீழத்தின் மருதநிலங்களில், ஆற்றங்கரைகளில், நீண்டு நெடிதுயர்ந்து நிழல்தரும் மருதமரத்தையும், அந்த மண்ணின் வயலும் வயல்சார்ந்த பாங்கினையும் குறிப்பதாக இத்தளத்திற்கு மருதநிழல் எனப்பெயரிட்டுள்ளேன். அந்த மண்ணிலே வாழ்ந்த காலங்களில் மருதநிழல்களில் கீழிருந்து விரிந்த என் எண்ணங்களும், அனுபவங்களும், ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்டுள்ளபோதும், என் நிலம் மீட்சி பெறும். மீளவும் என் நிலத்தில் மருதநிழலின் குளிர்ச்சியில் மனம்மகிழ்வேன் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு. அந்நாள் வரையில் இந்நிழலில், உங்களோடு என் நிலம் குறித்த எண்ணங்களைப் பேசவுள்ளேன். வாருங்கள்!