திருத்தம்பலேஸ்வரம்-பகுதி 1
Published by மலைநாடான் on Tuesday, July 18, 2006 at 10:32 PMதிருத்தம்பலேஸ்வரம் எது ? என்ற கேள்வியோடும் ஈழத்து எழுத்தாளர் திரு சோமகாந்தன் ஈழத்துச் சிவாலயங்கள் பற்றிய எழுதிய பல குறிப்புகளோடும் நண்பர் வெற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருத்தம்பலேஸ்வரம் பற்றிய குறிப்புடனும், உண்மையில் அது எந்த இடத்தில் இருந்தது என்னும் கேள்வியோடும் அதை நிறைவு செய்திருந்தார். நியாயபூர்வமான ஒரு கேள்வி. ஈழத்தமிழர் என்றல்லாது, தமிழர்கள் அனைவருமே அக்கறையோடு நோக்க வேண்டிய ஒருவிடயம். வரலாற்றுச் சான்றுகளை வெறும் சமய அடையாளங்களாக மட்டுமே நோக்கிய ஒரு தவறால் நாம் இழந்த அருஞ்செல்வங்களில் திருத்தம்பலேஸ்வரமும் அடங்கும்.
நான் வலைபதிவுகள் எழுதத் தொடங்க முன்னரே தென் தமிழீழம் குறித்த சில தகவல்களை எவ்விதத்திலாவது பதிவு செய்து வைக்க வேண்டுமென எண்ணியிருந்தேன். எதிர்பாராது இந்த புதியதுறைக்குள் வந்தபோது, என் எண்ணத்தை இலகுவாகவும், விரிவாகவும் செய்யலாம் என்றும் எண்ணியதுண்டு. அந்த எண்ணத்தின் வெளிப்பாடாய் உருவாகிய இந்த வலைப்பூவில் திருத்தம்பலேஸ்வரம் ஆரம்பப் பதிவாக அமைவது, எனக்கு ஒருவித மன நிறைவையேதருகிறது. ஏனெனில் என் இளவயதில், தொலைந்து போன அந்த தொன்மையைத் தேடி அலைந்திருக்கின்றேன். என் தேசத்தின் காணாமற் போய்விட்ட தொன்மம் குறித்து நான் சொல்லவிழைபவை, நான் நேரடியாகச் சேகரித்த செவிவழிக்குறிப்புக்களும், விழிவழிப்பதிவுகளுமே. இதற்குமேல் அன்றைய பொழுதுகளில் ஆவணப்படுத்தக் கூடிய வசதிகள் எதுவுமிருக்கவில்லை. இந்தப் பதிவில் நான் கூறும் விடயங்கள் முடிந்த முடிவாக இல்லாவிடினும், நிச்சயம் ஒரு ஆரம்பத்தின் அடியெடுத்தலாக இருக்குமென்று நம்புகின்றேன். இனி திருத்தம்பலேஸ்வரம் குறித்த என் குறிப்புக்களுக்குச் செல்வோம்.
திருத்தம்பலேஸ்வரம் எங்கே இருந்தது என்ற கேள்விக்கு நான் கூறும் பதில் திருகோணமலைக்குத் தென்மேற்கில் கந்தளாய்க்குப் பக்கமாக இருந்திருக்க வேண்டும். இங்கே ஒரு மிகப்பெரிய சிவாலயமும் இருந்திருக்க வேண்டும். இந்தச் சிவாலயம் சோழ பரம்பரை மன்னர்களில் ஒருவரால் நிர்வப்பட்டிருக்கலாம், அல்லது புணருத்தாரனத் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம். இது குறித்த வானொலி உரையாடல் ஒன்றில், என் ஆய்வாள நண்பரொருவர் சோழமன்னர்களின் திருப்பணி குறித்த ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்ட போதும், தற்சமயம் அது குறித்த விபரங்களை உடன் சேர்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஆலயம் அந்நியப் படையெடுப்புக்களில் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அதற்கு முன்னர் நடந்த இயற்கை அனர்த்தம் ஒன்றில் மறைந்து போயிருக்க வேண்டும். இவைகளை நிறுவுவதற்காக நான் சொல்ல விரும்பும் குறிப்புக்களுக்குச் செல்ல முன் நாங்கள் இன்னுமோர் இடத்திற்குச் செல்ல வேண்டும். அது தம்பலகாமம்.
திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி. ஒருகாலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம். தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும் தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள் எந்நேரமும்நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள் போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள். அப்படியான ஒருதிட்டுக்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது என் எண்ணப்பாடு.
- இன்னும் சொல்வேன்
கேட்க ஆவலாக இருக்கிறது!
என்ன அழகிய தமிழ்ப் பெயர்கள்!
நன்றி.
பதிவிற்கு மிக்க நன்றி.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
100/100 உண்மை; ஈழத்தைப் பற்றிய பல உண்மைகள் ஆதாரமற்ரவையாகிவிட்டன. எனினும் உங்கள் நேரடி வாழ்வனுபவங்கள்; பல தெரியாத தகவல்களைத் தரும்.எதிர்பார்க்கிறோம்.
யோகன் பாரிஸ்
இங்கே July 18, 2006 10:48 PM ல், பொன்ஸ் இப்படிச் சொன்னார்
மலை நாடன்,
திருத்தம்பலேஸ்வரம் பற்றி எங்களைப் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியதற்கு முதற்கண் நன்றிகள்.. அந்தப் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை.. பின்னூட்டப் பெட்டியைச் சரி பார்க்கவும்..
இந்தப் பின்னூட்டம் அந்தப் பதிவிற்கு மட்டுமே உரியது:
ஆரம்பம் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பத்தி பிரித்து எழுதினால் வாசிக்க வசதியாக இருக்கும்.. அத்துடன், வெற்றியிடம் சொன்ன அதே பரிந்துரை: வரைபடம் ஏதும் கிடைத்தால் போடலாமே!! என்னைப் போல் இலங்கையின் நிலப் பரப்பை அத்தனை தெளிவாக அறியாதவர்களுக்கு வசதியாக இருக்கும்.
தொடர்ந்து பதியுங்கள். மருதநிழல் தேடி வருகிறேன் :)
வாங்க,
அழகிய தமிழப்பெயர்கள். எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லையே?
நீங்கள் தொடங்கிவைத்ததுதானே. சற்று வேலைகள் அதிகம் என்பதாலும், தருவதை நன்றாகத் தரவேண்டும் என்பதாலும், பதிவுகள் தாமதமாக வந்தால் குறை எண்ணாதீர்கள்.
முடிந்தவரைக்கும் உங்கள் நம்பிக்கையை காக்க முயல்வேன்.
உங்கள் அன்புக்கு நன்றி!
உங்கள் கருத்துக்களை உரிய பதிவில் சேர்த்துள்ளேன்.
ஆரம்பம் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பத்தி பிரித்து எழுதினால் வாசிக்க வசதியாக இருக்கும்வெற்றியிடம் சொன்ன அதே பரிந்துரை: வரைபடம் ஏதும் கிடைத்தால் போடலாமே!.என்னைப் போல் இலங்கையின் நிலப் பரப்பை அத்தனை தெளிவாக அறியாதவர்களுக்கு வசதியாக இருக்கும்
புதிய வார்ப்புரு கொடுத்த சில சிக்கல்களால் எண்ணியபடி பிதவை இடமுடியவில்லை. தற்போது ஒரளவுக்கேனும் சீர் செய்துள்ளேன்.
வரைபடங்கள் சேர்க்காததற்கும் இதுவே காரணம். இனிவரும் பதிவுகளில் நிச்சயம் சேர்த்துக் கொள்கின்றேன்.
கண்டிப்பாக வாங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Maraboor Jaya.Chandrasekaran
Chandrasekaran J
இன்னுமொருக்கால் உங்கடை பதிவை வாசிச்சேன். புத்தகமாக வெளியிடப்பட வேண்டிய தொடர் இது.
பதிவுக்கு மீண்டும் என் நன்றிகள்.
இன்னுமொருக்கால் உங்கடை பதிவை வாசிச்சேன். புத்தகமாக வெளியிடப்பட வேண்டிய தொடர் இது.//
வெற்றி!
உங்கள் விருப்பம் நிறைவேறும் போல்தான் உள்ளது. :)