கும்பத்து மால் ஒரு பண்பாட்டுக்கோலம். 6

இது நவராத்திரிக்காலம். தமிழகத்தின் நவராத்திரிக் கோலங்கள், தமிழீழத்தின் நவராத்திரிக் கோலங்கள், எனப் பல பதிவுகள் வந்துள்ள இத் தருணத்தில், தென் தமிழீழத்தின் நவராத்திரிக் கோலங்களையும், பதிவு செய்வதும், படிப்பதும், நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதால், இப்பதிவில் தென் தமிழீழத்தின் நவராத்திரி, கும்பத்துமாலை பண்பாட்டுக்கோலமாகப் பதிவு செய்கின்றேன்.

தமிழகத்து நவராத்திரி காலங்கள், கொலுஅலங்காரக்களிலும், கலைநிகழ்வுகளோடும், களைகட்ட, தமிழீழத்தின் வடபுலத்தே, ஆலய வழிபாடுகளுடனும், வீடுகளிலும், கல்விநிலையங்களிலும், நடைபெறும் வாணிபூசைக் கொண்டாட்டங்களுடனும், நிறைவு கொள்ள, தென்தமிழீழத்தின் நவராத்திரிக் கொண்டாட்டங்களோ வேறுவிதமாக அமைந்திருக்கும்.

கும்பத்துமால்கள். ஊரின் மத்தியில் அல்லது எல்லைகளில் அமைந்திருக்கக் கூடிய ஆலயங்களின் வெளிப்பிரகாரத்தில், ஊர்கூடிக் கும்பத்துமால் கட்டும். மால் என்ற சொற்பதத்துக்கு கொட்டகை அல்லது பந்தல் எனப்பொருள் கொள்ளலாம். அந்தவகையில் பார்ப்போமேயானால், கும்பம் + மால் = கும்பத்துமால், கும்பம் வைக்கும் கொட்டகை எனப் பொருள்படும். கோவில்களில் கும்பம் வைப்பதோ கொலுவைப்பதோ தென்தமிழீழத்தில் பெரியளவில் இல்லை என்றே சொல்லலாம். பாடசாலைகளில் சரஸ்வதிபூசை கொண்டாடுவதோடு நவராத்திரிக் கொண்ணடாட்டம் முடிந்துவிடும். கானாபிரபாவின் நவராத்திரிபற்றிய பதிவு அதை நன்றாகவே பதிவு செய்துள்ளது.

நவராத்திரி என்றால் கும்பத்துமால்களில் ஊரே திரண்டு திருவிழாவாகக் கொண்டாடுவது தென் தமிழீழத்தின் தனித்துவச் சிறப்பு. பிற்காலத்தில் நகரப்புறங்களில் மாற்றங்கள் பல வந்து விட்ட போதும், கிராமங்கள் பலவும், கும்பத்துமால்களுடனேயே நவராத்திரியைக் கொண்டாடின. நவராத்திரிக்கு ஒரு வாரத்துக்கு முன், ஊர்கூடிக் கூட்டம் போட்டு, கும்பத்துமால் வைப்பதையும், தலமைப்பூசாரியையும் ( இவர் மந்திர தந்திரங்களில் தன் திறமையை ஏற்கனவே வேறுபல நவராதத்திரிக் கும்பத்துமால்களில் நிரூபித்தவராக இருப்பார்) தீர்மானிப்பதுடன் ஆரம்பமாகும். தொடர்ந்து வேகமாக கும்பத்துமால் கட்டப்படும். சுமார் நூறு மீற்றர் நீளமான கொட்டகைகள் காட்டுத்தடிகளால் கட்டப்பட்டு, தென்னங்கிடுகுகளால், வேயப்பட்டு, வெள்ளைத் துணிகளால் அலங்கரிக்கப்படும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வேப்பிலைக்கொத்துக்களும், அலங்காரத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும். ஊரின் முக்கியபுள்ளிகள் இரவலாகக் கொடுத்த பெற்றோல் மாக்ஸ் லைற்றுக்கள் வெளிச்சம் தரும்.

நவராத்திரி ஆரம்ப நாளன்று கும்பத்துமால்களின் ஒரு அந்தத்தை கர்பக்கிரகம் போல அமைத்திருப்பார்கள். அதனுள்ளே கும்பங்கள் வைக்கப்படும். பெரியகுடங்களின் உள்ளே செப்புத் தகடுகளில் எழுதிய யந்திரங்களை வைத்து, நெல்லால் நிரப்பி, வேப்பிலை வைத்து, மேலே தேங்காய் வைத்து, கும்பங்கள் வைக்கப்படும். தலமைப்பூசாரி கும்பங்களை ஸ்தாபிப்பார். அன்றைய தினமே நேர்த்திக்காக கும்பமெடுப்பவர்களுக்கான காப்புக்கட்டுதலும் நடைபெறும். இப்படிக் கும்பமெடுப்பவர்கள். அந்த நவராத்திரி காலங்களில் விரதம் இருப்பார்கள். கும்பத்துமால்களில் நடைபெறும் பூசைகாலங்களில் இவர்கள் கலை (உரு) ஆடுவார்கள். அல்லது ஆடவைக்கப்படுவார்கள்.அப்படி ஆடுகின்ற அவர்களை ‘ பூமரம் ‘ என அழைப்பார்கள்.

கும்பத்துமால்களில் எனைக்கவர்ந்த விடயம், அங்கே நடைபெறும் கிராமியக்கலைநிகழ்வுகள். பறையும், உடுக்கும், பிரதான வாத்தியங்கள். மாரியம்மன் தாலாட்டுப்பாடல்கள் முக்கிய இசை நிகழ்ச்சி. கரகாட்டம் பிரதான ஆடல் நிகழ்ச்சி. இப்படியான நிகழ்ச்சிகளுடன் நவராத்தி நாட்களின் இரவுகள் ஆரம்பமாகும். சுமார் பத்துமணியளவில், பூசைக்குரிய கொருட்கள், உபயகாரர் வீட்டிலிருந்து, ஊர்வலமாக பறைமேளம் அதிர அலங்காரமாக எடுத்து வரப்படும். இதை ‘மடைப்பெட்டி ‘ எடுத்து வருதல் என்பார்கள். இந்த மடைப்பெட்டியின் வருகையோடு, ஊர்முழுவதும், கும்பத்துமாலுக்கு வந்துவிடும். மடைப்பெட்டியில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் படையல் செய்யப்பட்டதும், பூசை ஆரம்பமாகும்.

உச்சஸ்தாயில் பறை ஒலிக்கப்பூசை ஆரம்பமாகும். நேர்த்திக்குக் கும்பமெடுப்பவர்கள் குளித்து முழுகி, துப்பரவாக வந்து முன்னணியில் நிற்பார்கள். பறை அதிர அதிர அவர்கள் உருக்கொண்டு ஆடுவார்கள். அவர்களைவிட வேறுசிலரும் ஆடுவார்கள். ஆடத்தொங்கிய அவர்களை மஞ்சள் நீரால் நனைப்பார்கள். அவர்கள் ஆடிஆடி உச்சம் நிலைபெறும்போது, கும்பங்கள் வைக்கப்பட்டிருக்குமிடத்துக்குச் சென்று பூசாரியிடம், தாங்கள் என்ன தெய்வத்தின் கலையில் வந்திருக்கின்றோம் என்பதைச் கொல்லி, அந்தத் தெய்வங்களுக்குரிய அணிகலன்களை அல்லது ஆயுதங்களை விரும்பிக் கேட்பார்கள். பூசாரியார் அவர்கள் கேட்பதைக்கொடுத்தால் மகிழ்ச்சி முக்த்தில் தெரியப் பெற்றுக் கொள்வார்கள்.

தம்பலகாமத்துக் கும்பத்துமால்களில் காளிராசா அண்ணன் கலையாட வந்தாலே தனிக்களை பிறந்துவிடும். சனங்களின் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் பல இருக்கும். ஏனெனில் காளிராசா அண்ணையில் பலவித தெய்வக்கலைகள் உருவெடுத்து ஆடும் என்பார்கள். மாரியம்மன், வீரபத்திரர், அனுமான்...எனப்பல தெய்வங்களின் உருக்களில் ஆடுவார் எனச் சொல்வார்கள். மாறி மாறி பல உருக்களில், அவர் ஆடும்போது செய்யும் செயல்களை வைத்து அந்த நேரத்தில் என்ன கலையில் ஆடுகின்றார் எனச்சொல்வார்கள். அனுமான் கலையென்றால், குரங்குபோல் ஒருவிதநடையும், வாழைப்பழம் சாப்பிடுதல் போன்ற சேட்டைகளும் நடைபெறும். வீரபத்திரர் கலையில் ஆடினால், சாட்டைக்கயிறு வேண்டுவார். அவர் மாரியம்மனாகப் பாவனைப்பண்ணி ஆடுவதை மக்கள் வெகுவாக ரசிப்பார்கள். உண்மையில் அந்த ஆட்டம் பார்க்க அழகாகத்தான் இருக்கும்.

சிலம்பு மாதிரியான கைவளையல்களை கைகளில் அணிந்துகொண்டு, வேப்பிலையை ருசித்துக்கொண்டு, கோலாட்டக் கம்புகளை கைகளில் வைத்துக்கொண்டு, மாரியம்மன் தாலலாட்டுக்கு ஆடுவார் ஒரு ஆட்டம். மிக அருமையாக இருக்கும். இந்த இடத்தில் மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில் கெட்டிக்காறரான காத்தமுத்து அண்ணையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். காத்தமுத்து அண்ணனுக்கு நல்ல குரல். அத்துடன் நன்றாக உடுக்கு அடிப்பார். அவர்பாட, அவருடன் இணைந்து உடுக்கும் பாடும். அவ்வளவு இனிமையாக இருக்கும். காளிராசா அண்ணர் மாரியம்மன் கலையில் ஆடத் தொடங்கினால், காத்தமுத்து அண்ணர் கூட்டத்துக்குள் எங்கிருந்தாலும், காளிராசா இழுத்து வந்து முன்னுக்கு கொண்டு வந்து விட்டு பாடச்சொல்வார். அவார்பாட, காளிராசா அண்ணர் ஆடும் ஆட்டம் ரொம்ப அழகாக இருக்கும்.

இந்தக் கலைஆடல் நடந்து கொண்டிருக்கும் போது, மாந்திரீகம் படித்தவர்கள் கலைஆடுபவர்களின் ஆடல்களை மறைந்து நின்று தங்கள் மாந்திரீகசக்தியால் கட்டுபடுத்துவார்கள். அப்படிக்கட்டுப்படுத்தும்போது, கலைஆடுபவர்கள் ஆட்டம் நிறுத்தி மயங்குவார்கள். உடனே அந்த கும்பத்துமாலின், தலமைப்பூசாரி வந்து மாற்று மந்திர சக்தியால் அந்த மந்திரக்கட்டை அவிழ்ப்பார். அப்படி அவிழ்க்கப்பட்டதும், கலை ஆடுபவர் மீளவும் ஆடுவார்.. இப்படியான மந்திரப் போட்டிகளுடன் தொடரும், கலை ஆட்டங்கள் நள்ளிரவு தாண்டியும் நீளும்..

தொடர்ந்து ஒன்பது நாட்களும், கும்பத்து மால்களில் நடைபெறும் இந்த விழாக்கள், பத்தாம் நாள் இரவில், கும்பங்கள் கரகங்களுடன், ஊர்வலமாக ஊரைச்சுற்றி வந்து, பதினொராம் நாள் காலையில், ஆற்றில் கும்பங்கள் சொரிவதுடன் நிறைவுபெறும். தென்தமிழீழத்தின் வித்தியாசமான நவராத்திரி விழாக்கள், அம்மண்ணின் கிராமியக் கோலங்களாக நடைபெற்று வந்தன. இந்தக்கோலங்கள் எல்லாம் சிதைந்த மண்ணின், இன்றைய கோலங்கள் அவலங்களாகவே உள்ளன. காளிராசா அண்ணையும், காத்தமுத்து அண்ணையும், அவர்களின் கலைவடிவங்களுடனேயே இன்றும் என் கண்ணில் தெரிகின்றபோதும், இவர்களின் இருத்த்ல் என்பது.................. ?

16 Comments:

 1. Anonymous said...
  மலைநாடான்,
  பழைய ஞாபகங்களைக் கொண்டு வருகின்றீர்கள். இந்த நவராத்திரியின் கடைசி நாளிலே திருகோணமலையிலே கோவிலிருந்து கோவிலுக்குப் போகும் கும்பங்கள் மெல்லியதாக ஒரு மழை பெய்ந்து குளிர்ந்திருக்கும் இக்காலையிலே ஞாபகம் வந்தன. நீங்களும் எழுதியிருக்கின்றீர்கள். போன ஆண்டு தமிழ்நெற்.கொம் இக்கும்பம் போகும் பழக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே திருகோணமலையிலே பிரித்தானியப்படையின்கீழிருந்த சீக்கியர்களால்(?) அறிமுகப்படுத்தப்பட்டதென ஒரு குறிப்பினைத் தந்திருந்தது. இது பற்றி ஏதேனும் தெரியுமா?

  -/பெயரிலி.
  Anonymous said...
  very interesting view about Kumpathumal. I recall my childhood memory in Trincomalee. fine
  யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  மலைநாடர்!
  மால் எனும் சொல்லையும்; அதன் அமைப்பையும் தெரியும்; தலைவாசலெனும் அமைப்பிலும் பதிவானது. ஓய்வுக்கும்,மா,தூள் இடிக்கவும் ;அந்த அமைப்பைப் பாவிப்பர்.
  கும்பத்துமால் முதல் முதலாக உங்கள் வாயிலாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் இந்தச் சன்னதம்;கலை வருவதெல்லாம் கோவில்களில் சாமிக்குத் தீபங்காட்டும் போது; துள்ளிக் கொண்டு முன்னுக் கோடுபவர்கள் மூலம் பார்த்துள்ளேன்.
  அந்த நாளில் என் கூட்டாளி ஒருவன் சொல்வான்; வசதியாக முன்னுக்கு நின்று சாமிபார்க்கத் தான் ,இந்தச் சன்னதமும்,கலையுமென்பான். சிலசமயம் சரி போலும் இருக்கும். ஏனென்றால்; சாமி வாகனத்தில் வைத்துத் தூக்கியதும், சன்னதம் இறங்கிவிடும்.
  பறை;உடுக்கு,மாரியம்மன் தாலாட்டு....நினைவில் நிற்கிறது.
  யோகன் பாரிஸ்
  சின்னக்குட்டி said...
  வணக்கம் ...சேரநாட்டு அரசனால் பல கண்ணகி கோயில்கள் கிழக்கில் கட்டபட்டதாகவும் ...கண்ணகி வழிபாடு வடக்கில் அதிகமல்லாத ஒன்று கிழக்கில் இருக்கிறது.... நீங்கள் அறிமுக படுத்திய ஆரிய பண்பாடற்ற கிழக்கில் நடைபெறும் நவராத்திரி விழா தான் உண்மையான திராவிட பண்பாட்டு விழாவாக இருக்கும் என்றும் நினைக்கிறன்....நீங்கள் சொல்வதை போன்று கேரளத்திலும் கொண்டாடுவர்கள் என்று நினைக்கிறன்..... அதை தெரிந்தவர்கள் யாராவது தான் சொல்லவேண்டும்.

  மால்- பெரிய கொட்டில்..யாழ்ப்பாணத்திலும் பாவிப்பதுண்டு...
  மலைநாடான் said...
  பெயரிலி!

  உண்மை. அந்தக்காலைகளில் இதமான ஒரு குளிர் இணைந்திருக்கும். அதுசரி திருமலையில் கும்பத்துமால் என்றொரு கோயிலும் இருந்ததாக ஞாபகம். இல்லையோ?

  தங்கள் பகிர்தலுக்கு நன்றி!
  Anonymous said...
  மலைநாடான். கும்பத்து மால் பிள்ளையார் திருமால்வீதிக்கும் பிரதானவீதிக்குமிடையிலேயிருக்கிறது. சும்மா நாட்களிலே கல்; நவராத்திரி நாட்களிலே கிடுகும் வேட்டியும் சுற்றின பெரிய கோவில்.
  வசந்தன்(Vasanthan) said...
  நல்ல சுவாரசியமாக இருக்கிறது.
  'பெயரிலியையே' பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள். ;-)

  //கும்பத்து மால் பிள்ளையார் திருமால்வீதிக்கும் பிரதானவீதிக்குமிடையிலேயிருக்கிறது. சும்மா நாட்களிலே கல்; நவராத்திரி நாட்களிலே கிடுகும் வேட்டியும் சுற்றின பெரிய கோவில். //
  ;-) ;-)

  சின்னக்குட்டி said...
  //மால்- பெரிய கொட்டில்..யாழ்ப்பாணத்திலும் பாவிப்பதுண்டு... //

  உப்பளத்தில உப்புக்குவிச்ச பிறகு மேலகிடுகால வேயப்பட்டிருக்கும். அந்த நீளக்கொட்டில்களையும் 'மால்' எண்டு சொல்லிறது ஞாபகம் வருது.
  வெற்றி said...
  ம.நா,
  நல்ல பதிவு. மிக்க நன்றி.
  மலைநாடான் said...
  யோகன்!

  // இந்தச் சன்னதம்;கலை வருவதெல்லாம் கோவில்களில் சாமிக்குத் தீபங்காட்டும் போது; துள்ளிக் கொண்டு முன்னுக் கோடுபவர்கள் மூலம் பார்த்துள்ளேன்.
  அந்த நாளில் என் கூட்டாளி ஒருவன் சொல்வான்; வசதியாக முன்னுக்கு நின்று சாமிபார்க்கத் தான் ,இந்தச் சன்னதமும்,கலையுமென்பான். சிலசமயம் சரி போலும் இருக்கும். ஏனென்றால்; சாமி வாகனத்தில் வைத்துத் தூக்கியதும், சன்னதம் இறங்கிவிடும் //

  உங்களைப் போன்றே நானும், கும்பத்துமால்களில் கலையாடுவதைப்பார்க்கும் முன் எண்ணியதுண்டு. கும்பத்து மாலில் நடைபெறும் கலையாட்டங்களைப் பார்த்தபின், அது ஒரு ஒலியலை அதிர்வின் தாக்கம் என்பதுவே என் எண்ணப்பாடாகவுள்ளது.

  தங்கள் வருகைக்கு நன்றி!
  மு. மயூரன் said...
  மலைநாடான்,

  மிக நல்ல ஆவணப்படுத்தல்.

  நவராத்திரி என்றால் எனக்கு பேச்சுப்போட்டிதான் நினைவுக்கு வரும்.

  கும்பம் ஆடுவது கும்பத்தோடு சுற்றுவது போன்ற அனுபவம் எனக்கு இல்லை. நான் அவ்வளவு சமூகமயமாகியிருக்கவில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன். ச்ந்ந்திக்கு சந்ந்தி நின்று சுற்றி சுற்றி ஆடுவார்கள்.

  இந்ந்த வழக்கம் போத்துக்கேயர் காலத்தில் வந்ந்தது என்று பொன்னம்பலம் மிஸ் கூறி கேட்டதாய் நினைவு.

  கும்பம் ஆடுபவர்களுக்கு போர்த்துக்கேயர் காலத்தில் அரிசி பருப்பு வழங்கப்பட்டதாயும் ஒரு செவிவழி செய்தி உண்டு.


  போர்த்துக்கேய அல்லது ஐரோப்பிய கலாசார கூறுக்ளள் இதில் இருக்கிறதா என வியந்ந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ஐரோப்பிய படைகளில் உள்ள இந்ந்தியர்கள் பற்றி சொல்லும்போது புதிய வெளிச்சம் கிடைக்கிறது.

  மட்டக்களப்பில் இந்த வழக்கம் இருக்கிறதா என தெரியவில்லை. இல்லை எனில் நிச்சயமாக இந்த வழக்கம் திருக்கோணமலையில் மட்டுமே உள்ளது. ஐரோப்பியர் காலத்து கலாசாரபரிமாற்றத்தின் விளைவாய் வந்தது.

  கும்பத்துக்கு அடுத்தநாள் அல்லது அன்றைக்கு மழை வரும். நான் திருக்கோணமலையில் இருந்த காலம் முழுவதும் இவ்வாறு மழை வந்தது. தொடர்ச்சியாக நிகழ்ந்த தற்செயல் நிகழ்வாக இருக்கலாம்.

  கலையை கட்டுவது , அவிழ்ப்பது என்கிற போட்டி தொடர்பாக நீங்கள் சொன்ன குறிப்பு மிக மிக முக்கியத்துவம் மிக்கதாய் படுகிறது. குறிப்பாக தம்பலகாமத்தில் இந்த வழக்கம் இருந்ததாய் கூறுகிறீர்கள்.

  மந்திரம்-யந்திரம் என்கிற அறிவியல் கிழக்கு மாகாணத்திற்கு சிறப்பானது.

  இன்றைய "மனத்தொழிநுட்பக்கருவிகள்" என்கிற அறிவியல் ஆய்வுத்துறையில் இதுபற்றி நிறைய தேடப்படுகிறது.

  "மனத்தொழிநுட்பக்கருவிகளை" பயன்படுத்திய, மிக சாதாரணமாக பயன்படுத்திவந்த பாரம்பரியம் கிழக்கு மாகாணத்திற்கு இருக்கிறது.

  அத்தோடு யாழ்ப்பாணத்தில் so called ஆரிய கலாசார கூறுகள் ஆதிக்கம்செலுத்த கிழக்கில் so called திராவிட கலாசார கூறுகள் ஆதிக்கம் செலுத்துவது மிகத்தெளிவான உண்மை.
  எடுத்துக்காட்டுக்கு யாழ்ப்பாணத்தில் தந்தைவழியாதிக்க சாதி முறை இறுகிப்போயிருக்க, கிழக்கில் தாய்வழியாதிக்க குடி முறை வழக்கத்திலிருக்கிறது. குடி முறை, கிழக்கின் தாய்வழிச்சமுதாய மரபுகள், மனத்தொழிநுட்பக்கருவிகள் போன்றன ஆழமான ஆய்வுக்குரியன.

  இந்த ஆய்வுகளில் ஈடுபடிருந்த நண்பர்கள் பலர் கருணாவின் பிரிவு என்கிற பலத்த அரசியல்-கலாசார அடிக்கு பிறகு மவுனமாகிப்போயினர்,
  துளசி கோபால் said...
  நல்ல பதிவு.

  தலைப்பைப் படிச்சதும் ஷாப்பிங் Mall னு உள்ளே வந்தேன்:-)
  Chandravathanaa said...
  மலைநாடான்.
  நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்.
  திருகோணமலையின் பல பண்பாட்டுக் கோலங்களை உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
  நன்றி
  மலைநாடான் said...
  மயூரன்!

  நான் எழுதும் மதசம்பந்தமான பல பதிவுகளில் சுட்டும் விடயங்கள் குறித்து எனக்குள்ளும் பல கேள்விகள் இருக்கின்றன. இருப்பினும் ஒரு சமூகத்தினை ஆவனப்படுத்தல் என்பதை முன் வைத்தே அவற்றை எழுதி வருகின்றேன். ஏனெனில் ஆவனப்படுத்தலின் அவசியம் இப்போது உணரப்படுகிறது.

  கும்பத்து மால்களை முழுமையாகப் போர்த்துக்கீசரின் வருகையோடு தொடர்புபடுத்தி பார்க்க முடியவில்லை. பெயரிலி இதைப் போர்த்துக்கீசருடன் வந்த சீக்கியர்கள் மூலம் வந்ததென அறிந்ததாகக் குறிப்பிடுகிறார். அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் சீக்கியர்களிடம் சக்தி வழிபாடு இருந்ததா என்பபது பற்றித் தெரியவில்லை.
  ஆயினும் இந்தக்கும்பச் சுற்றுக்களில் பாவிக்கப்படும் கும்ப அலங்காரம் தமிழ்க்கலாச்சார வடிவமைப்புக்கு மாறுபட்டதாகவே காணப்படுகிறது. (வடதமிழீழத்தில் அத்தகைய வடிவில் ஒருபோதும் கும்பங்களைக் கண்டதில்லை. முடிந்தால் இன்றிரவு இக்கும்பங்களின் வடிவமைப்பினை வரைந்து, பதிவில் இணைக்க முயற்சிக்கின்றேன்.) அதன் வடிவமைப்பில் மட்டும் சிறிது வட இந்தியத்தன்மை காணப்படுகிறது என்பதே என் அபிப்பிராயம்.


  கும்பம் ஆடுபவர்களுக்கு போர்த்துக்கீசர் கலைஞர்கள் எனும் ரீதியில் உதவி வழங்கியிருக்கலாம்.

  திருகோணமலையை அண்மித்த மட்டக்களப்புப் பிரதேசங்களிலும் இந்தப் பழக்கம் இருந்ததாக அறிந்துள்ளேன்.

  //மந்திரம்-யந்திரம் என்கிற அறிவியல் கிழக்கு மாகாணத்திற்கு சிறப்பானது.

  இன்றைய "மனத்தொழிநுட்பக்கருவிகள்" என்கிற அறிவியல் ஆய்வுத்துறையில் இதுபற்றி நிறைய தேடப்படுகிறது.

  "மனத்தொழிநுட்பக்கருவிகளை" பயன்படுத்திய, மிக சாதாரணமாக பயன்படுத்திவந்த பாரம்பரியம் கிழக்கு மாகாணத்திற்கு இருக்கிறது.
  //

  இது ஒரு மிகமுக்கிய விடயம். இதைப்பற்றி எழுதவேண்டும் எனும் எண்ணம் என்னிடம் இருந்தபோதும், இதைக் கிண்டலாக எடுத்துக் கொள்வார்களோ என எண்ணிப் பேசாதிருந்துவிட்டேன். இதுகுறித்து நிரம்பக் கதைக்க வேண்டியுள்ளது. ஆகவே விரைவில் விரிவான ஒரு பதிவு எழுதுகின்றேன்.

  'மனத் தொழிநுட்பக் கருவிகள்' இந்தத்துறைக்கு நல்லதொரு தமிழ் சொற்பதம். இதுவரையில் நான் அறிந்ததில்லை. இதன் ஆங்கில சொற்பதத்தையும் முடிந்தால் தாருங்கள்.

  // குடி முறை, கிழக்கின் தாய்வழிச்சமுதாய மரபுகள், மனத்தொழிநுட்பக்கருவிகள் போன்றன ஆழமான ஆய்வுக்குரியன.
  //

  நிச்சயமான உண்மை. நீங்கள் இறுதியாகக் குறிப்பிட்டுள்ளது கவலைக்குரிய விடயம்

  தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்தலுக்கும் நன்றிகள்.
  மலைநாடான் said...
  சின்னக்குட்டி!

  உங்கள் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடுண்டு. தென் தமிழீழத்திலும், சிங்களப்பகுதிகளிலும், கேரளத்தின் கலாச்சாரத்தாக்கங்கள் பலவுள்ளன. அவைபற்றி பிறிதொரு தருணத்தில் விரிவாக பார்ப்போம்.

  நன்றி!
  மலைநாடான் said...
  //'பெயரிலியையே' பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள். ;-)//

  வசந்தன்!

  கும்பங்களோட சுத்தித் திரிஞ்ச பெயரிலி போடாமல் வேற ஆர் போடிறது.:))

  வெற்றி, துளசி, அனானி!
  தங்கள் வருகைக்கு நன்றி.
  மலைநாடான் said...
  சந்திர வதனா!

  ஏதோ நம்மால் முடிந்தது.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Post a Comment
 

நன்றி, வணக்கம்.