பாலையூற்று

மணம் முடித்து மகிழ்வாகக் கழிந்த ஓராண்டில், மனம் ஓப்பிய வாழ்க்கைகுப் பரிசாக ஒரு குழந்தை. எதிர்காலம் நோக்கிய தேடலில், மணாளன் திரைகடலோடப் புறப்படுகின்றான். அவன் போன பொழுதுகளில், உறைநிலத்தில் போர் வெடிக்கிறது. போரின் வெம்மையால் யாவரும் இடம் பெயர்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் மட்டும், முகவரியைத் தான் தொலைத்தால், கடல்கடந்த கண்ணாளன் தொடர்பு கொள்ள முடியாது போய்விடுமே எனக் காத்திருக்கின்றாள்.

கடல் கடந்து சென்ற கணவன், தான் புறப்பட்ட பொழுதுகளில் போர் வெடித்ததையும், மக்கள் இடம்பெயர்ந்ததையும் செய்தியாக அறிகின்றான். செய்வதறியாது தவிக்கின்றான். அவளும் பிள்ளையும் இருக்கின்றார்களா? இறந்துவிட்டார்களா? இடம்பெயர்ந்துவிட்டார்களா? எதுவும் தெரியாமல், திணறுகின்றான். தொடர்புகொள்ள வழியேதும் கிடைக்கவில்லை. காத்திருப்பும் தேடலும் தொடர்கிறது. காலம் கழிகின்றது. ஒரு நாளல்ல இருநாளல்ல, ஒன்றல்ல, ஒன்பதல்ல. பதினைந்து வருடங்கள்.

நாட்டில் ஏற்பட்ட தற்காலிக சமாதானம் தந்த தைரியத்தில், தாய் நாட்டிற்குத் திரும்பி வரும் அவன், தாரத்தையும், தன்வாரிசையும், கண்டுகொள்கின்றான். கட்டியணைத்துக்கொள்கின்றான். கொண்டவள் குமுறுகின்றாள், குழந்தையாய் விட்டுச்சென்ற பிள்ளை, இளைஞனாய் எட்ட நிற்கின்றான்.

கேட்கக் கேட்க, என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. என்ன கேட்டக்க கேட்டகவா என்கிறீர்களா?. ஆம் அப்படித்தான். ஏனெனில் இந்தக்கதை ஏதோ சினிமாவில் பார்த்ததல்ல, பத்திரிகையில் படித்ததல்ல. கதையும், கதைமாந்தர்களும், களமும் கூட, கற்பனையல்ல. இவ்வளவும் உண்மை. என் தேசத்தில், நானிழந்த மருதத்தில், என்னோடு படித்த என் பள்ளித் தோழியின் வாழ்க்கைச்சோகமிது. சென்று, பார்த்து, வந்து சொன்னவன் என் சக நண்பன். சொன்னவனும் அழுதான், கேட்டவனும் அழுதேன். இருக்காத பின்ன..

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், மறுநாள் பண்டதரிப்பு பஸ்நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லிப் பிரிந்திருந்தோம். அந்த மறுநாள், இருபத்தைந்து ஆண்டுகளின் பின், புலத்தில் தொலைபேசி வழியாக சென்ற வாரத்தில் வந்தது. தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் லுக்கு நன்றி.

இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கிய உரையாடல் அதிகாலை நான்கு மணிவரை நீண்டது. தொடக்கத்தில் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியும், பிள்ளைகளும், தூக்கக் கலக்கத்தில் எழுந்து சென்றுவிடவும் , எங்கள் கதை, வெளிநாட்டு, வேகவீதியென நீண்டு விரிந்தது.

சென்ற சில வருடத்தின் முன், தாயகம் சென்ற நினைவுகளையும் மீட்டியபடியே, ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக, பலதும் சொன்னான். எத்தனை நினைவுகள்... எததனை நினைவுகள். பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து கணவனைக் கண்டுகொண்ட தோழி, பதினெட்டாண்டுகளாகியும், கைதான கணவன் வராத சோகத்தை, மறைத்தபடி வாழும் மற்றொரு சகோதரி. மணவாழ்க்கை துவண்டு மரித்துக்கொண்ட நண்பன், திசைமாறிப்போன மற்றுமொரு நண்பன், என எத்தனை கதைகள். அத்தனை மணிகளிலும் சோகம், சுகம், ஆச்சரியம், என எத்தனை அனுபவிப்புக்கள்.எல்லாவற்றிலும் நிரம்பிய சோகமாய் என்னை வருத்தியது, இன்னமும் வருத்துவது, பாலையூற்றுக்குப் போனாயா எனக் கேட்ட போது, அவன் சொன்னது.

பாலையூற்று என்ற அழகிய கிராமத்தில், சின்னஞ்சிறியதாய் ஒரு கிறீஸ்தவ தேவாலயம். அழகான அச்சூழலில், பின்புறத்தே கல்வாரி மலைக்காட்சி கவித்துமாய் காட்சிதரும். நான் கிறிஸ்தவனாக இல்லாத போதும், அந்த ஆலயமும், சூழலும், என்னுள் நிறைந்துபோயிருந்தது. போகும் வேளையெல்லாம் அந்தப்புற்தரையில் புரண்டு மகிழ்ந்திருக்கின்றோம். பாடிப்பரவசப்பட்டிருக்கின்றோம். உரையாடி உளம் மகிழ்ந்திருக்கின்றோம்.

சோலையென இருந்த அந்தச் சூழலிலே, காடளந்து வரும் இனிய காற்றினிலே, எமை மறந்து நண்பர்கள் நாம் இருந்து மகிழ்ந்த அந்த நிலத்தினிலே, போர் மூண்ட இதுவரை காலத்திலும், ஒன்றாக, இரண்டாக, நானுறுபேரை வெட்டிச் சாய்திருக்கிறார்கள். ஆண், பெண், இளைஞன், யுவதி, குஞ்சு, குருமான், என்ற பேதம் எதுவுமில்லாது கொன்றிருக்கின்றார்கள். அத்தனை பேரும் தமிழர்கள் ....

நண்பர்களாய் நாம் நடந்து திரிந்த இடங்களையெல்லாம், நினைவுகள் சுமந்து திரிந்திருக்கின்றான். வேவுக் கண்களும், காவுக்கருவிகளும், கண்காணித்த போதும், ஏதோ ஒருவித வேகத்திலே, எல்லாவிடமும் பயணித்திருக்கிறான். பயணப்பின் வழிபோதலில், பாலையூற்றும் வந்தபோது, பயங்கரம் தரும் இக்கதைகளைக் கேள்விப்பட்டிருக்கின்றான். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலரும், அழிந்துபோன அவ்விடத்தில், முன்னைய பசுமையைக் காணமுடியுமா என எண்ணியபடியே, ஏக்கமுடன் திரும்பி விட்டானாம். காடளந்துவரும் காற்றில், குருதியின் வாடை குமட்டுமே என்று திரும்பிவிட்டானாம்.

பாவிகளே! பாலையூற்று என்ற அந்தப் பசும்பூமியை, எழிலோடு, என் பிள்ளைக்குக் காட்ட இயலாது செய்துவிட்டீர்களே......

22 Comments:

 1. Anonymous said...
  ம்!
  எங்களுக்குத் தெரியாமலே! இன்னும் எத்தனை வேதனைகள்!; நம்மவரை வேக வைக்கிறது.
  இவை யாவும் கதைகளில் தான் வருமென நம்பினேன். நிசங்கள் அச்சத்தைத் தருகிறது.
  நம்மவருக்கும்;நம்மூர்களுக்கும் வந்த இழப்பு!!கொஞ்சமா?
  யோகன் பாரிஸ்
  Anonymous said...
  வாழ்வின் இன்னொரு புறம் இருளை அனைவரும் உணர முடியும். ஆனாலும் சொந்த மண்ணை வாழ்நாளுக்குள் வந்தடைய முடியுமா என ஏங்கும் ஈழமக்களின் சோகம் வெறும் இருளல்ல.காரிருளுக்குள்ளிருந்து ஒளியைத் தேடும் நிரந்தரப் பயணம்...

  என்றேனும் ஒரு நாள் ஒளி வருமென்ற நம்பிக்கை வெளிச்சத்தில் நிரந்தரமாய் உலகமெங்கும் அகதிக்கூட்டமாய் அலைந்து திரியும் அவலங்களை மற்றவர்கள் முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியுமா என்றே கூட தெரியவில்லை.
  மலைநாடான் said...
  யோகன்!

  உண்மைதான், நிசங்கள் அச்சத்தைத் தருகின்றன, ஆனாலும் நம்பிக்கைகள்தானே நமது பலம்.

  நன்றி!
  மலைநாடான் said...
  //உலகமெங்கும் அகதிக்கூட்டமாய் அலைந்து திரியும் அவலங்களை மற்றவர்கள் முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியுமா என்றே கூட தெரியவில்லை//

  சிந்தாநதி!

  சரியாகச் சொன்னீர்கள்.

  நன்றி
  Anonymous said...
  ஓநாய் துரத்திய மான்கிளையாய்
  உலமெல்லாம் விரவிக்கிடக்கிறது நம்
  தமிழினம் அதில் ஒவ்வெருவருக்கும்
  ஒரு கதையுண்டு.

  சிந்தாநதியின் வார்த்தைகளே நிஜமாய்

  வன்னிப்பயல்
  ----------
  வன்னியன் said...
  நிகழ்வையும் அனுபவத்தையும் பதிவாக்கியதற்கு நன்றி.

  இப்போதெல்லாம் கொலை செய்யப்பட்டவர்களது எண்ணிக்கையை கைக்கணக்கிலேதான் சொல்ல வேண்டியுள்ளது.
  கானா பிரபா said...
  மனசு கனத்தது, இது தொடரும் சரித்திரம்
  மலைநாடான் said...
  வன்னிப்பயல்!

  நாம் திரிந்த வயல்களும், நாம் திரிந்த வனங்களும், நாம் துயின்ற குடில்களும், நமக்கென்று இல்லாத போனது ஒருபுறம். எங்கள் நிலத்தில் அந்நியர் குடிகொள, நாம் அகதிகளாகிப்போனது பெருஞ்சோகம்.நினைக்க நினைக்க..
  மலைநாடான் said...
  வன்னியன்!

  நீண்ட காலத்திற்குப் பின் வந்திருக்கின்றீர்கள்:)

  வருகைக்கு நன்றி
  மலைநாடான் said...
  பிரபா!

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
  கொழுவி said...
  இந்த துயரங்களைப் பதிவிட பாலை என்கிற உங்களுடைய அடுத்த வலைப்பதிவை தொடங்குங்கள்.
  இளங்கோ-டிசே said...
  :-((((
  மலைநாடான் said...
  கொழுவி!

  நீரும் ஒரு பெரிய ஆள்தான்:). உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
  மலைநாடான் said...
  டி.சே!

  வருகைக்கு நன்றி.
  செல்லி said...
  இனி விடிவு நிச்சயம் வரும்.நம்பிக்கைதானே வாழ்க்கை.
  பாரதி தம்பி said...
  உலக வீதிகளில் வாழ்வெங்கும் அகதிகளாய் திரியும்படி, ஒரு இனத்தையே மாற்றிவிட்டிருக்கிறது காலம்.இருந்ததை விட்டுவிட்டு அகதியாய் உயிர் பிழைக்க ஓடிவந்த தமிழினம்,இன்று இழந்ததை நினைத்து இருக்கும் உயிரையும் இழந்துகொண்டிருக்கிறது.ஆனால் இது தொடர் கதையல்ல...விதைப்பதற்கு ஒரு காலம் வந்தால் அறுப்பதற்கும் ஒரு காலம் வரும்..
  மலைநாடான் said...
  செல்லி!

  விடிவு வரும் எனும் அந்த நம்பிக்கை நிறையவே உண்டு. வருகைக்கு நன்றி.
  மலைநாடான் said...
  ஆழியூரான்!

  நிச்சயம் அந்தக் காலம் வரும் என்ற நம்பிக்கையோடே நாட்கள் நகர்கின்றன..

  வருகைக்கு நன்றி.
  Kannabiran, Ravi Shankar (KRS) said...
  ம்ம்ம்ம்ம்...
  பாலையூற்று....
  பெயரே இவ்வளவு அழகாக இருக்கிறது!

  வயிற்றில் பாலை வார்த்தாய் என்பார்கள்! அதை நினைவுக்குக் கொண்டு வரும் பாலையூற்றில், தீயை ஊற்றினால் எப்படி?

  என்று தணியும் இந்த தாகம்?
  என்று மடியும் இந்த சோகம்?
  குமரன் (Kumaran) said...
  படித்த எனக்கும் கண்ணீர் திரண்டது மலைநாடான்.
  மலைநாடான் said...
  கண்ணபிரான் ரவிசங்கர்!

  எழுத்தைப் படித்த உங்களுக்கே இவ்வளவு தாக்கமாயின், அந்த நிலத்திலேயே புரண்டெழுந்த எங்களுக்கு...?
  மலைநாடான் said...
  குமரன்!

  வருகைக்கு நன்றி:)

Post a Comment
 

நன்றி, வணக்கம்.