ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாமே
Published by மலைநாடான் on Tuesday, April 01, 2008 at 8:04 AMபாடசாலைக் காலத்தில், ஏப்ரல் முதலாம் நாள் ஒரு பகிடிவதை நாளாக எமக்கிருந்தது. முதல் நாளே யார் யார் எனத்திட்டமிட்டதன்படி, காலையில், பகிடிவதை தொடங்கும். வெள்ளைச்சீருடையில், பேனா மையைத் தெளிப்பதுதான் அது. குறித்த நபருக்கு தெளித்தபின் அதைப்பார்த்து கேலிசெய்து சிரிப்பதுதான் 'ஏப்ரல் பூல்' விளையாட்டாக இருந்தது. பெரிதாக ஒன்றுமில்லையென அப்போது தெரிந்தாலும், அறுவடை முடிந்த வயல்களில், கொட்டிக்கிடக்கும் நெற்கதிர் பொறுக்கி, நெல்லாக்கி விற்று வரும் பணத்தில் பள்ளிச்சீருடை ஒன்றை வாங்கியணிந்துவரும் ஏழை மாணவனுக்கு இது எவ்வளவு வலியைத் தந்திருக்கும் என இப்போது புரிகிறது.
ஒரு காலத்தில், ஏப்ரல் மாதத்தை வருடத்தொடக்கமாகக் கொண்டிருந்த, ஐரோப்பிய சமூகத்தில், ஜனவரியை வருடத்தொடக்கமாகக் கொள்ளும் புதிய நாட்காட்டிமுறை அறிமுகமாகியபோது, புதிய முறைக்கு மாறாதிருந்த பழமை வாதிகள் ஏப்ரல் முதல்நாளை வருடத்தொடக்கமாகக் கொண்டாட, அதைப் புதிய மாற்றம் கண்டவர்கள், முட்டாள்கள் தினம் என எள்ளி நகையாடியதன் நீட்சி, காலனியாதிக்கத்தால் எங்களிடமும் தொற்றிக்கொண்டது. தொடங்கியவர்கள் அதை விட்டுவிலகிச் செல்ல, நாம் தொடர்கிறோம்...
ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் என என்னளவில் நினைவு கொள்ள 1987 ஏப்ரல் முதலாந்திகதிக்குச் செல்ல வேண்டும். அந்தக்காலப்பகுதி, எங்கள் நிலத்தில் அமைதி நிலவியதாகச் சொல்லப்பட்டகாலம். அமைதிகாக்க வந்தவர்கள் எங்கள் தெருக்களில் காலையும் மாலையும் நடைபயின்றதால், அகிலத்தில் அவ்விதம் கற்பிதம் செய்யப்பட்டிருக்கலாம்.
எங்கள் வீட்டினருகே ஒருசிறு மளிகைக்கடை. கடையோடு சேர்ந்தே அதை நடத்துபவர்களின் வீடு. அவர்களுடைய பிள்ளைகளில் ஒரு பெண், சற்று மனவளர்ச்சி குன்றியவள். ஆனாலும் அந்தக்குடும்பத்தில், அயல்களில், அனைவராலும் நேசிக்கபட்ட சிறுபெண். வீட்டோடு சேர்ந்தே கடையுமிருந்ததால், அப்பெண்ணையும் சிலவேளைகளில் கடைகளில் காணலாம். அன்றும் அவள் நின்றிருந்தாள்.
வீதியில் வந்த வீ(ண/ர)ர்களில் ஒருவனுக்கு பீடி குடிக்கும் எண்ணம் வரவே, வீதியருகேயிருந்த கடைக்குச் சென்றான். கடையின் முகப்பில் தாயோடு அப் பெண்ணும் . பீடிகேட்டவனுக்கு, தாய் பீடியெடுத்துக் கொடுத்தாள். பற்றவைக்க தீப்பெட்டி கேட்டான். கடையில் தீப்பெட்டி முடிந்துவிட்டதைச் சொல்லி வீட்டினுள்ளிருந்து எடுத்துவர உள்ளே சென்ற தாயையும், வீதியிலும், கடைமுகப்பிலும், நின்ற கர்ம வீரர்களையும் மாறி மாறிப் பார்த்து விகல்பமின்றி சிரித்தபடியே இருந்தாள் சிறுபெண்.
பீடி வாங்கியபின் கிடைத்த மீதிச் சில்லறையை வைப்பதற்காகவோ என்னவோ, கையிலிருந்த துப்பாக்கியைக் கடை மேசையில் வைத்தான் அவன். சிறுகுழந்தையாய் சிரித்தபடி, " இது சுடுமா..? " எனக்கேட்டாள். என்ன நினைத்தானோ?. துப்பாக்கியைக் கையிலெடுத்துச் சுட்டுக்காட்டினான். துப்பாக்கிச் சத்தம் கேட்டு உள்ளே சென்ற தாய் ஓடிவந்தாள். உணவருந்திக்கொண்டிருந்த தந்தை ஓடிவந்தார். அண்டைவீட்டுக்காறர் ஓடிவந்தனர். ஆனால்... சுடுமா எனக்கேட்ட பேதை மட்டும் பேசவில்லை. வீழந்து கிடந்த அவளின் தலையினடியிலிருந்து செங்குருதி வெளிவரத் தொடங்கிற்று.
வீதியிலிறங்கிய வீனர்கள் வரிசை, நடக்கத் தொடங்க, புகைந்த துப்பாக்கியினைத் துடைத்த பின் திரும்பி அவனும் நடந்தான். என்ன நடந்ததென்று வினவிய சகபாடிக்குச் சிரித்தபடி சொன்னான்..
" ஏப்ரல் பூல்.."
இங்கும் வாசிக்க உண்டு
3 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணா!
கர்நாடகா பெங்களுரிலிருந்து ஏன் ரொம்பவும் சிரமப்படுகிறாய். உன் மின்மடல் முகவரி அனுப்பி வை, என் விபரம் அனுப்பி வைக்கின்றேன்.
முட்டாள்கள் திருந்தவே மாட்டார்களா? :)