பாலைப்பழமும், சில பசுமை (மர) நினைவுகளும்.

Photobucket - Video and Image Hosting
சென்ற வாரத்தில் ஒரு நாள் , தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் பாலைப்பழம்பற்றிக்குறிப்பிட்டார். சங்ககாலத்தையப் பாடல்கள் முதற்கொண்டு, சாமிநாத ஐயர்வரை, தொடர்புபடுத்தி அழகாகச் சொன்னார். அப்படி அவர் சொல்லிய அந்தச் சொல்லழகு ரசிக்கத்தக்கதாக இருந்தபோதும், பாலைப்பழம் குறித்து அவர் சொன்ன தகவல்தான் சற்றுக் குழப்பமாவுள்ளது.
பாலைநிலத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து பெறப்படும் பழமிது. அதனால்தான் அதற்குப் பாலைப்பழம் எனும் பெயர் வந்ததாகச் சொன்னார். ஆனால், இந்தப்பழத்தினை திருகோணமலையில் கோடைகாலத்தில், வீதிஓரப் பழக்கடைகளிலும், சந்தைகளிலும் வாங்கக் கூடியதாகவிருக்கும். பார்வைக்கு, வேப்பங்காயைவிடச் சற்றுப் பெரிதாக, இளமஞ்சள் நிறத்திலிருக்கும். இனிப்பென்றால், அப்படியொரு இனிப்பு. உள்ளே பால்போன்ற திரவம் இருக்கும். அதனாலே அதனைப் பாலைப்ழம் என்று அழைப்பதாகச் சொல்வார்கள். பாலைப்பழத்தை சற்று அதிகமாகச் சாப்பிட்டால், உதடுகள் ஒட்டத் தொடங்கிவிடும். பாலைப்பழத்தை வைத்திருக்கும் பெட்டிகள், கூடைகள் கூட ஒட்டிக்கொண்டிருக்கும். பழம் மட்டுமே சுவையாக இருக்கும்.
திருகோணமலைக் காடுகளிலிருந்து இப்பாலைப்பழம் சேகரிக்கப்பட்டுச் சந்தைக்கு வரும். இந்தப்பாலைப்பழத்தைத் தரும் மரத்திலேயிருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டவன் நான். அதனால்தான் பாலைப்பழம் பாலைவனத்து மரமொன்றிலிருந்து பெறப்படுவது எனச் சொல்லும்போது, என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருந்தது. ஏனெனில் அந்த மரம் அடர்ந்த காட்டுப்பிரதேசத்து மரம். மிக உயரமாகவும், வைரம்பாய்ந்ததாகவும், வளரக் கூடியது. அப்படிப்பார்த்தால் அது முல்லைநிலத்துக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அப்படியென்றால், பாலைப்பழம் என்று வேறு பழங்களேதும் உண்டா.? பாலை நிலத்தில் பேரீந்து தவிர வேறு சுவையான பழங்கள் கிடைக்கின்றனவா? தெரியவில்லை. நண்பர்கள் தெரிந்திருந்தால் சற்றுச் சொல்லுங்கள் கேட்போம்.

சரி, சரி. பாலைமரம்பற்றிக் கதைக்கத் தொடங்கியதில் வேறு சில மரங்கள் பற்றிய நினைவுகளும் வந்தன. அவைபற்றியும் சற்றுப் பார்ப்போம். ஏறக்குறைய பாலைப்பழம் கிடைக்கும் காலங்களில் கிடைக்கும் மற்றுமொரு பழம், வீரப்பழம். இது சற்று உருண்டை வடிவிலிருக்கும். சிகப்பு நிறம். சாடையான புளிப்புத்தன்மையும் இருக்கும். சாப்பிட்டால் பற்களில் காவி படியும். ஆனால் இந்த இரு பழங்களையும் தரும் மரங்களான பாலைமரமும், வீரை மரமும். நல்ல வைரமான மரங்கள். பாலைமரக்குத்தி வீடுகளுக்கு கப்பாகவும்( தூணாகவும்), வளையாகவும், பாவிக்கப்படும். வீரை மரம் வைரமான மரமாயிருப்பினும், அதன் உள்ளமைப்பு, நார்த்தன்மையானதால், அநேகமாக உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கு கம்பிக்கட்டையாகவும், விறகுக்குமே பாவிப்பார்கள். வீரைமரம் பெயருக்கேற்ற மாதிரித்தான் இருக்கும். காய்ந்த வீரைமரங்களில் ஆணி அடிப்தே சிரமம்மென்றால், அந்த மரத்தின் வைரத்தை ஊகித்துக் கொள்ளுங்களேன். இந்த மரங்களின் சுவையான பழங்களுக்குப் பிரியமானவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. யானையும், கரடியும், மிகவும் ருசித்துச் சாப்பிடும்.

எங்கள் நண்பர் வட்டம் இப்பழங்களைச் ச்ந்தையிலோ தெருவிலோ வாங்குவதில்லை. நேரடியாகக் காட்டுக்குள்ளிருந்து எடுத்து வருவோம். ஒரு தடவை காட்டுக்குள் போனால், எங்கள் வீடுகளுக்கும், சுற்று வட்ட வீடுகளுக்கும் தேவையானளவு கொண்டு வருவோம். காட்டுக்குள்ளே போய் எந்த மரத்தின் பழம் அதிக சுவை என்பதை அறியவும் ஒரு உத்தி இருக்கிறது. எந்த மரத்துக்குக் கீழே யானையின் விட்டைக் கழிவோ அல்லது கரடிகள் சுவைத்துத் துப்பிய எச்சங்களை வைத்தும், அந்த மரத்தின் பழங்கள் அதிக சுவையாக இருக்மெனத் தீர்மானித்துக் கொள்வோம்.

இருவர் மரத்திலேறி, ஒருவர் கொப்புக்களை வெட்டிவிட, மற்றவர் யானை அல்லது கரடி ஏதும் வருகிறதா எனப் பார்த்துக் கொள்வார். கீழேநிற்பவர்கள் விழுந்த கொப்புக்களில் உள்ள பழங்களைச் சேகரிப்பார்கள். பாலைப்பழமும், வீரைப்பழமும், தந்த சுவையென்பது மறக்கமுடியாதது. அந்த மரங்களையும், அவற்றுடன் இணைந்த நினைவுகளையும்தான்...

53 Comments:

 1. வசந்தன்(Vasanthan) said...
  பலைப்பழ இரசிகர்களில் முக்கியமானவரை விட்டுவிட்டீர்கள். பன்றிதான் அவர். பாலைப்பழ நேரத்துப் பன்றி இறைச்சிக்குத் தனிமரியாதையிருக்கு.

  வீரைப்பழம் பற்றிச் சொல்லியிருந்தியள். வன்னியில சண்டைக்களத்தில் நின்ற போராளிகளுக்கு வீரைப்பழப் பாணிதான் சீனி. தேனீர் குடிப்பதோ புட்டு சாப்பிடுவதோ அந்த வீரைப்பழ ஜாமுடன்தான்.

  அதேபோல் இன்னொரு சுவையான பழம் சூரை. இது பழுக்கும் காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் பங்குனி சித்திரையில் சாப்பிட்டதாக ஞாபகம். மற்றப்பழங்களை விட அதிக சிரமப்பட்டுப் பறிக்க வேண்டி பழமாயிருக்கிறதாலயோ என்னவோ எல்லாத்தையும்விட சூரையில எனக்கொரு ஈர்ப்பு. சூரைமுள் பட்டா கழட்டி எடுக்கிறது பெரிய வேலை. அது தூண்டில்மாதிரி எதிர்வளமான முள்ளு.

  பாலைப்பழ உருசி பாக்கிறதுக்கு இன்னொரு நல்லமுறையிருக்கு. எந்தப்பாலையில முசுறு இருக்கெண்டு பாத்து ஏறவேணும். முசுறுக்கடி பெரிய தொல்லைதான் எண்டாலும் உருசியான பழம் தேவையெண்டாப் பொறுக்கத்தான் வேணும்.
  யானைக்கும் எங்களுக்கும் காட்டுக்க பிடிச்ச இன்னொண்டு விளாத்தி. அதுகளைப்பற்றி நிறைய எழுதலாம்.
  வசந்தன்(Vasanthan) said...
  மலைநாடான்,

  பாலைபற்றி இராம.கி. ஐயாவின் பதவிலும் சர்ச்சைகள் வந்தன. பாலை என்ற பேரில் பல மரங்கள் இருப்பதாகவே இப்போது எனது விளக்கம்.
  நிற்க, நாங்கள் சொல்லும் பாலை தனியே காடுகளில் மட்டும் வளர்வதாகக் கருதமுடியாது. 'பரட்டைப் பாலை' என்று நாங்கள் பேச்சுவழக்கில் சொல்லும் பாலைகள் வெப்பமான இடங்களில் வளர்கிறது. இது காட்டுப்பாலையைவிட குட்டையானவை, இலைகள் குறைவு, செந்தளிப்பற்றவை, பழங்களும் சிறியவை, ஆனால் சுவையிலோ குணத்திலோ மாற்றமில்லை. வன்னியில் காடு சாராத சில இடங்களில் இப்பாலையைப் பார்க்கலாம். கடற்கரையை அண்டிய பகுதிகளில் இருக்கும் பாலைகள் இப்படிப் பரட்டையாக இருக்கும். ஆனால் இச்சூழலை பாலை நிலத்துடன் ஒப்பிட முடியாதென்றே நினைக்கிறேன்.
  கானா பிரபா said...
  வணக்கம் அண்ணை

  எனக்கு மாம்பழம் உங்களுக்குப் பாலைப் பழம் போலை, மன்னாரில் திருக்கேதீஸ்வரம் சென்றபோது இதன் சுவையை அனுபவித்திருக்கிறேன். பால் அதிகம் என்பதால் எண்ணை தடவிச் சாப்பிட்டதாக ஞாபகம்.
  மலைநாடான் said...
  வசந்தன்!

  நான் தவற விட்ட குறிப்புக்களைத் தொடுத்தமைக்கு மிக்க நன்றி.

  பாலைப்பழத்துக்கு பன்றியும் இரசிகரோ? நான் கேள்விப்படவில்லையோ அல்லது மறந்திட்டனனோ தெரியேல்லை.

  போராளிகளின் வாழ்வு, மற்றவர்கள் அனுபவித்திராத, அனுபவிக்க முடியாத ஒரு வாழ்வு. வீரைப்பழத்திலும் ஜாம் காச்சியிருக்கினம்..:)

  சூரைப்பழத்தை சொல்ல மறந்துதான் போனேன். அதுபோல விளாத்தி, இலந்தை பழங்கள் பற்றியும் நிறையச் சொல்லலாம். பாலையும், வீரையும், கிட்டத்தட்ட ஒரே காலத்தில் பழுப்பவை. அதனால்தான் அதையிரண்டும் குறிப்பிட்டனான். மற்றவற்றை பிறகு பார்ப்பம் என்டு விட்டிட்டன். வேற என்ன எழுதிற பஞ்சிதான் :))

  சூரை முள்ளை வைச்சு கனக்க விளையாட்டுக்காட்டலாம்.. தெரியுமோ?:)

  ஓம் வசந்தன். முசுற வைச்சும் பாலைப்பழம் கண்டு பிடிக்கிறதுதான். எழுத மறந்திட்டன். முசுறு பிடிச்ா, பிடிபட்டவர் பிறேக் டான்ஸ்தானே் ஆட வேண்டும். இப்ப சில நடனங்களைப் பார்க்கும் போது, உவருக்கென்ன முசுறு ஏறிற்றோ என்டு மனசுக்குள்ள நினைக்கிறனான்.

  பரட்டைப்பாலை பற்றி நான் கேள்விப்படேல்ல.

  எது எப்படியாயினும் பாலைவனப்பகுதியில், அப்படியான வைரமரங்கள் வளரமுடடியுமா?


  மேலதிக தகவல்களுக்கும், வருகைக்கும் நன்றி.
  சினேகிதி said...
  \\இப்ப சில நடனங்களைப் பார்க்கும் போது, உவருக்கென்ன முசுறு ஏறிற்றோ என்டு மனசுக்குள்ள நினைக்கிறனான்\\:-):-):-)

  வணக்கம் மலைநாடான்
  பாலைப்பழம் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் படிக்கணும் போல இருந்திச்சு வந்திட்டன் மரநிழலுக்கு :-)

  வடமராட்சிப்பக்கம் பாலைமரம் இருக்கோ தெரியாது ஆனால் மாமாட்ட மருந்தெடுக்க வாற சிலபேர் பாலைப்பழம் கொண்டுவாறவை சாப்பிட்ட ஞாபகம் இருக்கு.நீங்கள் சொன்ன மாதிரி மஞ்சளா வேப்பம்பழம் போல இருக்கும்.முல்லைத்தீவுப் பக்கம் பாலைப்பழம் வீரப்பழம் வேறயும் சில பழங்கள் அதிகமுண்டு என்று அப்பா தாத்தா சொல்லியிருக்கினம்.காரைப்பழம் சூரைப்பழமும் சாப்பிட்டு இருக்கிறன்.இன்னொருபழம் றம்புட்டான் பழம் போல உள்ளான் இருக்கும் ஆனால் வெளியில பிறவுண் நிறக் கோது கனடாவில சைனீஸ் கடைகளில் எப்போதும் இருக்கும்..அந்தப்பழம் முல்லைத்தீவில இருக்கெண்டு அப்பா சொன்னவர் பெயர் மறந்திட்டன்.

  அண்மையில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்;திக் ஒரு நேர்காணலின் போது அண்ணா கஜனி படத்துக்காக வாரக்கணக்கில் இலந்தப்பழம் மட்டும் சாப்பிட்டார் என்று சொன்னார்.அது என்ன காரணத்துக்காக இருக்குமென்று யோசிச்சுப்பார்த்தன் ஒரு முடிவுக்கும் வரேல்ல..நீங்;கள் என்ன நினைக்கிறீங்கள்?
  Anonymous said...
  நண்பரே பழையதை நினைவுட்டியதற்கு முதலில் எனது நன்றிகள்.

  சற்று குழப்பமாகவுள்ளது (பாலைபழமா
  பலைப்பழமா பாலப்பழமா சரி)

  நான் வன்னியை பூர்விகமாக கொண்டவன் என்பதால் காட்டு பழங்கள்
  அனைத்தும் எனக்கு அத்துபடி.

  வசந்தன் சொல்லிய வீரைப்பழத்தில்
  பாணி காச்சுவது புதிதாகவுள்ளது

  உருவிந்தம் பழம் சாப்பிட்ட அனுபவம்
  உண்டா உங்களுக்கு இதன் சுவையும்
  இதில் காச்சப்படும் பாணியும் அதிசுவை
  மருத்துவ குணமும் கொண்டவை
  இந்த மரம் பழக்காலத்தில் வீசும் வாசமே காட்டையே கட்டிவைத்திருக்கும்

  இந்த தாவரத்திலிருந்து french கம்பனி
  வாசனை திரவியம் தயாரிக்கிறது.

  இளுப்பை பூ இதன் சுவையும் கரும்பின்
  சாறுக்கு இனையானது இது இரவில்தான்
  தனது பூக்களை சொரியும் நிலா வெளிச்சத்தில் இந்த மரத்தை பார்த்தால்
  ஏதோ பனி பிரதேசத்து மரங்களில்
  பனி போர்த்தியது போன்றிருக்கும்
  இதன் பூவை அவித்து கசக்கி பிழிந்து
  சாறு எடுத்து அது கெட்டிப்படும் வரை
  காச்ச கறுப்பாய் பாணி வரும்.
  எங்கள் நாட்டு பாணுடன்.

  வேண்டாம் நினைக்கவே......

  ஒரு வன்னிபயல்
  --------------
  -/பெயரிலி. said...
  மலைநாடான், பாலைப்பழமும் வீரப்பழமும் சொல்லும்போது ஞாபகம் வருவது பாலம்போட்டாறுப் பொங்கலுக்கு நடப்பதுதான். வழி நெடுக,மரங்களிலே இவை பழுத்திருக்கும் காலம்.
  `மழை` ஷ்ரேயா(Shreya) said...
  சூரை மரத்தின்ட/இலை/பழம்/முள் இவற்றின் படங்கள் கிடைச்சா எடுத்துப் போடுங்கோ. இந்த மரத்தைப் பற்றி இப்பத்தான் கேள்விப்படுறன்.

  //வீரப்பழம்//
  இதுக்கு மெல்ல்ல்லிய கோது இருக்கா? வடுமாங்காய் மாதிரி கொச்சிக்காத்தூளோட சாப்பிடுறதா?

  பழங்களைப் பற்றிக் கதைச்சோடன எனக்கு கடுபுளியம்பழம்(சொல்லிச் சொல்லி இது கடூளியம்பழம் ஆனது ஒரு காலம்) ஞாபகம் வந்திட்டுது.
  ✪சிந்தாநதி said...
  இதிலே எதையும் புரியவில்லை. தமிழகத்தில் வேறு பெயர்களில் வழங்கப் படும் பழங்கள் சில இதில் இருக்கலாம்.
  துளசி கோபால் said...
  நீங்க சொல்ற எந்தப் பழத்தையும் பார்த்ததாகவோ, தின்னதாகவோ நினைவில்லை. ஒருவேளை இதுகளுக்குத்
  தமிழ்நாட்டுலே வேற பெயர் இருக்கோ என்னவோ?

  தெரிஞ்சவுங்க சொன்னா நல்லா இ(னி)ருக்கும்.
  சினேகிதி said...
  inga paarung malainaadan ungalala nan oru pathivu podidan idea thantha ungaluku nanri.
  http://snegethyj.blogspot.com/2007/01/blog-post_116960472133305426.html

  matrathu nan maranthu pona sona palam muralipalam.
  மலைநாடான் said...
  அடடா!

  இந்தப் பதிவ எழுதும் போது , வசந்தன் மட்டும்தான் இதுக்கு கதை சொல்வார் என்டு நினைச்சன். கனக்கபேர் எங்களப்போலதான் திரிஞ்சிருக்கிறியள் என்டு இப்பதான் தெரியுது. எல்லோருக்கும் தனித்தனிய பதில் தரவேணும் கொஞ்சம் பொறுங்கோ.
  வெற்றி said...
  மலை,
  நல்ல பதிவு. பாலைப்பழம் என்றதும் மாங்குளத்தில் உள்ள எமது கமம் தான் நினைவுக்கு வந்தது. அங்கு பல பாலமரங்கள் இருக்கு. கையில் பல் ஒட்டிப் பிசுபிசுத்தாலும் , சாப்பிட்டால் சும்மா அந்த மாதிரி இருக்கும். முருகண்டி கோயிலடியிலும் வைத்து விற்பார்கள்.
  `மழை` ஷ்ரேயா(Shreya) said...
  வில்வம்பழமும் சாப்பிடுறவங்கதானே?
  Anonymous said...
  My comment in Snegethy's post. Thought of posting it here, as you post was the original culprit. ;)

  எனக்கு இத்தனை காய்களைத் தெரியாது.

  நானறிஞ்சது பெரியப்பா வீட்டில நிண்ட ரோஸ் கலர் ஜம்புக்காயையும்,

  புங்குடுதீவில டியூசனுக்குப் போற வழியில வனாந்தரக் காணியொண்டில நிண்ட வடிவான புளியமரத்தையும்,

  வீட்டில நிண்ட ரெண்டு மாமரத்தையுந்தான்.

  இதில புளியமரம் வீட்டிலயிருந்து கனக்கத் தூரத்திலயெண்ட படியா வீட்டாக்கள் பாக்கிறது கஸ்டம். என்ன, யாராவது சொந்தக்காறர் பாத்திட்டுப் போய் வத்தி வைச்சாத்தான். சொப்பர் சைக்கிளையும் உருட்டியண்டு எல்லாரும் களத்தில இறங்கிருவம். இப்பவும் இங்க கடையில புளியங்காய், புளியம்பழம் (கோதோட இருக்கிறதுகள்) பாத்தா ஊர்ப்புளிய மரந்தான் நினைவுக்கு வரும். இதுக்குப்பிறகு புளியமரத்தில புளியமிலை அரும்பில இருந்து புளியங்காய், புளியம்பளம் வரைக்கும் மொட்டை தட்டின புளியமரம் ஹொனலூலுவில டவுண் டவுனில லிலியோகலானி எண்ட ஹவாய்க்கான கடைசி இராணியின்ர மாளிகைக்குப் பக்கத்தில இருந்த புளிய மரம்.

  மாங்காயெண்டால், எங்கட வீட்டுக்குப் பின்னுக்கிருந்த மாமரத்தில ஒரு ஆள் உக்கார்ர மாதிரி மூண்டு கொப்புகள் பிரிஞ்சு போற இடத்தில ஏறி இருந்தண்டு வீட்டிலயிருந்து களவாய்க்கொண்டுபோன உப்பு மிளகாய்த்தூள் தட்டில மாங்காயைத் தொட்டுத் தொட்டுத் தின்னோணும். ச்சா... நினைக்கவே வாயூறுது..

  உங்களுக்கும் மலைநாடானுக்கும் லேசான கடுப்போட நன்றி சொல்லிக்கொள்ளுறன். ;)
  Anonymous said...
  Lanzones எண்டுற பழம் பற்றி யாருக்காவது ஏதாவது தெரியுமா? சரியான இனிப்பான பழமாம். விக்கியில பார்த்தா, தென் கிழக்காசியாவில கிடைக்கும் எண்டு எழுதியிருந்தவை.

  -மதி
  Anonymous said...
  இலந்தைப்பழமும், பாலைப்பழமும் ஒன்றா?

  வீரைப்பழம் வீரப்பன் சாப்பிட்டாரா? :)

  நல்ல பதிவு நிறைய செய்திகள் அறிய முடிந்தது.
  Anonymous said...
  மலை நாடன்...பாலைப்பழத்தை நிலக்கிளி நாவல் வாசித்தபோது அறிந்தது..மற்றும்படி எனக்கு தெரியலை.பாலை மரத்தை பற்றி கதைக்கிறவை அதில் கதவு யன்னல் செய்யிறவை..

  நாவற்பழம் காலத்தில் படிக்கும் காலத்தில் பள்ளி கட் அடி்ச்சு சைக்கிளில் அம்பன் குடத்தனை நாகர்கோவில் பக்கம் போறனாங்கள்.. காணி வழிய இருக்கிற ஈச்சம் பழத்தை தெரியுமோ
  வசந்தன்(Vasanthan) said...
  //மலைநாடான், பாலைப்பழமும் வீரப்பழமும் சொல்லும்போது ஞாபகம் வருவது பாலம்போட்டாறுப் பொங்கலுக்கு நடப்பதுதான்.//

  பெயரிலி,
  யாழ்ப்பாணத்து வேதக்காரருக்கு மடுமாதா கோயிலுக்கு நடப்பது ஞாபகம் வரும். பெருநாள்கூட பாலைப்பழக் காலத்திலதான்.
  அதுசரி, வீரைப்பழமா? வீரப்பழமா? வீரைதான் சரியாகப்படுகிறது.

  சினேகிதி,
  யாழ்ப்பாணத்துக்குள்ள பாலைமரத்தைக் காணுறது பெரும்பாடு. அருந்தலா எங்கயாவது கிடக்கும். என்ர ஊரில ஒரேயொரு பாலை நிண்டது. அதைச் சின்னனிலயிருந்து பாத்து வாறவைகூட ஒருமுறைதானும் அது பழுத்துப் பார்த்ததில்லை.
  காரைப்பழத்தை ஞாபகப்படுத்தினியள் போங்கோ.
  நீங்கள் சொல்லிற இன்னொரு பழம்(றம்பும்டான் உள்ளுடல்) பனிச்சம்பழமோ?

  வன்னி(ப்)பயல்,
  நீங்கள் சொல்லி உருவிந்தம்பழம் நிறையச் சாப்பிட்டிருக்கிறேன். (நாங்கள் கதைக்கும்போது அதை உலுவிந்தம் எண்டுதான் சொல்லுவம். உருவிந்தம் எண்டு இண்டைக்குத்தான் அறியிறன். எழுத்தில் உருவிந்தம் சரியாக இருக்கக்கூடும்.) இப்பழம் பற்றித் தெரியாத ஆக்களுக்கு: இப்பழம் சரியாக வீரைப்பழம்போன்றே இருக்கும். கொத்தாகக் காய்க்கும். வீரையைவிட கடுஞ்சிவப்பு நிறம்.
  எனக்கும் வீரைப்பழ ஜாம் புதிதுதான். வன்னி மக்களுக்களிடமும் அப்பழக்கம் இருந்ததில்லை. போர்முனையில் கண்டுபிடிக்கப்பட்டதென்றுதான் நினைக்கிறேன்.

  ஷ்ரேயா,
  வீரைப்பழத்துக்கு ஒரு கோதுமில்லை. அதை கொச்சிக்காய்த்தூளோடு சாப்பிடுவதுமில்லை.

  //இலந்தைப்பழமும், பாலைப்பழமும் ஒன்றா? //
  திரு,
  இல்லவேயில்லை.

  -வசந்தன்(Vasanthan)-
  மலைநாடான் said...
  \\இப்ப சில நடனங்களைப் பார்க்கும் போது, உவருக்கென்ன முசுறு ஏறிற்றோ என்டு மனசுக்குள்ள நினைக்கிறனான்:-):-):-)//
  தமிழ்த் திரைப்பட நடிகர்களில், தனுஷ் ஆடேக்க உந்த ஞாபகம் வரும்.:)

  //வணக்கம் மலைநாடான்
  பாலைப்பழம் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் படிக்கணும் போல இருந்திச்சு வந்திட்டன் மரநிழலுக்கு:) //

  மருதநிழலுக்கு நீங்கள் இப்பதான் முதல்முதலா வாறியள் என்டு நினைக்கிறன். வாருங்கோ, நல்வரவு.


  //இன்னொருபழம் றம்புட்டான் பழம் போல உள்ளான் இருக்கும் ஆனால் வெளியில பிறவுண் நிறக் கோது கனடாவில சைனீஸ் கடைகளில் எப்போதும் இருக்கும்..அந்தப்பழம் முல்லைத்தீவில இருக்கெண்டு அப்பா சொன்னவர் பெயர் மறந்திட்டன்.//

  அதுதான் முரலிப்பழம். ஒரு வித்தியாசமான வாசத்தோட இருக்கும். இந்த முரலிப்பழத்துக்குப் பின்னால சோகக்கதையொன்டு தெரியும். பிறகு ஒரு நாளைக்குச் சொல்லுறன்.

  //அண்மையில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்;திக் ஒரு நேர்காணலின் போது அண்ணா கஜனி படத்துக்காக வாரக்கணக்கில் இலந்தப்பழம் மட்டும் சாப்பிட்டார் என்று சொன்னார்.அது என்ன காரணத்துக்காக இருக்குமென்று யோசிச்சுப்பார்த்தன் ஒரு முடிவுக்கும் வரேல்ல..நீங்;கள் என்ன நினைக்கிறீங்கள்?//
  கமலஹாசன் இளமையா இருக்க எள்ளுருண்டை சாப்பிடிறவராம். அதுமாதிரித்தான் இந்த இலந்தப்பழவிசயமுமோ தெரியேல்ல. தெரிஞ்சிருந்தா அந்த நாளையில கொஞ்சம் கனக்கவே சாப்பிட்டிருக்கலாம். :) கோணேசர் கோயிலுக்குப் போற வழியெல்லாம் இலந்தமரம்தான்.

  சிநேகிதி!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
  மலைநாடான் said...
  //நண்பரே பழையதை நினைவுட்டியதற்கு முதலில் எனது நன்றிகள்.

  சற்று குழப்பமாகவுள்ளது (பாலைபழமா
  பலைப்பழமா பாலப்பழமா சரி)//

  வன்னிப்பயல் என அடையாளப்படுத்திய சகோதரா!

  வருகைக்கு நன்றி.

  பாலப்பழம் என்றுதான் பேச்சு வழக்்கில் சொல்வார்கள். ஆனால் எழுதும்போது பாலைப்பழம் என்று எழுதினால்தானே சரியாக இருக்குமென்று அப்படி எழுதினேன்.

  //நான் வன்னியை பூர்விகமாக கொண்டவன் என்பதால் காட்டு பழங்கள்
  அனைத்தும் எனக்கு அத்துபடி.//

  வன்னி மண்ணின் வளமும், சிறப்பும், அந்த அடர்ந்த காடுகளும், அதனுள் குவிந்து கிடக்கும் இயற்கைச் செல்வங்களும்தானே. அதை அனுபவிக்காத ஒரு வன்னி மகனா? இருக்கவே முடியாது.:)


  //வசந்தன் சொல்லிய வீரைப்பழத்தில்
  பாணி காச்சுவது புதிதாகவுள்ளது //
  எனக்கும்தான். ஆனால் போரியல் வாழ்வு பல புதியவைகளையும் எமக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன் வரிசையில் இதையும் சேர்க்கலாம்.

  //உருவிந்தம் பழம் சாப்பிட்ட அனுபவம்
  உண்டா உங்களுக்கு இதன் சுவையும்
  இதில் காச்சப்படும் பாணியும் அதிசுவை
  மருத்துவ குணமும் கொண்டவை
  இந்த மரம் பழக்காலத்தில் வீசும் வாசமே காட்டையே கட்டிவைத்திருக்கும்//
  பெயர் ஞாபகத்திலிருக்கு, ஆனால் சுவை மறந்து போயிற்று..:(

  //இந்த தாவரத்திலிருந்து french கம்பனி
  வாசனை திரவியம் தயாரிக்கிறது.//

  நாங்களறியாமலே எங்கள் வளங்கள் பல இப்படி மாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

  //இளுப்பை பூ இதன் சுவையும் கரும்பின்
  சாறுக்கு இனையானது இது இரவில்தான்
  தனது பூக்களை சொரியும் நிலா வெளிச்சத்தில் இந்த மரத்தை பார்த்தால்
  ஏதோ பனி பிரதேசத்து மரங்களில்
  பனி போர்த்தியது போன்றிருக்கும்
  இதன் பூவை அவித்து கசக்கி பிழிந்து
  சாறு எடுத்து அது கெட்டிப்படும் வரை
  காச்ச கறுப்பாய் பாணி வரும்.
  எங்கள் நாட்டு பாணுடன்.

  வேண்டாம் நினைக்கவே......//

  இலுப்பைப்பூவைத்தானே சொல்கின்றீர்கள். தனியாகவும் அது சாப்பிடுவதுதானே..

  அது சரி, நீங்கள் தண்ணிக்கொடி வெட்டி, தண்ணி குடிச்சிருக்கிறியளா? வசந்தன் நிச்சயம் குடிச்சிருப்பார் என்று நினைக்கிறன்.

  சகோதரா!
  காட்டு வாழ்க்கை ஒரு தனியான சுகம். அதுபற்றி இன்னமும் எழுத வேண்டும். பார்ப்போம்..

  அடிக்கடி வாங்க. வந்து உங்கட அனுபவங்களையும் சொல்லுங்க . எல்லோரும் தெரிஞ்சுகொள்ளலாம்.:)))
  மலைநாடான் said...
  பாலைப்பழமும் வீரப்பழமும் சொல்லும்போது ஞாபகம் வருவது பாலம்போட்டாறுப் பொங்கலுக்கு நடப்பதுதான். வழி நெடுக,மரங்களிலே இவை பழுத்திருக்கும் காலம்.

  பெயரிலி!

  ஓமோம். பாலம் + போட்ட + ஆறு, பத்தினியம்மன் கோவில் பகுதியே நல்ல வனப்பிரதேசம்தான். எனக்கு காட்டுக்குள் சென்று வரும் ஆவலை ஏற்படுத்தியதே பாலம்போட்டாறுதான்.
  அது யானைகள் வரும் பிரதேசம். காட்டுக்குள்ள எனக்கு யானைக்குக் கூட பயமில்லை. ஆனால் முசுறுக்கும் ( யானைக்கே முசுறு என்டாப் பயம்தானாம்) பச்சோலைப் பாம்புக்கும்தான் பயம். புடையன் பாம்பு கிடந்தால் கூட மணத்தை வைச்சுக் கண்டு பிடிச்சிடலாம். ஆனா சனியன், பச்சோலைப் பாம்பு எங்க தொங்குதெண்டே தெரியாது. மனிசரின்ர கண்ணைக் குறி வைச்சுதான் பாயும் என்டு காட்டு அனுபவமுள்ளவர்கள் சொல்லுவினம்.

  நன்றி!
  மலைநாடான் said...
  வாங்க ஷ்ரேயா!

  //சூரை மரத்தின்ட/இலை/பழம்/முள் இவற்றின் படங்கள் கிடைச்சா எடுத்துப் போடுங்கோ. இந்த மரத்தைப் பற்றி இப்பத்தான் கேள்விப்படுறன்.
  //
  இஞ்ச பாருங்க இவவின்ர சேட்டைய. பதிவில படம் போடாட்டி பிரபா பேசுவார் என்டிறதுக்காக அங்கினேக்க ஐரோப்பாக்காட்டுக்க எடுத்த படத்தை போட்டுச் சமாளிச்சா, இவ சூரை மரத்தின்ர இலை, முள்ளு, படம் போடச் சொல்லுறா. உதுக்கு எங்க போறது. :)

  //வீரப்பழம்//
  இதுக்கு மெல்ல்ல்லிய கோது இருக்கா? வடுமாங்காய் மாதிரி கொச்சிக்காத்தூளோட சாப்பிடுறதா?//

  கொச்சிக்காத்தூள்..:)))

  இல்லையில்லை. சின்ன வட்ட வடிவமாக சிகப்பு நிறத்தில இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு சுவை.

  //பழங்களைப் பற்றிக் கதைச்சோடன எனக்கு கடுபுளியம்பழம்(சொல்லிச் சொல்லி இது கடூளியம்பழம் ஆனது ஒரு காலம்) ஞாபகம் வந்திட்டுது//

  ஓமோம். அத நாங்க கொடும்புயி என்டு சொல்லுவம். கொடுக்காப் புளி என்டும் ஒன்டிருக்கு. கிழக்கில் ஆணம்(சொதி) வைக்க பாவிக்கிறது. அதைவிட கோணர்புளியென்டும் ஒன்டிருக்கு. அது பெயருக்குத்தான் புளி. ஆனால் சுவை வேறுவிதமாக இருக்கும்.

  பகிர்வுக்கு நன்றி
  சயந்தன் said...
  முழங்காவிலில் கொஞ்சக்காலம் தங்கியிருந்த வீட்டில் பாலப்பழம்.. ( உண்மையில் பால்ப் பழம்..இப்பிடி பாலைப் பழமாக மருவியதோ தெரியவில்லை. பால் என்றால் குடிக்கும் பால் அல்ல. பலா பழத்தில் உதட்டை ஒட்டச் செய்யும் அந்த திரவத்தினை.. பால் என்று சொல்வார்களே இது அவ்வகையான பால்.. உதட்டை ஒட்டச் செய்யும் பால்.. இதனால்ப் பால்ப் பழம் எண்டது தான் சரி. மரத்தைக் கூட பாலப்பழ மரம் என்றுதான் சொல்லுறது. பாலை மரம் எண்டு சொல்லுறேல்லை.- இது இப்ப இந்தக் கணத்தில நான் கண்டு பிடிச்சது.-ஆகவே இன்று முதல் இது பால்ப் பழம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.)

  சமாதான காலத்தில A9 பாதையாலை வாற போற ஆக்கள் முருகண்டியில வாங்கிற பழங்களில இதுவும் ஒண்டு..

  வேறென்ன.. பால்ப் பழ விசயத்தை ஒருக்கா கரிசனை கொண்டு ஆராயுங்கோ..
  Anonymous said...
  மலைநாடர்!
  இனிப்பான;சொல்லப்பட வேண்டிய பதிவு.
  பெருங்காடு,சிறுகாடென..இளமையில் பாலைப்பழம்;நாவல்பழம்,விளாம்பழம்;கொய்யாப்பழம்;முதலிப்பழம்;காரைப்பழம்,
  காட்டுப்பிலாக்காய்;ஈச்சம்பழம்,இலந்தைப்பழம்,நாகதாளிப்பழம்;முந்திரிகைப்பழம்..


  இப்படி எத்தனையோ பழத்தைச் சாப்பிட்டுள்ளேன்.
  எனினும் இவற்றில் சுவை அதிகமானது பாலைப்பழமே!! அதனால் சந்தைப்படுத்தப்பட்டது.

  பாலைப்பழக்காலத்தில் சாவகச்சேரி;பளை;கொடிகாமம்;கிளிநொச்சி, முறிகண்டி;மாங்குளம்;வவுனியா பேருந்து நிலையங்களில் வாங்கிச் சாப்பிடுவதுடன் வீட்டுக்கும் கொண்டு செல்லும் பழக்கம் உண்டு.
  இதை விட கிளிநொச்சியில்
  வாழ்ந்த என் பாட்டனாரும் வருடாவருடம் தன் பங்குக்கு ஒரு பொதி கொண்டுவந்து தருவார்.
  நாகதாளிப்பழம் சாப்பிட்டு வீட்டில் நாக்கை நீட்டிக் காட்டச் சொல்லி
  அடித்தது. மறக்கவில்லை.
  ஆனால் அதே நாகதாளி பாரிசில் அரபியாரால் விற்கப்படுவதும் ;பல தடவை வாங்கிச் சாப்பிட்டதையும் ,நம் நாட்டின் தவறான புரிதலையும் நினைக்க சிரிப்பு வருகிறது.
  அத்துடன் நன்கு முதிர்ந்த பாலை
  மரங்கள் இயற்கையாக வெடித்து அதில் பாணி வடியும்:அதைச் சேர்த்துத் தருவார்கள்;
  அதை தயிருக்கு விட்டுச்சாப்பிட அமுதமே!! வெள்ளை அப்பத்துக்கும் தொட்டுச்சாப்பிடலாம்.
  ஏன் பாணுக்குக் கூடச் சுவையே!

  இந்த வளங்கள் அருகிவருவது வேதனையே
  யோகன் பாரிஸ்
  Anonymous said...
  பாலைப்பழத்தை சிறுவயதுகளில் எனது தந்தையார் வன்னிப்பிரதேசங்களில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அவர் வாங்கிவர உப்பில் போட்டு சாப்பிட்டது நினைவு. அண்மையில் சென்றபோது முருகண்டியில்(முறிகண்டியில்?)அதை வாங்கி உருசித்திருந்தேன்.
  .....
  கன்னியா வெந்நீரூற்றுக்களுக்கு அருகில் சில மரங்கள் நின்றன. பெடியங்கள் சிலர் அதிலிருந்து பழங்களை(காய்களை?) கிளைகளிலிருந்து உலுக்கியபோது சாப்பிட்டிருக்கின்றேன். சற்று புளிப்பான இனிப்பாய் இருந்தது. அவை என்ன மரங்கள்? அறிந்தவர் விளம்புவீர்.
  .......
  விளாம்பழங்கள் பற்றியும்... விளாங்காய் சாப்பிட்டு குரல்கள் கட்டிப்போவது பற்றியும், பக்கத்திலிருந்த மகளிர் கல்லூரி பிள்ளைகளுக்கு கள்ளமாய் விளாம்ப்ழம் பிடுங்கிகொடுத்த 'வீரதீரச்செயல்கள்' பற்றியும் அண்ணன் வசந்தனை ஒரு குரற்பதிவு போடும்படி இத்தருணம் வேண்டிக்கொள்கின்றேன்.
  வசந்தன்(Vasanthan) said...
  //அது சரி, நீங்கள் தண்ணிக்கொடி வெட்டி, தண்ணி குடிச்சிருக்கிறியளா? வசந்தன் நிச்சயம் குடிச்சிருப்பார் என்று நினைக்கிறன்.//

  பின்ன?
  குடிச்சிருக்கிறன். அந்தக் கொடியை வெட்டிறதிலயும் இருக்கு, எவ்வளவு தண்ணி குடிக்கலாமெண்டு.

  டி.சே,
  வேண்டாம், என்னை விட்டிடுங்கோ...
  வேணுமெண்டா காட்டுக்குள்ள விளாம்பழம் பற்றிச் சொல்லிறன். ;-)
  -/பெயரிலி. said...
  சயந்தன் said...
  பெயரிலியின்ர லிஸ்ற்றில இதையும் சேருங்கோ

  ஐஸ்பழம்
  மலைநாடான் said...
  //இதிலே எதையும் புரியவில்லை. தமிழகத்தில் வேறு பெயர்களில் வழங்கப் படும் பழங்கள் சில இதில் இருக்கலாம்//

  சிந்தாநதி!

  நிச்சயமாக இந்தப்பழங்கள் தமிழகத்திலும் இருக்கும். ஆனால் அடர்த்தியான வனப்பிரதேசங்களைச் சார்ந்து இருக்கும் என்று நினைக்கின்றேன். நான் பார்த்தவரையில் தமிழகத்தில் அடர்ந்த வனப்பகுதி, ஏனைய மாநில எல்லைகளை அண்டியே இருக்கிறதென்டு நினைக்கின்றேன்.
  மலைநாடான் said...
  //நீங்க சொல்ற எந்தப் பழத்தையும் பார்த்ததாகவோ, தின்னதாகவோ நினைவில்லை. ஒருவேளை இதுகளுக்குத்
  தமிழ்நாட்டுலே வேற பெயர் இருக்கோ என்னவோ?

  தெரிஞ்சவுங்க சொன்னா நல்லா இ(னி)ருக்கும். //

  வாங்க துளசிம்மா!

  விடுமுறையெல்லாம் நன்றாகக் கழிந்ததா?

  தமிழகத்தில் இப்பழங்கள் கிடைக்குமென்றே நினைக்கின்றேன். குத்தாலத்தில் பாலப்பழத்தைப் பார்த்ததாக ஞாபகம்.

  கிடைக்கவில்லையென்றால், பதிவப்படிச்சு சுவைக்க வேண்டியதுதான்.:))
  மலைநாடான் said...
  சிநேகிதி!

  உங்களின்ர பதிவில் வந்து கருத்துச்சொல்லியாயிற்று.
  மலைநாடான் said...
  வெற்றி!

  முருகண்டியிலயும் பாலப்பழம் கிடைக்கும். ஆனாலும் முருகண்டிக் கச்சான்தான் விசேசம்.:) என்ன சொல்லுறியள்..

  பகிர்வுக்கு நன்றி.
  மலைநாடான் said...
  ஷ்ரேயா!

  வில்வம் பழம் மிகுந்த மருத்து குணமுடையது என்று சொல்வார்கள். அதுவும் சாப்பிடுவதுதான்.
  -/பெயரிலி. said...
  /வில்வம் பழம் மிகுந்த மருத்து குணமுடையது /
  அதைச் சாப்பிடுவதும் மருந்து சாப்பிடுவதுமாதிரிதான் ;-)
  அதேபோல இன்னொரு பழம் மகிழம்பழம். மஞ்சளிலே மாவைக் கலந்தது மாதிரி.
  வெற்றி said...
  மலை,

  /* முருகண்டியிலயும் பாலப்பழம் கிடைக்கும். ஆனாலும் முருகண்டிக் கச்சான்தான் விசேசம்.:) என்ன சொல்லுறியள்..*/

  உண்மை. அதுவும் வாங்கமுதல் கொஞ்ச கச்சானை எடுத்து உடைச்சு திண்டு உரிசை பார்க்கிறது மறக்க முடியுமே!

  நான் ஈழத்துக்கு போயிருந்த போது எமது கமத்தைப்[மாங்குளம்] பார்க்க போனபோது முறிகண்டியில் சில படங்கள் எடுத்தனான். அதுவும் ஒருத்தர் கச்சான் உடைச்சுப் பார்த்து உரிசை பார்க்கிறது. உங்களுக்காக அப் படத்தை விரைவில் பதிவேற்றுகிறேன்.
  `மழை` ஷ்ரேயா(Shreya) said...
  //இஞ்ச பாருங்க இவவின்ர சேட்டைய. ..சூரை மரத்தின்ர இலை, முள்ளு, படம் போடச் சொல்லுறா. உதுக்கு எங்க போறது. :)//
  எதோ படம் போட்டனாந்தானே... 'முயற்சிகளைக்' கண்டு கொள்ளோணும். :O))பகிடிக்கில்ல.. இப்போதைக்கில்லையெண்டாலும், பிறகு கிடைச்சால் போடுங்க மலைநாடர்.

  பெயரிலி சொன்ன லொவியுமில்ல நான் சொன்ன கோதுடைய பழம். :O(
  சென்பீற்றர்ஸ் (பம்பலப்பிட்டி)பள்ளிக்கூடத்துக்குக் கிட்ட ஒரு பாதை கடக்கிற பாலம் இருந்ததெல்லா அதடீல வைச்சு விக்கிறவங்க. கொஞ்சம் கொ.தூளும் தருவாங்க பழத்தோட தொட்டுச் சாப்பிட.

  மகிழம்பழத்தையா லாவுளு என்டுறது? லாவுளு மாதிரியான சுவையுடைய காய்க்கி பழம் பிரான்சில சாப்பிட்டன். ஒரே குடும்பமோ? இன்னொரு சந்தேகம் - சோற்றுத் தண்ணிச் (அல்லது கொஞ்சம் இதே மாதிரியான பெயருள்ளது) செடியிலருந்து சாறு உறிஞ்சிக் குடிக்கிறது. சாறு 2 மி.லீ வந்தாலே அதிசயம். சிவப்பாப் பூக்கும். ஆருக்கும் தெரியுமா?

  மசுக்குட்டிப் பழ மரமொண்டு இங்க வீட்டுக்குக் கிட்ட நிக்குது.(செப்ரெம்பரில தான் இனிக் கொத்தாய்க் காய்க்கும்).

  வத்தகைப் பழம், கோவைப்பழம் பற்றிப் பேசுவாரில்லையே?
  மலைநாடான் said...
  //உங்களுக்கும் மலைநாடானுக்கும் லேசான கடுப்போட நன்றி சொல்லிக்கொள்ளுறன்//

  அதேன் அந்தக் கடுப்பு ? :)
  மலைநாடான் said...
  திரு!

  பாலப்பழம், இலந்தப்பழம், வேறவேற. சுவையும்தான்.

  வீரப்பன் வீரப்பழம் சாப்பிட்டிருக்கலாம்.:) ஏனெனில் சத்தியமங்கலம் நல்ல வனப்பிரதேசம்தானே.
  Anonymous said...
  ஈழத்தில் பன்னிரெண்டு வருடத்துக்கு ஒருமுறைகாய்க்கும் ஒரு பழமரத்தை மறந்துவிட்டீர்களே ஈழ நண்பர்களே.

  (நண்பர் வசந்தன் கூடவா மறந்து விட்டார்)

  இது முல்லைத்தீவுக்கு மட்டுமே சொந்தம்
  இது வேறு எங்கும் நான் கானவில்லை
  ஈழத்தில்.
  1981ல் ஒரு தடவையும் பின்பு 1994ல்
  இனி இவ்வருடம் காய்க்கும்.


  வன்னிப்பயல்
  ----------
  Anonymous said...
  உருவிந்தம் பழம் அடர்ந்த காட்டுக்கு
  கீழே கருவேலம் செடியளவுக்கு வளரும்.
  குண்டு மணியளவுக்கு கொத்துகொத்தாய்
  காய்க்கும் இந்த பழம் மரத்திலிருந்து
  பறித்த சில மணி நேரமே வைத்திருக்காலாம் வெப்பம் தாங்காது
  கரையத் தொடங்கி விடும்.

  தண்ணி கொடியில் லீற்றர் கணக்கில்லாம்
  தண்ணி வராது அதிவும் கொடியின்
  வயதை பொறுத்து சிறிதளவே வரும்
  இதில் இன்னொரு விடையம் விலங்குகளுக்கு எப்படி மெல்லிய கிரகிக்கும் உணர்வுண்டே தாவரங்களுக்கும் உண்டு இந்த கொடியை தொடாமல் ஒரேதடவையில்
  வெட்ட வேண்டும் பக்கத்தில் நின்று
  கதைத்தாலோ தொட்டாலோ நீரை
  தரைக்கு உடனே உள்ளுத்துக் கொண்டு
  விடும்.

  வன்னிப்பயல்
  -----------
  வசந்தன்(Vasanthan) said...
  வன்னிப்பயல்,
  பன்ரெண்டு வருசத்துக்கொருக்கா காய்க்கிற மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனா பார்த்ததில்லை. பார்திருந்தாலும் இதுதான் அந்த மரமெண்டு தெரிஞ்சிருக்கேல.
  என்ன பேர்? முரளியா?
  இரவில நிலத்தில விழுந்த இலைகள் றேடியம் மாதிரி ஒளிருமே, அதுதானே?

  தண்ணிக்கொடியைச் சரியாக வெட்டினால் அரைலீற்றர் வரை வடிவாக எடுக்கலாம். நீங்கள் சொல்லிறமாதிரி ஒரேவெட்டுத்தான். அதுவும் சரிவாக, குறுக்குவெட்டுப்பரப்பு அதிகமாக வரத்தக்கதாக வெட்டுறது நல்லது.
  ஆனா பக்கத்தில நிண்டு கதைச்சா, தொட்டா தண்ணி இழுத்திடும் எண்டது கொஞ்சம் அதிகமாகப்படுது. தண்ணி எதிர்பார்த்தளவு வராத சந்தர்ப்பங்களில் அது வெட்டுப்பிழையால் வந்ததுதான் என்பதே என் புரிதல்.

  வன்னிக்கு வந்தவுடன் என்னைக் கவர்ந்தவை காஞ்சூரைப் பழங்கள்தாம். என்ன வடிவாக இருக்கும். அதன் தன்மைபற்றித் தெரியாமலே கொஞ்சக்காலம் அதை இரசித்திருக்கிறேன். இலகுவில் கிடைக்காமல் எட்டவாக இருந்தாலோ என்னவோ நல்லவேளை சாப்பிடவில்லை.
  மலைநாடான் said...
  சின்னக்குட்டி!

  பாலை மரத்தில சன்னல் கதவு செய்யிறவையோ? அதுக்குத் தோதான மரமில்லையே அது... பார்ப்பம் ஆராவது சொல்லுகினமா என்டு..
  மலைநாடான் said...
  சயந்தன்!

  சரி சரி. இன்று முதல் பால்ப்பழம் என்டு சொல்லிறம்.

  ஆனா நீர் சொல்லியிருக்கிற பழமும் சூப்பர்.
  மலைநாடான் said...
  யோகன்!

  இதென்னப்பா, பின்னூட்டம் எழுதத் தொடங்கினா அங்கால இங்கால பாக்கிறதில்லையே. இஞ்ச பாருங்கோ, அமைதிப்படை வேலி பிரிச்சுப் போன கனக்கில போய்கொண்டிருக்கு. இனி உந்தப் பொட்டடைச்சு சரி செய்ய வேணும். நேரமில்லை.
  மற்றும்படி நீங்கள் சொல்ல இன்னும் எத்தினை விசயம் இருக்கு.

  சொல்லுங்கோ...:)
  Anonymous said...
  மலைநாடர்!
  பொறுக்க வேண்டும்;ஏனோ இந்த வேலி பிரிப்பு முதல் தெரிவதில்லை. இனிக் கவனிப்பேன்.
  அடுத்து ;வில்வம் பழம் விளாம் பழம் போல் தான் ;அதற்கு மருத்துவக் குணம் உண்டென்பது
  உண்மையே!! சூலை நோய் (குடற்புண்) அருமருந்து; தேனுடன் குழைத்துச் சாப்பிட வேண்டும்.
  நான் உண்டு சுகமும் கண்டேன்.
  இதைச் சிபார்சு செய்யலாம்.அனுபவரீதியாக உணர்ந்தவன்.
  சின்னக்குட்டியர்; பாலை மரம் சன்னல்; கதவு நிலைக்குப் பாவித்தாலும் கதவுகள் வேம்பில் போடுவர். ஆனால் இப்போ
  இதையெல்லம் யாரும் பார்ப்பதில்லை. மரங்கள் கிடைப்பதே சிரமமாக உள்ளது. அத்துடன் வெட்டத் தடை.
  யோகன் பாரிஸ்
  Anonymous said...
  ஓம் வசந்தன் முரளிப்பழமேதான்
  பன்னிரெண்டு வருஷத்துக்கு ஒரு
  தடவை காய்ப்பது அது என்னவே
  தெரியவில்லை நமது நாட்டில் மட்டும்
  இது 12 வருசத்துக்கு ஒரு தடவை
  காய்க்குது வெளிநாட்டில் சீனர்களின்
  கடைகளில் தினமும் விற்கிறார்கள்.
  1981ல் பஸ்நிலைத்தில் வாங்கி
  சாப்பிட்டேன் எனக்கு தெரிந்த பாட்டி
  இதை விற்றுக்கொண்டிருந்தார்
  இது உண்மையா பொய்யா
  தெரியவில்லை அவர் சொன்னார் இந்த
  மரம் காய்த்தால் மனித அழிவு அதிக
  மாக இருக்குமென்று.

  (தண்ணி கொடி)
  சில அனுபவங்கள் ஒருவர் தானே
  கற்றுக்கொள்வது சில மற்றவர்கள்
  கற்றுத்தருவது. இது எனக்குகற்றுத் தரப்பட்டது அந்தஅனுபவத்திலிருந்து...

  நல்லவேளை காஞ்சூரம் பழம் உங்கள்
  கையில் கிடைத்திருந்தால் தமிழ் மணத்தில் வசந்தன் என்று ஒருவர்
  இருந்திருக்க மாட்டார்...!
  இது பாம்பு தீண்டப்பட்டவருக்கு
  விஷமுறிப்புக்கு கொடுப்பது இதன்
  பட்டை சாறும் பழம் அல்லது
  seeds..

  வன்னிப்பயல்
  ----------
  மலைநாடான் said...
  டிசே!

  வரவுக்கும், பகிர்வுக்கும் நன்றி.
  மலைநாடான் said...
  மதி!

  ஒரு கல்லில ரெண்டு மாங்காய் விழுத்தின பழக்கத்தில, ஒரே அடியில இரண்டு பின்னூட்டமோ?.:)
  Anonymous said...
  அட போங்கப்ப சாவகச்சரியில் மட்டுவில் எண்டு ஒரு இடமிருக்கு அதுதான் அம்மாவிண்ட ஊர். அங்க நிக்கிற எங்கட வீட்டில இருகிற பலாமரத்து பழத்திண்ட சுவையிரிக்கே சக்கையக் கூட மீதம் விடாம சாப்பிட்டு முடிப்பம். ம்.....

  மலை நாடன் உங்களப் பார்த்து நானும் சில பழங்களைப் பற்றி எழுதலாமென்டு இருக்கிறன். குறிப்பா மட்டகளப்பில நம்மட பெடியனுகளோட கிண்ணம்பழம் சாபிட்டதுகளை உங்களுகெல்லாம் சொல்ல வேணும்.
  Anonymous said...
  ஷ்ரேயா
  /மகிழம்பழத்தையா லாவுளு என்டுறது?/
  அப்படித்தான் ஞாபகம். எங்கள் வீட்டுக்கு முன்னாலே ஒன்று நின்றது. விபரம் சொன்னால், மலைநாடான், "பெயரிலி மரத்திலே ஏறி நின்றார் நான் கண்டேன்" என்றெல்லாம் நூறு பின்னூட்டங்களுக்காகச் சொல்லுவார். அதனால், விட்டுவிடுகிறேன் ;-)
  மலைநாடான் said...
  (தண்ணி கொடி)
  சில அனுபவங்கள் ஒருவர் தானே
  கற்றுக்கொள்வது சில மற்றவர்கள்
  கற்றுத்தருவது. இது எனக்குகற்றுத் தரப்பட்டது அந்தஅனுபவத்திலிருந்து...


  வசந்தன், வன்னிப்பயல் !

  தண்ணிக்கொடி, எனக்கும் அவ்விதமே கற்றுத்தரப்பட்டது.
  மலைநாடான் said...
  //எங்கள் வீட்டுக்கு முன்னாலே ஒன்று நின்றது. விபரம் சொன்னால், மலைநாடான், "பெயரிலி மரத்திலே ஏறி நின்றார் நான் கண்டேன்" என்றெல்லாம் நூறு பின்னூட்டங்களுக்காகச் சொல்லுவார். அதனால், விட்டுவிடுகிறேன் ;-) //

  நமக்கெல்லாம் அந்த நூறு, இருநூறு, ஆசையெல்லாம் கிடையாதப்பா. இருபத்தைஞ்சு தாண்டினாலே ஏனோதானோ என்டு வந்துவிடும். இது புதுசு புதுசா சொல்லுறதால ஓடுது.

  பெயரிலி கதை, ஒரு பெருங்கதை. அதைப்பிறகு பாப்பம்.:))

Post a Comment
 

நன்றி, வணக்கம்.