பொங்கலும் போர்த்தேங்காயும்.


ஈழத்தில் எங்கள் பொங்கலின் முதற்பகுதியை வாசித்துவிட்டுத் தொடருங்கள்.

தென் தமிழீழக் கிராமத்துப் பொங்கல்.

பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னரே வீட்டின் முன், ஆற்றுநீர் அடித்துக் கரைசேர்த்த வெள்ளைக்குருமணல் வண்டில்களில் ஏற்றி வந்து பறிக்கப்படும். வடபகுதியில் முற்றங்களை சாணகத்தால் மெழுகி, கோலம்போட்டு பொங்குமிடத்தை தயார் செய்வார்கள். ஆனால் தென் தமிழீழத்தில் இந்தக் குருமணலினைக் கொண்டு சிறிய மேடையொன்று அமைத்து, அதிலே கோலம் போட்டு, சுற்றிவரத் தோரணம் கட்டி அழகு செய்வார்கள். பொங்கல் பானைகள் பெரும்பாலும் மண்பாணைகளாகவே இருக்கும். மண்பானையில் பொங்கல் செய்வதென்பது, சுவையை மிகுதியாக்கும். ஆயினும் அதிலே பொங்குவது சற்று நுட்பமான காரியம்தான். பொங்கல், படையல் எல்லாம் ஏறக்குறைய வடபகுதிபோலவே இருக்கும்.

காலையில் படையலும் வழிபாடுமாக இருக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் மதியப்பொழுதுகளில் வேறுவகை மனமகிழ்வுக் கொண்டாட்டங்களாக மாறிவிடும். சின்ன வயதில் அம்மா மதியத்துக்குப் பிறகு வெளியில் போகவிடமாட்டா. போட்டிகளும், விளையாட்டுக்களும், நடைபெறுமிடங்களில், போதையும் இருக்கும். அதனால் சண்டைகள் வந்துவிடும் என்கின்ற பயம்தான். ஆனால் எனக்கு அந்த வேளைகளில் நடைபெறும் போட்டிகளைப் பார்க்க மிகுந்த ஆசை. அதிலும் போர்த் தேங்காய் அடித்தல் என்றொரு விளையாட்டு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களோ தெரியாது. மிகுந்த சுவாரசியமான விளையாட்டு அது.

சற்றேறக்குறைய கிறினைட் எனும் கைக்குண்டளவில்,( பாருங்கள் கைக்குண்டு எங்கள் தலைமுறைக்கு எவ்வளவு பரிச்சமாகப் போய்விட்டது) இருக்கும் சிறிய வகைத் தேங்காய் அது. யாழ்ப்பாணப் பக்கம் நாள்தேங்காய் மரமென சில மரத்தினைத் தெரிவு செய்து, அதன் தேங்காய்களை கோவில் தேவைகளுக்கும், மங்கள வைபவங்களும் பாவிப்பார்கள். அதுபோல் போர்த் தேங்காய் மரங்களும் தெரிவு செய்து பாவிக்கப்படும். இந்தத் தேங்காய்களின் மேலோடாகிய சிரட்டை(கொட்டாங்குச்சி) மிகவும் தடிப்பானது.

போர்த்தேங்காய் விளையாட்டில் ஒரே சமயத்தில், இருவர் ஈடுபடுவார்கள். தமிழகத்துக் கிராமங்களில் நடைபெறும் சேவற்சண்டைகளுக்கு இணையான சுவாரசியத்துடன் இவ்விளையாட்டு நடைபெறும். முதலில் ஒருவர் தன்தேங்காயை நிலத்தில் குத்தி நிறுத்துவார். மற்றவர் அதன் மேல் தன் தேங்காயைக்கொண்டு அடிப்பார். வைத்த தேங்காய் உடையாவிட்டால், முறைமாறி அடித்ததேங்காய் அடிவாங்கத்தயாராகும். சிலவேளைகளில் சிரடடைகள் வெடித்துச் சிதறுவதனால், போட்டியாளர்களின் முகம் கைகள் மட்டுமல்ல, பார்வையாளர்களது உறுப்புக்களும் ஊறுபடுவதுண்டு. போட்டியில் பணப்பந்தயம் முதல் தண்ணிப்பந்தயம் வரை இருக்கும். பல தேங்காய்களை சிதறடித்த தேங்காயை வைத்திருக்கும் நபர் அன்றைய பொழுதில் கதாநாயகன்தான். ஏனென்றால் அவர் எங்கெங்கு போட்டிக்குச் செல்கின்றாரோ, அங்கெல்லாம் அவர் பின்னே ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கச் செல்லும். அவரும் ராசநடை நடந்து செல்வார்.

மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கலாக நடைபெறுவதும் இங்குதான் சிறப்பாக இருக்கும். தைப்பொங்கலின் மறுநாள் காலைமுதலே பட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எருதுகளின் கொம்புகள் அழகாகச்சீவப்பட்டு வர்ணம் தீட்டப்படும். பசுக்கள் குளிக்கவார்க்கப்பட்டு, கழுத்தைச் சுற்றி மாலை அலங்காரங்கள் செய்யப்படும். . எருமையினப்பசுக்கள் நீராட்டபடுவதோடு சரி. பெரும்பாலும் நெற்றியில் ஒரு சந்தனப்பொட்டுடன் சமாதானம் கண்டுவிடும். ஏன் எனும் கேள்ளவி என்னுள் எழும்போதெல்லாம், என்னைப்போல் கறுப்பு என்பதாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதாலோதான் அவை பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை போலும் எனச் சமாதானம் கண்டுகொள்வேன். வடபகுதி போலல்லாது, காலையிலேயே பட்டிப்பொங்கல் நடைபெறும்.

பொங்கல் முடித்துப் படைத்த பின் பட்டிகள் திறக்கப்படும் அந்த்ததருணங்களுக்கான ஆயத்தங்கள் சில தினங்களுக்கு முன்னமே சிறுவர்களாகவிருந்த எங்கள் மத்தியில் ஆரம்பமாகிவிடும். நீளமான தடிகளில் கொழுவி ( வேனாம் வில்லங்கம்) கொழுக்கி போன்றதொரு கம்பியை வைத்துக் கட்டி, ஒரு தற்காலிக ஆயுதம் தயார் செய்து மறைத்து வைத்திருப்போம். பட்டிகள் திறந்து பசுக்களும் காளைகளும் திறக்கப்பட்டதும், சிறுவர்குழாம்கள் கவனிப்பது, அக்கால் நடைகளின் கழுத்துக்களைத்தான். அவற்றின் கழுத்தில் கோர்த்துக்கட்டப்பட்டிருக்கும் வடை மாலைகளும், அந்த மாலைகளில் சேர்த்துக்கட்டப்பட்ட பணநோட்டுக்கள் சிலதும் தான் எங்கள் எதிர்பார்ப்பின் இலக்கு. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கால்நடையைக் கலைத்தவாறே விரையும். அவற்றின் கழுத்திலே உள்ள மாலைகளைக் குறிவைத்து எங்கள் தற்காலிக ஆயுதம் நீளும். மாலைகள் அறுக்கபட்ட காளைகளையோ, பசுக்களையோ, பின்னர் யாரும் கலைக்க மாட்டார்கள். ஆனால் சில கால்நடைகள் இலகுவில் அகப்படமாட்டாது. தமிழகத்து ஜல்லிக்கட்டுக்குச் சமமான விறுவிறுப்போடு இந்த விரட்டும் நடக்கும்.

பெரும்பாலும் இந்த விளையாட்டில் இளைஞர்களும், சிறுவர்களுமே ஈடுபடுவார்கள். அறுத்தெடுக்கப்பட்ட மாலைகளில் உள்ள வடைகள் உடனடி உணவாகும். கிடைத்த பணம் அன்றிரவுச்சினிமாவுக்கு கட்டணமாகும். நீங்கள் எருமைப்பாலில் பொங்கிய பொங்கல் சாப்பிட்டிருக்கிறீர்களா? அமிர்தம் அமிர்தம் என்று என்னவோ சொல்கிறார்களே, அது அதுதான். ஆனா அந்த அமிர்தத்தை இப்போது நீங்கள் சாப்பிட முடியாது. ஏனென்றால் இன்று அந்த மண்ணில்தான் போரின் ஆழமான வடுக்கள், அவலங்களை ஏற்படுத்தி, எங்கள் சகோதரர்கள் எல்லாவற்றையும் இழந்த ஏதிலிகளாக, மரங்களின் கீழும், முகாம்களிலுமாக, உண்பதற்குச் சீரான உணவின்றிச் சிதைந்து போயுள்ளார்கள். போர்தேங்காய் விளையாடி உறவுகள், போரினால் சிதறுகாயாக அடிக்கப்படுகிறார்கள். ஆனாலும்..

எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகளில் இன்பப் பொங்கல் நிறைவாய் பொங்கும் எனும் நம்பிக்கையோடு...

10 Comments:

 1. கானா பிரபா said...
  தெந்தமிழீழத்து நிகழ்வுகள் நாங்கள் அனுபவித்திராதவை என்பது ஆச்சரியமான விஷயம். பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்த அருமையான பதிவிற்கு நன்றிகள்
  Anonymous said...
  வருசா வருசம் செய்யிற விசயத்தானே மலை நாடன் சொல்லப்போறார் நினைப்புடன் இங்கே என்று சுட்டியுடன் உள்ளுக்கு வந்தால் ஆச்சரியம் காத்திருந்தது.. இதுவரை அறிந்திராத தென் தமிழீழ பொங்கல் கலாச்சார நிகழ்ச்சிகளை அழகாக படம் பிடித்தது போல பதிவு செய்திருக்கிறார். தெரியாததை தெரிய வைத்தமைக்கு எனது நன்றிகள்
  -/பெயரிலி. said...
  மலைநாடான்
  எப்படியாகப் பொங்கல் கொண்டாடினோமென்பதே ஞாபகத்திலிருந்து மறை/றந்துபோய்விட்டது. முற்றத்திலே பொங்குவதா, குசினிக்குள்ளேயே பொங்குவதா என்று வீட்டிலே இரண்டு கட்சிகள் எப்போதுமிருந்தது மட்டுமே ஞாபகமிருக்கின்றது. அடுத்தடுத்த வீடுகளிலேயிருந்து வரும் பொங்கல்களிலே பிடித்ததைத் தின்னுதலும் கொண்டுபோய் இங்கே பொங்கினதைக் கொடுத்துவருதலும் ஞாபகமிருக்கிறது. அதுவும் முந்திரிகைப்பருப்பு, வற்றல் கிடைக்கச் சிக்கலான காலத்திலே புக்கையிலே அவற்றினை மட்டும் தோண்டியெடுத்துத் தின்றுவிட்டு மீதியை விட்டுவைத்ததும் ஞாபகமிருக்கிறது. பொங்கலின்சூட்டிலே அரைகுறையாக அவிந்து கொழகொழத்த வாழைப்பழத்தின் குளிரான பக்கத்தைத் தின்றது ஞாபகமிருக்கிறது. அதைவிட, காளிகோவிலிலும் பேச்சியம்மன் மாரியம்மன் கோவில்களிலும் பொங்கல்களுக்குப் பானை வைக்க இடம் பிடிக்கக் கல் தேடி அடுக்கியது நல்ல ஞாபகமிருக்கிறது.

  இவ்வாண்டு எப்படியாகப் பொங்கல் என்று கேட்கக்கூட தொலைபேசி எடுக்கலாமா விடவா என்ற யோசனைமட்டுமேதான். வெளியே சிணுங்கும் மழை; தமிழ்ப்பக்கங்களைத் திறந்தால், நாளுக்கு நாலைந்து மர்மம் துலங்கவே படப்போகாச் சாவுகள்; செய்திகளைப் பார்த்தால், நாசமறுவான் சேனி ஈரானுக்குள்ளேயும் போகலாமென்று ஃபொக்ஸ் ரிவியிலே எட்டிக் கிழட்டுநாய்க்கு ஒரு உதை விடலாமா என்ற ஆத்திரமும் கையாலாகத்தனமும்; இந்நிலையிலே ஒரு மகிழ்ச்சிக்கீற்றாக உங்கள் பதிவு மறந்ததையும் மறைந்ததையும் மீட்டிக்கொள்ள உதவும்.
  மலைநாடான் said...
  பிரபா!

  அனுபவங்கள் என்றும் சுகமானவை.அதன் நினைவுகளும்தான்..

  வருகைக்கும், கருத்துக்கும், நன்றி.
  மலைநாடான் said...
  சின்னக்குட்டி!

  உங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. கூடவே வாழ்த்துக்களும்.
  Anonymous said...
  மலைநாடர்!
  பாரம்பரியம் மிக்க தென் தமிழீழப் பொங்கல் விழா பற்றிய குறிப்புகளடங்கிய பதிவு; மிகச் சுவைபட உங்களுக்கே உரிய நடையில் கூறியது சுவையானவை. இப் போர்த்தேங்காய் விடயம் புதிது; பழைய யாழ்ப்பாணத்தில் இருந்ததாக எழுத்தாளர் எஸ்பொ தன் "நனவிடை தோய்தல்" நூலில் எழுதியிருந்தார்.
  யோகன் பாரிஸ்
  மலைநாடான் said...
  பெயரிலி!

  வருகைக்கும், உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கும் நன்றி. நகரப்புறங்களில்தான் வீட்டுக்குள் பொங்குவது என்பது, கிராமங்களில் எல்லாம் முற்றத்தில்தான். அறுவடை முடிந்தபின் வயலில் உள்ள களத்துமேட்டில் பொங்கும் வழக்கம் கூட தென்தமிழழீழக் கிராமங்களில் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்டறே நினைக்கின்றேன்.
  Anonymous said...
  மலைநாடன்,
  தென் தமிழீழப் பொங்கல் நிகழ்வுகள் அருமை.. நடந்ததை அப்படியே கண் முன் நிறுத்துகிறது உங்கள் பதிவு..

  ஈழத்தில், மீண்டும் இது போன்ற பொங்கல் காலம் வந்துவிடட்டும்...
  Anonymous said...
  //எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகளில் இன்பப் பொங்கல் நிறைவாய் பொங்கும் எனும் நம்பிக்கையோடு..//

  நம்பிக்கை நிறைவேற வாழ்த்துக்கள் மலைநாடான். பல அனுபவங்களை அறிய தந்தமைக்கு நன்றி!
  மலைநாடான் said...
  //ஈழத்தில், மீண்டும் இது போன்ற பொங்கல் காலம் வந்துவிடட்டும்...//

  பொன்ஸ்!

  நிச்சயம் அந்தக்காலம் வந்தே தீரும். தங்கள் வருகைக்கு நன்றி.


  திரு!

  பொன்ஸ் அக்காவிற்குச் சொன்னதே உங்களுக்கும்.:)

Post a Comment
 

நன்றி, வணக்கம்.