பொங்கலும் போர்த்தேங்காயும்.
10 comments Published by மலைநாடான் on Sunday, January 14, 2007 at 1:48 AM
ஈழத்தில் எங்கள் பொங்கலின் முதற்பகுதியை வாசித்துவிட்டுத் தொடருங்கள்.
தென் தமிழீழக் கிராமத்துப் பொங்கல்.
பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னரே வீட்டின் முன், ஆற்றுநீர் அடித்துக் கரைசேர்த்த வெள்ளைக்குருமணல் வண்டில்களில் ஏற்றி வந்து பறிக்கப்படும். வடபகுதியில் முற்றங்களை சாணகத்தால் மெழுகி, கோலம்போட்டு பொங்குமிடத்தை தயார் செய்வார்கள். ஆனால் தென் தமிழீழத்தில் இந்தக் குருமணலினைக் கொண்டு சிறிய மேடையொன்று அமைத்து, அதிலே கோலம் போட்டு, சுற்றிவரத் தோரணம் கட்டி அழகு செய்வார்கள். பொங்கல் பானைகள் பெரும்பாலும் மண்பாணைகளாகவே இருக்கும். மண்பானையில் பொங்கல் செய்வதென்பது, சுவையை மிகுதியாக்கும். ஆயினும் அதிலே பொங்குவது சற்று நுட்பமான காரியம்தான். பொங்கல், படையல் எல்லாம் ஏறக்குறைய வடபகுதிபோலவே இருக்கும்.
காலையில் படையலும் வழிபாடுமாக இருக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் மதியப்பொழுதுகளில் வேறுவகை மனமகிழ்வுக் கொண்டாட்டங்களாக மாறிவிடும். சின்ன வயதில் அம்மா மதியத்துக்குப் பிறகு வெளியில் போகவிடமாட்டா. போட்டிகளும், விளையாட்டுக்களும், நடைபெறுமிடங்களில், போதையும் இருக்கும். அதனால் சண்டைகள் வந்துவிடும் என்கின்ற பயம்தான். ஆனால் எனக்கு அந்த வேளைகளில் நடைபெறும் போட்டிகளைப் பார்க்க மிகுந்த ஆசை. அதிலும் போர்த் தேங்காய் அடித்தல் என்றொரு விளையாட்டு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களோ தெரியாது. மிகுந்த சுவாரசியமான விளையாட்டு அது.
சற்றேறக்குறைய கிறினைட் எனும் கைக்குண்டளவில்,( பாருங்கள் கைக்குண்டு எங்கள் தலைமுறைக்கு எவ்வளவு பரிச்சமாகப் போய்விட்டது) இருக்கும் சிறிய வகைத் தேங்காய் அது. யாழ்ப்பாணப் பக்கம் நாள்தேங்காய் மரமென சில மரத்தினைத் தெரிவு செய்து, அதன் தேங்காய்களை கோவில் தேவைகளுக்கும், மங்கள வைபவங்களும் பாவிப்பார்கள். அதுபோல் போர்த் தேங்காய் மரங்களும் தெரிவு செய்து பாவிக்கப்படும். இந்தத் தேங்காய்களின் மேலோடாகிய சிரட்டை(கொட்டாங்குச்சி) மிகவும் தடிப்பானது.
போர்த்தேங்காய் விளையாட்டில் ஒரே சமயத்தில், இருவர் ஈடுபடுவார்கள். தமிழகத்துக் கிராமங்களில் நடைபெறும் சேவற்சண்டைகளுக்கு இணையான சுவாரசியத்துடன் இவ்விளையாட்டு நடைபெறும். முதலில் ஒருவர் தன்தேங்காயை நிலத்தில் குத்தி நிறுத்துவார். மற்றவர் அதன் மேல் தன் தேங்காயைக்கொண்டு அடிப்பார். வைத்த தேங்காய் உடையாவிட்டால், முறைமாறி அடித்ததேங்காய் அடிவாங்கத்தயாராகும். சிலவேளைகளில் சிரடடைகள் வெடித்துச் சிதறுவதனால், போட்டியாளர்களின் முகம் கைகள் மட்டுமல்ல, பார்வையாளர்களது உறுப்புக்களும் ஊறுபடுவதுண்டு. போட்டியில் பணப்பந்தயம் முதல் தண்ணிப்பந்தயம் வரை இருக்கும். பல தேங்காய்களை சிதறடித்த தேங்காயை வைத்திருக்கும் நபர் அன்றைய பொழுதில் கதாநாயகன்தான். ஏனென்றால் அவர் எங்கெங்கு போட்டிக்குச் செல்கின்றாரோ, அங்கெல்லாம் அவர் பின்னே ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கச் செல்லும். அவரும் ராசநடை நடந்து செல்வார்.
மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கலாக நடைபெறுவதும் இங்குதான் சிறப்பாக இருக்கும். தைப்பொங்கலின் மறுநாள் காலைமுதலே பட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எருதுகளின் கொம்புகள் அழகாகச்சீவப்பட்டு வர்ணம் தீட்டப்படும். பசுக்கள் குளிக்கவார்க்கப்பட்டு, கழுத்தைச் சுற்றி மாலை அலங்காரங்கள் செய்யப்படும். . எருமையினப்பசுக்கள் நீராட்டபடுவதோடு சரி. பெரும்பாலும் நெற்றியில் ஒரு சந்தனப்பொட்டுடன் சமாதானம் கண்டுவிடும். ஏன் எனும் கேள்ளவி என்னுள் எழும்போதெல்லாம், என்னைப்போல் கறுப்பு என்பதாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதாலோதான் அவை பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை போலும் எனச் சமாதானம் கண்டுகொள்வேன். வடபகுதி போலல்லாது, காலையிலேயே பட்டிப்பொங்கல் நடைபெறும்.
பொங்கல் முடித்துப் படைத்த பின் பட்டிகள் திறக்கப்படும் அந்த்ததருணங்களுக்கான ஆயத்தங்கள் சில தினங்களுக்கு முன்னமே சிறுவர்களாகவிருந்த எங்கள் மத்தியில் ஆரம்பமாகிவிடும். நீளமான தடிகளில் கொழுவி ( வேனாம் வில்லங்கம்) கொழுக்கி போன்றதொரு கம்பியை வைத்துக் கட்டி, ஒரு தற்காலிக ஆயுதம் தயார் செய்து மறைத்து வைத்திருப்போம். பட்டிகள் திறந்து பசுக்களும் காளைகளும் திறக்கப்பட்டதும், சிறுவர்குழாம்கள் கவனிப்பது, அக்கால் நடைகளின் கழுத்துக்களைத்தான். அவற்றின் கழுத்தில் கோர்த்துக்கட்டப்பட்டிருக்கும் வடை மாலைகளும், அந்த மாலைகளில் சேர்த்துக்கட்டப்பட்ட பணநோட்டுக்கள் சிலதும் தான் எங்கள் எதிர்பார்ப்பின் இலக்கு. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கால்நடையைக் கலைத்தவாறே விரையும். அவற்றின் கழுத்திலே உள்ள மாலைகளைக் குறிவைத்து எங்கள் தற்காலிக ஆயுதம் நீளும். மாலைகள் அறுக்கபட்ட காளைகளையோ, பசுக்களையோ, பின்னர் யாரும் கலைக்க மாட்டார்கள். ஆனால் சில கால்நடைகள் இலகுவில் அகப்படமாட்டாது. தமிழகத்து ஜல்லிக்கட்டுக்குச் சமமான விறுவிறுப்போடு இந்த விரட்டும் நடக்கும்.
பெரும்பாலும் இந்த விளையாட்டில் இளைஞர்களும், சிறுவர்களுமே ஈடுபடுவார்கள். அறுத்தெடுக்கப்பட்ட மாலைகளில் உள்ள வடைகள் உடனடி உணவாகும். கிடைத்த பணம் அன்றிரவுச்சினிமாவுக்கு கட்டணமாகும். நீங்கள் எருமைப்பாலில் பொங்கிய பொங்கல் சாப்பிட்டிருக்கிறீர்களா? அமிர்தம் அமிர்தம் என்று என்னவோ சொல்கிறார்களே, அது அதுதான். ஆனா அந்த அமிர்தத்தை இப்போது நீங்கள் சாப்பிட முடியாது. ஏனென்றால் இன்று அந்த மண்ணில்தான் போரின் ஆழமான வடுக்கள், அவலங்களை ஏற்படுத்தி, எங்கள் சகோதரர்கள் எல்லாவற்றையும் இழந்த ஏதிலிகளாக, மரங்களின் கீழும், முகாம்களிலுமாக, உண்பதற்குச் சீரான உணவின்றிச் சிதைந்து போயுள்ளார்கள். போர்தேங்காய் விளையாடி உறவுகள், போரினால் சிதறுகாயாக அடிக்கப்படுகிறார்கள். ஆனாலும்..
எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகளில் இன்பப் பொங்கல் நிறைவாய் பொங்கும் எனும் நம்பிக்கையோடு...
எனது முன் பனிக் காலங்கள்.
4 comments Published by மலைநாடான் on Wednesday, January 03, 2007 at 2:08 PMதிருவெம்பாவை பூசையும்
திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
சுகமான ஒரு முன்பனிக்காலம்
எழுபதுகளில் எனக்கிருந்தது.
பின்வந்த எண்பதுகளில்
காவலும் கடமையுமாய்
கடலிலும் கரையிலும்
என் முன்பனிக்காலம் கழிந்தது.
தொன்னூறுகளின் தொடக்கத்திலோ
நெஞ்சு கனக்கும் நினைவுகளோடு
வெண்பனியுறையும் துருவக்
கரையின் தெருக்களில் நான்..
நன்றி - ' திசை'
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தவர்கள் 3
9 comments Published by மலைநாடான் on Friday, December 29, 2006 at 11:06 PM
அனைவர்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்ந்தவர்கள் தலைப்பில் நான் ஏற்கனவே இரு பதிவுகள்.(.பகுதி 1 பகுதி 2 ) எழுதியுள்ளேன். என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத இனிய ஆசான்கள் மூவரை அவற்றில் அடையாளப் படுத்தியிருந்தேன்.இன்று இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்த மேலும் இரு உத்தமர்களை இங்கே அழைத்து வருகின்றேன்.
தம்பலகாமத்தில் படித்த அந்தப் பள்ளிப்பருவத்தில், எனக்குக் கற்றுத்தந்த ஆசான்களில் இந்த இருவரும் கூட மறக்கமுடியாத மான்புடையவர்களே. ஆசிரியர்கள் திரு.தம்பிராஜா, திரு.தம்பையா, ஆகிய இருவரும் ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்த உத்தமர்கள் மட்டுமல்ல, உன்னதமான மண்ணின் மைந்தர்களும்தான்.
இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கூட ஒன்று. இருவரும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், இருவரும் எப்போதும் தூயவெண்ணிற உடையிலே காணப்படுவார்கள். நல்ல தமிழுக்குச் சொந்தக்காறர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக செந்நெல் விளைவிக்கும் நல் விவசாயிகள்.
ஆசிரியர் திரு: தம்பிராஜா!
சிறுவயதில் சமுகவியல் சொல்லித் தந்தவர். ஏட்டில் இருந்த எழுத்துக்கள் மூலம் கற்றுத் தந்ததவரல்ல அவர். அதற்கும் மேலே சமுகத்தின் பல்வேறு கூறுகளையும் சொல்லித்தந்தவர். இலேசான நகைச்சுவையுடன் இனிமையாகப் பாடம் நடத்துவார். வதந்தி பரவும் வகைதனை, வகுப்பில் மாணவர்களைக் கொண்டு நடத்திக்காட்டிப் புகட்டியவர். பத்திரிகை வாசிப்பதிலும், பத்திரிகைகளின் பங்கு , மக்கள் சமுகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்துச் சொல்லித்தந்தவர். பாடசாலை நேரத்துக்கப்பால், சமுகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதிலும், பாடசாலைகாலம் முடித்து, உயர்கல்வி கற்கும் காலத்தில், செல்நெல் விளைவிக்கும் விவசாயியாக வயல்வரப்புக்களில் நடந்த காலத்தில், உற்ற தோழனாய் உடன் வந்தவர்.
பின்னாட்களில் எனக்கு, சமுகம் சார்ந்த பணிகளிலும், பத்திரிகைத் துறைசார்ந்த பணிகளிலும், ஆர்வமுறவும், ஈடுபடவும் இவரது கற்கைநெறி, உந்தித் தள்ளியது, உதவியாகவிருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தூய வெண்ணிற வேட்டியும் சட்டையுமணிந்து, கையில் செய்திப்பத்திரிகைகளுடனும், வகுப்புக்களை வலம் வரும் இவரை, மாலைவேளைகளில் மடித்துக்கட்டிய சாரத்துடனும், தோள்மேல் நீளக்கிடக்கும் மண்வெட்டியுடனும், மண்ணின் மைந்தனாக கிராமத்துத் தெருக்களில் காணலாம். வயல்களில் நெற்பயிர்களை நிறைவுடன் வளர்ப்பதற்கு வேண்டிய சூத்திரங்கள் பல சொல்லித் தந்தவர். ஏன், எதற்கு என எல்லாவற்றையும் யோசிக்கப்பழக்கியவர்.
ஆசிரியர். திரு: தம்பையா!
இவர் அந்தப்பாடசாலையில், பல்துறைப்பயிற்றாளன் என்று சொன்னால் மிகையாகாது. சித்திர ஆசிரியரான இவர், எனக்குக் கற்றுத்தந்த கலைகள் பல. ஓவியம், சிற்பம், ஒலிபரப்பு, அச்சுத்துறை என அனைத்துத் துறைகளிலும், எனக்கு அடியெடுத்துக் கொடுத்த அல்லது அடிகொடுத்துச் சொல்லி தந்த சோர்விலான். குறித்த வயசுக்குப் பின், மாணவர்களென்றெண்ணுவதற்கு மாறாக மனம் விரும்பும் நண்பனாகப் பாவித்துப் பயிற்றுவித்தவர்.
பாடசாலை முடிந்துவிட்ட மாலைநேரங்களிலும், பாடசாலை விடுமுறை நாட்களிலும் கூட, பள்ளிப் பணிகளில் மூழ்கிக்கிடந்தவர். அந்தப்பணிகளினூடே, அளவிலா விடயங்களை, அற்புதமாகச் சொல்லித் தந்தவர். ஓவியம் வரைகையில், தூரிகையை லாவகமாக வளைத்திழுப்பதிலாகட்டும், சும்மா கிடக்கும் சுள்ளித்தடியினைக் காட்டி, அதற்குள் ஒளிந்து கிடங்கும் உருவத்தினை உணரவைப்பதிலாகட்டும், ஒலிபரப்புத்துறையில் உச்சரிப்பு நேர்த்தியை ஒழுங்குபடுத்தியதிலாகட்டும், அச்சுக்கலையில் அழகியலை காண்பதிலாகட்டும், எல்லாவற்றையும், இரசனையோடு செய்தார். எங்களையும் செய்வித்தார்.
மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்லி மகிழலாம். பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியொன்று. மஞ்சள், பச்சை, நீலம், ஆகிய முவர்ணங்கள் மூன்று இல்லங்களுக்கும். இந்த இல்ல அலங்காரங்களை, சினிமாக்களில் வரும் செட்டுக்களுக்கு நிகராக நாங்கள் செய்வோம். அதிலே எங்கள் கலையாக்கத்தை பரீட்சித்துக் கொள்வோம்.
பச்சை வண்ண இல்லத்தின் அலங்காரத்துக்குப் பொறுப்பாக ஒருவன், மஞ்சள் வண்ண இல்லத்தின் அலங்காரத்துக்குப் பொறுப்பாக மற்றொருவன், என எனது நண்பர்களே இருக்க, நீல வண்ண இல்லத்துக்கான அலங்காரத்தில் நான். என்றும் பசுமையாகவே இருக்கும் மருதநிலத்தில் பச்சை அலங்காரமோ அல்லது பழுத்துப்போன மஞ்சள்அலங்காரமோ செய்ய அதிகம் சிரமப்படத்தேவையில்லை. இயற்றையான பொருட்களும், இன்னும் கொஞ்சம் கற்பனையும் சேர்த்தால், அலங்காரச் சிகரங்களாக அவ்வில்லங்களை அமைத்துவிடலாம். அதனாலேயே போட்டியில் அலங்காரத்துக்கான பரிசின் முதலிரு இடங்களையும் அவ்வண்ண இல்லங்கள் தட்டிச் சென்றுவிடும். அதனால் நீல நிற இல்லங்கள் இறுதியிடத்தை தமதுடமையாக்கி வைத்திருந்தனர். ஆனால் அவ்வருடம் நிச்சயம் அதை மாற்றுவேன் எனச் சொல்லியிருந்தேன்.
தம்பையா மாஸ்டருக்குச் சாடையான சந்தேகம். ஆனால் கேட்கவில்லை. ' கடல்புறா ' நாவல் வாசித்த பாதிப்பிலிருந்த நான், அவ்வருடம் நீல நிற இல்லத்திற்காகப் போட்ட அலங்காரம், பிரமாண்டமான ஒருகடற்புறாக்கப்பல் வடிவம். இறுதிநேரம்வரை அடுத்த இல்லங்களுக்காகப் பணியாற்றும் நண்பர்களுக்குக் கூடச் செர்லலாது இரகசியமாக வேறோர் இடத்தில் வைத்து அனைத்துப்பபகுதிகளையும், தனித்தனிப் பாகங்களாகச் செய்து, இறுதிநாளன்றுக்கு முன்னைய இரவில், முழுவதுமாக மைதானத்தில் பொருத்தி விட்டேன். காலையில் வந்தவர்களுக்கு மைதானத்தில் நீலவானத்தின் பின்னனியில், நீலக்கடலின் அலையடிப்பில் செல்லும், கடற்புறா எனும் கப்பலொன்று மைதானத்தில் நிற்கக் கண்டனர். தம்பையா மாஸ்டர் பார்த்த மாத்திரத்தில் கட்டியணைத்துக்கொண்டார். எல்லாம் சரி, இதற்குக் கப்பல் பணியாளர்கள் போல் வேடமிட்ட மாணவர்களை நிறுத்தினால் இன்னமும் நல்லா இருக்குமெனச் சொல்லி முடிக்க முன்னமே, நீலவண்ணத்தில் கப்பல் பணியாளர்கள் வந்ததைத் கண்டதும், இவ்வருடம் உனக்குத்தான் பரிசெனச் சொல்லி மகிழ்ந்தார். போட்டி வேளையில், இயற்கையாகக் காற்றும் சற்று வீசக் 'கடற்புறா' மிதப்பது போலச் சற்று அசைந்தும் காட்டிற்று. அதற்கப்பாலும் பரிசு எனதில்லத்துக்குக் கிடைக்காமல் போகுமா ?
ஒலிபரப்புத் துறையில் எனக்கிருந்த ஆர்வம் கண்டு, விளையாட்டுப்போட்டிகள், கலைவிழாக்கள், எதுவாயினும் அற்புதமாக அறிவிப்புச் செய்யும் தம்பையா மாஸ்டர், தனக்குப்பக்த்தில் எனக்கும் ஒரு சரியாசனம் போடச் செய்தார்.
இன்று எனக்கு இந்தக் கணினியில் தமிழைத்தட்டெழுவதை விரைவாகச்செய்ய முடிகிற முனைப்புக்கான வினையுக்கிகூட அவரேதான். அந்நாட்களில் பாடசாலைத் தமிழ்தட்டெழுத்து இயந்திரத்தில் தட்டப்பழக்கியவரும் அவரேதான்.
நினைவுக்கையெழுத்திடுங்கள் எனச்சொல்லி, நினைவுக்கையெழுத்திடும் குறிப்புப் புத்தகத்தை நீட்டினால், ' சும்மாயிரு ' எனும் யோகர் சுவாமி வாசகத்தை அழகாய் எழுதி, அடியில் ச.தம்பையா என அழகாய் கையெழுத்திட்டுத்தருவார். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிடலாம். சிகப்பு, நீலம், கறுப்பு, என மூன்று வண்ணங்களில் மட்டுமே பேனைக்கு விடும் மை இருந்த காலத்தில், தம்பையா மாஸ்டரின் பேனை மட்டும் அழகாக ஊதாநிற வண்ணத்தில் எழுதி, வித்தியாசம் காட்டி நிற்கும்.
சொல்லச் சொல்ல சுகமாயிருக்கும் நினைவுகள் இன்னும் எத்தனை எத்தனை? உண்மையில் இந்த உத்தமர்கள் கற்றுத்தந்த, கள்ளமற்ற சிந்தனைகள், காட்டிய பரிவுகள், ஊட்டிய அன்னமாய், உயிரில்கலந்து, இன்றளவும் என்னை உயர்த்திச் செல்கிறது என்றே சொல்வேன்.
ஐயமீர்! ஆண்டுகள் பல சென்றபோதும், பல ஆயிரம் மைல்கள் கடந்திட்ட போதும், உங்களை மறவா நேசிப்போடிருத்தலே, இன்னும் என்னை நீள நடத்திச் செல்கிறதென நம்புகின்றேன். நாளையொரு பொழுதில், நானும் நீங்களும் நேசித்திருந்த தெருக்களில், நெஞ்சினின்றும் நீங்கா நினைவுகளுடன் நடந்து மகிழ்வேன் எனும் நம்பிக்கையோடு, இன்னுமோர் தினத்தில், இல்லையில்லை மறைந்துகழியும் மற்றுமோர் ஆண்டிலிருந்து அடியெடுத்து நடக்கின்றேன்.
இதைப்பற்றிக் கனநாளா எழுதவேணும் என்டு நினைத்ததுதான். ஆனாலும் எப்படியோ கழிந்து போயிரும். கனநாட்களாக மருதநிழலில் எழுதவும் இல்லை. ( மருதநிழலுக்கு அடிக்கடி வாற அக்கா வேற கோபிக்கப்போறா) இணையத்தில் இதுவரையில் வேறயாரும் இதனைப்பதிவு செய்ததாகத் தேடிப்பார்த்ததில் காணவில்லை. ஆதலால் இன்று இதைப்பதிவு செய்கின்றேன்.
சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்களின் தரமறியச் சங்கப்பலகைமேல் வைத்து, பொற்றாமரைக்குளத்தில் விட, நூல் தரமாயின் சங்கப்பலகை நூலோடு மிதக்குமெனவும், அல்லாவிடின் நீரில் அமிழ்ந்துவிடும் என்றும் ஒரு கதை சிறுவயதில் கேட்ட ஞாபகம். அதுசரி, சங்கப்பலகைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு என எண்ணுகின்றீர்களா? இங்கே நான் குறிப்பிடுவது தமிழீழத்தின் திருமலை.
ஆமாம் திருகோணமலையில் 70களின் இறுதிகளில் இயங்கி வந்த ஒரு தமிழார்வக் குழுமத்தின் பெயர்தான், இங்கே நான் குறிப்பிடும் சங்கப்பலகை. தலைவரென்றும், செயலாளரென்றும், பதவிகள் தெரிவுசெய்து, மாதம் ஒருதரம் கூடி, தேநீரும், வடையும் சாப்பிட்டு, வெட்டிக்கதை பேசுவதோடு முடிந்து விடும் சங்கங்கள், மன்றங்கள், மத்தியில் தனித்துவத்தோடு செயற்பட்ட ஒரு அமைப்பு இந்தச் சங்கப்பலகை.
தலைவர் முதலாய பதவிகள் எதுவுமில்லாது, ஒருசில நண்பர்களின் உழைப்பில், பலரும் பயனடைந்தனர் இச் சங்கப்பலகையால்.
மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில்( பெளர்ணமி நாட்கள் சிறிலங்காவில் அரசவிடுமுறை தினங்கள்) மாலை ஆறுமணிக்கு, திருகோணமலை நகரி மத்தியை ஊடறுத்துச் செல்லும் மத்தியவீதியில். அமைந்திருக்கும் சென் சேவியர் பாடசாலை மண்டபத்தில் கணிசமான இளைஞர்கள் கூடுவார்கள்.
தெரிவுசெய்யபட்டிருக்கும் நிகழ்ச்சி வழங்குநரை. ஒரு நண்பர் அறிமுகஞ்செய்துவைப்பார். அத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும். நிகழ்ச்சி கட்டுரை வாசித்தலாக அல்லது ஆய்வுரையாக, அல்லது அறிவியல் சம்பந்மான விளக்கவுரையாக, என பல்கலை சார்ந்திருக்கும். ஆனால் அநேகமாக ஒரு நிகழ்ச்சிதான் நடைபெறும். நிகழ்ச்சி வழங்குபவர் குறைந்தது 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார். அதன்பின் அந்நிகழ்வு குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்நிகழ்வாக அமையும். நிகழ்ச்சி வழங்கியவர் பிரதானமாக எழுப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிப்பார். குறைந்தது ஒரு மணிநேரம் இது நடைபெறும். பின்னர் அனைவரும் கலைந்து செல்வர்.
இன்றைய கையடக்கப் பொருட்கள் வழங்கும், பல்வகைப்பயன்பாடுகள் போல், அன்றையபொழுதில் கையடக்கமாக நடந்த இப்பெளர்ணமி மாலை சங்கப்பலகை வழங்கிய பயன் மேலானாது. திருகோணமலையில், சமூகஅக்கறையும், தேடலும்மிக்க இளைஞர்கள் பலரை உருவாக்கியது. பரந்துபட்ட நல்ல வாசகர்களை உருவாக்கியது. இவற்றின் தொடர்ச்சியாக அரசியலார்வமிக்க இளைஞர்களையும், பின்னாளில் பல விடுதலைப்போராளிகளையும், உருவாக்கியது சங்கப்பலகை. இதில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்கள் சிலர் பின்னாட்களில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது, ஏரிக்கரை எனும் காலாண்டுச் சஞ்சிகை வெளியிட்டார்கள். நானறிந்தவரைக்கும், ஈழத்தின் இலக்கியப்பரப்பில் தரமான ஆக்கங்களுடனும், அழகான வடிவமைப்புடனும், வெளிவந்த சிற்றிதழ் இதுவாகும். ஆனால் என்ன சிற்றிதழ்களின் ஆயுட்காலக் குறைவுக்கு அதுவும் விதிவிலக்காகவில்லை.
அப்போது அதன் பெறுமானம் அவ்வளவு தெரியாவிடினும், இப்போது நினைக்கையில் பெறுமானம் புரிகிறது. இன்று இங்கு எழுதுவதில் ஏதேனும் நன்றாகத் தெரிந்தால் (தெரிந்தால்...?) திருமலையின் சங்கப்பலகைச் சந்திப்புக்களும் காரணமெனலாம். இதுபோன்ற நிகழ்வுகள் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருப்பதாயும் தெரியவில்லை...... இருந்தாலும் இராணுவம் இட்டுக்கட்டி இழுத்துச் சென்றுவிடுமே....
கும்பத்து மால் ஒரு பண்பாட்டுக்கோலம். 6
16 comments Published by மலைநாடான் on Monday, October 02, 2006 at 2:49 PMஇது நவராத்திரிக்காலம். தமிழகத்தின் நவராத்திரிக் கோலங்கள், தமிழீழத்தின் நவராத்திரிக் கோலங்கள், எனப் பல பதிவுகள் வந்துள்ள இத் தருணத்தில், தென் தமிழீழத்தின் நவராத்திரிக் கோலங்களையும், பதிவு செய்வதும், படிப்பதும், நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பதால், இப்பதிவில் தென் தமிழீழத்தின் நவராத்திரி, கும்பத்துமாலை பண்பாட்டுக்கோலமாகப் பதிவு செய்கின்றேன்.
தமிழகத்து நவராத்திரி காலங்கள், கொலுஅலங்காரக்களிலும், கலைநிகழ்வுகளோடும், களைகட்ட, தமிழீழத்தின் வடபுலத்தே, ஆலய வழிபாடுகளுடனும், வீடுகளிலும், கல்விநிலையங்களிலும், நடைபெறும் வாணிபூசைக் கொண்டாட்டங்களுடனும், நிறைவு கொள்ள, தென்தமிழீழத்தின் நவராத்திரிக் கொண்டாட்டங்களோ வேறுவிதமாக அமைந்திருக்கும்.
கும்பத்துமால்கள். ஊரின் மத்தியில் அல்லது எல்லைகளில் அமைந்திருக்கக் கூடிய ஆலயங்களின் வெளிப்பிரகாரத்தில், ஊர்கூடிக் கும்பத்துமால் கட்டும். மால் என்ற சொற்பதத்துக்கு கொட்டகை அல்லது பந்தல் எனப்பொருள் கொள்ளலாம். அந்தவகையில் பார்ப்போமேயானால், கும்பம் + மால் = கும்பத்துமால், கும்பம் வைக்கும் கொட்டகை எனப் பொருள்படும். கோவில்களில் கும்பம் வைப்பதோ கொலுவைப்பதோ தென்தமிழீழத்தில் பெரியளவில் இல்லை என்றே சொல்லலாம். பாடசாலைகளில் சரஸ்வதிபூசை கொண்டாடுவதோடு நவராத்திரிக் கொண்ணடாட்டம் முடிந்துவிடும். கானாபிரபாவின் நவராத்திரிபற்றிய பதிவு அதை நன்றாகவே பதிவு செய்துள்ளது.
நவராத்திரி என்றால் கும்பத்துமால்களில் ஊரே திரண்டு திருவிழாவாகக் கொண்டாடுவது தென் தமிழீழத்தின் தனித்துவச் சிறப்பு. பிற்காலத்தில் நகரப்புறங்களில் மாற்றங்கள் பல வந்து விட்ட போதும், கிராமங்கள் பலவும், கும்பத்துமால்களுடனேயே நவராத்திரியைக் கொண்டாடின. நவராத்திரிக்கு ஒரு வாரத்துக்கு முன், ஊர்கூடிக் கூட்டம் போட்டு, கும்பத்துமால் வைப்பதையும், தலமைப்பூசாரியையும் ( இவர் மந்திர தந்திரங்களில் தன் திறமையை ஏற்கனவே வேறுபல நவராதத்திரிக் கும்பத்துமால்களில் நிரூபித்தவராக இருப்பார்) தீர்மானிப்பதுடன் ஆரம்பமாகும். தொடர்ந்து வேகமாக கும்பத்துமால் கட்டப்படும். சுமார் நூறு மீற்றர் நீளமான கொட்டகைகள் காட்டுத்தடிகளால் கட்டப்பட்டு, தென்னங்கிடுகுகளால், வேயப்பட்டு, வெள்ளைத் துணிகளால் அலங்கரிக்கப்படும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வேப்பிலைக்கொத்துக்களும், அலங்காரத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படும். ஊரின் முக்கியபுள்ளிகள் இரவலாகக் கொடுத்த பெற்றோல் மாக்ஸ் லைற்றுக்கள் வெளிச்சம் தரும்.
நவராத்திரி ஆரம்ப நாளன்று கும்பத்துமால்களின் ஒரு அந்தத்தை கர்பக்கிரகம் போல அமைத்திருப்பார்கள். அதனுள்ளே கும்பங்கள் வைக்கப்படும். பெரியகுடங்களின் உள்ளே செப்புத் தகடுகளில் எழுதிய யந்திரங்களை வைத்து, நெல்லால் நிரப்பி, வேப்பிலை வைத்து, மேலே தேங்காய் வைத்து, கும்பங்கள் வைக்கப்படும். தலமைப்பூசாரி கும்பங்களை ஸ்தாபிப்பார். அன்றைய தினமே நேர்த்திக்காக கும்பமெடுப்பவர்களுக்கான காப்புக்கட்டுதலும் நடைபெறும். இப்படிக் கும்பமெடுப்பவர்கள். அந்த நவராத்திரி காலங்களில் விரதம் இருப்பார்கள். கும்பத்துமால்களில் நடைபெறும் பூசைகாலங்களில் இவர்கள் கலை (உரு) ஆடுவார்கள். அல்லது ஆடவைக்கப்படுவார்கள்.அப்படி ஆடுகின்ற அவர்களை ‘ பூமரம் ‘ என அழைப்பார்கள்.
கும்பத்துமால்களில் எனைக்கவர்ந்த விடயம், அங்கே நடைபெறும் கிராமியக்கலைநிகழ்வுகள். பறையும், உடுக்கும், பிரதான வாத்தியங்கள். மாரியம்மன் தாலாட்டுப்பாடல்கள் முக்கிய இசை நிகழ்ச்சி. கரகாட்டம் பிரதான ஆடல் நிகழ்ச்சி. இப்படியான நிகழ்ச்சிகளுடன் நவராத்தி நாட்களின் இரவுகள் ஆரம்பமாகும். சுமார் பத்துமணியளவில், பூசைக்குரிய கொருட்கள், உபயகாரர் வீட்டிலிருந்து, ஊர்வலமாக பறைமேளம் அதிர அலங்காரமாக எடுத்து வரப்படும். இதை ‘மடைப்பெட்டி ‘ எடுத்து வருதல் என்பார்கள். இந்த மடைப்பெட்டியின் வருகையோடு, ஊர்முழுவதும், கும்பத்துமாலுக்கு வந்துவிடும். மடைப்பெட்டியில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் படையல் செய்யப்பட்டதும், பூசை ஆரம்பமாகும்.
உச்சஸ்தாயில் பறை ஒலிக்கப்பூசை ஆரம்பமாகும். நேர்த்திக்குக் கும்பமெடுப்பவர்கள் குளித்து முழுகி, துப்பரவாக வந்து முன்னணியில் நிற்பார்கள். பறை அதிர அதிர அவர்கள் உருக்கொண்டு ஆடுவார்கள். அவர்களைவிட வேறுசிலரும் ஆடுவார்கள். ஆடத்தொங்கிய அவர்களை மஞ்சள் நீரால் நனைப்பார்கள். அவர்கள் ஆடிஆடி உச்சம் நிலைபெறும்போது, கும்பங்கள் வைக்கப்பட்டிருக்குமிடத்துக்குச் சென்று பூசாரியிடம், தாங்கள் என்ன தெய்வத்தின் கலையில் வந்திருக்கின்றோம் என்பதைச் கொல்லி, அந்தத் தெய்வங்களுக்குரிய அணிகலன்களை அல்லது ஆயுதங்களை விரும்பிக் கேட்பார்கள். பூசாரியார் அவர்கள் கேட்பதைக்கொடுத்தால் மகிழ்ச்சி முக்த்தில் தெரியப் பெற்றுக் கொள்வார்கள்.
தம்பலகாமத்துக் கும்பத்துமால்களில் காளிராசா அண்ணன் கலையாட வந்தாலே தனிக்களை பிறந்துவிடும். சனங்களின் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் பல இருக்கும். ஏனெனில் காளிராசா அண்ணையில் பலவித தெய்வக்கலைகள் உருவெடுத்து ஆடும் என்பார்கள். மாரியம்மன், வீரபத்திரர், அனுமான்...எனப்பல தெய்வங்களின் உருக்களில் ஆடுவார் எனச் சொல்வார்கள். மாறி மாறி பல உருக்களில், அவர் ஆடும்போது செய்யும் செயல்களை வைத்து அந்த நேரத்தில் என்ன கலையில் ஆடுகின்றார் எனச்சொல்வார்கள். அனுமான் கலையென்றால், குரங்குபோல் ஒருவிதநடையும், வாழைப்பழம் சாப்பிடுதல் போன்ற சேட்டைகளும் நடைபெறும். வீரபத்திரர் கலையில் ஆடினால், சாட்டைக்கயிறு வேண்டுவார். அவர் மாரியம்மனாகப் பாவனைப்பண்ணி ஆடுவதை மக்கள் வெகுவாக ரசிப்பார்கள். உண்மையில் அந்த ஆட்டம் பார்க்க அழகாகத்தான் இருக்கும்.
சிலம்பு மாதிரியான கைவளையல்களை கைகளில் அணிந்துகொண்டு, வேப்பிலையை ருசித்துக்கொண்டு, கோலாட்டக் கம்புகளை கைகளில் வைத்துக்கொண்டு, மாரியம்மன் தாலலாட்டுக்கு ஆடுவார் ஒரு ஆட்டம். மிக அருமையாக இருக்கும். இந்த இடத்தில் மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில் கெட்டிக்காறரான காத்தமுத்து அண்ணையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். காத்தமுத்து அண்ணனுக்கு நல்ல குரல். அத்துடன் நன்றாக உடுக்கு அடிப்பார். அவர்பாட, அவருடன் இணைந்து உடுக்கும் பாடும். அவ்வளவு இனிமையாக இருக்கும். காளிராசா அண்ணர் மாரியம்மன் கலையில் ஆடத் தொடங்கினால், காத்தமுத்து அண்ணர் கூட்டத்துக்குள் எங்கிருந்தாலும், காளிராசா இழுத்து வந்து முன்னுக்கு கொண்டு வந்து விட்டு பாடச்சொல்வார். அவார்பாட, காளிராசா அண்ணர் ஆடும் ஆட்டம் ரொம்ப அழகாக இருக்கும்.
இந்தக் கலைஆடல் நடந்து கொண்டிருக்கும் போது, மாந்திரீகம் படித்தவர்கள் கலைஆடுபவர்களின் ஆடல்களை மறைந்து நின்று தங்கள் மாந்திரீகசக்தியால் கட்டுபடுத்துவார்கள். அப்படிக்கட்டுப்படுத்தும்போது, கலைஆடுபவர்கள் ஆட்டம் நிறுத்தி மயங்குவார்கள். உடனே அந்த கும்பத்துமாலின், தலமைப்பூசாரி வந்து மாற்று மந்திர சக்தியால் அந்த மந்திரக்கட்டை அவிழ்ப்பார். அப்படி அவிழ்க்கப்பட்டதும், கலை ஆடுபவர் மீளவும் ஆடுவார்.. இப்படியான மந்திரப் போட்டிகளுடன் தொடரும், கலை ஆட்டங்கள் நள்ளிரவு தாண்டியும் நீளும்..
தொடர்ந்து ஒன்பது நாட்களும், கும்பத்து மால்களில் நடைபெறும் இந்த விழாக்கள், பத்தாம் நாள் இரவில், கும்பங்கள் கரகங்களுடன், ஊர்வலமாக ஊரைச்சுற்றி வந்து, பதினொராம் நாள் காலையில், ஆற்றில் கும்பங்கள் சொரிவதுடன் நிறைவுபெறும். தென்தமிழீழத்தின் வித்தியாசமான நவராத்திரி விழாக்கள், அம்மண்ணின் கிராமியக் கோலங்களாக நடைபெற்று வந்தன. இந்தக்கோலங்கள் எல்லாம் சிதைந்த மண்ணின், இன்றைய கோலங்கள் அவலங்களாகவே உள்ளன. காளிராசா அண்ணையும், காத்தமுத்து அண்ணையும், அவர்களின் கலைவடிவங்களுடனேயே இன்றும் என் கண்ணில் தெரிகின்றபோதும், இவர்களின் இருத்த்ல் என்பது.................. ?